வானிலை சேவையில் நாம் பின்தங்கி இருக்கிறோமா? கடு மழையால் ஏற்பட்ட புதிய சிந்தனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 26, 2023

வானிலை சேவையில் நாம் பின்தங்கி இருக்கிறோமா? கடு மழையால் ஏற்பட்ட புதிய சிந்தனை

சென்னை, டிச.26 தமிழ்நாட்டின் மறக்க முடியாத பேரிடர் ஆண்டாக 2023 அமைந்துவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, புறநக ரிலும், 3-ஆவது வாரத்தில் தூத்துக் குடி, திருநெல்வேலி மாவட்டங் களிலும் பரவலாக அதிகனமழை பெய்தது. புதிய வரலாற்றை படைத்த இரு பேரிடர்களும், அவற்றால் ஏற்பட்ட துயரங்களின் வடுக்களும் அவ்வளவு எளிதில் மக்கள் மனங்களில் இருந்து மறையாது.

சென்னை வானிலை ஆய்வு மய்யம் டிச.18ஆம் தேதி அதிகாலை வெளியிட்ட ரேடார் படம். அதி கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் ரேடார் எல்லையில் இடம் பெறவில்லை.

இவ்விரு பேரிடர்களின்போதும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் அமைச் சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் வானிலை முன்னறிவிப்பு சரியாக வழங்கப்படவில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். காயல்பட்டினத்தில் 95 செமீ அளவுக்கு மழை இருக்கும் என வானிலை மய்யம் எச்சரிக்க வில்லை என்பது தமிழ்நாடு அரசு தரப்பில் வைக்கப்படும் குற்றச் சாட்டு.

வானிலை ஆய்வு மய்யமோ, “2 பேரிடர்களின்போதும் முறையான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 21 செமீ-க்கு மேல் (அதிகனமழை) என்றால் அதற்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் பெய்யலாம். அதை கணிக்க முடியாது’’ என விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘சென்னை வானிலை ஆய்வு மய்யம் அதிநவீனமானது. 3 ரேடார் டாப் லர் கருவிகளுடன் இயங்கி வரு கிறது. இதைக்கொண்டு ஒவ்வொரு நாளும், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கி வருகிறது. தென் மாவட்ட அதி கனமழை தொடர்பாக 12ஆ-ம் தேதியே முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

சென்னை துறைமுகம், பள்ளிக் கரணை, காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள 3 ரேடார்களை அவர் குறிப்பிட்டுள்ளார். ரேடார்கள் சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள மழை மேகங்கள் குறித்த விவரங்கள் மற்றும் காற்றின் வேகம்,வீசும் திசையை துல்லியமாக வழங்க முடியும். தூரம் அதிகரிக்க அதி கரிக்க துல்லியம் குறையும்.

ரேடார் தரவுகளைக் கொண்டு சில மணி நேரத்துக்கான வானிலை முன்னெச்சரிக்கையே (Nowcast) வழங்க முடியும்.5 நாட்களுக்கான முன்னறிவிப்பை (Forecast) வழங்க முடியாது. பள்ளிக்கரணையில் உள்ள ரேடார், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன (NIOT) வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிறுவனமே நீர் நிலையில் கட்டியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதிநவீன கருவியை, வெள் ளத்தால் பாதிக்கக்கூடிய இடத்தில் நிறுவக்கூடாது என்ற புரிதல் இல்லாமலே நிறுவப்பட் டுள்ளது.

தென் மாவட்ட அதிகனமழை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் ஏற்பட்டது. மழை கொடுத்த மேகக் கூட்டங்கள் 3 கிமீ உயரத்தில் தாழ் வாக இருந்தன. இதை தூத்துக் குடிக்கு 250 கிமீ தூரத்துக்கு அப் பால் உள்ள காரைக்கால் அல்லது திருவனந்தபுரம் ரேடாரால் துல்லியமாக கணிக்கவே முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. டிச.18-ஆம் தேதி அதிகாலை வெளியிட்ட ரேடார் படத்தில் அதிகனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட் டங்கள் ரேடார் எல்லையில் இடம் பெறவில்லை.

கடலோர நகரங்களில் சென்னை, தூத்துக்குடி போன்று திடீர் அதிகனமழை நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு விடுகின் றன. இதை ரேடார்களால் முன் கூட்டியே கணிக்க முடியாது. அதற்கு வளிமண்டல அடுக்குகளை கண்காணிக்கும் பலூன் கருவிகள், செயற்கைக்கோள் வழங்கும் தரவுகள் அவசியம். தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குகளை ஆராய சென்னை, காரைக்காலில் மட்டுமே பலூன்கள் தினமும் பறக்க விடப்படுகிறது. தென் மாவட் டங்களில் இதுவரை பறக்கவிட்ட தில்லை. அங்கு ஒரு பலூனை பறக்க விடவேண்டும்.

வானிலைக்காக விண்ணுக்கு அனுப்பப்பட்ட இந்திய செயற்கைக் கோள்கள் படங்களை எடுக்க 17 நிமிடங்களும், பிராசஸ் செய்து, இணையத்தில் பதிவேற்றும் நேரம் சேர்த்து 30 நிமிடங்களுக்கு மேலா கிறது. ஆனால், அமெரிக்காவின் கோஸ் (GOES) செயற்கைக் கோள், 5 நிமிடங்களில் அனைத்து வேலைகளையும் முடித்துவிடுகிறது. அமெரிக்காவுக்கு இணையான தொழில்நுட்பத்தில் புதிய செயற் கைக்கோளை ஏவ, ஒரு ரபேல் விமானத்துக்கு ஆகும் செலவைவிட மிகக் குறைவாகவே ஆகும். மக்களின் பாதுகாப்புக்கு இதை உடனே செய்வது அவசியம் என்பது துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரையிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: கடந்த 1990ஆ-ம் ஆண்டு முதல் வானிலைக்காக 13 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி இருக்கிறோம். அவற்றில் தற்போது, இன்சாட்-3டி, 3ஆர்டி, ஸ்காட்சாட், ஓசன்சாட்-3 ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. செயற்கைக்கோள் படங்கள் கிடைக்க 30 நிமிடங்கள் ஆகும் என்பதில், முழுவதும் உண்மை என கூற முடியாது. ஒரு மோடில் உலகத்தையே படம் எடுக்க 30 நிமிடம் ஆகும். ஆனால் 2 செயற் கைக்கோள்களை ஒன்றன்பின் ஒன்றாக பயன்படுத்தினால் 15 நிமிடமாக குறையும். அமெரிக் காவுக்கு இணையாக அதிநவீன வானிலை செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்ப திட்டமிட் டுள்ளது. மேற்கண்ட நடவடிக் கைகள் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் கள அளவீட்டு, கணிப்பு மாதிரிகளை மேம்படுத் துவதன் மூலம் வானிலை கணிப்பை மேம்படுத்த முடியும் என்றார்.

இந்திய வானிலை ஆய்வு மய்யம் தனது 150ஆ-வது ஆண்டை கொண் டாடும் வேளையில், தமிழ்நாட்டில் 20-க்கும் குறைவான வானிலை தரவு நிலையங்களை (Weather Station) மட்டுமே நிறுவியுள்ளது. தமிழ்நாடு அரசின் தரவுகளையே அதிகம் வாங்கி வெளியிட்டு வருகிறது. அந்த தரவுகளின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்வதும் இல்லை. சென்னையில் உள்ள விஞ்ஞானிகள் உலகத் தரத்தில் வானிலையை கணிக்கின்றனர். ஆனால் டில்லி கணிப்பதையே அறிவிக்க வேண்டும் என்ற மனப்பான்மை துறையில் நிலவுவதாகவும், சரியான கணிப்பை வழங்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது. இவற்றை எல்லாம் சீர் செய்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கான துல்லிய வானிலை சாத்தியமாகும் என்பது விவரம் அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது.

No comments:

Post a Comment