தமிழ்ச் சமுதாயத்தின் பாதுகாப்பு அரண்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

தமிழ்ச் சமுதாயத்தின் பாதுகாப்பு அரண்!

நக்கீரன் கோபால்

"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு."

- என்பது வள்ளுவரின் வாக்கு.

துணிவு, மான உணர்வு, முற்போக்கான முன்னோடிகளின் வழியிலே நடை போடுதல், ஏற்றுக்கொண்ட தலைவனின் நம்பிக்கையைப் பெறும் பாங்கு ஆகிய நான்கும் ஒரு இயக்கத்தைக் கட்டிக் காப்பதற்கான மாண்பாகும் என்று இதன் மூலம் கூறுகிறார் வள்ளுவர்.

வள்ளுவர் வகுத்த இந்த இலக்கணத்திற்கு ஏற்ப, துணிவோடும், மான உணர்வோடும், முற்போக்குச் சிந்தனைகளோடும், தான் ஏற்றுக் கொண்ட தலைவரான தந்தை பெரியாரின் நம்பிக்கையைப் பெற்றும், கொள்கை வழியில் தொடர்ந்து தொய் வில்லாமல் வீறு நடை போட்டு வருபவர்தான் தமிழர் தலைவரான நம் ஆசிரியர் அவர்கள்.

அத்தகைய பெருமைக்குரிய நம் ஆசிரியர் அவர்கள், 91 ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார் என்பதும், அதையொட்டி சுயமரியாதை நாள் சிறப்பு மலர் வெளியிடப்படுவதும் தமிழ்ச் சமூகமே பெருமிதம் கொள்ளத்தக்க செய்தியாகும்.

91இல் ஆசிரியர் அடியெடுத்து வைக்கிறார் என்றால், அவர் 91 வசந்தங்களைக் கண்டிருக்கிறார் என்று பொருள்.

அவரைப் பொறுத்தவரை, வசந்தம் என்றால் சொகுசு அல்ல.

போராட்டக்களமே அவருக்கு வசந்தம்.

"மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை-எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை" - என்கிற புரட்சிக்கவிஞரின் வரிகளைத் தன் செயலால் வழிமொழிகிறவர்.

இந்தத் தமிழ்ச் சமூகத்தின் சமூக விடுதலைக்கான போரில், தந்தை பெரியார் வழியில் இப்போதும் ஆசிரியர் அவர்கள் வாள் சுழற்றிக்கொண்டே இருக்கிறார்.

வயதைக் கண்டு அவர் பயப் படவில்லை. அவரைக் கண்டுதான் வயது பயப்படுகிறது. அந்த அளவிற்கு அவருடைய செயல்வேகம் அவரிடம் இருந்து இப்போதும் வெளிப் பட்டுக்கொண்டே இருக்கிறது.

அண்மையில் மோடி அரசு 'விஸ்வகர்மா யோஜனா' திட்டம் என்ற பெயரில் மறைமுகமாகக் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதைக் கண்டு, கொதித்துப்போன நம் ஆசிரியர், அக்டோபர் 25ஆம் தேதி முதல், இந்தத் திட்டத்திற்கு எதிரான பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டது நம்மைத் திகைக்க வைத்தது. அவருக்குப் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போது, அவர் இன்னொரு பக்கம், தனது பரப்புரையை தன் போக்கில் நடத்த ஆரம்பித்துவிட்டார். இதுதான் போராளிக்கான நெஞ்சுறுதி.

இந்தப் போராட்டக் குணம் நம் ஆசிரியர் அவர்களுக்குப் புதிதல்ல. தந்தை பெரியாரைப் போல், முத்தமிழறிஞர் கலைஞரைப் போல், நம் ஆசிரியர் அவர்கள் பிறவிப் போராளியாகத் திகழ்கிறவர். கலைஞரைப் போல் உழைப்பதில் வல்லவர். கலைஞரைப் போலவே சுறுசுறுப்பான பொதுவாழ்வைக் கொண்டவர். முதுமை குறித்தோ உடல் வருத்தங்கள் குறித்தோ அவர் என்றைக்கும் கவலைப்பட்டதில்லை.

