துயரத்திலும் விளம்பரம் தேடும் பா.ஜ.க. அரசியல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 6, 2023

துயரத்திலும் விளம்பரம் தேடும் பா.ஜ.க. அரசியல்!

உத்தரப்பிரதேச மாநிலம் தாஷ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஷுபம் குப்தா. இவர் ராணுவத்தில் சேர்ந்து அங்கு கேப்டனாக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த புதன்கிழமை (29.11.2023) அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் பணியாற்றிக் கொண்டி ருந்தபோது, அங்கு தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். இதில் கேப்டன் ஷுபம் குப்தா வீர மரணமடைந்தார். நாட்டுக்காக உயிரை இழந்த வீரரின் தியாகத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு உத்தரப்பிரதேச அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த உதவித்தொகையை கேப்டன் ஷுபம் குப்தா குடும்பத்தினரிடம் அளிக்க அரசு சார்பில், உத்தரப்பிரதேச அமைச்சர் யோகேந்திர உபாத்யா என்பவர் ஷூபம் குப்தாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கேப்டன் ஷுபம் குப்தாவின் தாய் மகனின் பிரிவால் கடும் துயரத்தில் அழுது கொண்டிருந்தார்அப்போது அவரின்அழுகையையும் மீறி நிதியுதவி கொடுப்பதை புகைப்படம் எடுக்க பாஜக அமைச்சர் முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான காட்சிப் பதிவில் கேப்டன் ஷுபம் குப்தாவின் தாய் அழுதுகொண்டிருந்த நிலையில், அவரிடம் நிதியுதவிக்கான காசோலையை வழங்க அமைச்சர் முயல்கிறார்.

எனினும் கேப்டன் ஷுபம் குப்தாவின் தாய் கதறிக்கொண்டிருந்த நிலையில், அவரின் கையில் வலுக்கட்டாயமாக காசோலையை கொடுத்து, நிழற்படம் எடுக்க அமைச்சர் முயன்றது பதிவாகி யுள்ளது. இந்தக் காட்சிப் பதிவு சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில், பலரும் பாஜக அமைச்சரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மனிதநேயம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒரு மனோ வியாதி பா.ஜ.க. சங் பரிவார்க் கும்பலிடம் வளர்த்து விடப்பட்டுள்ளது என்பதைத் தான் இது காட்டுகிறது.

கதறும் தாய்க்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்லி அவர்களை ஆற்றுப்படுத்திட வேண்டிய தருணத்தில் காசோலையைக் கனிவாகக் கொடுக்கும் மனிதப் பண்பு வறண்டு போன ஒரு கையறு நிலை மிகவும் கேவலமானது.

குஜராத்தில், முஸ்லிம் பெண் என்பதற்காக, கர்ப்பிணியாக இருந்த நிலையைக்கூடப் பொருட் படுத்தாமல் குடலைக் கிழித்து அந்தச் சிசுவை மரத்தில் அடித்துக் கொன்ற மரத்துப் போன மனநிலையை ஒரு மார்க்கமாக வளர்ப்பது ஆபத்தானது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து யூனியன் பிரதேசமாக துண்டுப் போட்டதற்குச் சொல்லப்பட்ட காரணம் - தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காகத்தான் என்று பிஜேபி அரசு சொன்னதே-அது என்னாயிற்று? மக்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் ஒவ்வொரு நொடியும் மரண பயத்தில்தான் நகரும் மதவாத அரசியலில் - ஆட்சியில், எச்சரிக்கை!


No comments:

Post a Comment