தமிழ் மீது தீரா பற்றுக்கொண்ட ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

தமிழ் மீது தீரா பற்றுக்கொண்ட ஆசிரியர்

- துரை.அருண், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்

தாய் தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டு, சமத்துவ சமுதாயம் சமைக்க தனது 10 ஆம் வயதில் மேடை ஏறி இன்றும் சிங்கம் போல் உரத்து முழங்கும் தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் ஆம் இந்த நாள் தமிழ் நாட்டின் சுயமரியாதை நாள் அந்த நாள் டிசம்பர் இரண்டாம் நாள்.

மேடை தோறும் திருக்குறளை பயன்படுத்தும் ஆற்றல் கொண்டவர். 

ஆளுநர் திருக்குறளை தவறாக மொழிபெயர்த்து விட்டார்கள் என்றதும் உடனடியாக ஆளுநருக்கு உறைக்கும் குறள் ஒன்று சொன்னார்.

'அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை'  என்று குறள் வழி பதில் சொன்னவர். 

வள்ளலார் ஸநாதனத்தின் உச்சமென்ற போது வடலூரில் மாநாடு நடத்தி ஸநாதனத்திற்கு எதிராக எழுதிய 

”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே!"

என அவர்தம் பாடல்களை பட்டியலிட்டார்.

சங்கப்பாடல்களை இடத்திற்கு ஏற்றாற்போல் எடுத்து இயம்பும் பேராற்றல் கொண்ட எம் கழகத் தலைவருக்கு, தமிழர் தலைவருக்கு தகை சால் தமிழர் விருது தந்த போது அந்த விருது பெருமையடைந்தது.

திங்களோடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும், உடுக்களோடும்,

மங்குல் கடல் நீரோடும்

பிறந்த தமிழோடு பிறந்தோம் நாங்கள்

என்றார் பாவேந்தர் பாரதிதாசன் - இயற்கையான தமிழ் மொழியை எல்லோருக்கும் உரிய மொழி என்ற அளவில் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லக்கூடியவர் நமது ஆசிரியர்.

- நீர் , காற்று, கடல், வானம்  எப்படி பொதுவானதோ அவ்வாறு தமிழும் பொதுவானது - அனைவருக்குமானது தமிழுக்கு தனியுரிமை கோராதீர் என்பவர் ஆசிரியர்.

If you talk to a man in a language he understands, that goes to his head, 

If you talk to him in his language, that goes to his heart - Nelson Mandela.

ஒருவருக்கு புரியும் மொழியில் பேசினால், பேசுவது அவரது அறிவைத் தொடும்.

அதே சமயத்தில் அவருடைய தாய்மொழியில்  பேசினால் நாம் பேசுவது கேட்பவரது இதயத்தை தொடும் என்கிறார்  தென்னாப்பிரிக்க தந்தை நெல்சன் மண்டேலா - அதே கருத்தை வலியுறுத்தி வருபவர் ஆசிரியர்.

மொழியை அறிவியல் பார்வையோடு வளர்ச்சி நோக்கில் கொண்டு செல்ல வேண்டும் என தரவுகளோடு பேசும் பேராற்றல் கொண்ட ஆசிரியரின் சீரிளமை செயல் மறந்து திறன் வியந்து தமிழும் வாழ்த்தும்.

அது மட்டுமா?

ஆசிரியரின்  - நகைச்சுவை உணர்வு மகிழ்வு கொள்ளத்தக்கது.

ஆசிரியர்: ஏதோ ரொம்ப சீரிய சானவர்  என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படியல்ல.

அவர் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவராய் இருக்கிறார். அது மட்டும் அல்ல, நம்மையும் சிரித்து வாழ சொல்கிறார்.

நகைச்சுவை என்றால் எப்ப பார்த்தாலும் பல்லை காட்டிக் கொண்டு இருப்பது அல்ல. எப்போது சிரிக்க வேண்டும், எதற்கு சிரிக்க வேண்டும், எவ்வளவு சிரிக்க வேண்டும் என்று ஒரு கணக்கு வேண்டும்.

சிரிப்பிலும் ஒரு வல்லமை வேண்டும்.

நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் 

பகலும்பாற் பட்டன் றிருள் - திருக்குறள்.

நாம் எப்போது சிரிப்போம் ? 

தனக்குத் தானே சிரிப்பது அவ்வளவு நன்றாக இருக்காது. அதற்கு வேறு பெயர் உண்டு. 

சிரித்து மகிழ துணை வேண்டும். நண்பரோ, மனைவியோ,  கணவனோ... இன்னொரு ஆள் வேண்டும்.

எனவே, நகல் வல்லவர்கள் நிறைய நண்பர்களோடும் உறவினர்களோடும் இருப்பார்கள்.

நகல் வல்லவர்களாய், நண்பர்களோடும், உறவினர்களோடும், மகிழ்வோடு இருங்கள் என்கிறார்.

எனவே தமிழ் சமூகத்திற்கு வாழ்வியல் வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியரின் பணி தொடரட்டும். 

கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்

கழுபிணியிலாத உடலும் கிடைக்க பெறட்டும் ஆசிரியர் அய்யாவுக்கு

நம்மையெல்லாம் வழி நடத்தி தமிழ் போல் நீடு வாழ்க ஆசிரியர் அய்யா என வணங்கி மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment