'துக்ளக்'குக்குப் பதிலடி ஒழுக்கம் பற்றி தந்தை பெரியாரும் - சங்கராச்சாரியாரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

'துக்ளக்'குக்குப் பதிலடி ஒழுக்கம் பற்றி தந்தை பெரியாரும் - சங்கராச்சாரியாரும்

featured image

மின்சாரம்

24-1-2024 நாளிட்ட ‘துக்ளக்’ ஏட்டில்
வெளிவந்த கேள்விகளுக்குப் பதில்கள் இவை
கேள்வி : மல்யுத்த நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா, தனக்கு மத்திய அரசு வழங்கிய பத்மசிறீ விருதை திருப்பிக் கொடுப்பதாக அறிவித்திருப்பது எதைக் காட்டுகிறது?
பதில் : அவருக்கு அரசு விருது தந்ததுதான் தவறு என்பதைக் காட்டுகிறது.
1. நமது பதிலடி:
மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பஜ்ரங் பூஷன் மீது ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை; காரணம் அந்தப் பேர்வழி பி.ஜே.பி.காரர் என்பதே. இதன் காரணமாக மல்யுத்த வீராங்கனைகள் மல்யுத்தத்தில் போட்டிப் போடுவதிலிருந்தே விலகினர்.
பஜ்ரங் பூஷனின் கூட்டாளி சஞ்சய் சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஒன்றிய அரசால் தமக்கு வழங்கப்பட்ட பத்ம சிறீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அனுப்புவதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார். இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, ஒழுக்கம், நேர்மை கெட்ட முறையில் பஜ்ரங் புனியாவுக்கு ஒன்றிய அரசு விருது அளித்ததே தவறு என்று சப்பைக்கட்டு கட்டுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர். இவர்கள் எல்லாம் ஒழுக்கவான்களாம்!

கேள்வி : ‘தமிழ் மொழி செழிக்குமானால், தமிழினம் செழிக்கும்’ என்கிறாரே, முதல்வர் ஸ்டாலின்?
பதில் : ‘தமிழ் ஒழிந்து ஆங்கிலம் பயின்றால்தான் தமிழினம் உருப்படும்’ என்றாரே ஈ.வெ.ரா.? அவரை இப்படி இழிவுபடுத்துகிறாரே ஸ்டாலின்.
2. நமது பதிலடி:
தமிழை நீஷப் பாஷை என்றும், ஆங்கிலத்தை மிலேச்ச மொழி என்றும் கூறி, அதே நேரத்தில் ஆங்கிலப் படிப்பையே முதன்மைப்படுத்தி வயிறு பிழைக்கும் கூட்டமா இதை எழுதுவது? இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனின் ஹிட்லர் வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்ப்பார்த்து ஜெர்மன் மொழியை விழுந்து விழுந்து படித்தவர்கள்தானே இந்தப் பார்ப்பனர்கள். (India remembered by percival and margaret – Orient Longman – 1981 – page 74-75)
பிறகு ஜெர்மன் விழுந்து ஜப்பான் வெல்லும் என்று ஏற்பட்ட நிலையில் ஜப்பான் மொழியைப் படிக்கத் தொடங்கினர் பார்ப்பனர்கள். (ஆதாரம்: மேற்கண்ட அதே நூல் பக்கம் 78)
இந்த யோக்கிய சிகாமணிகள் தமிழ், புராண சகதிகளிலிருந்து மீண்டு விஞ்ஞான மொழியாக வேண்டும் என்று கூறிய தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துகிறார்கள்.
ஆமாம், தமிழ் ‘செம்மொழி’ என்ற நிலையை நிலைப்படுத்தியது முத்தமிழ் அறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் என்பதை வசதியாக மறைப்பதும் ஏன்?

கேள்வி : ஆன்மிகம் அதிகமானால் குற்றங்கள் குறையுமா?
பதில் : ஆன்மிகம் அதிகமானால் நிச்சயம் குற்றம் குறையும் – மக்களிடம் மட்டுமல்ல, போலீஸிடமும், ஆட்சியாளர்களிடமும் கூடக் குற்றங்கள் குறையும்.
3. நமது பதிலடி:
இதற்கு நாம் பதில் சொல்லுவதைவிட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியையே சாட்சிக் கூண்டில் ஏற்றுவோம்!
“மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால், கடவுள் மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாகக் (Fashion) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது. (1976 மே திங்களில் காஞ்சிபுரத்திலே நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டின் போது சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசியது)
அதே சங்கராச்சாரியார் காஞ்சியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தில் என்ன பேசினார்?

