கூட்டணியை உண்டாக்கியவர்களே முதுகில் குத்தலாமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

கூட்டணியை உண்டாக்கியவர்களே முதுகில் குத்தலாமா?

2019ஆம் ஆண்டு முதல் இந்திய ஒன்றியத்தில் ஆட்சி நடத்திவரும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி எத்தகையது என்பதை – சிந்திக்கும் திறனுடையோர் நன்றாக அறிவர்.
ஓர் ஆட்சியிடம் மக்கள் எதிர்பார்ப்பது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்துத்தான். அந்த வகையில் உணவு, உடை, குடியிருப்பு, கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, சட்டம் – ஒழுங்கு, சமத்துவ நிலை இன்னோரன்ன சாதனைகளை நடத்திக் காட்டுவது தான் ஒரு நல்லாட்சிக்கான நிலையாகும் (Welfare State).
இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால் ஒன்றிய பிஜேபி அரசு எந்தத் தரத்தில் கிடக்கிறது என்பதை நாட்டுமக்கள் உணருவார்கள்.

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம்’ என்று இளைஞர்களின் நாக்கில் தேன் தடவினார் நரேந்திர மோடி. ‘வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்போம்’ என்று தனது 56 அங்குல மார்பைப் புடைத்துச் சொன்னார்.
‘பிச்சை போட வேண்டாம் – முதலில் அந்த நாயைப் பிடித்துக் கட்டு’ என்று ஒரு பழமொழி உண்டு.
நல்லது செய்யா விட்டாலும் நாட்டு மக்களை மதத்தின் பேரால் பிளவுபடுத்தாமல் இருக்கக் கூடாதா? மத மோதல்களை உண்டாக்கி சிறுபான்மை மக்களின் குருதியைக் குடிக்காமல் இருக்கக் கூடாதா?
தொட்ட இடமெங்கும் துலங்கிடவில்லை.

மணிப்பூர் என்ற மாநிலம் பல மாதங்களாகப் பற்றி எரிகிறது! வாயைத் திறக்கவில்லை ஒரு பிரதமர் – இது நாடா? விலங்குகள் உலாவரும் காடா? என்ற அச்சம் ஒவ்வொரு குடிமகனையும் பிடித்து உலுக்குகிறது.
மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். இது ஆபத்தின் அறிகுறி என்பதைப் புரிந்து கொண்ட மோடி தலைமையிலான ஒன்றிய அரசு – மக்களைத் திசை திருப்ப – அவர்களிடத்தில் எப்பொழுமே குடிகொண்டு இருக்கும் பக்தியைப் பகடைக் காயாக ஆக்கி, மக்களை மயக்கி விடலாம் என்ற மட்டரகமான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது.

எல்லாம் வல்ல கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அந்த எல்லாம் வல்ல கடவுளுக்குக் கோயில் கட்டுவதும் – தங்கத்தால் வடிவமைப்பதும் – உண்மையைச் சொல்லப் போனால் அந்த எல்லாம் வல்ல (?) கடவுளைக் கேலி செய்வது ஆகாதா?
தங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக தங்கள் கையில் இருக்கும் வருமான வரித் துறையை அமலாக்கத் துறையை எதிர்க்கட்சியினர்மீது ஏவி

அச்சுறுத்துவது எத்தகைய அராஜகம்!
எதிர்க்கட்சியினர் ஊழல்காரர்கள் என்று ஊளையிடும் பி.ஜே.பி. ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று சி.ஏ.ஜி. அறிக்கையே வெட்ட வெளிச்சமாகக் கூறிவிட்டதே! மூச்சு விட்டதா ஆளும் தரப்பு?
பொருளாதார வீழ்ச்சியை நோக்கி வேகவேகமாக மோடி ஆட்சிப் போய்க் கொண்டு இருக்கிறது.

மாநில உரிமைகளை நசுக்குகிறது. சமூகநீதிக்குச் சவக் குழி வெட்டுகிறது. இனியும் இந்த ஆட்சி தொடர எந்தவித நியாயமும் இல்லை. மீண்டும் அதிகாரத்திற்கு மோடி வந்தால் பாசிசம் நிர்வாணமாக ஆட்டம் போடும். அரசமைப்புச் சட்டம் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படும் – மனுதர்மம் கோலோச்சும் – இந்தச் சூழலில்தான் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ‘இண்டியா’ என்ற கூட்டணியைக் கட்டமைத்தன.
இதற்கு முகூர்த்தக் கால் நட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அந்தர் பல்டி அடித்தது எப்படி? (இவரின் பழைய வரலாற்றைத் தெரிந்தவர்களுக்கு ஆச்சரியம் இருக்காது என்பது உண்மைதான்!)
இனியும் பிஜேபியுடன் கூட்டணி என்பதைவிட உயிர் துறப்பதே மேல் என்று எகிறிக் குதித்த நிதிஷ்குமார் – எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் வாக்குக் கேட்க வருவார்!
ஆம் ஆத்மி என்ன தேசியக் கட்சியா? திரிணாமுல் காங்கிரஸ் மே. வங்காளத்தைத் தாண்டிக் கால் பதித்த ஒன்றா?

இந்த நிலையில் பாசிச பா.ஜ.க. மீண்டும் அதிகாரத்திற்கு வராமல் தடுக்க தேசிய அளவில் உள்ள ஒரே கட்சி காங்கிரஸ்தான் என்பது பச்சிளம் பிள்ளைக்கும் தெரிந்த செய்தி.
மற்ற கட்சிகள் தங்கள் ஆட்டத்தை மாநில அளவில் வைத்துக் கொள்ளட்டும்! இந்திய அளவில் ஆட்சிக்கு வரக் கூடிய வாய்ப்பு காங்கிரசுக்குத்தான் என்பதை உணர்ந்து அதன் கரத்தை வலுப்படுத்த வேண்டாமா!
எந்த நோக்கத்துக்காக ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப் பட்டதோ, அந்த நோக்கத்துக்கு மாறாக கூட்டணியை உருவாக்கியவர்களே “உள்குத்து” , “முதுகுக் குத்து” வேலையைச் செய்யலாமா? இத்தகையவர்களை வரலாறு மன்னிக்காது. இத்தகையவர்கள் பாசிச பா.ஜ.க.வை விட மோசமானவர்கள் என்ற கேவலமான பெயரை சுமக்க வேண்டாம் – எச்சரிக்கை!

No comments:

Post a Comment