பிரதமரின் 'பேட்டி பச்சாவ் பேட்டி படா'வின் இலட்சணம் இதுதானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 26, 2023

பிரதமரின் 'பேட்டி பச்சாவ் பேட்டி படா'வின் இலட்சணம் இதுதானா?

பா.ஜ.க. ஆட்சி என்பது பச்சையான பாசிசத் தன்மை கொண்டது என்பதற்கு அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே அத்தாட்சிகளாக உள்ளன.
ஓர் இயற்கைப் பேரிடருக்கு உதவுவதில்கூட தன் குரூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்றால் ஊழல் செய்யலாம் – பாலியல் வன்கொடுமைகளை ராஜ நடை போட்டுச் செய்யலாம். சட்டம் அவர்களின் காலடி மண்ணின் பக்கம் கூட செல்லாது.
மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல் வன்கொடுமைசெய்த குற்றவாளிக்கு ஆதரவானவர்களே மல்யுத்த சம்மேளத்தின் தலைவராகவும் இதர உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள அவலம் – கேவலம் – பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் என்றால் வெறும் போகப் பொருள் என்பது பா.ஜ.க.வின் பார்வையாக இருக்கிறது. பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மேனாள் இந்திய மல்யுத்த அமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் மீது வீரங்கனைகளை பாலியல் சித்திரவதை செய்தது தொடர்பாக டில்லி காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்கூட இதுவரை கைதுசெய்யப்படாமல் இருக்கிறார். இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேனாள் தலைவர் பிரிஜ்பூசன் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உள்ளதால் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலையில் அவரது உதவியாளரும் பாலியல் வன்கொடுமைகளுக்குப் பக்கத் துணைப் போனதாக வீராங்கனைகளால் குற்றம் சாட்டப்பட்ட நபருமான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்தத்தை விட்டே விலகுவதாக வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் உண்மையாக தொடர்ந்து போராடினோம். ஆனால் பிரிஜ் பூஷன் போன்ற ஒருவரின் தொழில் பங்குதாரரும், அவரின் நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். எனவே நான் மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். நாங்கள் பெண் ஒருவர் தலைவராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை” என கண்ணீர் மல்க கூறினார்.

பஜ்ரங் புனியா பேசுகையில், “இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷனுக்கு தொடர்புடைய யாரும் போட்டியிட மாட்டார்கள் என அரசு கூறியிருந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து பின்வாங்கியிருப்பது வெட்கக் கேடானதும் வருந் தத்தக்கதுமாகும் என்றார். வினேஷ் போகட் கூறுகையில், “புதிதாக வரும் மல்யுத்த வீராங்கனைகளும் பாதிப்புக்கு ஆளாவார்கள்” என்று எச்சரித்துள்ளார். பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகட் இருவரும் மல்யுத்தத்திலிருந்து விலகுவது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் நடத்துவது பலமுறை தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு தற்காலிகமாக ரத்து செய்திருந்தது. இந்தப் பின்னணியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் அவசர அவசரமாக நடந்தது. தேர்தலில் சஞ்சய் சிங் மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தலைவர் பதவிக்கான தேர்தலுடன் மூத்த துணைத் தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இரண்டு இணை செயலாளர்கள் மற்றும் 5 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் 4 துணைத் தலைவர் பதவிகளையும் பிரிஜ் பூஷண் அணியினரே வென்றுள்ளனர்.

கூட்டமைப்பின் புதிய பொருளாளராக பிரிஜ் பூஷண் அணியினைச் சேர்ந்த உத்தரப் பிரதேசத்தின் சத்யபால் சிங் தேஷ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த துஷ்யந்த் சர்மாவை தோற்கடித்தார். அதேபோல், அய்ந்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியையும் பிரிஜ் பூஷண் அணியே கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இனி மல்யுத்தப்போட்டிப் பக்கம் பெண்கள் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள் என்ற நிலைதான் உருவாகியுள்ளது. தலைவர் மீதும் உதவியாளர்மீதும் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு இந்த ஆண்டு மிகவும் பரபரப்பான செய்தியாக இருந்தது, விவசாயிகள் போராட்டத்தை அடுத்து டில்லியை அதிரவைத்தது விளையாட்டு வீராங்கனைகளின் போராட்டம் ஆகும்.

இந்த நிலையில் குற்றவாளிக்குத் துணைபோனவர்களே மீண்டும் மல்யுத்த சம்மேளத்தின் அனைத்துப் பதவிகளிலும் அமர்ந்துவிட்டனர். பிரதமர் மோடியின் ‘பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்’ அதாவது பெண்குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் பெண் குழந்தைகளைப் படிக்கவையுங்கள் என்பது நகைப்பிற்குறிய ஒன்றாகவே போய்விட்டது.
மனு தருமத்தை மடியில் வைத்துக் கொண்டு ஆட்சி செய்தால் பெண்களின் நிலை எல்லா வகைகளிலும் கீழிறக்கம்தான். நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குப் பெண்கள் பாடம் கற்பிக்கட்டும்!

No comments:

Post a Comment