இதற்குப் பெயர்தான் "திராவிட மாடல்" அரசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 10, 2024

இதற்குப் பெயர்தான் "திராவிட மாடல்" அரசு!

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டாண்டு களில் தமிழ்நாடு அரசு இந்தியத் துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்கும் வகையில் வளர்ச்சிப் பாட்டையில் வீறு நடை போட்டு வருகிறது.
‘திராவிட மாடல்’ அரசு என்பது வாய்ச் சொல் அல்ல – செயல்பாட்டின் மறுபெயர் என்ற நிலையை எட்டியுள்ளது.
குறிப்பாக சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மக்கள் மத்தியிலும், சிறப்பாக வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியிலும் நன்னம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் உலகளாவிய மாநாட்டில் குவால்காம் இன்க் சென்னையில் தங்களது தொழிலகத்தின் விரிவாக்கமாகப் புதிய டிசைன் சென்டரை அமைக்க உள்ளது. இந்த டிசைன் சென்டருக்காகக் குவால்கம் நிறுவனம் சுமார் ரூ.177.27 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் சென்னை குவால்கம் டிசைன் சென்டர் வயர்லெஸ் கனெக்ட்டிவிட்டி சேவைகளுக்கான தீர்வுகளில் நிபுணத்துவம் பெறும், இது வைஃபை தொழில் நுட்பத்தில் புதுமைகளைக் கொண்டுவரக் கவனம் செலுத்தும். கூடுதலாக, இது 5நி செல்லுலார் தொழில்நுட்பத்தில் Qualcomm இன் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு முயற்சிகளுக்கு சென்னை டிசைன் சென்டர் முக்கிய பங்களிக்கும்.

இந்தப் புதிய டிசைன் சென்டர் சுமார் 1600 திறன் வாய்ந்த நிபுணர் களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, மேலும் சுமார் 5000 பட்டதாரிகளான துடிப்பான திறன் மிக்கவர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
பன்னாட்டு கப்பல் போக்குவரத்து நிறுவனமான Maersk-இன் A.P. Moller- மற்றும் தமிழ்நாடு அரசு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

தமிழ்நாடு அரசுடன் 25 ஆண்டாக இணைந்து பணியாற்றி வரும் Maersk மாநிலத்தில் இரு முனையத்தில் பணியாற்றி வரும் வேளையில் Maersk இப்போது சரக்குகள் கையாளும் மய்யங்களை உருவாக்க சாலை மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய உள்ளது. இந்த லாஜிஸ்டிக்ஸ் மய்யங்கள் வாடிக்கையாளர்களின் விநியோகச் சங்கிலி சேவைகளைப் பெரிய அளவில் மேம்படுத்தும் எனக் கூறியுள்ளது.

குவால்கம், Maersk உடன் இணைந்து டாடா எலக்ட்ரானிக்ஸ் தமிழ்நாட்டில் €12,082 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், பெகாட்ரான் ரூ.1,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், டிவிஎஸ் நிறுவனம் அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக ரூ.5000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்து தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.
முதல் நாள் கூட்டத்தில் செய்யப்பட்ட மிக முக்கியமான முதலீட்டு திட்டங்களின் பட்டியல்: ஹூண்டாய் ரூ.1,180 கோடி முதலீடு (காஞ்சிபுரம்), குவால்காம் – ரூ.177 கோடி (சென்னை), ஃபர்ஸ்ட் சோலார் ரூ.5,600 கோடி (காஞ்சிபுரம்), கோத்ரெஜ் – ரூ.515 கோடி (செங்கல்பட்டு), டாடா எலக்ட்ரானிக்ஸ் – ரூ.12,082 கோடி (கிருஷ்ணகிரி), பெகாட்ரான் ரூ.1000 கோடி (செங்கல்பட்டு), JSW ரூ.12,000 கோடி (தூத்துக்குடி, திருநெல்வேலி), டிவிஎஸ் குழுமம் ரூ.5,000 கோடி (சென்னை), மிட்சுபிஷி ரூ.200 கோடி (கும்மிடிப்பூண்டி), வின் ஃபாஸ்ட் ரூ.16,000 கோடி (தூத்துக்குடி).
வியட்நாம் மென்பொருள் மற்றும் மின்னணு உதிரிபாக நிறுவனம் தூத்துக்குடியில் தனது தொழிற்சாலையைத் துவங்க உள்ளது. இந்த நிறுவனம் குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும்.
பெரு நிறுவனங்களின் வளர்ச்சி ஒரு புறம் என்றாலும் அதிக அளவு வேலை வாய்ப்புகள் மற்றும் பரவலான வளர்ச்சிக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இத்துறையில்தான் நிறைய பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
எனவே இந்த நிறுவனங்களை தொடங்கவும், தடையின்றி செயல்படுத்தவும் ‘திராவிட மாடல்’ திமுக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றது.

திமுக அரசு பதவி ஏற்ற இரண்டரை ஆண்டுகளில் 12 ஆயிரத்து 182 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 824 கோடியே 40 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த காலத்தில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்க 3 ஆயிரத்து 890 கோடியே 59 லட்சம் ரூபாய் வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு 30 ஆயிரத்து 981 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக உருவெடுத்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில் துவங்குவோர் தர வரிசையில் தமிழ்நாடு 2021ஆம் ஆண்டு இந்தியாவில் கடைசி இடத்திலிருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் தொழில்துறை நிபுணர்களைக் கொண்டும், பொரு ளாதார வல்லுநர்களைக் கொண்டும் திட்டமிட்டு செயல்பட்டதால் தமிழ்நாடு தற்போது 3ஆம் நிலைக்கு முன்னேறியுள்ளது; மிகவும் குறுகிய காலத்திலேயே 3ஆம் இடத்தைப் பிடித்தது பெரும் சாதனைக்குரிய ஒன் றாகும். மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை இரண்டரை ஆண்டுகளில் 3.5 மடங்கு அதி கரித்து 7 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்க வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நிறுவனங் களுடன் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தங்கள் செய்யப் பட்டுள்ளன. அந்த வகையில், 174 எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களிட மிருந்து சுமார் 42 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 73 பேர் முதல்முறை ஏற்றுமதியாளராக மாற உலக முதலீட்டாளர் மாநாடு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்ற மோடி தலைமையிலான ஒன்றிய பிஜேபி அரசு எங்கே, இரண்டாண்டுகளில் தொழில் வளத்தை நோக்கி வேக நடைபோடும் மாநில அரசான ‘திராவிட மாடல்’ அரசு எங்கே?
2030இல் ஒரு லட்சம் கோடி டாலரை நோக்கி தமிழ்நாடு பாய்ச்சலில் ஈடுபடும் என்று முதலமைச்சர் கூறியதை நினைத்தால் தமிழர்கள் தலை நிமிர்வார்கள்!

No comments:

Post a Comment