பக்திப் பகல் வேடமும் ஒழுக்கக் கேடும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 4, 2023

பக்திப் பகல் வேடமும் ஒழுக்கக் கேடும்!

திமிங்கலத்தின் வயிற்று பகுதியில் உருவாகும் பழுப்பு நிற மெழுகு பொருள் திமிங்கல எச்சம் (அம்பர்கிரிஸ்) என்று அழைக்கப்படுகிறது. விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க அம்பர்கிரிஸ் பயன்படுத்தப்படு கிறது.

பன்னாட்டுச் சந்தையில் திமிங்கல எச்சத்திற்கு அதிக விலை கிடைக்கிறது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி திமிங்கல எச்சம் வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் பலர் திமிங்கல எச்சத்தை கடத்தி வருகின்றனர். 

அதனை தடுக்க வனத்துறையினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சூரில் திமிங்கல எச்சம் கடத்திய 3 பேர் காவல்துறையினரின் சோதனையில் சிக்கினர். திருச்சூர் நகர பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந் தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ எடையுள்ள திமிங்கல எச்சம் இருந்தது. அதனை பாஜின் (வயது31), ராகுல்(26), அருள்தாஸ்(30) ஆகிய 3 பேர் காரில் கடத்திக் கொண்டு சென்றனர். அதனை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக அவர்கள் கடத்திக் கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து திமிங்கல எச்சத்தைக் கடத்திக் கொண்டு சென்ற 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 5 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று கைதானவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமிங்கல எச்சத்தை கடத்தியவர்கள், காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காகவும், அய்யப்பப் பக்தர்கள் வேடத்தில் இருமுடி கட்டிக்கொண்டு காரில் வந்திருக்கின்றனர். அய்யப்பப் பக்தர்கள் வேடத்தில் வந்தால் காவல்துறையினர் பிடிக்கமாட்டார்கள் என்று நினைத்தனர்.  இருந்தபோதிலும் கடத்தல்காரர்கள் காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

சட்டவிரோத நடவடிக்கைகளாகப் போதைப்பொருள் கடத்தல், விலை உயர்ந்த பொருட்கள் கடத்தல், பிச்சை எடுக்க சிறுவர் சிறுமிகள் கடத்தல் போன்றவை அய்யப்பப் பக்தர்கள் சீசன் எனப்படும் அய்யப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து செல்லும் நாட்களில் நடக்கிறது என்று 10 ஆண்டுகளாக ஆய்வறிக்கை தொடர்ந்து வெளிவருவது குறிப்பிடத்தக்கது ஆகும் 

நவம்பர் 26 ‘விடுதலை' ஞாயிறுமலரில் ஆசிரியரிடம் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும்:

கேள்வி 1: சபரிமலை சீசனில் அதிகம் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகக் கூறி பல்வேறு தடை போட்டார்கள் (Check drug trade in Sabarimala: Panel 'டைம்ஸ் ஆப் இந்தியா ரிப்போர்ட்' OCTOBER  30, 2001) தற்போது மீண்டும் விமானத்தில் இருமுடியைக் கொண்டுசெல்ல இருந்த தடையை விலக்கி உள்ளார்கள். கடத்தல்காரர்கள் திருந்திவிட்டார்களா? 

பதில் 1: மில்லியன் டாலர் கேள்வி இது!

பக்தி என்பது பகல் வேடம் என்று கருப்புச் சட்டைக் காரர்கள் சொன்னால் கோபப்படும் பக்த சிரோன்மணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

12 வருடம் பாவம் செய்தவர்கள் கும்பகோணம் மகாமகக் குளத்தில் மகாமகத்தன்று முழுக்குப் போட்டால் பாவம் ஒட்டுமொத்தமாகப் போயே போய்விடும் என்ற பக்திப் பரப்பப்பட்டுள்ள நாட்டில் எந்த ஒழுக்கக் கேட்டையும், மோசடியையும் கள்ளக் கடத்தலையும் தான் செய்யத் தயங்குவார்கள்?

பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச் சொத்து என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை எண்ணிப் பாருங்கள்.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பக்தனுக்கு மோட்சம் கொடுக்கப்பட்டதாக புராணம் எழுதப்பட்டுள்ள நாட்டில் என்னதான் நடக்காது?

No comments:

Post a Comment