ராமன் கோயில் பிரச்சினை அய்யர் - அய்யங்கார்கள் சண்டை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 18, 2024

ராமன் கோயில் பிரச்சினை அய்யர் - அய்யங்கார்கள் சண்டை!

வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமன் கோயில் திறக்கும் குட முழுக்கு நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ராமன் கோயிலைத் திறந்து கற்பகிரகத்தில் ராமனை பிரதிஷ்டை செய்கிறார். இது மிகப்பெரிய பிரச்சினையாக அவர்களுக்குள் வெடித்து கிளப்பி இருக்கிறது.
ராமன் மகாவிஷ்ணுவின் அவதாரம் அதாவது வைஷ்ணவ கடவுள் ஆவார் – அப்படி இருக்கும்போது இதில் சங்கராச்சாரியார்கள் ஏன் தலையிட வேண்டும் என்று வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் கொந்தளிக்கிறார்கள். இதனை கண்டித்து ஒன்றிய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயணன் ரானே கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இதுவரை யாராலும் செய்ய முடியவில்லை – பிரதமர் மோடியும், பிஜேபியும் ராமன் கோயிலை கட்டி உள்ளனர். கோயிலை ஆசிர்வதிக்க வேண்டுமா? அல்லது விமர்சிக்க வேண்டுமா? சங்கராச்சாரியார்கள் பிரதமர் மோடியையும் பாஜகவையும் அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கின்றனர். இந்த கோயில் அரசியலின் அடிப்படையில் கட்டப்படவில்லை – மதத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. ராமன் நம் கடவுள், ஹிந்து மதத்திற்கு சங்கராச்சாரியார்களின் பங்களிப்பு என்ன என்பதை சொல்ல வேண்டும்” என்று ஒன்றிய பிஜேபி அமைச்சர் நாராயணன் ரானே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதனை எதிர்த்து சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து கூறியுள்ளார். சங்கராச்சாரியார்களின் பங்களிப்பை கேள்விக்கு உள்ளாக்கியதன் மூலம் ரானே ஹிந்து மதத்தை அவமதித்துள்ளார்; இதற்காக 22 ஆம் தேதிக்கு முன் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும், ரானேயை ஒன்றிய அமைச்சரவையிலிருந்து மோடி நீக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்பிரியா சுலே ஒன்றிய அமைச்சரின் கருத்துக்கு பிஜேபி பதில் அளிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
ஹிந்து மதம் ஒரே மதம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன பிஜேபி சங்பரிவார் வட்டாரங்கள். இப்படி ஒரு மதத்திற்குள் அய்யர், அய்யங்கார் அதாவது ஸ்மார்த்தர்கள் – வைஷ்ணவர்கள் குஸ்தி போடுவது கேலிக்குரியதாகும். இந்த லட்சணத்தில் ஒரே மதம் – ஒரே நாடு என்று சொல்வது எந்த அளவிற்கு விசித்திரமானது – வேடிக்கையானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கிடையில் உத்தவ்தாக்கரே ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். மும்பையில் செய்தியாளர்களிடம் உத்தவ்தாக்கரே கூறியதாவது: குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் புனரமைக்கப்பட்ட பிறகு முறையான திருப்பணி குட முழுக்கு விழாவை நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் நடத்தினார். கோயில் தேசிய பெருமை மற்றும் நாட்டின் சுயமரியாதை தொடர்பானது என்பதால் குடமுழுக்கு விழாவை குடியரசுத் தலைவர் முர்மு நடத்த வேண்டும்; ராமன் கோயில் குட முழுக்கு அன்று நான் ஏற்கெனவே அறிவித்தபடி நாசிக்கிலுள்ள காலாராம் கோயில் செல்கிறேன்; கோதாவரி நதியில் ஆரத்தி வழிபாடும் நடத்த உள்ளேன். ஜனவரி 23ஆம் தேதி எங்கள் கட்சி சார்பில் பேரணி நடக்கிறது; அதில் கலந்து கொள்கிறேன் – இந்த நிகழ்ச்சியின்போது 1992ஆம் ஆண்டு அயோத்தியில் நடந்த கரசேவா நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவசேனையர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர் என்று உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.

இப்படி ராமன் கோயில் திறப்பு என்பது குறித்து ஒரு மதத்துக்குள்ளேயே சர்ச்சை – சண்டைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த ராமன் கோயில் பிரச்சினை இந்தியாவை ஒன்றாக்குவதற்கு பதிலாக பிரிவினையை, பிளவை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. இது அரசியலுக்காக நடத்தப்படுகின்ற விழா என்று சங்கராச்சாரியார்களே கருத்துத் தெரிவித்துள்ளார்கள். அரசியல் கட்சியினர் எந்தக் கருத்துகளையெல்லாம் சொல்லி வந்தனரோ, அதே கருத்துகளைத்தான் சங்கராச்சாரியார்களும் சொல்லி வருகிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது பிஜேபி வட்டாரமும் அதன் கூட்டணிக் கட்சிகளும்? இன்னொரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்கி விட்டு, ஹிந்து மத ராமன் கோயிலைக் கட்டுவது எந்த வகையில் ஒழுக்கமும், நீதியும், நேர்மையும் உடையது என்பது முக்கியமான கேள்வியாகும்.

மதம் என்பது மக்களை ஒன்று படுத்துவதற்குப் பதிலாக பிளவுபடுத்துவதற்கும் கலவரங்களை உண்டாக்குவதற்கும் தானா? பக்தர்களே சிந்திப்பீர்!

No comments:

Post a Comment