தமிழர் திருநாள் குறித்து தந்தை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

தமிழர் திருநாள் குறித்து தந்தை பெரியார்

featured image

திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய விழா என்பதாக ஒன்றைக் காண்பது என்பது மிக அரிதாக உள்ளது.
இதன் காரணம் என்னவென்றால் கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களை தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக தமிழ்நாட்டில் தமிழனின் கலாச் சாரங்களை, பழக்கவழக்கங்களை அடியோடு அழித்து, மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல் தமிழனுக்கு வரலாறு (சரித்திரம்) என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன.

எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஓர் அடிமை ஜீவனாக விளங்குகிறான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் – நடக்கும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.
தமிழனுக்குள்ள கலைகள் என்பன வெல்லாம் தமிழனை அடிமையாக்குவதாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு மதம் என்பதே இல்லாமற் போய்விட்டது எனலாம். மக்களுக்கு விழா மிக முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல் கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல் அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவைகள் ஏற்படுவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.
அரசாங்க விடுமுறைக்கு உரிய விழாக்கள்: போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருசப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாட்டமி, பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூசை, தீபாவளி முதலியனவும், விடுமுறை இல்லாத விழாக்களான கார்த்திகை தீபம், பங்குனி உத்தரம், தைப்பூசம் இந்தப்படியான இன்னும் பல உள.

இவைகளில் தமிழனுக்கு – தமிழ் சமுதாயத்திற்கு – தமிழன் பண்பிற்கு – தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு ஏற்ற விழா என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?
தமிழனின் இழிவுக்கு மறக்க முடியாத, முக்காலத்திற்கும் ஏற்ற நிலையில் ஓர் எடுத்துக்காட்டைக் கூற வேண்டுமானால் தமிழனுக்கு காலத்தைக் காட்டக் கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லை என்றே கூறலாம்.
கிறிஸ்துவர்கள், காலத்தைக் காட்ட இருப்பது கிறிஸ்து ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முஸ்லிம்களுக்கும் காலத்தைக் காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல் தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?
இப்படியேதான், மற்றும் தமிழனுக்கு கடவுள், மதம், மத நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல, எதுவும் காண மிக மிகக் கஷ்டமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழர் விழா என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்?
ஏதாவது ஒன்று வேண்டுமே, அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதி பொங்கல் விழா என்பதை தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன்; மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.
இந்தப் விழாவையும் (பிணீக்ஷீஸ்மீst திமீstவீஸ்ணீறீ) அறுவடைத் திருவிழா என்ற கருத்தில்தானேயொழிய, சங்கராந்தி, போகி, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.
இதை (இந்தப் பொங்கல் விழாவை) தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும். இதுதான் பொங்கலுக்கு எனது சேதி என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
(பொங்கல் மலர், 14.1.1959)

No comments:

Post a Comment