திரையரங்கில் நடைபெற்ற திராவிடர் கழகக் கூட்டம்! தேவகோட்டை நினைவுகள்! - வி.சி. வில்வம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 5, 2024

திரையரங்கில் நடைபெற்ற திராவிடர் கழகக் கூட்டம்! தேவகோட்டை நினைவுகள்! - வி.சி. வில்வம்

featured image

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இருப்பது திருநாவலூர் கிராமம். மெய்யம்பட்டி என்பது பழைய பெயர். இந்த ஊரில் 1934 ஆம் ஆண்டு பிறந்தவர் ம.சுப்பிரமணியம். இலங்கை மலையகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த குடும்பம்!

இளம் வயதிலேயே முற்போக்குச் சிந்தனைகளைப் பெற்றவர். தமது 13 ஆவது வயதில் நண்பர்களுடன் இணைந்து அம்பேத்கர் மன்றத்தைத் தொடங்கியவர்! இப்போதும் அது செயல்பட்டு வருகிறது!

கரடு முரடான ஓர் ஊராகக் கருதப்பட்ட காலம். வெளியுலகம் தெரியாத மக்கள். அந்த ஊரில் படித்து, பின்னாளில் எம்.பி.பி.எஸ்., முடித்து மருத்துவர் ஆகிறார் ம.சுப்பிரமணியம். அரசு மருத்துவராகப் பல ஊர்களில் பணியாற்றி, இறுதியில் சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் குடியமர்கிறார்.

பகுத்தறிவு மருத்துவர்!

சில ஊர்களில் சிலர் பிரபலமாக இருப்பார்கள். ஆடிட்டர், பொறியாளர், வழக்குரைஞர் என எல் லோரும் அறியும் வண்ணம் இருப்பார்கள். அதேபோல தேவகோட்டையில் “டாக்டர் சுப்பிரமணியம்“ என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பொது நலச் சிந்தனையும், பெரியார், அம்பேத்கர் கொள்கையும் அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தன!
அதேபோன்று தொழிலில் முக்கியமான ஒரு செய்தி உண்டு. நோய் என்ன என்பதைக் கேட்டு, உடனடியாக மருந்து, மாத்திரை எழுதிக் கொடுக்கும் வழக்கம் அவருக்கு இல்லை. “என்ன செய்கிறது?”, என்று கேட்பார். அவர்கள் கூறும் பிரச்சினை சரிதானா என்பதை மருத்துவக் கேள்விகளால் உறுதிப்படுத்திக் கொள்வார். பின்னர் அந்தப் பிரச்சினைகளுக்கு மூலக் காரணங்கள் என்ன என்பதை அறிய முற்படுவார். பின்னரே மருந்து, மாத்திரைகள் எழுதிக் கொடுப்பார்.

இறுதியில் நோய் வந்ததற்கான காரணங்களையும், வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வுகளையும் கூறுவார். மனவியல்(Psychologist) கலந்த மருத்துவர். பகுத்தறிவுப் பூர்வமாகச் சிந்தித்து, ஆய்வு நோக்கிலும் “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”, என்பதற்கு எடுத்துக்காட்டான மருத்துவர்.

பெரியார், ஆசிரியர் கூட்டங்கள்!

அப்படியான மருத்துவர் முழுமையான பெரியாரி யவாதியாக இருந்து தெருமுனைக் கூட்டம், பொதுக் கூட்டம், மாநாடு எனச் சுற்றிச் சுழன்று வந்தார்!
பெரியார் கூட்டங்களுக்குச் செல்வதும், பெரியாரை அழைத்துக் கூட்டங்கள் நடத்துவதும் இவரின் பணி களில் இரண்டறக் கலந்தது! அதேபோன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்தும் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியவர்!

மருத்துவர் இல்லத்திற்குப் பெரியார், ஆசிரியர் இருவருமே சென்றதும், அங்கே உணவருந்தியதும் என்பது எல்லோருக்குமே கிட்டியிராத வாய்ப்பு! இப்படி யான சூழலில் காலங்கள் ஓட, மருத்துவர் ம.சுப்பிர மணியம் அவர்கள் 2017, மே 27 இல் மறைந்துவிட்டார்.

ஆசிரியர் வருகை!

மருத்துவரின் வாழ்விணையர் சரோமணி. இவர்க ளுக்கு தமிழரசன், கண்மணி, இங்கர்சால், கனிமொழி என நான்கு குழந்தைகள். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் டிசம்பர் 16 ஆம் தேதியன்று காரைக்குடி வருகை தந் தார்கள். அப்போது தேவகோட்டை சென்று, மருத்துவர் சுப்பிரமணியம் அவர்களின் குடும்பத்தாரைச் சந்திக்க வேண்டும் என அவர்கள் இல்லம் செல்கிறார்.

எத்தனையோ ஆண்டுகள் இடையில் கழிந்தன. ஆசிரியர் போகிறார், சந்திக்கிறார், பேசுகிறார், திரும்பு கிறார்!
இந்த நிகழ்வுகளின் தாக்கம் மற்றும் உணர்வுகள் எப்படி இருந்தது என அறிய ஒரு வாரம் கழித்து மருத்து வர் இல்லம் சென்றோம். மருத்துவர் ம.சுப்பிரமணியம் அவர்களின் மகன் தமிழரசு அவர்கள் இப்போது மருத்துவராக இருக்கிறார். அங்கே அவரின் தாயார் சரோமணி அவர்களையும் சந்தித்தோம்.

கண்கள் கலங்கிவிட்டது!

அம்மா வணக்கம்! சென்ற வாரம் ஆசிரியர் வீட்டிற்கு வந்தார்களே… எனக் கேட்டு முடிப்பதற்குள் கண்கள் கலங்கிவிட்டார்.
“அய்யா வீட்டிற்கு வந்த அன்றும் கண்கள் கலங்கி விட்டது. நாங்கள் மாடியில் இருக்கிறோம். அய்யா வருகிற போது நாங்கள் கீழே இறங்கி ஓடி சென்றிருப் போம். ஆனால் அய்யா அவர்களே மாடி ஏறி வந்தது என்னை நெகிழச் செய்துவிட்டது எனக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
அய்யா! உட்காருங்கள் என்கிறேன்! என் கைகளைப் பிடித்து நீங்கள் உட்காருங்கள் என வலியுறுத்தியது என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. இணையரோடு 50 ஆண்டு காலம் இந்த இயக்கத்தில் இருக்கிறேன். ஆசிரியர் அவர்களை நன்கு அறிவேன். நிகழ்ச்சிகளில் சந்தித்துள்ளேன், வீட்டிற்கு வந்திருக்கிறார்கள், என் கைகளால் உணவு பரிமாறி இருக்கிறேன்.

எப்போதும் அதே தலைவர்!

எல்லாம் சரி! அவையெல்லாம் அந்தக் காலம்! ஆனால் இப்போது ஆசிரியர் அவர்கள் பெரும் தலை வராக, நாடு போற்றும் நற்செயல்கள் செய்து வருகிறார். அப்போது போலவே இப்போதும் எளிமையாக, அதே பரிவுடன், இல்லம் தேடி வந்து நினைக்க, நினைக்க… வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு!
இதோ இங்கே இருக்கிற “மணியம் மருத்துவ மனையை” 1982 ஆம் ஆண்டு ஆசிரியர்தான் திறந்து வைத்தார்! மருத்துவர் சுப்பிரமணியம் அவ்வப்போது வெளியே நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிடுவார். அது சமயம் மருத்துவமனை நிர்வாகத்தை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆசிரியர் கூறினார். அன்றிலிருந்து நான்தான் பார்த்துக் கொண்டேன்!

சாமி படங்களால் என்ன பயன்?

எங்களுக்கு 1965 இல் சுயமரியாதைத் திருமணம் நடந்தது. நான் ஆன்மிகக் குடும்பம். திருமணம் முடிந்த பிறகும் தனி சாமி அறை வைத்திருந்தேன். மரியாதைக் கொடுப்பதிலும், உணர்வுகளைப் புரிந்துக் கொள்வதிலும் மருத்துவர் தனித்துவமானவர்!
நான் நிறைய கூட்டங்களுக்குச் சென்றிருந்தாலும், காரைக்குடி செஞ்சை பொட்டலில் நடைபெற்ற பெரியார் கூட்டம் எனக்குத் திருப்புமுனை ஆனது! என் இணையரும் கூட்டங்களில் பேசுவார். திரும்பும் போதுதான் யோசித்தேன். என் ஆன்மிகத்திற்கு அவர்கள் குறுக்கே நிற்கவில்லை. அதேநேரம் அவர்கள் மருத்துவராக இருந்தாலும், கூட்டங்களில் பேசுவது, எழுதுவது என இருக்கிறார்கள். நல்ல பெயருடன் வாழ்கிறார்கள். அப்படி இருக்கும் போது, இந்தச் சாமி படங்களை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என யோசித்தேன்.
இணையருக்கு நன்மை செய்கிறோமோ, இல் லையோ தீமை செய்யக் கூடாது, அவர்களுக்கு நம்மால் களங்கம் ஏற்படக் கூடாது என முடிவெடுத்தேன். அன் றிலிருந்து கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனது.

மக்களின் அன்பைப் பெற்றார்கள்!

“புகழ் பெற்ற மருத்துவராக இருந்து, இயக்கத்திலும் தீவிரமாக இருந்தது குறித்து நீங்கள் கவலைப்பட்ட துண்டா?”, என்ற போது, அப்படியெல்லாம் இல்லை. அவர்கள் நிறைய சிந்தித்துச் செயல்படுவார்கள். அதேநேரம் வெளியே கூட்டங்களுக்குச் சென்று விட்டு பல நாட்கள் நள்ளிரவு தான் வருவார்கள். அப்போது சற்று வருத்தமாக இருக்கும். மருத்துவமனை வளர்ந்து வந்த நேரம். என்றாலும் மருத்துவரிடம் தான் சிகிச்சை பெறுவோம் எனக் காத்திருந்து, அடுத்த நாள் கூட வரு வார்கள் மக்கள். அந்தளவிற்கு இந்த ஊரின் அன்பைப் பெற்றார்கள்!

கல்வியின் முக்கியத்துவம்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் சனி, ஞாயிறுகளில் வீட்டிற்கு வருவார்கள். அவர்களுக்குக் கல்வி உள்ளிட்ட இதர உதவிகளையும் செய்வார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கூட, அந்தக் காலத்தில் அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள். தன் சொந்தக் கிராமத்திற்கும் இறுதிவரை கல்வி உதவி செய்து வந்தார்கள். கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள்!

ஒரே ஒரு சம்பவம் மட்டும் என்னால் மறக்கவே முடியாது. திருநாவலூர் கிராமத்தில் ஒரு பார்ப்பனர் வீடு இருந்தது. யாரையுமே அவர்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதித்தது கிடையாது. ஒரு சமயம் நிகழ்ச்சி ஒன்றிற்காகக் கிராமத்திற்குச் சென்றோம். அப்போது இணையரையும், என்னையும் வீட்டிற்குள் அழைத்து, விருந்து கொடுத்தார்கள். “படிப்பு எவ்வளவு முக்கியம் தெரிகிறதா?” என வெளியே வந்ததும் இணையர் கூறினார்.

பெரியார், அம்பேத்கர் இல்லாவிட்டால்!

