தமிழர் தலைவர் பங்கு கொண்ட அந்த நிகழ்ச்சி லண்டனில் பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 1, 2023

தமிழர் தலைவர் பங்கு கொண்ட அந்த நிகழ்ச்சி லண்டனில் பெரியார்

ஜனநாயகத்தின் தாய்வீடான இங்கிலாந்து நாடாளு மன்றத்தின் பாரம்பரியமிக்க பிரபுக்கள் சபை (House of Lords)  வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனை'.

அத்தகைய சிறப்பு வாய்ந்த அரண்மனையில், இங் கிலாந்தின் நீண்ட நெடிய வாலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழ் நிகழ்ச்சி நடைபெற்றது. அது 15.01.2004 அன்று தமிழர் தலைவர் அவர்கள் கலந்துகொண்ட ஆக்ஸ் போர்டு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப் பட்ட பொங்கல் விழா தான்.

வெஸ்ட் மினிஸ்டர் அரண்மணையில் நாடாளுமன் றக் கட்டடத்தின் 4ஆவது எண் உள்ள கருத்தரங்க மன்றத்தில் பொங்கல் விழாவும் தவத்திரு டாக்டர் ஜி.யூ.போப்பின் இரண்டாம் நினைவுச் சொற்பொழிவும் தமிழர் திருநாளாம் பொங்கலன்று ஆக்ஸ்போர்டு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செயல்மிகு ஆற்றலாளர் சுப.சேகரன், துணைத் தலைவர் டாக்டர் என். சீனி வாசன், செயலாளர் விமலா ஜென் விங்ஸ் ஆகியோரின் சிறப்பான ஏற்பாட் டில் நடைபெற்றது.

திரு சுப.சேகரன் அவர்கள் ஆக்ஸ்போர்ட் 'ஷர்' உள்ளாட்சி மன்றத்தின் மக்களால் தேர்த்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ் உறுப்பினர் ஆவார்.

வரவேற்புரையாற்றிய டாக்டர் என்.சீனிவாசன் அவர்கள் தமிழர் தலைவர் அவர்களைப் பற்றிய செய்திகளையும். அவரது சிறப்புகள். கல்விப்பணி, தொண்டறம் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்.

இந்திய வம்சாவளி மக்களின் பிரிட்டிஷ் அமைப் பின் தலைவரும், மான்ஸ்பீல்டு கல்லூரியின் மூத்த கல்விமானுமாகிய டாக்டர் பால் ஃபிளெத்தர் தனது தலைமையுரையில் டாக்ட்ர் 'ஜி.யூ.போப் குறித்தும், தமிழர் திருநாளாம் பொங்கல் விழா குறித்தும் உரை யாற்றினார்.

பிறகு சிறப்புரையாற்றிய இங்கிலாந்து பிரபுக்கள் சபை உறுப்பினரும், டாக்டர் பால்ஃபிளெத்தர் அவர்களின் தாயாருமான திருவாட்டி ஃபிளெத்தர் அவர்கள் இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சா வழியினர் குறிப்பாக தமிழர்கள் பற்றியும் பொங்கல் விழா குறித்தும் உரை யாற்றியதோடு ஆக்ஸ் ஃபோர்டு தமிழ்ச் சங்கத்திற்கும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழ்ச்சங்க விழா ஒன்றில் இங்கிலாந்து அமைச்சர் கலந்து கொள்வது இது முதல் முறையாகும். இங்கிலாந் தின் பொதுத்துறை மற்றும் ஓய்வூதிய அமைச்சர் உயர் மிகு ஏண்ட் ரூஸ்மித் அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

பின்னர், மலேசிய வழக்குரைஞரும், 'புதிய அலை' என்ற ஆங்கில இதழின் பிரதம ஆசிரியருமான திரு.

கி.சிவதாஸ் அவர்கள் "அமைதிப் பாதையிலே ஜி.யூ. போய்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதன் பின்னர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள், "ஜி.யூ.போப்பும், பெரியார் ஈ.வெ.ரா.வும்" என்ற தலைப்பில் ஆய்வுரை யாற்றினார்,. பிறகு ஆக்ஸ்போர்டு தமிழ்ச் சங்கத் தலை வர் சுப.சேகரன் அவர்கள் "போப் - பெரியார் மனித உரிமை அமைப்பு" ஒன்றினைத் தொடங்குவதாக அமைச்சர் முன்னிலையில் ஓர் பிரகடனத்தை வாசித்து உரையாற்றினார்.

மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற விழாவில் இறுதியாக ஆக்ஸ்போர்டு தமிழ்ச் சங்கச் செயலாளர் விமலா ஜென்னிங்ஸ் நன்றியுரையாற்றினார்.

சிறப்பு வாய்ந்த இந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில இங்கிலாந்தில் உள்ள அம்பேத்கர் மற்றும் புத்த மன்றங் களின் கூட்டமைப்பின் சார்பில் இங்கிலாந்தில் உருவாக் கப்பட்ட அம்பேத்கர் நூற்றாண்டு விழா கமிட்டியின் தலைவர் டாக்டர் கவுதம் சக்கரவர்த்தி அவர்கள் கலந்து கொண்டார்.

டாக்டர் அய்.ஜி.பட்டேல் அவர்களை கவுரவத் தலைவராகவும், ஜேம்ஸ் கலாகன் பிரபு, டாக்டர் ஸ்வ ராஜ் பால் ஆகியோரை புரவலர்களாகவும் கொண்ட இந்த பன்னாட்டு கூட்டமைப்பின் சார்பில் உலக அளவில் அம்பேத்கரின் கொள்கையான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபடுகிறவர்களுக்கு, அரும் பணியாற்றுகிறவர்களுக்கு "பீம் ரத்னா" ('BHIM RATNA')  என்ற பன்னாட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த "பீம் ரத்னா" விருதினை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரும்பணியாற்றியமைக் காக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு இங்கிலாந்து அமைச்சர் திரு. ஏண்ட்ருஸ்மித் அவர்கள் வழங்கினார். இது, இங்கிலாந்து அரசே வழங்கும் விருதைப் போன்ற சிறப்பானதாகும்.

சுமார் 750 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழகம் (Oxford university) லண்டனிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரத்தில் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய நூலகமான 'போட்லி யென் நூலகம்' (Bodleian Library) அமைந்துள்ளது. இது 400 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகும்.

அந்த நூலகத்திற்கு 16.1.2004 அன்று காலை தமிழர் தலைவர் அவர்கள் திரு.சுப.சேகரன், பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் முதல்வர் டாக்டர் இராசசேகரன் ஆகியோருடன் அதில் உள்ள இந்திய நூலகத்துறைக்கு சென்றபோது அந்நூலகர் திருமதி. டாக்டர் கிலியன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

உலகப் புகழ் பெற்ற அந்நூலகத்தில் தந்தை பெரியாரின் 75க்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றி ருக்கிறது என்பது அரிய பெருமை தரும் செய்தியாகும். Ramasamy E.V, (Periyar)' என்று அந்த நூல்கள் வரிசையாக அமைந்திருந்தது. அதுமட்டு மல்லாமல் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய நூல்களும் இடம் பெற்றிருந்தது மகிழ்வுக்கும் பெரு மைக்கும் உரிய செய்தியாகும். மேலும் அந்த நூலகத் திற்கு தமிழர் தலைவர் அவர்கள் நமது இயக்க வெளி யீடுகளை அன்பளிப்பாக வழங்கினார் அதனை பெற்றுக் கொண்ட நூலகர் டாக்டர் கிலியன் எவிசன் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பொங்கல் விழா

17-1-2004 அன்று நண்பகல் லண்டன் தமிழ்ச் சங்கம் மற்றும் அதன் முதியோர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா விருந்தில் தமிழர் தலைவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்

