டில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மக்களவைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 22, 2023

டில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மக்களவைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள்!

featured image

புதுடில்லி, டிச.22- காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘இந்தியா’கூட்டணி
அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், ஒன்றியத்தில் ஆளும் பாரதீய ஜனதா அரசை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் 4 ஆவது கூட் டம் டில்லியில் அண்மையில் நடைபெற்றது. நாடாளு மன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியை எப்படி முன்னெடுத்துச்செல்வது, கூட்டணி கட்சிகளின் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ளும் வகையில் நாடு முழுவதும் கூட்டு பிரச்சாரம் மேற்கொள்வது, விரைவில் தொகுதி பங்கீட்டை முடிப்பது உள்ளிட்டவை குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் உச்சபட்ச முடி வெடுக்கும் அதிகாரம் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டம் டில்லியில் நேற்று (21.12.2023) நடைபெற்றது கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார் ஜுன கார்கே, மேனாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட உயர்மட்ட தலைவர்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலங்கானாவை தவிர்த்து மத்தியப் பிரதே சம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங் களிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்த பிறகு, நடை பெற்ற முதல் காரிய கமிட்டி இதுவாகும். எனவே, இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப் பட்டது.

சாதகமான செயல்திட்டம்!
‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு, 4 மாநில சட்டமன்றத் தேர்தலின் தோல்விக்கான காரணங்களை ஆராய்வது. நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் அந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பிரன்கள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட பல விடயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் முன்னெடுத்த ஜாதிவாரிக் கணக் கெடுப்பு, அதானி விவகாரங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்காத நிலையில், பொதுத்தேர்தலில் பாரதீய ஜன தாவை எதிர்கொள்ள மாற்றுச் சாதகமான செயல்திட் டத்தை உருவாக்க காங்கிரஸ் தலைவர்கள் உறுதி பூண்டனர். காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளான டிசம்பர் 28ஆம் தேதி நாக்பூரில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பாடங்களை கற்றுக்கொண்டோம்
அதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தெலங்கானாவை தவிர்த்து மற்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளித்தன. அதே சமயம் அந்த மாநிலங்களில் பெற்ற வாக்குப் பங்கு போன்ற சில நேர்மறையான விடயங்கள், சரியாக கவனம் செலுத்தி னால் முடிவுகளை நிச்சயமாக மாற்ற முடியும் என்ற திட்டவட்டமான நம்பிக்கையை அளிக்கிறது. நாங்கள் செய்த தவறுகளிலிருந்து மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொண்டோம். அவற்றை மீண்டும் செய்யாமல் இருக்க உறுதி பூண்டுள்ளோம்.

பாரதீய ஜனதாவின் சதித் திட்டம்
நாடாளுமன்ற தேர்தல் வெகுதொலைவில் இல்லை. நமக்கு அதிக நேரம் இல்லை – வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடுதொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்பட 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் குறித்து உள் துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வெண்டும் என கேட்டதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்தது நாடாளுமன்றத்தை ஆளுங்கட்சிக்கான மேடையாக மாற்றும் பா.ஜனதாவின் சதித்திட்டத்தின் ஒரு பகுதி.

ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது
விவாதமே இல்லாமல், தன்னிச்சையாக முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி, ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் பாரதீய ஜனதாவை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதோடு தேர்தல் ஆணை யம் போன்ற அமைப்புகளை பாரதீய ஜனதா கையகப் படுத்த முயற்சிக்கிறது. அரசமைப்பு, நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தை பாரதீய ஜனதா அரசு ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு மல்லிகார்ஜூனே கார்கே கூறினார்.

No comments:

Post a Comment