உலகையே முடக்கிய கரோனாவால், அவர் பாதிக்கப்பட்ட போது கூட, அவரது உழைப்பு சுருங்கவில்லை. அவரது வீறுமிகும் ஆற்றல் குறைந்துவிடவில்லை. அப்போதும் எழுதுவதையும், பேசுவதையும் கருத்துகளைப் பரப்புவதையும், தமிழ் இனத்திற்காகக் குரல் கொடுப்பதையும் அவர் தொடர்ந்துகொண்டுதான் இருந்தார். அவர் எத்தனை முறை போராட்டக்களம் கண்டார் என்பதையும் எத்தனை முறை சிறை சென்றார் என்பதையும் கணக்கிட முடியாது.

தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இயங்கியவர் நம் ஆசிரியர். அவராலேயே திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையாருக்குப் பின் திராவிடர் கழகம் என்னும் பேரியக்கத்தைச் சற்றும் கட்டுக் குலையாமல் நடத்திவரும் பேராளுமை கொண்டவர் அவர்.

நட்பா? கொள்கையா? என்றால் முதலில் எனக்கு கொள்கைதான் வேண்டும் என்று கூறுகிற, சமரசமற்ற நெஞ்சுரம் வாய்ந்த போராளி அவர்.

பெரியார் திடலில் இருந்து வெளியாகும் 'விடுதலை'க்கு 60 ஆண்டு காலம் ஆசிரியர் பொறுப்பு, மற்றும் 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' உள்ளிட்ட அனைத்து இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்று, இப்போதும் திறம்பட செயல்பட்டு வருகிறார் நம் ஆசிரியர். அவர் கவனமின்றி எந்தச் செய்தியும் பெரியார் திடலில் இருந்து வெளிவந்ததில்லை. பெரியார் அறக்கட்டளை மூலம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் கூட நம் ஆசிரியர் அவர்கள் திறம்பட இயக்கி வருகிறார்கள். பெரியார் விட்டுச்சென்ற பெரியார் திடலை, தமிழர்களின் கோட்டைக் கொத்தளமாக மாற்றிக்காட்டி இருக்கிறார் நம் ஆசிரியர்.

தமிழினப் போராளியான நம் ஆசிரியர் அவர்களின் கைவாள், சமூக விடுதலைக்காக மட்டுமல்ல; பத்திரிகை சுதந்திரத்திற்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் கூட சுழன்று கொண்டே இருக்கிறது.

குறிப்பாக, 'நியூஸ் க்ளிக்' ஊடகத்துக்கு மோடியின் பாசிச அரசு கொடுத்துவரும் கைது மற்றும் ரெய்டு நெருக்கடியைக் கண்டிக்கும் வகையில், அண்மையில் ஒரு போராட்டம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதும் இந்த 90 வயது கொண்ட போராளி, உற்சாகத்தோடு வந்து கலந்துகொண்டார். வழக்கம் போல் ஆதாரக் குறிப்புகளை கையில் வைத்துக்கொண்டு, தனது கர்ஜனை உரையை, கருத்துச் சுதந்திரத்துக்கான பாதுகாப்பு உரையை நிகழ்த்தினார். அது எல்லோரையும் வீறுகொள்ள வைத்தது.

நம் ஆசிரியர் அவர்கள் பத்திரிகை யாளராகவும் இருப்பதால், ஊடக சுதந்தரத்தின் மதிப்பை நன்கு அறிந்தவராக இருக்கிறார். நக்கீரனுக்கு சோதனைகள் வந்த போதெல்லாம் நமக்காகக் குரல் கொடுக்க அவர் தயங்கியதே இல்லை. ஒரே ஒரு நிகழ்வை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நிர்மலாதேவி விவகாரம் எல்லோருக்கும் தெரியும். அந்த நிர்மலா தேவியின் நெட் ஒர்க் 'ராஜ்பவன்' வரை நீண்டிருந்ததை, அப்போது நக்கீரன் அம்பலப்படுத்தியதால், அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு நக்கீரன் மீது கடும் கோபம் ஏற்பட்டது. உடனே நக்கீரனைப் பழிவாங்கத் துடித்தார்.

என் மீது தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்யும்படி அவர் அழுத்தம் கொடுத்தார். அன்று, டில்லியின் எடுபிடி அரசாக இருந்த எடப்பாடி அரசு, அவர் பேச்சைக் கேட்டு, இந்திய தண்டனைச் சட்டம் 124இன்படி என் மேல் வழக்கைப் பதிவு செய்தது. புனே செல்ல சென்னை விமான நிலையம் சென்ற என்னை, 2018 அக்டோபர் 8ஆம் தேதி, அங்கேயே வைத்து, ஒரு தீவிரவாதியை மடக்குவது போல் மடக்கிக் கைது செய்தனர்.

அன்றைய ஆட்சியாளர்களின் ஜால்ராக்களைத் தவிர, ஒட்டுமொத்த அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடகத்துறை முன்னோடிகளும் அப்போது நக்கீரனுக்காகக் குரல் கொடுத்தனர். அதோடு, போர்க்களத்தில் நிறுத்தப்பட்ட நக்கீரனுக்கு ஆதரவாக, அவர்களில் பலரும் உடன் இருந்தனர். பெரும் சட்டப் போராட்டத்தை நடத்தி, உலக அதிசயமாய் இந்தக் கடுமையான வழக்கில் இருந்து, கைதான அதே நாளே நான், வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டு வெளியே வந்தேன்.

விடுவிக்கப்பட்ட நான், வீட்டிற்கு செல்வதற்கு முன்பாகவே, அந்த நேரத்தில் என்னைத் தொடர்புகொண்ட நம் ஆசிரியர் அவர்கள் "கோபால், நாளைக்கு மாலை நம்ம பெரியார் திடலில் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா... வந்துடறீங்க” என்று அதிரடியாகச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். எனக்கோ திகைப்பு. இவ்வளவு மின்னல் வேகத்தில் ஒரு பாராட்டுக் கூட்டமா? என்று ஆச்சரியப்பட்டேன். அந்தப் பாராட்டு விழாவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன், இன்றைய நம் முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களையும் நம் ஆசிரியர் அவர்கள் அழைத்திருந்தார்.

அந்த விழாவில் பேசிய அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களும், ஆசிரியரின் செயல் வேகத்தைப் பாராட்டினார். அப்படிப் பாராட்டும்போது "கோபால் அவர்களைக் கைது செய்து, அதிலும் விமான நிலையம் சென்று கைதுசெய்து, ஒரு 10 மணி நேரத்தில் அவரை விடுதலை செய்திருக்கிறார்கள். பிறகு ஒருநாள் இடைவெளியில் நம்முடைய ஆசிரியர் அவர்கள் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆகவே எப்போதுமே ஒரு பிரச்சினை வருகிறபொழுது, திராவிடத்திற்கு, திராவிட இயக்கத்திற்கு, கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து வருகிறபோது, முதல் முதலில் குரல் கொடுக்கக்கூடிய இடத்தில் இருக்கக்கூடியவர்தான் நமது ஆசிரியர் அவர்கள் என்பது, எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்” -என்று ஆசிரியரின் செயல்வேகத்தைப் பாராட்டிவிட்டு, "எத்தனையோ பொடா தடாவைப் பார்த்த நம்முடைய கோபால் அவர்கள், எடப்பாடியைப் பார்த்தா பயந்துவிடப் போகிறார். ஜெயலலிதாவையே பார்த்தவர் அவர். அட்டைப் படத்தில் ஹிட்லரைப் போல் ஜெயலலிதாவை சித்தரித்தவர் அவர். ஆக ஹிட்லருக்கே பயப்படாதவர், இந்த ஜோக்கருக்கா (கவர்னர்) பயந்துவிடப் போகிறார்?" என்று என்னைப் பாராட்டிய படியே ராஜ்பவனுக்கும் ஒரு அடிகொடுத்தார்.

அந்த விழாவில் மைக் பிடித்த நம் ஆசிரியர் அவர்கள், கர்ஜிக்க ஆரம்பித்தார்...

“சில ஏட்டாளர்கள், வழக்கிலே இருந்து வெளியே வந்தால்போதும், ஆகவே பாராட்டெல்லாம் வேண்டாம் என்று பயப்படுகிற உணர்ச்சி உண்டு. ஆனால் இங்கே இருக்கிறவர்கள் துணிச்சலுக்குப் பேர்பெற்ற பத்திரிகையாளர்கள். சுதந்திரதைக் காப்பாற்றக் கூடியவர்கள். அந்த வகையிலே ஒரு பெரிய வரலாற்றையே உருவாக்கிவிட்டார் நம்முடைய சகோதரர் நக்கீரன் கோபால். அவர்கள், நக்கீரனை மட்டும் குறி வைத்தார்கள் என்று நினைக்காதீர்கள். பத்திரிகைச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தின் குரல்வளையையும் ஏன் அவர்கள் நெரிக்க வேண்டும்? அது ஜனநாயகத்தின் நான்காவது தூண். பத்திரிகை சுதந்திரத்திற்கு ஆபத்து என்றால், 'ஒன் பாயின்ட் புரோகிராம்' என்கிற அடிப்படையிலே, இன்றைய பாசிசத்தை வீழ்த்துவோம் என்பதற்கு அடையாளமாகத்தான் முதலில் நம்முடைய நக்கீரன் கோபால் அவர்களுக்கு இங்கே பாராட்டு விழா எடுக்கப்படுகிறது.

