வேத காலம் ஒரு பொற்காலமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 9, 2023

வேத காலம் ஒரு பொற்காலமா?

இந்தியாவின் மிகப் பண்டைய நாகரிகம் என்பது சிந்துவெளி நாகரிகம். அதன் காலம் கி.மு. 3000 முதல் 1750. இன்றைய பாகிஸ்தான் பகுதியில் சிந்து நதியின் கரையில் மொகஞ்சதாரோ நகரமும், மேற்கு பஞ்சாபில் ஓடிய சிந்துவின் கிளை நதியான இரவியின் கரையில் அரப்பா நகரமும் இருந்தன.
இந்நகர வீடுகள் பல மாடிகளைக் கொண்டனவாகவும், சுட்ட செங்கற்களின் மூலம் உறுதியாகக் கட்டப்பட்டனவாகவும் இருந்தன. குளியலறைகள், கழிப்பிடங்கள் போன்ற வசதிகள் இருந்தன. மட்பாண்டங்கள் மிகவும் தரமானவையாக இருந்தன. தங்கம், வெள்ளி நகைகள், மறைந்து போன செல்வங்களைப் பற்றிய தடயங்களைக் காட்டின.
சிந்து சமவெளி நகர அமைப்பு உண்மையில் பிரமிப்பூட்டுகிறது. நேர் நேராகக் கோடுகளைக் கிழித்தாற்போல வரிசை வரிசையான தெருக்களுடன், மழை நீரை வெளியேற்றும் ஒப்பற்ற வடிகால் அமைப்பும், கழிவுநீரை வெளியேற்றும் சாக்கடைத் தொட்டிகளும் இருந்தன. நவீன காலம் இந்திய நகரத்தில் கூட இந்த அளவுக்கு வசதி இல்லை
அளவிடற்கரியதான பெருந்தானியக் களஞ்சியங்கள் அங்கு இருந்தன. பெருமளவு வணிகம் நிலவியதற்கான சான்றுகள் கிட்டியுள்ளன. இவை இந்திய வரலாற்று ஆசிரியர் டி.டி. கோசாம்பி (D.D.Kosambi) தரும் தகவல்களாகும். ஆனால் மொகஞ்சதாரோ, அரப்பா போன்ற எத்தனையோ நகரங்களை அழித்துவிட்ட பின்னர், மாடு மேய்ப் போரான ஆரியர் வெற்றி கொண்ட சப்த சிந்து பிரதேசத்தை தமக்குள் பங்கிட்டுக் கொண்டு, அதை மேய்ச்சல் நிலமாக மாற்றி விட்டனர். பல நகரங்கள் மனித சஞ்சாரமற்று போயின.
எஞ்சியிருந்தவர்களை வெற்றி பெற்றவர்கள் அடிமைகளாகவோ, கூலிக்காரர்களாகவோ ஆக்கிக் கொண்டனர் என்கிறார் இராகுல சாங்கிருத்தியாயன். அதன் மூலம் பண்டைய சிந்துவெளி மக்களின் கிராமங்களும், நகரங்களும் அழிக்கப்பட்டு, இந்தியா ஒரு இருண்ட காலத்தில் மூழ்கிப் போனது.
பண்டைய சமற்கிருத வேதம் பகைவரைப் பற்றிக் கூறும்பொழுது, போர்க்களத்தில் மிகவும் இரக்கமற்ற முறையில் அடித்து நொறுக்கப் பட்டன ரென்றும், அவர்களின் செல்வங்கள் சூறையாடப் பட்டனவென்றும், நகரங்கள் கொளுத்தப் பட்டனவென்றும் விவரிக்கிறது
பழைமைச் சிறப்புடைய ஒரு உயர்நிலை நகரப் பண்பாட்டின் மீது காட்டுமிராண்டித்தனம் கொண்ட வெற்றியால் வரலாற்றின் திசை பலத்த தாக்குதலுக்கு இரையாகித் தேக்கமும் சீர்குலைவும் அடைந்தது.

