‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்!’’ சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 23, 2024

‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்!’’ சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

featured image

‘‘பா.ஜ.க. தான் மக்கள் விரோதி’’ – ஹிந்து மக்களுக்கு மட்டும் விரோதி இல்லை; ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோதி!
‘‘என்றைக்கு நீங்கள் மனுதர்மத்தையும், கீதையையும் கையில் எடுத்தீர்களோ, அன்றைக்கே நீங்கள் மனிதத்தை ஒப்புக்கொள்ளவில்லை!”
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி- மக்கள் விரோத ஆட்சியே!

சென்னை, ஜன.23 ‘‘பா.ஜ.க.தான் ஹிந்து விரோதி” என்று தி.மு.க. இளைஞரணி சேலம் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் சொல்லப்பட்டு இருக் கிறது; அதில் ஒரு சிறிய திருத்தத்தை நான் சொல் கிறேன்; ‘‘பா.ஜ.க.தான் மக்கள் விரோதி’’ – ஹிந்து மக்களுக்கு மட்டும் விரோதி இல்லை; ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோதி! அது சிறுபான்மையா? பெரும்பான்மையா? என்ற நிலை இல்லை. ‘‘நீங்கள் பெரும்பான்மை – சிறுபான்மை என்று சொல்லிக் கொண்டு பான்மையைப் பார்க்கிறீர்கள். நாங்கள் மனி தத்தைப் பார்க்கின்றோம். என்றைக்கு நீங்கள் மனுதர் மத்தையும், கீதையையும் கையில் எடுத்தீர்களோ, அன்றைக்கே நீங்கள் மனிதத்தை ஒப்புக்கொள்ள வில்லை” என்பதற்குப் பொருள் அது. மனிதத்திற்கு விரோதமாகத்தான் அத்தனையையும் அவர்கள் செய்திருக்கிறார்கள். ஆகவே, மனித விரோதிகள் அவர்கள். மனித விரோத – மக்கள் விரோத ஆட்சி என்று சொல்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்’’ சிறப்புக் கூட்டம்!
நேற்று (22.1.2024) மாலை சென்னை பெரியார் திடலில் ‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற் றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:

உத்திகளை மாற்றியிருக்கிறார்களே தவிர, தத்துவம் அதே மனுதர்மம்தான்!
மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டும் மிகச் சிறப்பாக இங்கே குழுமியுள்ள ‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்” என்ற தலைப்பில் நடைபெறுகின்ற இந்த சிறப்புக் கூட்டத்தில், நம்முடைய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், ‘நீட்’ தேர்வு உள்பட பல உரிமைப் பறிப்புகளைப்பற்றி எடுத்துச் சொல்லி, மீண்டும் நம்முடைய சமுதாயம் எழுச்சிப் பெறவேண்டு மானால், கல்விக் கண்ணை அழிக்கக் கூடிய திட்ட மிட்ட செயல்கள், மருத்துவத் துறையில் இந்தியாவிற்கே நம்பர் ஒன் என்று தமிழ்நாடு இருக்கக் கூடிய நிலையை மாற்றி அமைக்கவேண்டும் என்று ஒன்றிய அரசு நினைப்பதின் காரணமாகவும், நீண்ட காலத்திற்கு முன்பு, மருத்துவ அறிவு ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதை ஒரு சூழ்ச்சிப் பொறியாக, மனுதர்மம் படித்திருந்தால்தான், மருத்துவப் படிப்பு படிப்பதற்கே மனுவே போட முடியும் என்று வைத்ததைப்போல, இப்பொழுது ‘நீட்’ தேர்வு எழுதினால்தான், மருத்துவப் படிப்பிற்குத் தகுதி பெற முடியும் என்று இன்றைக்கு நவீன யுகத்திலே, உத்திகளை மாற்றியிருக்கிறார்களே தவிர, தத்துவம் அதே மனுதர்மம்தான் என்பதை அழகாக எடுத்துச் சொன்ன கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இயலாமை தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இன்றைக்கு ஒரு புதிய உத்தியைக் கையாளுகிறார்கள்!
அதுபோல, எப்பொழுதும் நம் மேடைக்கு உரியவராக இருக்கக் கூடிய சிறப்பான கொள்கை லட்சிய விளக்கவாதியாக இருக்கக்கூடிய, இந்தக் கருஞ்சட்டைத் தமிழருடைய பணி அன்றாடம் உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கின்றது என்ற பெருமைக்குரிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் அருமைப் பேராசிரியர் மானமிகு சுப.வீரபாண்டியன் அவர்களே,
‘‘ஒன்றிய ஆட்சிக்கு இரண்டு முறை வந்து, மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டோம்; நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றி இருக்கின்றோம். எனவே, மீண்டும் எங்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால், அதன்மூலமாக நாடு மேலும் வளம் பெறும்; புதுவாழ்வு பெறும்” என்று சொல்லி, ஓட்டுக் கேட்க முடியாதவர்கள், தங்களுடைய தோல்வியை மறைக்க, தங்களுடைய இயலாமைக்கு அவர்கள் மூடுவிழா செய்து, அதனை அறவே அழிக்க, இயலாமை மக்களுக்கு – வாக்காளர் களுக்குத் தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இன்றைக்கு ஓர் உத்தியைக் கையாளுகிறார்கள்; ஒவ்வொரு முறையும் ஓர் உத்தியைக் கையாளுவார்கள்.
முதல்முறை பிரதமர் மோடி பதவிக்கு வந்தபோது ஒவ்வொரு ஆண்டிலும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் தருவோம் என்று சொன்னவுடன், அதனை நம்பிய படித்த இளைஞர்கள் எல்லோரும் ஏமாந்தனர். அதுமட்டுமல்ல, வளர்ச்சி, வளர்ச்சி என்று சொன்னார்கள்; ‘குஜராத் மாடல்’ என்று சொன்னார்கள். அதைக் கண்டு நம்முடைய மக்களும் ஏமாந்தனர்.

இந்திய நாடு காவிகளுக்குக் கதவை சாத்தப் போகின்றது என்பது உறுதி!
அந்தக் காலத்தில், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தேனும், பாலும் ஆறாக ஓடும்” என்று சொல்வார்கள் அப்படிப்பட்ட பிரச்சாரத்தை மக்கள் நம்பக்கூடிய அளவிற்கு அன்றைக்குச் செய்தனர். இன்றைக்கு அவையெல்லாம் எடுபடாது. ஏனென்றால், எல்லாத் தரப்பு மக்களும் – நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தமிழ்நாடு, தென்னாடு மட்டும் இதுவரையில் கதவு சாத்தியிருக்கிறது பி.ஜே.பி.க்கு – அந்தக் காவிகளுக்கு.
அடுத்து வரக்கூடிய மக்களவைப் பொதுத் தேர்தலில், ‘இந்தியா’ கூட்டணி உருவாகிய நிலையில், இந்தியா முழுவதும் காவிகளுக்குக் கதவு சாத்தப்பட உள்ளது என்பது உறுதி என்பதை மிக அழகாக எடுத்துச் சொன்னார் நம்முடைய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்!
பக்தியும், புத்தியும் நேர் எதிரானவை. அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார், ‘‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும்” என்று.
ஆகவே, அதைக் கேட்கும்பொழுது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தீர்களேயானால், அந்த வார்த்தைகளை மறுப்பதற்கு எவராலும் முடியாது.
‘‘இருட்டு வந்தால் வெளிச்சம் போய்விடும்; வெளிச் சம் வந்தால் இருட்டு இருக்காது” என்பதுபோல, தெளி வாக எடுத்துச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.

ராமன் கிடைப்பாரா என்று
தேடிக் கொண்டிருக்கின்றார்கள்!
அன்றைக்கு அவர்களுக்கு ஒரு புல்வாமா கிடைத் தது; இன்றைக்கு அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்க வில்லை என்றவுடன், ராமன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஏற்கெனவே ராமன் விஷத்தில் தமிழ்நாடு வழி காட்டியது; இப்பொழுது இந்தியாவிற்கே வழிகாட்டப் போகிறது. ஆகவேதான், இந்தியா கூட்டணியில் தமிழ் நாடு இருக்கிறது.

என்னதான் பக்தியைக் காட்டினாலும், அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது என்று தெளிவாகி விட்டது!
இதுவரையில், நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி, ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் நடைபெறக் கூடிய ஓர் ஆட்சி – அதன் காரணமாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்மாநிலங்களிலும் காவிகளால் கணக்கைத் திறக்க முடியாது; காவிகள் வர முடியாது; என்ன தான் பக்தியைக் காட்டினாலும், அவர்கள் ஆட் சிக்கு வர முடியாது என்று தெளிவாகி விட்டது. அப்படி தெளிவாகிவிட்ட காரணத்தினால், வடக்கே நோக்கிப் பார்க்கிறார்கள். எப்படி அங்கே வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணிப் பார்க் கிறார்கள்.
கிழக்கேயும் அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று புரிந்துவிட்டது. மேற்கிலும் மிகப்பெரிய கேள்விக் குறி உருவாகி இருக்கிறது.
எனவே, எல்லா திசைகளிலும் அவர்களுக்குக் கதவு சாத்தப்படுகின்ற நேரத்தில், இந்தக் கோவில் கதவைத் திறந்தாவது உள்ளே போகக்கூடிய அள விற்கு, மயக்க பிஸ்கெட்டுகளைத் தயாரிக்கிறார்கள்.

‘‘பக்தி என்பது ஒரு மயக்க பிஸ்கெட்!’’
‘‘பக்தி என்பது ஒரு மயக்க பிஸ்கெட்”. ரயில் பயணத் தின்போது மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளை யடிக்கும் நிகழ்வுகளை நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நீண்ட நேரம் ரயில் பயணத்தின்போது, அருகில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். அப்படி அறிமுகமானவுடன், பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து, அவரும் ஒன்றை சாப்பிட்டுவிட்டு, உங்களிடமும் அந்த பிஸ்கெட்டைக் கொடுப்பார்.
சரி, அவர்தான் சாப்பிடுகிறாரே, இது விருந்தோம்பல் போலிருக்கிறது, நட்பிற்காக என்று நினைத்து, அதனைச் சாப்பிட்டீர்களேயானால், நீங்கள் இறங்கவேண்டிய இடத்திலும் இறங்க முடியாது; நீங்கள் கொண்டுவந்த பொருள்களும் இருக்காது; மயக்க பிஸ்கெட் கொடுத்து மோசடி என்ற செய்தி வரும்.
அதேபோலத்தான், ராமன் கோவிலும் மயக்க பிஸ் கெட்தான். அதைப் பயன்படுத்துபவர்களுக்கு, சொல் வதற்கு வேறு இல்லை. அவர்களுடைய திட்டமெல்லாம் இன்றைக்கு மக்களுக்கு விளங்கிவிட்டது.

‘‘வளர்ச்சி, வளர்ச்சி’’ என்று சொன்னார்;
அதை நம்பி மக்களும் வாக்களித்தார்கள்!
அன்றைக்குப் பதவிக்கு வருவதற்காக பிரதமர் மோடி, மக்களிடம் எதைச் சொல்லி ஆசை காட்டினார்? ‘‘சப்கா சாத், சப்கா விகாஸ்” என்று சொன்னார். ‘‘வளர்ச்சி, வளர்ச்சி” என்று சொன்னார்; அதை நம்பி மக்களும் வாக்களித்தார்கள்.
இன்றைக்கு ‘‘25 வயதுள்ள இளைஞர்களை எல்லாம் அழைத்து, அவர்களிடம் பா.ஜ. கட்சியைப்பற்றி, கொள்கையைப்பற்றி எல்லோரும் பேசுங்கள்” என்று பிரதமர் மோடி சொன்னார் என்று இங்கே உள்ள அரைவேக்காடு ஒருவர் சொல்கிறார்.


இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைவிட

கல்வியில் சிறந்தது தமிழ்நாடு!
படித்திருக்கின்ற 25 வயதுள்ள இளைஞர்கள் என்ன ஏமாளிகளா? தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மற்ற மாநிலங்களைவிட கல்வியில் சிறந்தது தமிழ்நாடு.
அதனால்தான் அதனை ஒழிப்பதற்காக நீட் தேர்வு, கியூட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என்ற திட்டங்கள்; இந்திய அரசமைப்புச் சட்டமாக மனுதர்மம்தான் இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய நிலையில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு கல்விக் கண்களைக் குத்துகின்றனர்.

எங்கள் கேள்விக்கு
இதுவரையில் பதில் உண்டா?
புதிய கல்விக் கொள்கையில், எங்கேயாவது சமூகநீதி இருக்கிறதா?
பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டு இருக் கிறதா?
எத்தனை மேடைகளில் நாங்கள் இதனைக் கேட்டிருக்கின்றோம்; இதுவரையில் எங்களுக்குப் பதில் சொல்லியிருக்க வேண்டாமா அவர்கள்.
இன்னின்ன திட்டங்களைச் செய்கிறோம் என்று அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்றால், கிடையாது.

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலவரத்தை உண்டாக்கலாம் என்று காவிகள் முயற்சிக்கின்றனர்!
நாடு முழுவதும் முன்பு மக்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. இன்றைக்கும் நடைப்பயணத்தை மேற்கொண் டிருக்கின்றார். அவர் நடைப்பயணத்தில் எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்று நினைக் கின்றனர் காவிகள்.

கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்குச் சென்றாரா, பிரதமர் மோடி?
இன்றைக்கு ராமனைத் தேடி, மோடி கண்களை மூடிக் கொண்டு எல்லா திவ்ய ஷேத்திரங்களுக்கும் சென்று, தனுஷ்கோடி வரையில் வந்துவிட்டார். காரணம், மிகப் பெரிய அளவிற்கு அங்கே புயல் வந்ததிலிருந்து தனுஷ் கோடி கோவில் இல்லாத ஊராக இருக்கிறது; அங்கேயும் போய் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்.
இவ்வளவு செய்கிறாரே மோடி, மணிப்பூர் எங்கே இருக்கிறது? அங்கே எத்தனை பேர் மடிந்து கொண் டிருக்கிறார்கள்? மணிப்பூருக்குச் சென்றாரா, பிரதமர் மோடி.
இந்தக் கேள்வியை தேர்தல் பிரச்சாரத்தில் வைக்க வேண்டும். இந்தியா கூட்டணியினர் வைப்பார்கள்.
இதற்கு விடை உங்களிடம் என்ன இருக்கிறது?
இராமன் கோவில் கட்டியிருக்கிறோம் என்கிறார்கள்.
இதுவா விடை?

தி.மு.க. இளைஞரணி மாநாட்டின் 23 ஆவது தீர்மானத்தைப்பற்றி சொன்னார்கள்!
திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியினர் சேலத்தில் நடத்திய மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 23 ஆவது தீர்மானத்தைப்பற்றிச் சொன்னார்கள்.
என்னைப் பொறுத்தவரையில், தாய்க் கழகத்தைப் பொறுத்தவரையில் அதில் ஒரு சிறிய திருத்தத்தைச் சொல்வதற்கு உரிமை உள்ளவர்கள் நாங்கள்.
ஹிந்து விரோதி என்றால் யார்?

‘‘பா.ஜ.க.தான் மக்கள் விரோதி!’’
பா.ஜ.க.தான் ஹிந்து விரோதி என்று தீர்மானத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்று அதனை விளக்கிச் சொன்னார்கள்.
அதில் ஒரு சிறிய திருத்தத்தை நான் சொல்கிறேன்; ‘‘பா.ஜ.க.தான் மக்கள் விரோதி” – ஹிந்து மக்களுக்கு மட்டும் விரோதி இல்லை; ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோதி!

நீங்கள் பான்மையைப் பார்க்கிறீர்கள்;
நாங்கள் மனிதத்தைப் பார்க்கின்றோம்!
‘‘ஆன்ட்டி பீப்பிள்” – அது சிறுபான்மையா? பெரும்பான்மையா? என்ற நிலை இல்லை.
‘‘நீங்கள் பெரும்பான்மை – சிறுபான்மை என்று சொல்லிக்கொண்டு பான்மையைப் பார்க்கிறீர்கள். நாங்கள் மனிதத்தைப் பார்க்கின்றோம்.
என்றைக்கு நீங்கள் மனுதர்மத்தையும், கீதை யையும் கையில் எடுத்தீர்களோ, அன்றைக்கே நீங்கள் மனிதத்தை ஒப்புக்கொள்ளவில்லை” என்ப தற்குப் பொருள் அது.
மனிதத்திற்கு விரோதமாகத்தான் அத்தனை யையும் அவர்கள் செய்திருக்கிறார்கள்.
ஆகவே, மனித விரோதிகள் அவர்கள். மனித விரோத – மக்கள் விரோத ஆட்சி என்று சொல் கிறோம்.