விழா லண்டன் மாநகரிலுள்ள ஈஸ்ட்ஹாம் பகுதி ஹைஸ்ட் ரீப் நார்த் என்ற தெருவிலுள்ள லண்டன் தமிழ்ச் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடை பெற் றது. அந்நிகழ்ச்சியில் லண்டன் தமிழ்ச் சங்கத்தின் தலை வர் திரு. அசோகன் வரவேற்புரையாற்றினார். அவர் தமது வரவேற்புரையில் தமிழர் தலைவர் நம்முடைய தமிழ்ச் சமுதாயத்துக்கு ஆற்றிவரும் பணியை எடுத்து ரைத்தார். அடுத்து உரையாற்றிய லண்டன் தமிழ்ச் சங்கத்தின் முதியோர் அணியின் பொருளாளர் புலவர் கணபதி அவர்கள் தமிழ்நாட்டில் சமுதாயப் புரட்சிக்கு உழைத் திடும் தமிழர் தலைவரின் பணியால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி தெளிவாக உரை நிகழ்த்தினார். அடுத்து ஆக்ஸ் போர்ட் தமிழ்ச் சங்கத் தலைவர் சுப.சேகரன் உரையாற்றினார்.

இறுதியாகத் தமிழர் தலைவர் அவர்கள் சிறப்புரை யாற்றினார். உரையில் திராவிடர் கழகம் ஒவ்வொரு துறையிலும் ஆற்றிவரும் பணிகள் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார்.

பின்னர், கலந்து கொண்டவர்கள் எழுப்பிய வினா விற்கு தமிழர் தலைவர் தகுந்த பதிலளித்தார். விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் ஈஸ்ட் ஹாம் பகுதியின் உள்ளாட்சி உறுப்பினர் திரு. பால்சத்தியசீலன் கலந்து கொண்டார்.

தமிழர் முன்னேற்றக் கழகம் நடத்திய தமிழர் திருநாள் விழா

17-1-2004 அன்று லண்டன் மாநகரில் நியூஹாம் டவுன் ஹால் மன்றத்தில் இங்கிலாந்திலுள்ள தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. நாகநாதனால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் திருநாள் விழாவில் தமிழர் தலைவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவருடன் இங்கிலாந்து நாட்டின் துணை யமைச்சர் ஸ்டீபன் டிம்சும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்தில் வாழும் சுமார் 1000 தமிழ் குடும்பங்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இங்கிலாந்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் சிறுவர் சிறுமியர்களின் கலை நிகழ்ச்சி நடந் தது. இந்நிகழ்ச்சியில் திரு.நாகநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். ஆக்ஸ்போர்ட் தமிழ்ச் சங்கத் தலைவர் சுப.சேகரன், நியூஹாம் பகுதியின் உள்ளாட்சி உறுப்பினர் பால் சத்தயசீலன் ஆகியோர் உரையாற்றினார். அடுத்து உரையாற்றிய நியூஹாம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இங்கிலாந்து துணை அமைச்சருமான திரு.ஸ்டீபன் டிம்ஸ், தமது உரை யில் தமிழர் தலைவர் தமிழ்ச் சமுதாயத்துக்கு ஆற்றிவரும் தொண்டினை வெகுவாகப் பாராட்டினார். தமிழ்நாட்டி லுள்ள தமிழர்களுக்கு ஆற்றிவரும் தொண்டினை மேலும் விரிவாக்கி இங்கிலாந்திலுள்ள தமிழ்ச் சமுதா யத்துக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார். இறுதியாக உரையாற்றிய தமிழர் தலைவர் இங்கிலாந்து வாழ் தமிழ் மக்கள் தங்கள் வாழ்க் கையை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அடுத்த தலைமுறையினரான தங்கள் குழந்தை களை எத்தகு வாழ்க்கை முறைக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

எழுந்து நின்று கையொலி

18-1-2004 பிற்பகல் 3 மணியளவில் 'ஆக்ஸ்போர்ட் தமிழ்ச் சங்கத் தலைவர் சுப.சேகரனால் துவக்கப்பட்ட "ஜி.யூ.போப் - தந்தை பெரியார் மனிதநேய மன்றத்தின்' முதல் கருத்தரங்கம் "இந்திய அரசியலில் தந்தை பெரியார் - டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் தாக்கம்” என்ற தலைப்பில் நடைபெற்றது.

டாக்டர் பால்ஃபிளெத்தர் தலைமை வகித்தார். இதில் 40-க்கும் மேற்பட்ட பல்துறைச் சான்றோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கத்தின் சிறப்பம்சமாக தமிழர் தலைவரின் அறிவார்ந்த ஆய்வுரை அமைந்தது. அவருடைய உரையின்பின் தலைமையேற்ற டாக்டர் பால்ஃபிளெத்தர் பங்கேற்பாளர்களை வினாத் தொடுக்குமாறு அழைத்தார். தொடுத்த வினாக்களுக்கு தமிழர் தலைவர் சான்றுகள் காட்டி அருமையான விளக்கமளித்தார். வினா - விளக்க நிகழ்ச்சியே மூன்று சுற்றுக்கள் தொடர்ந்தது. டாக்டர் பால்ஃபிளெத்தர், திரு. கவுதம் சக்ரவர்த்தி (அம்பேத்கர் நூற்றாண்டு விழாக் குழுத் தலைகர்), டாக்டர் சீனிவாசன் (ஆக்ஸ்போர்ட் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்), தொழிலதிபர் காரேவால், திரு. புஷ்பநாத், திரு.ஷியாஷ், டாக்டர் அருட்செல்வர், திரு. ஜென்னிஸ் போன்றோரும் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். அனைத்து வினாக்களுக்கும் அருமையான அறிவு சார்ந்த கொள்கை விளக்கமளித்த தமிழர் தலைவரை கருத்த ரங்க நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய டாக்டர் பால்ஃ பிளெத்தர் வியந்து பாராட்டினார். பங்கேற்றோர் அனை வரும் சில நிமிடங்கள் எழுந்து நின்று கையொலி எழுப்பி (Standing Ovation) தங்களது பாராட்டைத் தெரிவித்தனர்.

பி.பி.சி. தமிழோசையில்
தமிழர் தலைவரின் பேட்டி

19-1-2004 அன்று மாலை 6.30 மணிக்கு லண்டன் நகரிலுள்ள பி.பி.சி. வானொலி நிலையத்துக்கு அழைப் பின் பேரில் தமிழர் தலைவர் சென்றார். அவ ரை பி.பி.சி. வானொலி தமிழ்ச் சேவைப் பிரிவின் பொறுப்பாளர் திருமதி ஆனந்தி வரவேற்றார். பின்னர் வானொலிப் பேட்டியில் திருமதி ஆனந்தி அவர்கள் கேட்ட கேள்வி களுக்கு தமிழர் தலைவர் தெளிவான விளக்கங்களை அளித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த வானொலிப் பேட்டி தொடர்ந்தது. பேட்டி முடிவுற்றதும் திருமதி ஆனந்தி தான் கேட்ட கேள்விகளுக்கு தமிழர் தலைவர் தயக்கமேதுமின்றி உடனுக் குடன் விளக்கமளித் ததை வெகுவாகப் பாராட்டினார். பி.பி.சி. வானொலி நிலையத் தில் பணியாற்றிய திரு ஜெகதீசன் மற்றும் திரு. அறிவர சன் ஆகியோரும் பேட்டியின் போது உடனிருந் தனர்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பார்த்த 
தமிழர் தலைவரின் தொலைக் காட்சி பேட்டி

19-1-2004 அன்று தமிழர் தலைவர் வரவுக்காகக் காத் திருந்தது லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் பன்னாட்டுத் தமிழ்த் தொலைக்காட்சி நிலையமான சி.அய். டி.வி. இதன் ஒளிபரப்பினை இங்கிலாந்திலுள்ள தமிழர்கள் மட்டுமல்லாது அய்ரோப்பிய நாடுகளிலுள்ள தமிழர்கள் அனைவரும் கண்டு களிக்கின்றனர். அத்தொலைக் காட்சியில் ஒவ்வொரு நாளும் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை 'தமிழா தமிழா' என்ற நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை களிலும் சாதனை படைக்கும் தமிழர்களை தொலைக் காட்சியில் நேரடியாகப் பேட்டி காண்கின்றார் லண்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. அசோகன் அவர்கள்.

பேட்டியின் துவக்கத்தில் தமிழர் தலைவர் அவர் களைப் பற்றி அருமையான அறிமுகவுரை நிகழ்த்தினார் பேட்டியாளர் திரு. அசோகன். தமிழர் தலைவரின் தலை சிறந்த பண்புகளைப்பற்றியும் அவர்தம் தொண்டால் தமிழ்ச் சமுதாயம் அடைந்த வளர்ச்சியைப் பற்றியும் விரிவாகக் கூறி, பேட்டியைத் துவக்கினார். பின்னர் இங்கிலாந்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் பலர் தங்கள் கேள்விகளைத் தொலைபேசி மூலம் கேட்டனர். அவை அனைத்துக்கும் தெளிவாகவும் விளக்கமாகவும் விடையளித்தார் தமிழர் தலைவர்.

ஒரு மணி நேரம் தொடர்ந்த இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கேள்விகள் கேட்பதற்காகப் பலர் தொலை பேசியில் காத்திருந்தனர். அவர்களில் பலருக்கு நேரத் தின் நெருக்கடியின் காரணமாக வாய்ப்புக் கிடைக்க வில்லை. இந்நிகழ்ச்சியின் போது தொலைக்காட்சி நிலையத்துக்கு க்ராய்டன் நகராட்சி மன்ற உறுப்பினர் திரு. செல்வநாயகம், தமிழ்த் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்த், வல்லம் பெரியார் பாலிடெக்னிக் முதல்வர் டாக்டர் இராசசேகரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

பி.பி.சி. சங்கர மூர்த்தி இல்லத்தில்...

18-1-2004 அன்று ஆக்ஸ்போர்ட் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திருமதி. விமலா ஜென்னிய்ஸ் இல்லத்திற்கு சென்றார். அக்குடும்பத்தினருடன் பகல் விருந்துண்டு சிறிதுநேரம் அவர்களுடன் கலந்துரையாடிவிட்டு தமிழர் தலைவர் விடைபெற்றார்.

18-1-2004 வரை ஆக்ஸ்போர்ட் நகரில் உள்ள திரு. சுப.சேகரன் வீட்டில் தங்கியிருந்த தமிழர் தலைவரை க்ராய்டன் நகராட்சி உறுப்பினரும் City Councillor  தமிழர் தலைவரின் அன்புக்குப் பாத்திரமானவருமான திரு. செல்வநாயகம் அவர்கள் லண்டன் நகரிலுள்ள வெம்பிளி பகுதியில் வசிக்கும் பி.பி.சி. வானொலி தமிழ்ச் சேவை பிரிவின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாகப் பணியாற்றியவரான "பி.பி.சி. சங்கர்" என்று உலகெங்குமுள்ள தமிழர்களால் அன் போடு அழைக்கப்பட்ட தமிழர் தலைவர்பால் மிகுந்த மரியாதையும் அன்பும் காட்டிவந்த திரு. சங்கரமூர்த்தி அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்றார். 20-1-2004 காலை லண்டன் மாநகரை விட்டுத் தாயகம் திரும்பும் வரை தமிழர் தலைவர் திரு.சங்கர மூர்த்தியின் வீட்டில் தங்கியிருந்தார். திரு. சங்கர மூர்த்தியின் துணைவியார் திருமதி சரஸ்வதி அவர்களின் மகள் அபயா அவர்களும் தமிழர் தலைவரிடம் மிகுந்த அன்புகாட்டினார்.

இதற்கு முன்னர் காலை 10.30 மணியளவில் ஆக்ஸ் போர்ட் நகரில் வாழும் இந்தியக் குடும்பத்தினரான 'திரு. புஷ்பநாத் - திருமதி உமாபுஷ்பநாத் ஆகியோர் அழைப் பின் பேரில் அவர்கள் இல்லத்திற்கு தமிழர் தலைவர் சென்றார். அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். திருமதி உமா சென்னையிலுள்ள தன்னுடைய தம்பி விஸ்வநாதன் தமிழ் ஆங்கில ஒலிபெயர்ப்பு மென் பொருள் உருவாக்கியதாகக் குறிப்பிட்டதோடு அது செயல்படுவது பற்றி அவர்தம் கணினியில் செய்முறை விளக்கமும் அளித்தார். பின்னர் தமிழர் தலைவர் அங் கிருந்து விடைபெற்றார்.

டாக்டர் ஜி.யூ. போப் நினைவிடத்தில் 
தமிழர் தலைவர் மரியாதை

கி.பி.19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்திலிருந்து தமிழ்நாடு வந்து தமிழ் படித்து தமிழ்த் தொண்டாற்றிய டாக்டர் ஜி.யூ.போப் கி.பி.20-ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் இங்கிலாந்து திரும்பி 1908-ஆம் ஆண்டு மறைவுற்றார். அவரது நினைவிடம் இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரிலிருந்து 120 கி.மீ. தொலைவிலுள்ள ஆக்ஸ்போர்ட் நகரில் வால்டன் தெருவிலுள்ள கல்ல றைத் தோட்டத்தில் உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்ட் தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் 17-1-2004 அன்று காலை 10 மணி அளவில் டாக்டர் ஜி.யூ.போப் நினைவிடம் சென்றார். அவருடன் ஆக்ஸ் போர்ட் தமிழ்ச் சங்கத் தலைவர் சுப.சேகரனும் - வல்லம் பெரியார் பாலிடெக்னிக் முதல்வர் டாக்டர் இராசசேகரனும் சென்றனர்.

டாக்டர் ஜி.யூ.போப் புதைக்கப்பட்ட இடத்திலேயே அவருடைய துணைவியாரும் புதைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவிடம் சென்ற தமிழர் தலைவர் பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து தமிழ் இலக் கணம் மற்றும் தமிழில் உள்ள பல்வேறு இலக்கியக்களைப் படித்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழின் பெருமையை உலக முழுமைக்கும் பறை சாற்றிய டாக்டர் ஜி.யூ.போப் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

லண்டனில்
பெரியார் பன்னாட்டு மய்யம்

லண்டனில் பெரியார் பன்னாட்டு மய்யம்(Periyar International - U.K. Chapter)  அமைக்கப்பட்டது. இதன் தலைவராக டாக்டர் என். சீனிவாசன், துணைத் தலைவர்களாக செல்வநாயகம், டாக்டர் பால் பிளவுத்தர் (Paul Flather), செயலாளராக சுப.சேகரன், துணைச் செயலாளர்களாக மாயவன், பாண்டியன் மற்றும் நிருவாகக்குழு உறுப்பினர்களாக சங்கரமூர்த்தி (பி.பி.சி), அசோகன் (லண்டன் தமிழ்ச்சங்கத் தலைவர்), கவுதம் சக்ரவர்த்தி (அம்பேத்கர் நூற்றாண்டு விழாக் குழுத்தலைவர்), திருமதி சுஜாதா கிருஷ்ணன், சாரதா சேகரன், சரஸ்வதி சீனிவாசன், நிர்மலா கேசவராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பன்னாட்டு வானொலியில் 
தமிழர் தலைவர்

16-1-2004 அன்று மாலை 5 மணிக்கு இங்கிலாந்திலுள்ள பன்னாட்டு வானொலி நிலையம் (internationa Broadcasting Corporation) சார்பில் தமிழர் தலைவர் அவர்களைத் தொலைபேசி மூலம் பேட்டி கண்டனர். பேட்டி எடுத்தவர் திருவாளர். யமுனா ராஜேந்திரன். அவர் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் தமிழர் தலைவர் சரியான தெளிவான விளக்கமளித்தார். 40 நிமிட நேரம் நடந்த இந்த வானொலிப் பேட்டி இங்கிலாந்து மட்டுமல்லாது கனடா அய்ரோப்பிய நாடுகள் மற்றும் பல நாடுகளிலும் ஒலிபரப்பப்பட்டது.

No comments:

Post a Comment