'மிக்ஜாம்' புயல் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தேவையான உதவிகளைச் செய்திடுக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

'மிக்ஜாம்' புயல் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தேவையான உதவிகளைச் செய்திடுக!

featured image

பொருளாதார நிலை குறித்த விவாதத்தில் வைகோ உரை

புதுடில்லி, டிச.7- மிக்ஜாம் புயல் மீட்புப் பணிகளை விரைந்து மேற் கொள்ள தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை ஒன்றிய அரசு செய்யக் கூறி, பொருளாதார நிலைகுறித்த விவாதத்தில் நேற்று முன்தினம் (5.12.2023) ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாநிலங் களவையில் ஆற்றிய உரை வருமாறு:-
நாட்டின் பொருளாதார நிலை குறித்த விவாதத்தில் பங்கேற்க எனக்கு வாய்ப் பளித்ததற்கு நன்றி.
இந்தியாவின் தற்போதைய ஜிடிபி 3.75 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும், இது 2025இல் 5 டிரில்லியன்களாக இருக்கும் என்று தற்போதைய பாஜக அரசு எதிர்பார்க்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியால் யாருக்கு லாபம்? இது வேலைவாய்ப்புகள் இல்லா வளர்ச்சி.

வேலையின்மை அதிகரிப்பு
தற்போது வேலையின்மை அதிக ரித்து வருகிறது. அக்டோபர் 2023 நில வரப்படி, வேலையின்மை 10.05 சதவீத மாக உள்ளது. நாட்டில் படித்த வேலையில்லாத இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி வேலை இழப்பு ஏற்படுகிறது. தொழிலாளர்களின் ஊதியம் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. விவசாயிகளும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் இதுவரை விவசாயிகளின் மேம்பாட் டிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. விவசாயிகளின் தற்கொலைகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
பரந்து விரிந்த கடற் பரப்பைக் கொண்ட எங்களது தமிழ்நாட்டில், மீன் பிடித் தொழிலை ஆதாரமாகக் கொண் டுள்ள மீனவர்கள் சிரமத்தில் உள்ளனர். சூறாவளி மற்றும் காலநிலை மாறு பாடுகள், இலங்கை கடற்படையின் தாக் குதல் போன்றவற்றால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் கடும் நெருக்கடியில்….

இந்தியாவில் வங்கிகள் கடும் நெருக்கடியில் உள்ளன. இந்திய அரசு இதற்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன? வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரித்து வருகின்றபோது, அரசு தனியார் நிறுவனங்களுக்கு மென்மேலும் கடன் தள்ளுபடி செய்துகொண்டு இருக் கிறது. ஆனால், விவசாயிகள், மாண வர்கள் மற்றும் சிறு தொழில் முனை வோரின் கடன்களை குறைக்கவோ அல்லது தள்ளுபடி செய்யவோ அரசு தயாராக இல்லை.
இந்தியா பல ஆண்டுகளாக பண வீக்கத்தை எதிர்கொண்டுள்ளது, இது இந்தியாவில் தற்போதைய வேலையின்மை விகிதத்தைப் பாதிக்கிறது. உயர் பணவீக்க விகிதங்கள் நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைவதால், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறை வதற்கு வழிவகுக்கும். இது வணிகத்தில் அடுக்கடுக்கான பாதிப்பை ஏற்படுத்தும். இது ஆள் குறைப்பு மற்றும் வேலை இழப்பு உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக் கும். ஏற்கெனவே வர்த்தகம், போக்கு வரத்து, தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 15.5 சதவீ தத்திலிருந்து, 4.3 சதவீதமாகக் குறைந்து வருகிறது. இதேபோல், கால்நடைகள், மீன் பிடித்தல், விவசாயம், வனத்துறை வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதத்திலிருந்து 1.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கூட்டமைப்பு சிதைந்து வருகிறது நான் மேலே குறிப்பிட்டது போல், பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்கள், கச்சா எண்ணெய், பருத்தி போன்றவற்றுக்கான இடுபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பொதுவான பொருட்களுக்கான அதிக ஜிஎஸ்டி, சாமானியர்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கிறது. உங்கள் ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்களின் கட்டமைப்பு சிதைந்து வருகிறது. பொதுத்துறை நிறு வனம் ஒன்றன் பின் ஒன்றாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படு கிறது.

எரிவாயு விலை உயர்வு
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்த விலைக்கு விற்கப்படும் போது, ஒன்றிய அரசு பெட்ரோலிய சில்லறை விலையை ஏன் குறைக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏழை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு எரிவாயு விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் உஜ்வாலா திட்டத்தில் எரிவாயு உருளை வேண்டி ஒரு சிலரே பதிவு செய்துள்ளனர்? அதிலும் ஒரு வருடத்தில் சமையல் எரிவாயு உரு ளைகளின் விநியோக எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியுள்ளீர்கள். எனவே, சாமா னியர்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும்.

நூற்பாலைத் தொழில் இழப்பு
தமிழ்நாட்டில் நூற்பாலைத் தொழில் பல மாதங்களாக வரலாறு காணாத இழப்பைச் சந்தித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக நூல் மற்றும் ஜவுளி ஏற்றுமதி சுமார் 28 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. சுமார் 10,000 ஸ்பின்டில்களைக் கொண்ட ஒரு ஆலை ஒரு நாளைக்கு 2,500 கிலோ நூல் உற்பத்தி செய்யும், இதனால்ஒரு நாளைக்கு 1,00,000/- ரூபாய் நட்டம் ஏற் படுகிறது. ஆலைகள் பெரும் நட் டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதால், வங்கிக் கடன் திருப்பிச் செலுத்துதல் (முதல் மற்றும் வட்டி), பருத்தி கொள்முதல் கட்டணம், மின் கட்டணம், ஜி.எஸ்.டி., இ.எஸ்.அய்., பி.எப். போன்ற செலவிலனங்களைச் சரிகட்ட முடிவதில்லை. இதே நிலை நீடித்தால், நூற்பாலைகள் விரைவில் செயல்படாத நிலைக்கு மாறி, ஆலைகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் ஏற்படும். எனவே, பருத்தி விலை மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.

வரி பங்கீட்டை தரவில்லை
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில நிதியின் கட்டமைப்பு மிகவும் பாதிக்கப்பட்டு, வருமானம் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் மாநிலங்களுக்கு முறையான விநியோகம் செய்யப்படுவது இல்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை விட, பா.ஜ.க- வுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலங் களுக்கு சாதகமான நிலை உள்ளது. தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தும், ஜிஎஸ்டி வரி பங்கீட்டை முழுவதுமாக ஒன்றிய அரசு தரவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட ‘மிக்ஜம்’ புயல் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பேரழிவை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களின் படகுகளும் வலைகளும் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ள நீர் விளை நிலங்களில் தேங்கியுள்ளதால், விவசாயிகள் பயிர்களை இழந்துள்ளனர்.
ஒன்றிய அரசு உதவிட வேண்டும்
கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரில் பெய்த வரலாறு காணாத கன மழையால், நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கி தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது. இருந்தாலும், மீட்புப் பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. எனவே, ஒன்றிய அரசு நிதி மற்றும் நிவாரணப் பொருட் களை தமிழ்நாடு அரசிற்கு வழங்கி, மீட்புப் பணிகளை விரைந்து மேற் கொள்ள உதவி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
-இவ்வாறு வைகோ நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment