சமூகநீதிக் காவலர் ஆசிரியர் கிவீரமணி பல்லாண்டு வாழ்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 4, 2023

சமூகநீதிக் காவலர் ஆசிரியர் கிவீரமணி பல்லாண்டு வாழ்க!



ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் உரைகளை என் பள்ளி நாட்களில் இருந்து கேட்டு வருகிறேன். 

ஒரு பிரச்சினையை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை அவரது உரைகள் மூலமாக ஒருவர் அறியலாம். பிரச்சினையின் பல்வேறு கோணங்களை நோக்கி, உண்மைநிலையை அறிந்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் இருந்து அவர்களுக்குக்கான நீதிக்குக் குரல் கொடுப்பதே சமூகநீதி  என்பதைத் தெளிவுபடுத்துபவை ஆசிரியர் வீரமணி அவர்களின் உரைகள்.

குரல் கொடுப்பது மட்டும் அல்ல... அதை வென்றெடுக்கும் வழிகளைப் போராட்டங்கள் மூலமாகவும் , சட்டரீதியாகவும் கண்டு அவற்றில் எண்ணற்ற வெற்றிகளை சாத்தியமாக்கிய இயக்கத் தின் தலைவர் அவர். 

பள்ளி வயதிலேயே பெரியாரின் சிந்தனை களால் ஈர்க்கப்பட்டுத் திராவிடர் கழகத்தில் இணைந்து வழக்கறிஞராக உயர்ந்து 

தன்னை முழுமையாக இயக்கத்தில் ஈடு படுத்திக் கொண்டவர் ஆசிரியர் கி.  வீரமணி அவர்கள் . ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தந்தை பெரியாரின் 'விடுதலை' நாளேட்டின் ஆசிரியர்.

இட ஒதுக்கீடு ஏன்? 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை  ஏன்?

பெண்ணுரிமை ஏன்? 

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏன்? 

மனுதர்ம எதிர்ப்பு ஏன்? 

மூடநம்பிக்கை ஒழிப்பு ஏன்?

கடவுள் மறுப்பு ஏன்?

என்று தொடரும் ஏராளமான 'ஏன்'களுக்கு வரலாற்று ரீதியாக, தர்க்கரீதியாக, சமூகப் பார்வை யோடு அறிவியல்பூர்வமாக விளக்கம் அளிக்கும் ஆசிரியர் . 

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித் தனி மாநாடுகள் நடத்தி  விவாதத்தை எழுப்பி வருபவர். வெறும் பேச்சாக மட்டும் இன்றி ஒவ்வொன்றைப் பற்றியும் சிறுசிறு நூல்கள் வெளியிட்டு மக்கள் மன்றத்தின் முன் அவற்றை  வைப்பவர்.

பெரியார் சுயமரியாதை பிரச்சார ஸ்தாபனம் இவற்றை வெளியிட்டு வருகிறது. 25 பைசா, 50பைசா, ஒரு ரூபாய் என மலிவு விலையில் கிடைத்த இப்புத்தகங்கள் மூலமே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,  மாவீரன் பகத்சிங்,  சிந்தனையாளர்கள் எமர்சன் இங்கர்சால் முதலிய பேராளுமைகள் பற்றி எல்லாம் நான் என் இளம் வயதில் தெரிந்து கொண்டேன். 

ஆசிரியரின் பல பொதுக்கூட்டங்களுக்கும், அவர் உரையாற்றிய  திராவிடர் கழகத்தின் பல மாநாடுகளுக்கும் நானும் என் கல்லூரி நண்பர் பேராசிரியர் நம். சீனிவாசனும் சென்றிருக்கிறோம். பின் பல மணிநேரங்கள் அவை பற்றி விவாதித் திருக்கிறோம். 

அவரது பொதுக்கூட்ட உரைகள் அறிவு பூர்வமானவை. உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதன் மூலம் உண்மையை மறைக்கும் அர்த்தமற்ற விவாதங்களுக்குச் செல்லாமல் உண்மையையும் நீதியையும் நோக்கிய பயணமாக நம் சிந்தனையை விரித்துச் செல்பவை அவை. 

தீவிரக் கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்து வந்த பெரியாரிடம் ஒருவர்,  ' திடீரென கடவுள் உங்கள் முன்னால் தோன்றிவிட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டபோது 'இருக்கிறார் என்று உடனே ஏற்றுக் கொள்வேன்...' என்றார். உண்மைக்குத்தான் போராடவேண்டுமே தவிர விவாதத்தில் நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகப் போராடக் கூடாது என்பதைப் பெரியாரிடம் இருந்து கற்றுக் கொண்ட மாணவர் ஆசிரியர் அவர்கள். பெயருக் கேற்ப பேச்சு தெளிவாக கணீரென்று இருக்கும். 

உலக அளவிலோ, தேசிய அளவிலோ, உள் ளூர் அளவிலோ ஒரு பிரச்சினை என்றால் அதில்  வீரமணியின் பார்வை என்ன என்பதைத் தலை வர்கள்,  அரசியல்வாதிகள், சமூகச் சீர்திருத்தவாதி கள், பத்திரிகை, ஊடகவியலாளர்கள், ஆதரவா ளர்கள் ,எதிர்த் தரப்பினர் என உலகலாவிய அளவில் அறிவார்ந்த சமூகத்தால் கவனிக்கப்படும் சிந்தனையாளர் அவர். 

தமிழ் நாடு மட்டும் அல்ல... இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள், சிந்தனையாளர்கள் பலரோடு பழகி நூற்றாண்டை நோக்கி நகரும் நினைவுப் பொக்கிஷம் அவர்.

கேள்வி கேட்டு, விடை கண்டு, அதை வென் றெடுக்கும் செயல் திறனும் கொண்ட  தலைவர். 

மாற்றுக் கருத்துடையோரையும் மதிப்பவர்.  அனைவரிடத்திலும் சமமாகப் பழகும் அன்பாளர். எளிமையான மனம் படைத்தவர். உரைகளிலும் உரையாடல்களிலும் நகைச்சுவை உணர்வு அவ்வளவு நிரம்பி வழியும். அதே நேரம் கொண்ட கொள்கையில் இருந்து அணுவளவும் விலக மாட்டார்.

'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை 

இகல்வெல்லல் யார்க்கும் அரிது ' என்ற அய்யன் வள்ளுவனின் குறட்பாவுக்கு இலக்கணம் அவர்.

என்னுடைய 'ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்' வெளிவந்தபோது ஆசிரியருக்கு நேரில் அந்நூலை வழங்கினேன். படித்துவிட்டு 'விடுதலை ' நாளேட்டில் அரைப் பக்கம் அதைப் பற்றி விரி வான கட்டுரை ஒன்றை எழுதினார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. பார்த்துப் பெருமகிழ்ச்சி அடைந்தேன். எழுத்தின் மூலமாக நான் அடைந்த சிறந்த பரிசுகளில் ஒன்று அது.

சென்ற ஆண்டு புத்தகக் கண்காட்சி நடை பெற்றபோது ஆசிரியர் உரையாற்றி முடிந்ததும் அவரை மேடையில் சந்தித்து என் புதிய நூலான ' முக்கோண மனிதனை ' வழங்கினேன். 

நூலைக் கையில் வாங்கிப் பார்த்தவர் 

'உங்கள் புத்தகத்தைப் பத்தி ஏற்கனவே எழு திருக்கேனே' என்று கூறி வியக்க வைத்தார்.  இரண்டுக்குமான இடைவெளி ஆறேழு ஆண்டு கள். ஆசிரியரின் நினைவாற்றல் உலகறிந்தது  என்றாலும் ஒவ்வொரு முறையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை, சட்டப் போராட்டங்களின் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் வரலாற்றுக் களஞ்சியம் அவர். இல்லை என்றால் பெரியாரிடம் அத்தனை ஆண்டுகள் ஒருவர் தாக்குப் பிடிக்க முடியுமா?

தத்துவம் என்றால் புரியாத விசயங்களைப் பற்றிப் பேசுவதல்ல...   வாழ்க்கையை உடல், மன ஆரோக்கியத்தோடு மகிழ்ச்சியாக  வாழ்வதற்கான வழியைச் சொல்வதுதான் நடைமுறைத் தத்துவம் என்பதை அவரது 'வாழ்வியல் சிந்தனைகள்' தொடர் மூலம் அறியலாம். பத்து தொகுதிகளுக்கு மேல் நூலாக அவை  வெளிவந்துள்ளன. 

அன்றாட நிகழ்வுகள், பயணங்கள், நூல்கள், மருத்துவம், கண்டுபிடிப்புகள் எனப் பல்வேறு தலைப்புகளில் அவற்றில் எழுதியிருப்பார் . எல்லாம் நடைமுறை வாழ்வு பற்றியவை. வாழும் வழி சொல்பவை.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளின் மூலம் தான் ஒரு சமூகம் உயரமுடியும் என்பதை உணர்ந்து பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காகப் போராடினார் பெரியார். தன் அறக்கட்டளைகள் மூலமாகவும் 

ஆதரவற்ற குழந்தைகள் பள்ளியையும் , பல கல்விச் சாலைகளையும் திறந்தார். அதைப் பின்பற்றிப்   பாலிடெக்னிக்குகள், கல்லூரிகள் என கல்விப் பணியை விரிவுபடுத்தியவர் ஆசிரியர்.

'எழுத்தாளர்கள், கலைஞர்கள் சமூகத்தின் பல அடுக்களில் சிந்தனைகளால் வினையாற்றுப வர்கள்... அவர்கள் முற்போக்குச் சிந்தனையோடு செயல்படுவது அவசியம்,' என்பதை வலியுறுத்தி வருபவர். 

எழுபதாண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை யாளராகப், பேச்சாளராக, திராவிடர் கழகத் தலை வராகப் பொதுவாழ்க்கைக்குத் தன்னை அர்ப் பணித்து ஓய்வின்றி உழைக்கும் போராளி,  தான் வாழும்  காலத்தைத் தன் சிந்தனையால் அசைத்து வரும்  'தகைசால் தமிழர்', ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 91 வது பிறந்த நாளில் அவரை வணங்கி வாழ்த்துகிறேன்.💐

அன்புடன், 

திரைப்படக் இயக்குநர் பிருந்தா சாரதி 


No comments:

Post a Comment