“பத்துப் பதினைந்து வருடங்களைக் காட்டிலும், இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய தென்படுகிறது. ஆனாலும், ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும் நிறைய இருக்கின்றன. இவைகள் நிறைய வரவரப் பக்தியும் மேன்மேலும் வளருகிறது. இவ்விதப் பக்தி நம்மிடையே வளர்ந்தும் கூட துக்கங்களும், வியாதிகளும் அதிகமாக வளருவதற்குக் காரணங்கள் என்ன? ஓரளவு நமக்குக் கடவுள் பக்தி இருந்தபோதும் பேராசையும், ஒழுக்கமின்மையும், சுயநலமும், அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன.” (‘தினமணி’ – 7.9.1976)
காஞ்சி மகான் என்று சங்கராச்சாரியாரை விளிக்கும் திருவாளர் குருமூர்த்தியாரே, ஆன்மிகத்தால் ஒழுக்கம் வளராது என்பதற்கு உங்கள் மகானே சொன்ன பிறகு உங்கள் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்வதாக உத்தேசம்?
இன்னொருவரையும் இழுத்துக் கொண்டு வந்து திருவாளர் குருமூர்த்தி முன் நிறுத்தி வாக்குமூலத்தைக் கொடுக்கச் சொன்னால் ஒரு நிமிடம் குருமூர்த்தியின் மூச்சு நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மீகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?
‘சோ’வின் பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய்ச் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதி ஆவதற்குப் பொய்யை அருள்வாக்காக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையிலேயே நடிக்கத் தெரிய வேண்டும்.
(‘துக்ளக்’ – 26-10-2016 – பக்கம் 23)
ஆன்மிகம் ஒழுக்கத்தை வளர்க்கும் என்று கூறும் குருமூர்த்திக்கு இந்த ‘ஆப்புகள்’ போதும் தானே.
தனது மகா மகா மகான் என்று குருமூர்த்தி பீற்றிக் கொள்ளும் மறைந்த ‘சூப்பர் சீனியர்’ சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?
“நல்ல ஒழுக்கம் இருந்தால்போது மென்றும், கடவுள் அவசியம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ, நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது.”
(‘கல்கி’ – 8-4-1958)

ஒழுக்கத்திற்கு சங்கராச்சாரியார் கொடுக்கும் மரியாதையைப் பார்த்தீர்களா?
அதே நேரத்தில் கடவுள், மத மறுப் பாளரான தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?
“கடவுளாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்குப் பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் பொதுச் சொத்து.
நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய்விட்டுப் போகிறேன்… நான் கடவுளை நம்பவில்லை. அதைக் கொழுக்கட்டை என்று சொல்லுகிறேன். நான் போய்விட்டுப் போகிறேன். உங்களுக்கொன்றும் நஷ்டம் இல்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே உங்களுக்கென்ன நஷ்டம்?
ஆனால், ஒழுக்கம் இல்லையென்றால் என்னவாகும்? உண்மை, உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இந்த மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்குப் பேர் தானே?

ஒழுக்கமாக இல்லை என்றால் எங்கெங்கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து, தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான். நாணயமாக இல்லையெனில், யாரையோ ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கின்றான். உண்மையாக இல்லையென்றால் என்னத்தையோ, எவனையோ ஏமாற்றிப் பொய்ப் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்?”
ஆகவே, ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களில் குற்றவாளியாக இருந்தானானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்கு கேடு விளைந்திருக்கும். இது முக்கியமில்லை. பக்தி, கடவுள் நம்பிக்கை, மதக் கோட்பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கியமென்றால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் அதனாலே?”
(24-11-1964 – அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து…)
தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்றவனுக்கு மோட்சமளித்தான் சிவன் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கும் கூட்டம் கொஞ்சம் கூட நாணமின்றி – நேர்மையின்றி ஆன்மிகத்தால்தான் குற்றங்கள் குறையும் என்று கூறுவது எல்லாம் யாரை ஏமாற்றிட? புரோகித வயிற்றுப் பிழைப்புக்காக எதையும் கிறுக்கித் தள்ளலாமா?
ஒழுக்கச் சீலர் – ஆன்மிக சிரேஷ்டர் ஜெயேந்திரர் எப்படி? பேசலாமா?
குருமூர்த்தி கூட்டம் பதில் சொல்லட்டும்!

No comments:

Post a Comment