தற்சமயம் மருத்துவராக இருக்கும் டாக்டர் தமிழரசு அவர்களிடம் பேசினோம்!
“ஆசிரியர் வருகை என்பது அதிர்ச்சியும், மகிழ்ச்சி யும் கலந்தது. இன்னும் அந்தத் திகைப்பில் இருந்து மீளவில்லை.
“பெரியார், அம்பேத்கர் போன்றோர் இல்லாவிட்டால் அப்பா மருத்துவராக ஆகியிருக்க முடியுமா? நாம் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா?”, என நேற்று இரவுதான் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் காலை ஆசிரியர் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். எவ் வளவு பெரிய தலைவர் அவர்!

எவ்வளவு மகிழ்ச்சி!

ஆசிரியர் பழைய நினைவுகளை எல்லாம் எங்கள் குடும்பத்தாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு பெரிய நினைவாற்றல்! நானும் பழைய படங்களை எல்லாம் எடுத்து வந்தேன். ஆசிரியரிடம் ஒவ்வொன்றாய் காண்பித்தேன். படத்தில் இருந்த அத்தனைப் பேரின் பெயரையும் நினைவு கூர்ந்தார்கள். நாங்கள் வியந்து போனோம்! எங்கே நடந்த கூட்டம், அப்போது என்ன நடந்தது என்பது வரை விவரித் தார்கள். இதைவிட சிறந்த நாள் எங்களுக்கு வேறு என்ன இருக்கப் போகிறது!
பழைய படங்களைப் பார்க்கிற போது இது யார்? அது யார்? என்கிற கேள்விகளும், ஆர்வமும் எங்கள் வீட்டையே கலகலப்பாக்கிவிட்டன. அன்றைய கூட்டங் களில், அதன் படங்களில் நானும் குழந்தையாக, சிறு வனாக, இளைஞனாக இருப்பேன்!

திரையரங்கில் திராவிடர் கழகக் கூட்டம்!

ஆசிரியர் அவர்களை வைத்து அப்பா நிறைய கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். அப்பா சேமித்த ஒளிப் படங்களை, நாங்களும் பொக்கிசமாக வைத்துள்ளோம். அதை ஆசிரியரிடம் காட்டும் பெரும் வாய்ப்பும் எங் களுக்குக் கிடைத்தது!

குறிப்பாக தேவகோட்டையில் “சரஸ்வதி தியேட்டர்” என ஒன்று இருந்தது. அந்தத் திரையரங்களில் ஆசிரியர் அவர்களை வைத்து ஒரு கூட்டம் நடத்தினார்கள். மாலைக் காட்சியை ரத்து செய்துவிட்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்திவிட்டு, திராவிடர் கழகக் கூட்டம் நடந்துள்ளது.
அதேபோல ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை வைத்து தேவகோட்டையில் கூட்டம் நடந்துள்ளது. பெரியார் இறந்த போது, இரண்டு பேருந்துகள் மூலம் நாங்கள் சென்னை சென்றோம். இப்படியாகப் பழைய நினைவுகளை எல்லாம் ஆசிரியரோடு பேசி மகிழ்ந் தோம்.

குடும்பமே மருத்துவர்கள்!

எனது இணையர் ஹேமலதா மருத்துவர், எனது மகள் சிந்துவும் மருத்துவம் படிக்கிறார். இவை எல்லா வற்றிற்கும் இந்த இயக்கமும், பெரியாரும், ஆசிரியரும் தானே காரணம்! என்றென்றும் இந்தச் சிந்தனையில் நாங்கள் தொடர்வோம்!

இறுதியாக ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன். எங்களைப் பார்க்க வேண்டும் என ஆசிரியர் கூறி யிருந்தால், குடும்பத்துடன் நாங்கள் ஓடோடி சென்றிருப் போம். ஆனால் அவரோ வீடு தேடி வந்து ஒரு பெரும் அங்கீகாரத்தை எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். வரலாற்றில் எங்களுக்கோர் முக்கியமான நாள் அது”, என மருத்துவர் தமிழரசு கூறினார்.

 

No comments:

Post a Comment