பள்ளிகளில் சமூகநீதிப் பாடல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 11, 2024

பள்ளிகளில் சமூகநீதிப் பாடல்!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை வணக்கம் நிகழ்ச்சி முடிந்ததும் சமூக நீதிப் பாடல் பாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பள்ளிகளில் காலை வணக்க நிகழ்வில் “சமூகநீதி” பாடல் பாடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

“அரசுப் பள்ளி மேனாள் மாணவர்களை ஒன்றி ணைக்கும் “விழுதுகள்” நிகழ்வைத் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட “சமூகநீதி” உள்ளிட்ட 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், இந்த 10 பாடல்கள் தொகுப்பில் சமூகநீதியை வலியுறுத்தும் பாடலை அசெம்பிளி நேரத்தில் பாடிவிட்டு, வகுப் புக்குச் செல்ல வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

“சமூகநீதிக் கொள்கையை எப்போதும் அழுத்த மாக வலியுறுத்தும் அமைச்சர் மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இனிவரும் காலங் களில்

“சமூகநீதி” பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் என அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப் படும்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி என்பது அடிப்படைக் கோட்பாடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் பள்ளிகளில் சமூகநீதிப் பாடலை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பாடுவது பாராட்டத்தக்கதும், வரவேற்கத்தக்கது மாகும்.
சமூகநீதி என்பது அனைவருக்கும் அனைத்தும் என்ற விரிந்த, பரந்த மனிதநேயத் தத்துவத்தைக் கருப்பொருளாகக் கொண்டதாகும்.

மாணவர்கள் மத்தியில் மாச்சரியங்களுக்கு இடங் கொடுக்காமல், சமூக நீதியை வலியுறுத்து வதன் மூலம், ஜாதி உணர்ச்சிகள் ஒழிந்து சகோ தரத்துவத்தைப் பேணி வளர்க்கும் உணர்ச்சியை ஊக்குவிப்பதாகும்.

இதில் அரசியல் பார்வைக்கு இடமில்லை – அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடக்க முதலே அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமூகநீதியில் உளமாற அக்கறை செலுத்தக் கூடியவர்.
தமிழ்நாட்டில் தொடங்கப்படும் சமூகநீதி குறித்த பாடல் அகில இந்திய அளவில் கல்வி நிறுவனங் களிலும் பாடப்படுமானால், அது புதிய பார்வையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

ஜாதி மற்றும் மதக் குரோதங்கள் ஒழிந்து ஒரு சகோதர மனப்பான்மையை மாணவர்கள் மத்தி யில் ஊட்டப்படுமானால், அது எதிர்கால இந்தி யாவை ஆரோக்கியம் உள்ளதாக வளர்த்தெடுக்கும் என்பதில் அய்யமில்லை.

No comments:

Post a Comment