வாரிசு அரசியல்பற்றி பா.ஜ.க. பேசலாமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 12, 2023

வாரிசு அரசியல்பற்றி பா.ஜ.க. பேசலாமா?

கருநாடகா மாநில பா.ஜ.க. தலைவர் பதவியை மகன் விஜயேந்திராவுக்காக போராடி வாங்கித் தந்துவிட்டார் மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா. கருநாடகாவில் லிங்காயத்துகளின் வாக்குகளை முன் வைத்தே மகனுக்கு மாநிலத் தலைவர் பதவியை வாங்கி சாதித்திருக்கிறார் எடியூரப்பா.
கருநாடகா அரசியலில் இப்போது அறியப்பட்ட தலைவர்களாக இருக்கும் பசவராஜ் பொம்மை (பாஜக), குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதா தளம்), விஜயேந்திரா (பாஜக) நிகில் குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதா தளம்) அனைவருமே அரசியல் வாரிசுகள்தான்!

பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை கருநாடகாவின் மேனாள் முதலமைச்சர். கருநாடகா மாநிலத்தின் 4-ஆவது முதலமைச்சர் ஆவார். 1970-களின் தொடக்கத்தில் காங்கிரஸிலும் 1977-இல் இருந்து ‘ஜனதா’ அரசியலிலும் செல் வாக்கான தலைவராக விளங்கியவர். 1990-இல் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக, 1999-இல் அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்தவர். பின்னர் அகில இந்திய முற்போக்கு ஜனதா தளம் என்ற புதிய ஜனதா கட்சிகளின் ஒன்று சேர்ந்த கட்சியின் தலைவராக இருந்தார்.
1988-1989-ஆம் ஆண்டு எஸ்.ஆர்.பொம்மை முதலமைச்சராக இருந்த போது அவரது அரசு கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்த வழக்குதான் மாநில உரிமைகள் தொடர்பாக இன்றும் பேசப்படுகிற எஸ்.ஆர்.பொம்மை வழக்கு. இந்த வழக்கின் தீர்ப்புக்கு பின்னர்தான் 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளை நினைத்த நேரத்தில் கவிழ்க்கும் ஒன்றிய அரசின் போக்கு முடிவுக்கும் வந்தது. எஸ்.ஆர். பொம்மையின் மகன்களில் ஒருவரான பசவராஜ் பொம்மை, கருநாடகா பாஜக ஆட்சியில் 2021-இல் முதலமைச்சரானார். இப்போதும் கருநாடகா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி ரேஸில் ஓடிக் கொண்டிருக்கிறார் பசவராஜ் பொம்மை.
குமாரசாமியின் தந்தை கருநாடகா மேனாள் முதலமைச்சர் மட்டுமல்ல; நாட்டின் பிரதமராகவும் இருந்த தேவகவுடாவின் குடும்ப கட்சியாக இருப்பது மதச்சார்பற்ற ஜனதா தளம்.

தேவகவுடா குடும்பத்தில் அனைவருமே தீவிர அரசியலில் ஈடுபடுகிறவர்கள்;
கருநாடகாவின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்குகளை மட்டுமே நம்பி இருக்கும் கட்சி; குமாரசாமியும் கருநாடகா முதலமைச்சராக 2018-இல் பதவி வகித்தவர். குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும் இப்போது தீவிர அரசியலில் அடுத்த வாரிசாக வலம் வருகிறார்.
விஜயேந்திரா தென்னிந்தியாவில் கருநாடகாவில் பாஜகவை காலூன்ற வைத்த தலைவரான மேனாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன். கருநாடகாவின் இன்னொரு பெரும்பான்மை ஜாதியான லிங்காயத்துகளின் வாக்குகளை பாஜகவுக்கு பெற்றுத் தந்தவர் எடியூரப்பா. இதனை காரணமாக வைத்தே இப்போதும் பா.ஜ.க. மேலிடத்தை மிரட்டி காரியம் சாதிப்பவர். இதன் அடிப்படையிலேயே மகன் விஜயேந்திராவை மாநில பா.ஜ.க. தலைவராக்கி விட்டார் எடியூரப்பா.

அதே போல் பாஜக – பல சட்டமன்ற உறுப்பினர்களின் மகன் அல்லது மகள்களைத்தான் அவரவர் தந்தைகள் வெற்றிபெற்ற தொகுதிகளிலேயே களமிறக்கி உள்ளது. கருநாடகா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இதே நிலைதான். இவர்கள் தான் வாரிசு அரசியல் குறித்து மேடை மேடையாக தொண்டைக் கிழியப் பேசி வருகின்றனர்.
தி.மு.க. அரசைப் பற்றிக் குறை கூற முடியாத வர்கள் எதையாவது ஒன்றைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டுமே என்ற அவசியத்திலும், ஆத்திரத்திலும் அலறுகின்றனர். பிரதமரும் இதற்கு விதி விலக்கின்றி இதை ஒரு குற்றச்சாட்டாகப் பேசி வருகிறார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா கிரிக்கெட் போர்டு தலைவராக இருப்பது எந்த அடிப்படையில்?
தி.மு.க. என்பது திராவிடர் கழகம் வழி வந்தது. அரசியல் கட்சியாக உருவாகி “திராவிட மாடல்” ஆட்சியை – இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் மக்கள் நல அரசாக கொள்கை சார்ந்து பீடு நடை போடுகிறது. யாரும் கட்சி மாறிப் பொறுப்புகளை ஏற்கவில்லை. உழைத்தால் உரிய இடம் கிடைக்கும்.
வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று உளற வேண்டாம்! மக்கள் விவரமாகத்தான் இருக்கிறார்கள். புரிந்து கொள்க!

No comments:

Post a Comment