தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் யாரால்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் யாரால்?

featured image

கி.தளபதிராஜ்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த வாரம் “தமிழ், தமிழர், தமிழ்நாடு : விட்டுக் கொடுத்தது யார்? கட்டிக்காத்தது யார்?” என்ற தலைப்பில் வட்டமேஜை விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திருவாளர் பெ.மணியரசன் வழக்கம்போல் பெரியார் மீது சேற்றை வாரி இறைக்க முயற்சித்திருக்கிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பத்திரிகையாளர் சத்யன் திராவிட இயக்கம் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்கை எடுத்துரைத்து குறிப்பாக பெரியார் கொண்டு வந்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை மறந்துவிட முடியாது என்று குறிப்பிட்டார்.
சத்யனின் கருத்தை உள்வாங்கி, பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வர வில்லையா? என மணியரசனைப் பார்த்து நெறியாளர் கேட்க, அதை மறுத்துப் பேசிய பெ.மணியரசன், தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டுவந்தவர் குத்தூசி குருசாமி தான்! பெரியார் அல்ல! என்றதோடு, ‘பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார்!’ ‘திருக்குறளை தங்கத் தட்டில் வைத்த மலம் என்றார்!’ என அவதூறுகளை அள்ளி வீசினார்.

பெரியார் மீது இப்படி விமர்சனங்களை பெ.மணியரசன் வைப்பது புதிதல்ல. ஒவ்வொரு முறையும் பெரியாரை அவர் விமர்சிக்க முயற்சிக்கும் போதெல்லாம் பெரியாரியலாளர்கள் சரியான தரவுகளோடு மறுப்பதும், அவர் மூக்குடைபடுவதும் வாடிக்கையாகி விட்டது. ஆனாலும் அதுவே அவருக்கு பிழைப்பாகி விட்டதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
‘பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார்!’ ‘திருக்குறளை தங்கத் தட்டில் வைத்த மலம் என்று சொன்னார்!’ இப்படிப்பட்ட வசைபாடுகளுகெல்லாம் பெரியாரே பதிலளித்து விட்டார். தொடர்ந்து விடுதலையும் எழுதி வந்திருக்கிறது. தற்போது தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டுவந்தவர் குத்தூசி குருசாமி தான்! பெரியார் அல்ல! என திருவாய் மலர்ந்திருக்கிறார்.
இதுவும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளிந்த ஒரு கட்டுரையில் எழுதப்பட்டதுதான். அப்போதே அதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மறுப்பு தெரிவித் திருந்தார். ஒரு பொய் சரியான ஆதாரத் தோடு மறுக்கப்பட்ட நிலையிலும் அதே பொய்யை திரும்பத் திரும்ப பேசுவது மணியரசனாரின் வாடிக்கையாகி விட்டது.

1936ஆம் ஆண்டு தந்தை பெரியார் ‘மொழி’ ‘எழுத்து’ என்னும் பொருளில் குடந்தை அரசுக் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் உரையாற்றினார். அவர் தன் பேச்சைத் தொடங்கும் போதே,
“மொழி என்பது பற்றிப் பேச, சிறிதும் அதற்கான அறிவோ, ஆராய்ச்சியோ, ஆற்றலோ அற்ற நான் மொழி என்பது குறித்துப் பேசத் துணிந்தது, மொழி தத்துவத்தில் உள்ள என்னுடைய ஆசை மிகுதியின் பொருட்டே ஆகும்.
நான் கூறப்போகும் தத்துவங்களை இலக்கண இலக்கிய ஆதாரங்களுடன் விளக்குவது என்பது, எனது தகுதிக்கு மேற்பட்ட காரியம். அதற்கு வேண்டிய இலக்கிய இலக்கணங்களில் பாண்டித்தியமோ ஆராய்ச்சியோ எனக்கு இல்லை. ஆராய்ச்சியாளர்களின் மேற்கோள்களையும் என்னால் காட்ட இயலாது. எனக்குத் தோன்றிய என் அனுபவத்துக்கு எட்டிய விடயங்களைத்தான் நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லப் போகிறேன்.

அவற்றில் பெரும்பாலானவை உங்களுக்கு குற்றமாகப் படலாம். ஆகவே நான் கூறுவதை நீங்களும் உங்கள் அறிவையும் அனுபவத்தையும் மற்றும் இது விடயத்தில் அனுபவமும் ஆராய்ச்சியும் உள்ள பெரியோர்களின் கருத்தையும் கொண்டு சிந்தித்துப் பார்த்து ஏற்கக் கூடியதை ஏற்றும் ஏற்கக் கூடாததை தள்ளியும் தெளிவு பெற வேண்டுகிறேன்!”
என்றுதான் தொடங்கு கிறார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையே நான் தான் கண்டுபிடித்தேன் என்று பெரியார் ஒருபோதும் குறிப் பிட்டதில்லை.
மேலும் அவர் பேசுகையில்,
“பிறர் சுலபமாக தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்காகவும், சுலபமாக அச்சுக் கோர்க்கவும், டைப் அடிக்கவும் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப் படுவது நலம் என்று நினைக்கிறேன். தமிழில் எழுத்துக்கள் அதிகம் – ஞாபகத்தில் இருத்த வேண்டிய தனி உருவ எழுத்துக்கள் அதிகம். மொத்த எழுத்துக்கள் 216 வேண்டி இருக்கிறது என்றால் இதில் 135 எழுத்து உருவங்கள் தனித்தனி ஞாபகத்தில் வைக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் மொழியை நாம் ஏன் நவீன முயற்சிக்கு ஏற்ற வண்ணம் செப்பனிடக் கூடாது? சாதாரணமாக தமிழ் உயிர் எழுத்துகளில் ஐ, ஔ ஆகிய இரண்டு எழுத்துகளை குறைத்து விடலாம். இந்த இரண்டும் தேவையில்லாத எழுத்துகள். மேலும் இவை கூட்டெழுத்துகளே ஒழிய தனி எழுத்துகள் அல்ல. இவை இல்லாமல் எந்த தமிழ் சொல்லையும் எழுதலாம்; உச்சரிக்கலாம். இவைகளை எடுத்து விட்டால் சொற்களின் உச்சரிப்பிலோ, பொருளிலோ, இலக்கணத்திலோ எவ்வித குறையும் குற்றமும் ஏற்பட்டுவிடும் என்று தோன்றவில்லை.”
என்ற பெரியார்,
“சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே நான் இதை கவனித்து வந்திருக்கிறேன். இந்தப் படி எழுத்துக் கோர்த்து அச்சடிக்கப்பட்டுள்ள ஒரு குறள் புத்தகத்தையும் நான் 40 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். இப்படி செய்வதில் மொத்தத்தில் 38 எழுத்துக்கள் (அதாவது உயிரெழுத்து ஐ, ஔ ஆகிய இரண்டும் அவை ஏறும் மெய்யெழுத்துக்களில்
2 ஜ் 18 = 36ம் ஆக 36 + 2 = 38) ஞாபகத்திற்கும், பழக்கத்திற்கும் தேவையில்லாத எழுத்துக்கள் ஆகிவிடும். (ஐ-அய், ஔ-அவ் என எழுதலாம்)”
என சில எழுத்துக்களை எடுத்துக் காட்டி பேசியிருக்கிறார். 1936ஆம் ஆண்டு அவர் ஆற்றிய உரையின் தொகுப்பை “மொழி – எழுத்து” என்ற தலைப்பில் குடிஅரசு பதிப்பகம் 1948இல் வெளியிட்டுள்ளது. மேற்படி உரையில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே நான் இதை கவனித்து வந்திருக்கிறேன் என்று குறிப்பிடுகிறார். அதாவது இதைப்பற்றிய சிந்தனை 1896 வாக்கிலேயே பெரியாருக்கு தோன்றியிருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் குத்தூசி குருசாமி பிறந்திருக்கக்கூட இல்லை.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை சுமார் அரை நூற்றாண்டு காலமாக வலியுறுத்தி வந்திருக்கிறார் பெரியார். 1968 ஆம் ஆண்டில் கூட விடுதலையில், “தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்?” என்று ஒரு கட்டுரை எழுதுகிறார்.
“தமிழை தமிழ் எழுத்துக்களை திருத்த வேண்டும் என்று 1927 வாக்கில் கருத்து கொடுத்தேன். வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்கவில்லை. பார்ப்பனர்கள் கூட ஏற்றுக் கொண்டார்கள். நம் காட்டுமிராண்டிகள் சிறிதுகூட சிந்திக்கவில்லை!”
என்று அதில் குறிப்பிடுகிறார். குத்தூசி குருசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களை ஈரோட்டில் முதல் முதலாக சந்தித்ததே 1927 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தான். தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க ஈரோட்டிலேயே தங்கி விடுகிறார்.
குத்தூசி குருசாமி அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதிய குருவிக்கரம்பை வேலு அவர்கள் அவருக்கும் குத்தூசி குருசாமி அவர்களுக்கும் நடந்த உரையாடலை சுவைபட அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

“தாங்கள் ஈரோட்டில் தங்கியவுடன் தங்களுக்கு என்ன வேலை?” என்று நான் கேட்டேன்.
“குடிஅரசுக்கு ரேப்பர் ஒட்டுகிற வேலை. சந்தாதாரர்களுக்கு அட்ரஸ் எழுதுவது.” என்றார் குருசாமி.
“உண்மையாகவா?” என்றேன்.
“எனக்கு முன்பே அங்கே எம்.ஏ., பி.எல் படித்த ஒருவர் அதுதானே செய்து கொண்டிருந்தார்!” என்று குருசாமி சிரித்துக் கொண்டே சொன்னார்.
“அவர் யார்?” என்றேன் நான்.
“நம்ம ராமநாதன் தான்!” என்றார் குருசாமி.
என்று எழுதியுள்ளார் குருவிக்கரம்பை வேலு அவர்கள்.
குத்தூசி குருசாமி அவர்களை குறைத்து மதிப்பிடுவதற்காக இதை இங்கே குறிப்பிடவில்லை. பெரியார் 1927லேயே தாம் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
பெரியாரை உதாசீனப்படுத்துவதாக நினைத்து உளறிக் கொட்டுபவர்களின் ஊத்தை வாயை அடைப்பதற்குத்தான் இதை எடுத்துக்காட்ட வேண்டியிருக்கிறது.

எழுத்துச் சீர்திருத்தத்தை தமது ‘குடிஅரசு’ பத்திரிகையில் கொண்டுவர முடிவெடுத்த பெரியார், ‘பகுத்தறிவு’ இதழில் அது பற்றி ‘எழுத்தில் சீர்திருத்தம்’ என தலைப்பிட்டு எழுதுகிறார்.
“தமிழ் பாசை எழுத்துக்கள் வெகு காலமாகவே எவ்வித மாறுதலும் இல்லாமல் இருந்து வருகின்றது. இப்போது ணா, றா, னா ஆகிய எழுத்துக்களும் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துக்களும் மற்ற கா, நா, ரா முதலாகிய எழுத்துக்களைப் போலும் டை, நை, ழை முதலிய எழுத்துக்களை போலும் ஆ காரத்துக்கு ‘£’ குறியையும், அய் காரத்துக்கு ‘¬’ குறியையும் பெறாமல் தனி வடிவத்தைக் கொண்டு இருப்பதை மாற்றி ணா, றா, னா, ணை, லை, ளை, னை போல உபயோகித்துப் பிரசுரிக்கலாம் என்று கருதி இருக்கிறோம்.
இன்னமும் தமிழ் பாஷை எழுத்துகளில் அனேக மாறுதல்கள் செய்ய வேண்டியிருந்தாலும் இப்போதைக்கு இந்த சிறு மாறுதலை அனுபவத்திற்கு கொண்டு வரலாம் என்று கருதி அந்தப்படியாகவே எழுத்துகளை உபயோகித்து அடுத்தாற் போல் பிரசுரிக்கப் போகும் குடிஅரசு பத்திரிகையை பிரசவிக்கலாம் என்று இருக்கிறோம்.
இதை வாசகர்களும் மற்றும் தமிழ் பாஷை பத்திரிகைக்காரர்களும், தமிழ் பண்டிதர்களும் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்!”
(‘பகுத்தறிவு’ – கட்டுரை – 30.12.1934)
பெரியார் குறிப்பிட்டதைப் போலவே 1935 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதழிலிருந்து குடிஅரசில் சில எழுத்துக்களின் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குடிஅரசு இதழில் அமல்படுத்தப்பட்டதும் ஜனவரி 13இல் வெளியான குடிஅரசு இதழில் ‘தமிழ் எழுத்திலும் புரட்சியா?’ என்ற தலைப்பில் வரவேற்று எழுதினார் குத்தூசி குருசாமி.
அதனை அடுத்து ஜனவரி 20ஆம் தேதி வெளிவந்த குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் தமிழ் எழுத்து சீர்திருத்தம் என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரையை எழுதினார்.
“தமிழ் பாஷை எழுத்துகள் விடயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனைவருக்குள்ளும் வெகு காலத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயங்கள் ஆகும்.

தோழர் குருசாமி அவர்கள் எழுதியது போல் பெருத்த பண்டிதர்களில் கூட பலர் எழுத்து சீர்திருத்த விடயமாய் வெகுகாலமாகவே பேசி வந்திருக்கிறார்கள். தமிழ் எழுத்துகளைப் பற்றி அழுக்கு மூட்டை பண்டிதர்கள் எவ்வளவு தத்துவார்த்தம் சொன்னாலும் அது எவ்வளவோ விடயத்தில் சீர்திருத்தம் அடைய வேண்டும் என்பதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை. ஒரு பாஷையோ ஒரு வடிவமோ அல்லது வேறு பல விஷயமும் எவ்வளவு பழையது; தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்ளுகின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றில் சீர்திருத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவமாகும்.
உதாரணமாக நெருப்புக்கு சுமார் நூறாயிரம் பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தி, சிக்கி முக்கி கற்கள் தான் பயன் படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்று நெருப்புக்கு ஒரு பொத்தானை அழுத்துவதோ ஒரு முனையை திருப்புவதோ ஆகிய காரியத்தில் வந்துவிட்டது. பாஷையின் பெருமையும் எழுத்துகளின் மேன்மையும் அவை சுலபத்தில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும் கற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருப்பதை பொறுத்ததே ஒழிய வேறல்ல.

ஆதலால், இந்த மாற்றங்கள் நாளாவட்டத்தில் செய்யக் கூடியது என்று சொல்வதனாலும் ‘னை’ முதலிய ஏழு எழுத்துக்களை பொறுத்தவரையில் உள்ள மாற்றத்தை வாசகர்கள் இப்போது முதலில் அனுமதிப்பார்கள் என்று கருதுகின்றோம். இதுவரை பல தோழர்கள் ஆதரித்ததோடு மற்ற மாறுதல்களையும் எழுதி இருப்பதும் இப்பொழுதே செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதும் நமக்கு தைரியத்தை கொடுக்கின்றது. அவர்களுக்கு நமது நன்றியும் பாராட்டுதலும் உரியதாகும்!”
‘குடியரசு’ – தலையங்கம் – 20.1.1935
தொலைக்காட்சி விவாதத்தில் புளுகிய மணியரசனின் கூற்றுக்கு வலு சேர்ப்பதாகக் கருதிக் கொண்டு மேற்படி கட்டுரையை மேற்கோள் காட்டி “குத்தூசி குருசாமி கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தைத்தான் பெரியார் செய்ததாக கூறுகிறார்கள்!” என அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.

அப்படி ஏதேனும் வரிகள் அதில் இருக்கிறதா என்பதை அறிவு நாணயத்தோடு அவர்கள் தெரிவிக்க வேண்டும். பெரியாரின் கூற்றுப்படி அவர் வலியுறுத்தி வந்த, தனது குடிஅரசு பத்திரிக்கையில் செயல்படுத்திய எழுத்துச் சீர்திருத்தத்தை பலரும் வரவேற்றதை எடுத்தியம்பிய பெரியார் குத்தூசி குருசாமியின் கட்டுரையை மேற்கோள் காட்டியிருக்கிறார் அவ்வளவே.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் பெரியார் வலியுறுத்திய எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று நடைமுறைப் படுத்தியதை மக்கள் மறந்துவிட வில்லை.
‘தமிழ் ஹிந்து’ என புதியதாக வியாக்கியானம் கொடுக்கும் மணியரசன் சங்கிகளின் ஊதுகுழலாகிப்போனதில் வியப்பேது மில்லை! தமிழ் நாட்டில் இவர்களது கோயபல்ஸ் பிரச்சாரம் ஒரு போதும் எடுபடப் போவதுமில்லை!

No comments:

Post a Comment