திருச்சியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 14, 2024

திருச்சியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

featured image

இராமன் எத்தனை இராமன் அடா? இப்பொழுது வருவது தேர்தல் ராமன்!

திருச்சி, ஜன.14 இராமன் ஒரு இராமனல்ல – எத்த னையோ ராமாயணங்களும், இராமனும் உண்டு – இப் பொழுது பிஜேபி சங்பரிவார் கையில் எடுத்திருப்பது அரசியல் – தேர்தல் இராமன் என்று திருச்சியில் பேட்டியில் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 12.1.2024 அன்று திருச்சிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில்…

அறிவாசான் தந்தை பெரியார், அன்னை மணிம் மையார் ஆகியோருடைய மிகப்பெரிய அருட்கொடை யினால் உருவாக்கப்பட்ட பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில், ஏறத்தாழ 10 அமைப்புகளில் படிக்கக்கூடிய – பெண் பிள்ளைகள் பெரிதும், ஆண் பிள்ளைகளும் ஓரளவிற்கு என்று கலந்திருக்கக்கூடிய, தொடக்கப்பள்ளி முதல் பார்மசி கல்லூரி, பட்டப் படிப்பு, பி.எச்டி வரையில் படிக்கக்கூடிய பிள்ளைகள் இருக்கக்கூடிய இந்த இடத்தில், திராவிடர்த் திருநாளான தைப் பொங்கல் நாளை – மாணவர்களும், மாணவிகளும், ஆசிரியப் பெருமக்களும் ஒரு குடும்பம் போல கொண்டாட இங்கே கூடி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

விழாக்களில் எல்லாம் மூடநம்பிக்கையற்று, அறுவடைத் திருநாளாக இருக்கக்கூடிய உழவர் திருநாள்தான் – இந்தப் பொங்கல் புத்தாண்டு என்பது.
எனவே, இந்தப் பொங்கல் புத்தாண்டு விழாவில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

காரணம், எப்போதும் ஊர்ச்சுற்றியாக, நாடோடியாக இருக்கின்ற எங்களைப் போன்றவர்களுக்கு இந்த இல்லம்தான் எங்களுடைய முதல் இல்லம் – அடுத்ததுதான் மற்ற இல்லங்கள்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி இவையெல்லாம் தழைக்கக்கூடிய நல்லாட்சி!

அப்படி ஒரு குடும்பம் போல, ஜாதி, மதம், கட்சி வேறுபாடில்லாமல், இங்கே பிள்ளைகள் திரண்டு, எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டு முழுவதும் இருந்து – ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி இவையெல்லாம் தழைக்கக் கூடிய நல்லாட்சி வருகின்ற நிலை நாடாளுமன்றத் தேர்தலில் உருவாகவேண்டும்.
ஏனென்றால், நான் சொல்வது அரசியல் அல்ல; முழுக்க முழுக்க நம்மைப் பாதுகாக்கக் கூடிய ஓர் அரசாங்கம் அமைவதற்காகவே!
ஆகவேதான், இது கல்வி நிலையமாக இருந்தாலும், ‘‘கல்வி ஓங்கவேண்டும்; அனைவருக்கும் அனைத்தும் சமூகநீதி அடிப்படையில் கிடைக்கவேண்டும்” என்ப தையே இந்தப் பொங்கல் விழா செய்தியாக சொல்லி, தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற ‘‘திராவிட மாடல்” ஆட்சி, சிறப்பாக, தமிழ்நாட்டு மக்களுக்கு அருமையான வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறது.
தமிழ்ப் புத்தாண்டில், புது வாழ்வை அவர்கள் பெறக்கூடிய அளவிற்கு…

புயல், மழை, வெள்ளம் போன்றவை கடந்த ஆண்டுகளில் மக்களை அலைகழித்தன. அவற்றால் இன்னல் அடைந்தவர்கள் தமிழ்ப் புத்தாண்டில், புது வாழ்வை பெறக்கூடிய அளவிற்கு, ‘‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ” என்பதை உணர்த்தும் அளவில் இப்புத்தாண்டு அமையவேண்டும்..
நாடே ஒரு சமத்துவக் குடும்பமாக, சமூகநீதிக் குடும்பமாக இருக்கவேண்டும்
இங்கே நீங்கள் பார்த்திருப்பீர்கள், அத்துணை பேரும் ஒரு குடும்பமாகத் திரண்டிருக்கின்றோம். இதுபோல, நாடே ஒரு சமத்துவக் குடும்பமாக, சமூகநீதிக் குடும்பமாக இருக்கவேண்டும் என்று ‘‘பொங்கலோ, பொங்கல்” என்று வாழ்த்துகிறோம்.

செய்தியாளர்: அயோத்தியில் இராமன் கோவில் குடமுழுக்கு நடைபெறப் போகிறதே, அதுகுறித்து உங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: இராமன் கோவிலை அவர்கள் முழுமையாகக் கட்டி முடிக்கவில்லை என்பதை, நாங்கள் சொல்லவில்லை; நான்கு சங்கராச்சாரியார்களே சொல்லி, ‘‘இராமன் சிலையை பிரதிஷ்டை செய்ய இவருக்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று கேட்கிறார்கள்.
எனவே,அவர்கள் சொல்லுகின்ற ஸநாதனத்திற்கு விரோதமாக இருக்கிறார், ஸநாதனத்தை மீறியிருக்கிறார் என்று சொல்லப் போகிறார்கள்.
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பெரும்பாலோர்….
‘‘நாங்கள் இராமர் கோவில் குடமுழுக்கில் கலந்து கொள்வதாக இல்லை” என்று எதிர்க்கட்சிகள் பல, காங்கிரசு உள்பட, ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பெரும்பாலோர் அழைப்பை மறுத்திருக்கிறார்கள்; அதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்!
காரணம், பக்தி என்பது அவரவர் தனி விஷயம்; தனிச் சொத்து!
அதே நேரத்தில், அதைத் தேர்தலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
இப்போது வருவது ‘‘தேர்தல் இராமன்!’’
ஒரு திரைப்படத்தில், கவிஞர் கண்ணதாசன் ஒரு பாட்டு எழுதினார்.
‘‘இராமன், எத்தனை இராமனடி?” என்று.
அதுபோல, இப்போது வருவது ‘‘தேர்தல் இராமன்” – ஆகவேதான், கட்டி முடிக்கப் படாத ஒரு கோவிலை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வது என்பது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று தெளிவாக நான்கு சங்கராச்சாரியார்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மதத்திற்கு அத்தாரிட்டி, சங்கராச்சாரிகளே தவிர, பிரதமர் மோடி அல்ல.
நான்கு சங்கராச்சாரிகளும் ஹிந்து மத விரோதிகளா? முடிந்தால், அதை நீங்கள் அறிவியுங்கள்!
இந்நிலையில், இன்றைக்கு அதை எதிர்த்தவர்களை எல்லாம் பார்த்து, ‘‘இவர்கள் ஸநாதனத்திற்கு விரோதிகள் – ஹிந்து மத விரோதிகள் – ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்” என்று கூறுகின்ற பா.ஜ.க.வைப் பார்த்து, நாங்கள் கேட்பதெல்லாம், ‘‘நான்கு சங்கராச் சாரிகளும் ஹிந்து மத விரோதிகளா? முடிந்தால், அதை நீங்கள் அறிவியுங்கள்! அப்படி இல்லாவிட்டால், மற்றவர் களைப்பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்பதுதான்.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், வேட்பாளராக இராமனையே நிறுத்து கிறார்கள்; இராமன் ஒருபோதும் வேட்பாளராகக் கூடாது.
ஓ.பி.எஸ். எதில் ஏறுவது என்று தெரியாமல், வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்!

செய்தியாளர்: ‘இந்தியா’ கூட்டணியைப்பற்றி ‘‘ஆண்டிகள் கட்டிய மடம்” என்று ஒ.பி.எஸ். விமர்சனம் செய்திருக்கிறார்; மூன்றாம் முறையாக மோடிதான் பிரதமராக வரப் போகிறார், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அவரைப் பொறுத்தவரையில், இதை ஏன் இவ்வளவு அவசரமாகச் சொல்கிறார் என்றால், அவர் எதில் ஏறுவது என்று தெரியாமல், வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்.
இப்பொழுது, கதவு இதில் கொஞ்சம் திறக்கின்ற நிலை வந்தவுடன் இப்போது இப்படி பேசுகிறார்.
ஆண்டிகள் கட்டினார்களா? அரசர்கள் கட்டி னார்களா? மக்கள் கட்டினார்களா? என்று ஒ.பி.எஸ். ஆராய்ச்சி செய்வதற்குமுன் – எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார் ‘‘ஓ.பி.எஸ். ஜெயிலுக்குப் போவார்” என்கிறார்.
ஓ.பி.எஸ். என்ன சொல்கிறார் என்றால், ‘‘பழனிசாமி திகார் ஜெயிலுக்குத்தான் போவார்” என்று சொல்கிறார்.
ஒவ்வொருவரும் எந்த ஜெயிலுக்குப் போவார்கள் என்பதை அவர்களே முடிவு செய்துவிட்டார்கள்.
இதிலிருந்து ஒன்றை ஒப்புக்கொண்டிருக்கின்றனர் இருவரும் – அது என்னவென்றால், கோட்டைக்குப் போகமாட்டோம் – அங்கே மு.க.ஸ்டாலின்தான் போவார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள். எனவேதான், ஜெயிலுக்குப் போவதற்குமுன், அவர் ஏதாவது ஒரு மடத்தைப் பார்ப்பது நல்லது. அவரது ஆராய்ச்சி என்பதற்காக மடத்திற்காவது போகலாம் என்று நினைக்கிறார்; அவர் பரிதாபத் திற்குரியவர்.
மூன்றாவது முறையாகப் பிரதமராவார் மோடி என்றெல்லாம் புகழ்ந்தாலாவது, அந்தக் கூட்டணியில் தனக்கு இடம் உறுதியாகக் கிடைக்குமா? என்று நினைக்கிறார்.
ஆண்டிகளுக்காவது மடம் இருக்கிறது; இவருக்கு அதுகூட இல்லை. ஆண்டிகள் மடம் தேடுகிறார்கள்; இவர் இடம் தேடுகிறார்.
தன்னுடைய பணியை, மிகச் சிறப்பாகவும், அடக்கமாகவும் செய்பவர் உதயநிதி!

செய்தியாளர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதலமைச்சராக அறிவிக்க இருப்பதாகச் சொல்கிறார்களே, அதுகுறித்து தங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: அதை அறிவிக்கவேண்டியவர் அறிவிக்கவேண்டும்; அவருக்கு அதற்குரிய தகுதி இருக்கிறதா, இல்லையா? என்று முடிவெடுக்கவேண்டியது முதலமைச்சர். எனவே, யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்கவேண்டும் என்பதை நீங்களோ, நானோ முடிவு செய்ய முடியாது. ஏற்கெனவே அமைச்சர் நியமனத்தில், ஆளுங்கட்சி யின் அதிகாரத்தில் தலையிட்டு ஆளுநர் மூக்குடைபட்டு இருக்கிறார்.
இதில் கருத்து சொல்வதற்கு எதுவுமில்லை. தன்னு டைய பணியை, மிகச் சிறப்பாகவும், அடக்கமாகவும் செய்துகொண்டிருக்கின்ற அமைச்சர் உதயநிதி அவர்கள் எல்லா தகுதிகளும் படைத்தவர்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடையே கூறினார்.

No comments:

Post a Comment