எவ்வித தியாகத்துக்கும் தயாராக இருக்கக் கூடிய சிறைப்பறவை அன்பிற்குரிய சகோதரர் நக்கீரன் கோபால் அவர்கள். இங்கே இருக்கிறவர்களோ, அல்லது நக்கீரன் கோபால் அவர்களோ, மற்ற பத்திரிகை நண்பர்களோ யாரும்... சிறைக்குப் போக பயந்தவர்கள் அல்ல! எல்லா வழக்குகளையும் சந்தித்தவர்கள், நாளைக்கும் சந்திக்க இருக்கிறவர்கள். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள பத்திரிகை சுதந்திரத்தைப் பறித்து மக்களாட்சியின் குரல்வளையை நெறிக்கும் வகையில், நக்கீரன் ஆசிரியர் கைது என்ற சூழ்ச்சி நிறைந்த வெள்ளோட்டம் நீதிமன்றத்தில் பெரும் வீழ்ச்சியுற்றது.

அந்த சூழ்ச்சி நிறைந்த வெள்ளோட்டம் ஜனநாயகத்தை அழிப்பது, இவர் மூலமாக பதம் பார்ப்பது, அது வீழ்ச்சி பெற்றது. அதாவது, ஆளுநர் மாளிகையில் குறிப்பிட்டபடி 124 இதற்கு எவ்வகையிலும் பொருந்தாது என்று நீதிமன்றம் ஏற்க மறுத்து... முழுப்பொறுப்பேற்க மறுத்தது. முழு பொறுப்பேற்க வேண்டியவர் ஆளுநர்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதோடு,

"எனவேதான் டில்லி இந்த ஆளுநரை உடனடியாக திரும்பி அழைக்க வேண்டும் என்று இந்த அரங்கம், அரசை வற்புறுத்துகின்றது. அரங்கத்தில் உள்ள எல்லோரும் எழுந்து நின்று, இந்த தீர்மானத்தை அருள் கூர்ந்து வழிமொழியுங்கள். இது முடிவல்ல துவக்கம் என்று சொல்லி ஜனநாயகத்தைக் காப்போம் பத்திரிகை சுதந்திரத்தைக் காப்போம். சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்.." என்று நம் ஆசிரியர் அவர்கள் முழக்க மிட்டுவிட்டு அமர்ந்தார்கள்.

இப்படியாக நம் ஆசியரின் போர்ப் பிரகடனத்தைக் கேட்டு எல்லோரும் சிலிர்த்துப் போனார்கள். அந்த உரை இப்போதும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படிப் பட்ட புலிப் பாய்ச்சலுக்குப் பெயர்தான் நம் ஆசிரியர்.

இப்படி, ஒரு பத்திரிகையாளரான நான் பாதிக்கப்பட்டதை சகிக்க முடியாமல், அந்த சதி முறியடிக்கப்பட்டதில் உளப் பூர்வமாக மகிழ்ந்து, உடனடியாக, விரைவாக, ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த நம் ஆசிரியர் அவர்களின் துணிவும், ஆற்றலும், வியக்கத்தக்க செயல் வேகமும் வேறு யாருக்கும் வராது.

இப்படிப்பட்ட ஒரு போராளியான நம் ஆசிரியர், தமிழ்ச் சமுதாயத்திற்குப் பாதுகாப்பு அரணாகக் கிடைத்திருப்பது பெருமைக்குரியது. தந்தை பெரியாரின் மறு வடிவமாக, நமக்குக் கிடைத்திருக்கும் நம் ஆசிரியர் அவர்கள் இன்னும் நெடுங்காலம் வாழ்ந்து, நமக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டும் என்று வணக்கத்தோடு வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment