தமிழ்ப் புத்தாண்டு சங்க இலக்கியமும் - அறிஞர்களும் சொல்வதென்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

தமிழ்ப் புத்தாண்டு சங்க இலக்கியமும் - அறிஞர்களும் சொல்வதென்ன?

featured image

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுப் பிறப்பாக பல்லாண்டு காலமாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு அறிஞர்கள் தக்க சான்றுகளைத் தந்துள்ளனர். இரண்டாயிரம் (2000) ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங் களில் இதற்குச் சான்றுகள் உள்ளன.
‘‘தைத் திங்கள் தண்கயம் படியும்’’ என்று நற்றிணையும்,
‘‘தைத் திங்கள் தண்ணிய தரினும்’’ என்று குறுந்தொகையும்,
‘‘தைத் திங்கள் தண்கயம் போல்’’ என்று புறநானூறும்,
‘‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’’
என்று கலித் தொகையும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புச் சிறப்பிடம் பெற்றுள்ளதையும், ஆண்டுக்கு மாதங்களை உருவாக்கிப் பெயர்கள் சூட்டியிருப்பதையும் அறிய முடிகிறது.
தைப் பிறப்பாண்டு வெறும் விழாவையோ, அதனாற் கிளர்ந்து எழும் மகிழ்வையோ அடிப்படையாக மட்டும் கொண்டு பிறந்த தல்ல. அறிவியல் தெளிவோடு, கதிரவன் தென்திசை நோக்கி நகர்ந்து மறுபடியும் வடதிசை நோக்கித் திரும்பும் பருவ -கால மாறுதலைக் கொண்டும் கணித்து உருவாக்கப்பட்டதாகும்.
ஆரியர் தமிழ்நாட்டிற்கு வருமுன் வான நூலை ஒரு சிறிதும் அறியார். அவர் அறிந்ததெல்லாம் திங்களுடைய வளர்ச்சி தளர்ச்சியைக் கண்டு காலத்தைக் குறிப்பிடுவது மட்டுந்தான். உவாவு (அமாவாசை)க்கு ஒரு உவா மாதம் என்று அவர்கள் கணக்கிட்டனர். ஆரியர்கள் பல்கித் தமிழ்நாட்டை அடைந்தபோதே தமிழர்களுடைய மதி நுட்பத்தையும், கணித முறைகளையும் கண்டு வியந்து தாமும் தம் முறையைக் கையாளத் தொடங்கினர்.
அவர்கள் தங்கள் பிறை மாதங்களுக்குப் பெயர் கொடுக்க நினைத்துச் சித்திரை, வைகாசி முதலிய மாதப் பெயர்களையே பெரும்பாலும் சைத்திரம், வைகாசம் எனத் திரித்து வழங்கத் தொடங்கினர்.
சித்திரை மாதத்தில் வரும் உவா நாளுடன் முடிகிற மாதம் சைத்திரம் எனவும், இவ்வாறே ஏனைய மாதங்களுக்கும் பெயர் வைத்துக்கொள்ள ஆரிய மக்கள் சில ஆண்டுகளின் பின் தங்களின் கொள்கைக்கு மாறாகச் சைத்திரம் பங்குனியிலும் வைகாசம் சித்திரையிலும் இவ்வாறே ஏனைய மாதங்களும் முடிவதைக் கண்டு அஞ்சினவர்களாய் சித்திரை முதலிய மாதங்களே நிலையானவை; ஆதலினால் அவற்றோடு தங்கள் புதிய மாதங்கள் கூடாமற் போனால் பயனற்றுப்போம் என்று தெரிந்து பங்குனியோடு முடிகிற தமது சைத்திரத்தை அதிமாதம் அல்லது பொய் மாதம் என்று தள்ளி சித்திரை மாதத்தின் உவாவுடன் முடிகிற பிழை மாதமே உண்மைச் சைத்திரம் (நிஜசைத்திரம்) என்று கொள்வாராயினர்.
ஆகவே சித்திரை முதலிய பன்னிரு மாதப் பெயர்களும் ஆரியமயப்பட்டுக் கிடத்தல் அறியப்படும். பழந்தமிழ் மக்கள் ஓரைப் (நட்சத்திர) பெயர்களையே மாதப் பெயர்களாகக் கொண்டிருந்தனர் என்பது அறிஞர் பெருமக்களால் தெளிவுறுத்தப்படுதலாலும் பழஞ் சேர நாடான மலையாளத்தில் இவ்வழக்கே இன்றும் நடை முறையிலிருப்பது அறியப் படுதலாலும், சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்னும் ஓரைப் பெயர் களால் சுட்டுவதே சிறந்ததென்று தமிழ் மக்கள் கடைப்பிடித்தல் வேண்டும்! (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 25) என்று மறைமலை அடிகளாரின் நண்பர் இ.மு.சுப்பிரமணியம் (பிள்ளை) அவர்கள் கூறியுள்ளார்.
முன் காலத்தில் ஆண்டுப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் ஆண்டுப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையில் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள் என்று டாக்டர் மு.வ.கூறுகிறார்.
வடநாட்டாருக்குத் தீபாவளி ஆண்டுப் பிறப்புப் போல, தமிழ்நாட்டாருக்குப் பொங்கல் புத்தாண்டுப் பிறப்பாகும். இடைக்காலத்தில் ஆரியர் தொடர்பால், தை மாதத்திற்குப் பதிலாக, சித்திரை மாதம் புது ஆண்டாக ஆகிவிட்டது. சூரியன் தட்சணாயனத்திலிருந்து – அதாவது தென் திசையிலிருந்து உத்திராயனத்துக்கு – அதாவது வடதிசைக்கு வரும் பருவமாறுதலை வைத்தே ஆண்டுத் தொடக்கத்தை வரையறுத்தார்கள் இயற்கை வழி வாழ்க்கை நடத்திய நம் மூதாதையர். என்று நாரண துரைக்கண்ணன் கூறியுள்ளார்.

(பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு மலர், மலேசியா 15.1.1988)

தமிழ் அரசர்களுடைய கல்வெட்டு களிலே காணப்படும் காலக் கணக்குகள் அவர்கள் முடிசூடி ஆளத் தொடங்கிய ஆண்டிலிருந்தே கணிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களிடையே பெருவழக்கிலிருக்கும் சாலிவாகன சக ஆண்டு அக் கல்வெட்டு களில் இடம் பெறவில்லை.
இச்சாலிவாகன சகவருடம் சாலிவாக னன் எனும் வடநாட்டு அரசனால் இற்றைக்கு 1880 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைநாட்டப் பட்டதென்பர். இவ்வரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத் தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலைநாட்ட முயலாதது பெரும் விந்தையாக இருக்கிறது. வட நாட்டரசன் ஒருவன் நிலைப்படுத்திய ஒரு தொடர் ஆண்டை வரவேற்று வழங்கித் தமிழினத்தின் பழைமையையும் – பண்பையும், சிறப்பையும் – செல்வாக்கை யும் சிதைத்து வந்தமை பெரும் வெட்கத்துக்கிடமானதாகவும் இருக்கிறது என்று இலங்கைப் பேராசிரியர் கா.பொ.ரத்தினம் விளக்குகிறார்.

No comments:

Post a Comment