நாடாளுமன்றத்தில் நேற்று நடத்தப்பட்ட வன்முறை ஏற்கத்தக்கதல்ல என்றாலும் - அவர்களின் நடவடிக்கை - நோக்கம் என்ன என்பதை ஒன்றிய அரசு ஆழ்ந்து பரிசீலிக்கவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 14, 2023

நாடாளுமன்றத்தில் நேற்று நடத்தப்பட்ட வன்முறை ஏற்கத்தக்கதல்ல என்றாலும் - அவர்களின் நடவடிக்கை - நோக்கம் என்ன என்பதை ஒன்றிய அரசு ஆழ்ந்து பரிசீலிக்கவேண்டும்!

featured image

நான்கு அடுக்குப் பாதுகாப்பை மீறி இது நடந்தது எப்படி? பிரதமரும், உள்துறை அமைச்சரும் வாய் திறக்காதது ஏன்?
சென்னை ஆளுநர் மாளிகைக்கு வெளியில் குடிகாரன் ஒருவன் வீசிய பெட்ரோல் குண்டை வைத்து சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று
ஓங்காரக் கூச்சல் போட்டவர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

நாடாளுமன்றத்தில் நேற்று (13.12.2023) நடந்த வன்முறை நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல என்றாலும், அவர்களின் நோக்கம் பரிசீலிக்கத் தகுந்ததே! சென்னை ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது – தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என்று ஓங்காரக் கூச்சல் போட்டவர்கள், நான்கு அடுக்குப் பாதுகாப்பையும் கடந்து நாடாளுமன்றத் திற்குள் நடந்த இந்த வன்முறைக்கு என்ன பதில் சொல்லுவார்கள்? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றம்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதே டிசம்பர் 13 ஆம் தேதியை தேர்வு செய்து, ஒரு தாக்குதல் நாடாளுமன்றத்திற்குள் இருந்தே நடத்தியிருக்கின்ற அதிர்ச்சி செய்தியை எவ்வளவு பரபரப்பு இன்றி வெளியாக்க முடியுமோ, அப்படி ஊடகங்களால் வெளி யிடப்பட்டுள்ளது!

கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன!
நான்கு கட்ட பாதுகாப்புச் சோதனைகளைக் கொண்ட நாடாளுமன்றத்திற்குள் புகைக் குண்டுடன் இளைஞர்கள் நுழைந்ததும், அவை நடந்துகொண்டிருக் கும்போதே அவர்கள், பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்து, அந்தப் புகைக் குண்டுகளை வீசியிருப்பதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன!
நாடாளுமன்றத்திற்கு வெளியே இளம்பெண்கள் இருவர் வண்ணங்களைக் கக்கும் புகைக் குண்டுகளை வீசி,
‘‘சர்வாதிகாரத்தை நிறுத்து…”
‘‘அடக்குமுறையை நிறுத்து…”
‘‘பாரத் மாதா கீ ஜே!”
‘‘வந்தே மாதரம்” என முழக்கமிட்டுள்ளனர்!
உடனடியாக, இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகைக் குண்டுகளை வீசியவர்களின் பெயர்கள் மனோரஞ்சன், சாகர் ஷர்மா என்றும், இரண்டு இளம் பெண்களின் பெயர்கள் நீலம், அன்மோல் ஷிண்டே என்றும் தெரிய வந்துள்ளது.
பொறியியல் பட்டதாரியான மனோரஞ்சன் என்பவர், விவேகானந்தரின் சிந்தனைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று செய்தி ஏடுகள் கூறுகின்றன!
அதேபோல் இளம்பெண் நீலம் (வயது 42) அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்; அய்.ஏ.எஸ். படிப்புக்கான முதல்நிலை தேர்வை எழுதியிருப்பவர் என்பதோடு, மற்றொரு பெண்ணான அன்மோல் ஷிண்டே (வயது 25) மகாராட்டிரத்தைச் சேர்ந்தவர்.

பரிந்துரை கடிதம் கொடுத்தவர்
கருநாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.,!
நாடாளுமன்றத்தின் உள்ளே நடவடிக்கைகளை பார்வையிட எம்.பி.யின் கடிதம் தேவையானது. அதனை ஏற்றுதான் நுழைவு அனுமதி வழங்கப்படும். உள்ளே புகைக் குண்டு வீசிய இரண்டு இளைஞர்களுக்கு, கருநாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி., பிரதாப் சிம்ஹா என்பவர்தான் கடிதம் வழங்கியுள்ளார்!
இந்தக் களேபரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் நடத்தப்பெற்ற விசாரணையில், ‘‘நாங்கள் எந்த அமைப் பையும் சார்ந்தவர்கள் அல்ல; நாங்கள் நடத்துவது வேலையின்மை, விலைவாசி உயர்வு, அடக்குமுறைக்கு எதிரான போராட்டம், மணிப்பூருக்கு ஆதரவாக எழுந்த போராட்டம், ‘‘பாரத் மாதா கீ ஜே‘‘, ‘‘வந்தே மாதரம்” என்று தெரிவித்ததாக ஏடுகளில் செய்திகள் வெளி வந்துள்ளன!

ஒருபோதும்
நியாயப்படுத்த முடியாது!
என்னதான் இவர்களது உணர்வில் நியாயம், யதார்த்தம் இருந்தாலும், அவர்கள் தேர்ந்தெடுத்த இந்த முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
தங்களது கோரிக்கைகளில் உள்ள உண்மைகளை வெளியே தெரிய வைக்க இதுபோன்று சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து, நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளில் இப்படி ஓர் ஆபத்தான போக்கு- நடைமுறை – வன் முறை கண்டிக்கத்தக்கது – இளைஞர்கள் திசை திரும்பி விடாமல், அதனை வாக்குச் சாவடிகளில் பிரதிபலிக்கும் வகையில் ஜனநாயக வழிமுறைகளை மட்டும்தான் தேர்வு செய்யவேண்டும்.
ஒன்றிய அரசு இந்த இளைஞர்களின் நடத்தையை வெறும் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் பார்த்து, ‘‘வழக்கு நடத்தினோம், தண்டனை வாங்கித் தந்துவிட்டோம்” என்று மகிழ்ந்து நிம்மதி அடைந்துவிடக் கூடாது; முடியாது!

போதிய பாதுகாப்பு வளையத்தை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உருவாக்கவேண்டும்!
இந்த இளைஞர்களின் செய்கைகள் தவறானவை என்றாலும்கூட, அதன் பின் உள்ள உணர்வுகளை ஒன்றிய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளாமல் அலட்சி யப்படுத்திவிட முடியாது. ‘‘நோய்நாடி நோய் முதல் நாடவும்” செய்ய முன்வருதலும் வேண்டும் – தங்களிடம் ‘புல்டோசர் மெஜாரிட்டி’ இருப்பதைப் பயன்படுத்தி, எப்படி வேண்டுமானாலும் ஜனநாயகத்தை, அரசமைப் புச் சட்டக் கோட்பாட்டை வளைக்கலாம் என்று நினைத்துவிடக் கூடாது என்ற தேசிய பாடத்தைக் கற்றுப் புரிந்து, சட்டம் – ஒழுங்கு குறைபாடு உள்ளதை நிவர்த்தி செய்து, ஒரு போதிய பாதுகாப்பு வளையத்தை நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உருவாக்க வேண்டும்!
நல்வாய்ப்பாக அவையில் இருந்த எவருக்கும் உயிர்ச்தேசம் போன்றவை ஏற்படவில்லை என்பது ஒருவகை ஆறுதலான நிம்மதியை ஜனநாயகவாதி களுக்குத் தருவதாக அமையக்கூடும்!

வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு
நன்கு விளங்கும்!
இதுபோன்ற விரும்பத்தகாத முறைக்கு முன்னோட்ட வழிகாட்டிகள், அமைப்புகள் யார் என்பது வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு நன்கு விளங்கும்! தீவிர வாதம் பயின்று குற்ற வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்தவர்கள் நாடாளுமன்ற அவையில் உள்ளனர்!
இந்நிகழ்வில் தப்பித் தவறி, பரிந்துரைக் கடிதம் வழங்கிய எம்.பி., எதிர்க்கட்சியினராக இருந்திருந்தால், ஆளுங்கட்சி பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இப்படி ‘‘உப்புக்கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி” என்ற பழமொழிக்கொப்ப இருந்திருப்பார்களா?
எதிர்க்கட்சிகள்மீது ஒரு பெரும் பழியை நெடுங் கதையாக்கி இருப்பார்களே!
மற்றொன்றும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் எழுப்பப்படும் கேள்விக்கு இடம் தருகிறது! தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, இருக்கும் ராஜ்பவனுக்கு வெளியே – சாலையில், எவனோ ஒரு குடிகாரன் ஒரு பெட்ரோல் குண்டை வீசினான்; தமிழ்நாடு காவல்துறை அவனைப் பிடித்தது. ஆனால், அதற்கு எவ்வளவு துள்ளிக் குதித்தனர்; ‘‘ஆகா, சட்டம் ஒழுங்கு தி.மு.க. ஆட்சியில் கெட்டுவிட்டது; ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை” என்று பல அரைவேக்காடு அரசியல் கூலிப் படைகளும் ஓங்காரக் கூச்சலிட்டு ஊதிப் பெருக்கினர்.
இந்த நாடாளுமன்றத் தாக்குதலுக்கு டில்லி உள்துறை பொறுப்பேற்கவேண்டாமா? அதன் காவல்துறை நிர்வாகம், அந்த டில்லி மாநில அரசினுடையது அல்ல – ஒன்றிய உள்துறையிடம்தானே! நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் நான்கு அடுக்கு பாதுகாப்பைத் தாண்டி நடந்துள்ளது.

அன்று ஓங்கிக் குதித்தவர்கள்,
இன்று ‘மவுனச்சாமியார்களாகி’ விட்டனர்!
அன்று ஓங்கிக் குதித்தவர்கள், இன்று ‘மவுனச்சாமி யார்களாகி’ விட்டனர். அவர்கள் கண்ஜாடை ஏடுகளும், சில ஊடகங்களும் வாய்மூடிகளாக உள்ளன!
‘‘ஏனிந்த இரட்டை வேடம்?” என்ற நியாயமான கேள்வியும் எழும்!
இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்திருப்பது குறித்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வாய்திறக்காதது ஏன்?
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சீரும் சிறப்பும், ஆளு மைத் திறனும்பற்றி பழி சுமத்தும் பக்கா கூலிப்படைகள் – இப்போதாவது உணர்ந்து தங்களை மாற்றிக் கொள்ளட்டும்!
பல கோணங்களில் பலரும் பாடம் கற்று, ஜனநாயகமும், அரசமைப்புச் சட்ட நடைமுறைக்குட்பட்ட ஆட்சி முறையும் தனிச் சிறப்போடு நடைபெறுவதற்கு – ஒவ்வொரு குடிமகனும், மகளும் – தேர்தலைச் சரியாகப் பயன்படுத்தி, இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழா வண்ணம் வழிவகைக் காணவேண்டும்.
இதை ஓட்டுப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், நாட்டுப் பிரச்சினையாகப் பார்த்து – வேட்டு முறை ஒருபோதும் ஜனநாயக வழியாகாது என்பதை அனைத்துத் தரப்பும் உணருதல் முக்கியம்! முக்கியம்!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
14.12.2023

No comments:

Post a Comment