ஆயிரங்காலத்துப் பண்பாட்டை மீண்டும் எழாதபடி நிர்மூலமாக்கிய காட்டுமிராண்டிகள் எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லவில்லை. சிந்து நாகரிக முடிவுக்கும் அதன்பின் தோன்றும் புதியதொன்றின் தொடக்கத்திற்கும் இடையே 600 ஆண்டுகால இடைவெளி இருந்தது.
ஆரியர்களின் ஆதிக்கமும் பூசணிக்காய் உடைப்பும்
கி.மு.516இல் டேரியஸ் என்ற ஆரிய வம்சாவளி அரசன் ஆப்கானித்தான், தற்கால பாகிஸ்தானின் தக்சசீலா மீது போர் தொடுத்து வென்றார்.
கி.மு.516 – 515 குளிர்காலத்தில் பேரரசர் டேரியஸ் காந்தாரத்தில் தங்கி, சிந்து சமவெளியைக் கைப்பற்றி ஆயத்தப் பணிகளை மேற்கொண்டார். கி.மு.515இல் சிந்து சமவெளியையும்; அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வென்றார். பின்னர் அவர் கராச்சி துறைமுகம் வழியாக அரபிக்கடலைக்கடந்து எகிப்திற்கு சென்றுவிட்டார். அவர்தான் ஏற்கெனவே இங்குள்ள அவர்களின் வம்சத்தினரான ஆரியர்களுக்கு தாங்கள் பிடித்த இடத்தை நிர்வாகிக்க உத்தரவிட்டார் அவரது படைத் தளபதிகள் போலன் கணவாய் வழியாக பாரசீகதிற்கு திரும்பி விட்டனர். பஞ்சாபின் சில பகுதிகளையும் குஜராத்தின் சில பகுதிகளையும் ஆட்சி செய்துகொண்டு இருந்த அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் மீண்டும் மன்னர்களை அமரவைத்து தாங்கள் மன்னரை ஆட்டுவிக்கும் வேலையை மட்டும் செய்தனர். இக்காலத்தில் தான் இந்திய தீபகற்பம் எங்கும் மன்னர்களிடம் நிர்வாகப்பணிக்காக அவர்கள் சேரத் துவங்கினர்.
அப்போது ஆட்சி செய்துவந்த சிசுநாத வம்சத்தினரின் அரச சபைகளில் உள்ளே அதிகாரம் செய்யும் வேலைகளை அதிகமாக எடுத்துக் கொண்டனர். உருவான பிறகு சுமார் 2 நூற்றாண்டுகளாக அரச சபைகளில் அதிகாரம் செலுத்தியவர்கள் கி.மு.300களில் நந்த வம்சத்திலும் தங்களின் அதிகாரத்தை உறுதியாக்கிக் கொண்டனர். இந்த நந்த வம்சத்தின் போது கி.மு. 329 – 321 வரை இருந்த மகாபத்ம நந்தனின் தாய் சூத்திரப் பெண் என்று கூறி சூத்திரப் பெண்ணுக்குப் பிறந்தவரின் ஆஞ்யையை (கட்டளையை) பார்ப்பான் கேட்பதா என்று வெகுண்டெழுந்து சூத்திரன் இருந்த இடத்தில் இனி நான் இருக்கமாட்டேன் என்று கூறி சாணக்கியன் என்ற நரித்தந்திரப் பார்ப்பான் வெளியேறினார்.

சுமார் 3 நூற்றாண்டுகள் மவுரியப் பேரரசு ஆண்ட போதும் சுங்கன் என்ற பார்ப்பனத் தளபதி மவுரியப் பேரரசின் கடைசி மன்னரான பிரகத்திர மவுரியனை அரசசபையில் கொலை செய்து தலையை அரண்மனை வாசலில் தொங்கவிட்டார். அதுமட்டுமல்லாமல் நாடெங்கும் உள்ள பவுத்த சமணர்களின் தலைகளையும் இதே போல் ஊர் ஊராக வெட்டித் தொங்கவிடுங்கள் என்று படைவீரர்களுக்கு கட்டளை யிட்டார்.
விளைவு நாடெங்கும் பவுத்த சமணத் துறவிகள் தலைகள் கொய்யப்பட்டன. இந்த சுங்கன்தான் பரசுராமர் என்று கூறுகிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில் தான் பல துறவிகள் இலங்கை வழியாக கீழை நாடுகளுக்கும், திபெத்வழியாக சீனாவிற்கும் செல்லத் துவங்கினர்.
அன்று தலைகள் கொய்யப்பட்டு வாசலில் தொங்கவிட்ட நிகழ்வாகத்தான் இன்று வரை அமாவாசை நாட்களில் தலைகளை போன்று உள்ள பூசணிக் காய்களை வீட்டுமுன்பு போட்டு உடைக்கின்றனர். அப்படி தொங்கவிட்ட தலைகளில் இருந்து உதிரம் வழிந்ததன் அடையாளமாகத்தான் வெள்ளைப் பூசணிக்காயில் குங்குமத்தை நிரப்பி சாலையில் உடைக்கிறார்கள்.

No comments:

Post a Comment