திடீரென்று தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு பிரதமர் மோடி போகிறார்?
திடீரென்று ஏன் இவ்வளவு கோவில்களுக்குப் பிரதமர் மோடி போகிறார்?
தனிப்பட்ட முறையில் அவர் போவதைப்பற்றி நமக்குக் கவலையில்லை; அவருடைய நம்பிக்கையைப் பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. அவர் இங்கே வந்து எதைச் சொன்னாலும், அது போனியாகப் போவதில்லை.
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து, சிறீரங்கம் கோவிலுக்குப் போனார்; இராமேசுவரம் போனார், தனுஷ்கோடிக்குப் போனார்; அங்கே போனார், இங்கே போனார் என்று சொல்கிறார்கள். அவர் போலாம்; ஏனென்றால், அவரிடம் ஹெலிகாப்டர் உள்பட மற்ற வசதிகள் எல்லாம் இருக்கின்றன. அதை விளம்பரப் படுத்துவதற்கும் தயாராக இருக்கிறார்கள்.

தமிழில் ஆழ்ந்த புலமை இருக்கிறதா?
அதிலும் கம்ப ராமாயணத்தை ரசித்துக் கேட்டார் என்று சொல்கிறார்களே, அதுதான் மிகவும் முக்கிய மானது. ஏனென்றால், ‘‘அவருக்குத் தமிழில் ஆழ்ந்த புலமை இருக்கிறது பாருங்கள், அதனால் ரசித்துக் கேட்டிருப்பார்!”
ஏன் கம்ப இராமாயணத்தைச் சொன்னார்கள். அதில் இரண்டு விஷயம் மிகவும் முக்கியமானது.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தமிழ்ப் பேராசிரியர்; நான் தமிழ்ப் படிக்காதவன்; பொருளாதாரம் படித்தவன்.
முதலில் உரைப்பாயிரம் எழுதியிருப்பார் கம்பர்.
‘‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உரைவானினும்,
விரியும் பூதம் ஓர் அய்ந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.”

கம்ப ராமாயணத்தின் ரகசியத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!
‘‘திருமாலையும் சேர்த்து, பிரம்மாவையும் சேர்த்து, நெற்றிக் கண் உள்ள சிவனையும் தாண்டி, ராமன் யாரை வணங்குவார் என்றால், மேற்சொன்ன மூவரையும் வணங்கமாட்டார்” என்று கம்பர் ராமனுடைய சிறப்பைப் பற்றி சொல்லுகிறாராம்.
ஏன், கம்பனைத் தூக்கி வைத்து ஆடுகிறார்கள் என்றால், ஏன் கம்ப ராமாயணத்தை சொல்லுகிறார்கள் என்று சொன்னால், அந்த ரகசியத்தைப் புரிந்துகொள் ளுங்கள் தோழர்களே!
தமிழ் மொழி பிறகுதான்; திராவிடம் என்று சொல் லுகிறபொழுது, தமிழ் மானம் காப்பாற்றப்படவேண்டும். கம்பனுக்குத் திறமை இருக்கலாம்; அதை நாம் குறைத்து மதிப்பிடவேண்டிய அவசியமில்லை.
கம்ப இராமாயணம் அழகாக இருக்கலாம்.

கடவுள்களைத் தாண்டி பார்ப்பனர்களை வணங்குபவன் இராமனாம்!
அதில், ‘‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உரைவானினும்,
விரியும் பூதம் ஓர் அய்ந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.”
பஞ்ச பூதங்கள் அய்ந்தையும் வணங்கமாட்டார். எல்லாவற்றையும் தாண்டி, பார்ப்பானை வணங்குவார்; பிராமணர்களை வணங்குவார். கடவுளை வணங்கு வதில்லை. அப்படிப்பட்டவன்தான் ராமன் – அதுதான் கம்பனுடைய முதல் பாட்டு. இங்கே புலவர்கள் இருக் கிறார்கள்; தவறாக இருந்தால், திருத்துங்கள், நான் திருத்திக் கொள்ளுகிறேன்.
அதற்கு என்ன அர்த்தம் என்றால், மனுதர்மத்தை அப்படியே தூக்கி உள்ளே வைத்திருக்கிறார்.
அதே கருத்தை துளசிதாசர் தெளிவாக எழுதி யிருக்கிறார். அதுதான் ஹிந்தி இராமாயணம் – துளசிதாஸ் இராமாயம் – புருஷ உத்தமன் என்று காட்டக்கூடிய ஹிந்தி இராமாயணம்.

நீங்கள் எவ்வளவு உயரத்திற்குப் போனாலும், நீங்கள் தலையைக் குனியவேண்டும்!
அதிலும் இதையேதான் அவரும் சொல்லியிருக்கிறார். ராமன் பிராமணர்களைத்தான் வணங்குவார். தலையில் தூக்கி சடகோபத்தை வைக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நீங்கள் எவ்வளவு உயரத்திற்குப் போனாலும், உங்களுக்குமேல் நாங்கள் உயரம். நீங்கள் தலையைக் குனியவேண்டும்; நாங்கள் உங்கள் தலையின்மீது அதனை வைப்போம் என்கிறார்கள்.
ஏன் கம்பனைத் தூக்கி வைத்துக் கொண்டாடு கின்றார்கள் என்றால், இதுதான் காரணம்.
மனுதர்மத்திலும், மற்ற நூல்களிலும் அது தெளிவாக இருக்கிறது. அம்பேத்கர் அவர்களும் எழுதியிருக்கிறார். நாங்கள் சொல்கின்ற கருத்தில், ஏதாவது தவறு இருக்கிறது என்றால், வாதம் செய்யுங்கள்; நீதிமன்றம் சென்று வழக்குப் போடுங்கள்; அதனைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

தந்தை பெரியார் எழுதியதை
நான் சொல்லியிருக்கிறேன்!
ரிக் வேதத்தில் 62 ஆவது பிரிவில் ஒரு சமஸ்கிருத சொல் இருக்கிறது.
‘‘தெய்வாதீனம் ஜகத்சர்வம்;
மந்த்ரா தீனம் து தெய்வதம்;
தன் மந்திரம் பிரம்மணாதீனம்;
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்’’
“உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது
கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது
மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது
பிராமணர்களே நமது கடவுள்கள்”
ஆகவே, பிராமணர்களை வணங்கு; இதே தத்துவம் தான் கம்ப ராமாயணம், துளசிதாஸ் இராமாயணம். அதே கருத்தைத்தான், இந்த கம்பனின் உரைப்பாயிரமும் சொல்கிறது. தந்தை பெரியார் எழுதியதை நான் சொல்லி யிருக்கிறேன்.
பெரியார் படித்த அளவிற்கு, இராமாயணத்தை வேறு யாரும் ஆராய்ச்சி செய்து சொல்லவில்லை!
பெரியார் படித்த அளவிற்கு, இராமாயணத்தை வேறு யாரும் ஆராய்ச்சி செய்து சொல்லவில்லை. இன்னமும் பெரியாருடைய கேள்விகளுக்குப் பதில் சொன் னார்களா?

மயக்க பிஸ்கெட் கொடுக்கும்பொழுது, பிஸ்கெட் தானே சாப்பிடலாம் என்று நினைக்கிறோம். அதுபோல, கம்பனுடைய கலை அழகு; கவிதை அழகு என்றால், கம்பனுடைய பாட்டு எத்தனையோ இருக்கிறதே, அதை எடுத்துச் சொல்கிறார்களா?

மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவர்கள் தயாராக இல்லை!
ஆகவே, அது முக்கியமல்ல அவர்களுக்கு, அதைப் பயன்படுத்தி, அந்தப் போதையைப் பயன்படுத்தி இன் றைக்கு இருக்கின்ற பிரச்சினைகளை மறக்கடிக்க வேண் டும். ஏªன்னறால், மக்கள் கேள்வி கேட்கிறார்கள், அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவர்கள் தயாராக இல்லை.
அவர்கள் செய்வது மக்கள் விரோதச் செயல் என்று நாம் ஏன் சொல்லுகிறோம் என்றால் நண்பர்களே, மணிப்பூரில் அவ்வளவு பெரிய கலவரம் ஏற்பட்டதே, அங்கே அவர் போனாரா என்று கேட்கிறோம். மணிப்பூர் எங்கே இருக்கிறது? அது இந்தியாவில் இல்லையா?
அவர் நினைத்தார் என்றால், உலகில் உள்ள நாடு களுக்கெல்லாம் போய்விட்டு வருவார், ஆனால், மணிப்பூருக்குப் போகமாட்டார்.
‘‘விஸ்வ குரு” – இப்பொழுது உலகத்திற்கே குரு. அந்த ‘‘விஸ்வ குரு” அளவிற்கு உயர்ந்த நிலையில், உள் நாட்டில் இருக்கின்ற மணிப்பூருக்கு அவர் சென்றாரா?
மணிப்பூராவது தூரம் – தமிழ்நாட்டில் என்ன நடந்தது நண்பர்களே!

‘‘நீங்கள் எந்த முகத்தோடு தமிழ்நாட்டில் வாக்குக் கேட்க வந்திருக்கிறீர்கள்?’’
காவிகளைப் பார்த்து நான் இந்தக் கூட்டத்தின் வாயிலாகத் தெளிவாகக் கேட்கிறேன், ‘‘நீங்கள் எந்த முகத்தோடு தமிழ்நாட்டில் வாக்குக் கேட்க வந்திருக் கிறீர்கள்?” இந்த நாட்டினுடைய பிரதமர், அனைவருக்கும் பிரதமர். ஓட்டுப் போட்டவருக்கும் பிரதமர்; ஓட்டுப் போடாதவருக்கும் பிரதமர். எங்கள் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சொன்னார் அல்லவா! ‘‘எங்களுக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டும் நான் முதலமைச்சர் அல்ல; எங்களை எதிர்த்து ஓட்டுப் போட்டவர்களுக்கும் முதலமைச்சர்; எங்களுடைய ஆட்சியை நீங்கள் கணக்குப் போட்டு பாருங்கள்; ‘‘அய்யோ, இப்படிப்பட்ட ஆட்சிக்கு நாம் ஓட்டுப் போடத் தவறிவிட்டோமே” என்று நீங்கள் வருந்தக் கூடிய அளவிற்கு என்னுடைய ஆட்சி அமைய வேண்டும் என்றுதான், அந்த இலக்கோடுதான் நான் பணியாற்றுகிறேன்” என்று சொன்னார்.

மதுரையிலிருந்து, திருநெல்வேலியும், தூத்துக்குடியும் எவ்வளவு தூரம்?
தமிழ்நாடு புயலாலும், மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு, வெள்ள நீர் வடிவதற்கு எவ்வளவு நாட்கள் ஆயிற்று? மதுரையிலிருந்து, திருநெல்வேலியும், தூத்துக்குடியும் எவ்வளவு தூரம்? ஹெலிகாப்டரில்தானே சென்றார்.
மக்கள் விரோத ஆட்சி ஒன்றிய ஆட்சி என்று ஏன் சொல்கிறோம் என்றால், இதுதான் ஆதாரம். மக்கள் நலன்மீது அக்கறை இருந்தால், இப்படி செய்வாரா?
உலகில் உள்ள மனிதர்கள் எல்லாம் பாதிக்கப்படும் பொழுது, ‘‘அய்யோ, அந்த மக்கள் இப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறார்களே,” என்று நினைக்கின்றோம்.

தேசியப் பேரிடர் என்றால், வடநாட்டிற்கு மட்டுமா? உத்தரப்பிரதேசத்திற்கு மட்டுமா?
‘‘தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி கொடுங்கள், நிதி கொடுங்கள்” என்று தொடர்ந்து நம்முடைய முதலமைச் சர் ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொண்டுதான் இருக் கிறார். நேற்றுகூட உரையாற்றும்பொழுது கேட்டார்.
ஆனால், ஒன்றிய அரசு கொடுத்ததா? என்றால், அதுதான் இல்லை. ‘‘தேசியப் பேரிடராக அறிவியுங்கள்” என்று கேட்டார்கள்; தேசியப் பேரிடர் என்றால், வட நாட்டிற்கு மட்டுமா? உத்தரப்பிரதேசத்திற்கு மட்டுமா?
ஆகவே, அவர்கள் எல்லா மக்களையும் ஒன்று என்று நினைத்தால், இந்தியா ஒன்று என்று நினைத்தால், பேதமற்ற இந்தியாவை நாங்கள் உருவாக்குவோம் – வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்றெல்லாம் கிடை யாது. தெற்கும், வடக்கும் எல்லாம் எங்களுக்கு ஒன்று தான் என்று நடந்துகாட்ட வேண்டாமா?

‘‘சொந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவேண்டாமா?’’
இங்கே வரும்பொழுது பிரதமர் என்ன சொல்வார் என்றால், ‘‘சொந்த வீட்டிற்கு வருகின்ற உணர்வைப் பெறுகிறேன்” என்பார்.
‘‘சொந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிய வேண்டாமா?” சொந்த வீட்டுக்காரர்கள் எல்லாம் வெள் ளத்தில் மூழ்கியிருக்கும்போது பார்க்க வரமாட்டார்; இது என்ன கொடை நாடு எஸ்டேட்டிற்கு விசிட் செய் வதுபோன்றதா? அதுபோன்ற கதையா இது? என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டிற்கு நீங்கள் நிவாரண நிதியைக் கொடுக்காததற்கு என்ன காரணம்?
ஆகவேதான், மக்கள் விரோத ஆட்சி – ஒன்றிய ஆட்சி என்று சொல்கிறோம்; தனிப்பட்ட முறையில் எங்களுக்குக் கோபதாபங்கள் கிடையாது. மக்கள், உங்களை நம்பி ஆட்சியை இரண்டு முறை கொடுத் திருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு நீங்கள் நிவாரண நிதியைக் கொடுக்காததற்கு என்ன காரணம்?
தமிழ்நாட்டு மக்கள் நமக்கு ஓட்டுப் போடவில்லை; இனியும் ஓட்டு போடமாட்டார்கள் என்று அவர்களே முடிவு செய்துவிட்டார்கள் போலும்.
ஆகவே, ‘‘நாம் கோவிலை, தீர்த்தத்தைப் பார்க்க வேண்டுமே தவிர, இனிமேல் அந்த மக்களைப் பார்த்து வாக்குக் கேட்கவேண்டிய அவசியமில்லை” என்று அவர்கள் குளத்தை நோக்கிப் பார்த்து, தீர்த்தமாடி, தீர்த்தம் குடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, வேறு கிடையாது.

ராமன் கைகொடுப்பான் என்று
நினைக்கிறார்கள்!
அதற்கு ராமன் கைகொடுப்பான் என்று நினைக் கிறார்கள். இன்னுங்கேட்டால், துளசிதாஸ் இராமாயணத் தில், ‘‘இராமனை வணங்காதவர்கள் எல்லாம், அடுத்த ஜென்மத்தில் காக்கைகளாக மாறியிருக்கிறார்கள்” என்று துளசிதாஸ் எழுதியிருக்கிறார்.

இன்றைக்கு இவ்வளவு காக்கைகள்
ஏன் பறக்கின்றன?
அப்பொழுதுதான் புரிந்தது, இன்றைக்கு இவ்வளவு காக்கைகள் ஏன் பறக்கின்றன என்று. இதன்படி ‘‘அந்தக் காலத்திலேயே ராமனுக்கு எதிர்ப்பானவர்கள்” இருந்துள்ளனர் என்பதுதான் கவனிக்கத்தக்கது.
இன்றைக்கு இராமாயணத்தை அவர்கள் சொல்லிக் கொண்டு காலட்சேபம் செய்யலாம்; அதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். பழைய சேங்காலிபுரங்கள் இல் லையே என்கிற குறையைத் தீர்ப்பதற்குத்தான் இன் றைக்குப் புதிய புதிய ஆட்கள் வருகிறார்கள்.
நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால், ஆட்சியில் அமர்ந்து கொண்டு அதை செய் யலாமா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள்? மக்கள் விரோதமாக நீங்கள் நடந்துகொள்கிறீர்களே, அது நீங்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு முரணானதல்லவா?
இப்பொழுது நடப்பது ஒன்றும் மன்னராட்சி அல்ல; எதேச்சதிகார ஆட்சி அல்ல; ராஜாக்கள் ஆட்சி, 56 தேசங்கள் – இவையெல்லாம் போய்விட்டன. இப் பொழுது இந்திய அரசமைப்புச் சட்டம் – 1949 ஆம் ஆண்டு நமக்கு நாமே கொடுத்துக்கொண்டோம் என்று மக்களுக்கென்று – புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களு டைய தலைமையில் அது உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவிலும் நான்கு பார்ப்பனர்கள் முக்கியமாக இடம் பெற்றனர்.
அதிலும் அம்பேத்கர் அவர்களுக்கு மிகப் பெரிய சங்கடத்தை உருவாக்கினார்கள். அப்படி இருந்தும், அடிப்படைக் கருத்துகளை அதில் எப்படியாவது நுழைத்து விடவேண்டும் என்பதற்காக, புத்தர் கருத்து களிலிருந்து அதை நான் எடுத்தேன் என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர்.

(தொடரும்)

No comments:

Post a Comment