வென்றோம் - நின்றோம் - புதுப்பிப்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அய்யா நினைவு நாள் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 24, 2023

வென்றோம் - நின்றோம் - புதுப்பிப்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அய்யா நினைவு நாள் அறிக்கை

featured image
வென்றோம் – நின்றோம் – புதுப்பிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
இன்று (24.12.2023) ‘‘தந்தை பெரியார்” என்று வற்றாத பாசத்தோடும், வறளாத உணர்வோடும் கோடானுகோடி மனிதர்கள் அழைத்து மகிழும் நமது அறிவாசான் தலைவர் உடலால் மறைந்தாலும், உணர்வால், லட்சியங் களால் உலகின் பற்பல பாகங்களிலும் பகுத்தறிவுக் கலங்கரை வெளிச்சமாய், சுயமரியாதை ஞானச் சூரியனாய் ஒளிபரப்பிடும் வரலாற்றுக் குறிப்புகளுடன் வாழ்ந்து கொண்டுள்ளார்!
ஓர் அரை நூற்றாண்டு – அய்ம்பது ஆண்டுகள் – உருண்டோடிய நிலையிலும், அவர்தம் கொள்கைப் பாய்ச்சல் தணியாத வேகத்தோடு, தன்னிகரற்றுப் பயணித்து, வெற்றி வாகை சூடுகிறது!
உருவத்தால் அவரை அருகில் நெருங்கி, பார்க்காத பல தலைமுறையினர் – அவருடைய கொள்கை லட்சியங்களை சுவாசித்துப் பயனடைகின்றனர்!  நன்றியை எதிர்பார்க்காத அந்த நாயகனின் மண்டைச் சுரப்பை தமது பேராயுதமாகக் கொண்டு, பொல்லாங்கு களைப் பொடிபடச் செய்கின்றனர்!
விசித்திரமான தனித்தன்மை கொண்ட தன்னிகரற்ற தலைவர் அவர்!
மானுடம் காத்த மருத்துவர்!
வாழ்ந்த போது தன் வலிகளைப் பொருட்படுத்தாது, சமூகத்தின் வலி தீர்க்கவே ‘மானுடம்’ காத்த மருத் துவராகியவர் அவர்!
அவர் பாதை செறிவானது!
அவரது லட்சியம் விரிவானது – என்றும் தோற்காது!!
காரணம், மானுடத்தின் மாண்பு நோக்கியது!
மனிதம் எங்கும் தழைக்கச் செய்வது –
விசாலப் பார்வை கொண்ட தத்துவ கர்த்தர் அவர் என்றும்!
எதிர்நீச்சல் அவருக்கு வாடிக்கை –
எண்ணற்ற ஏளனங்கள் – அவருக்கு சாதாரண வேடிக்கைகள்தான்!
இவரது ஒப்பற்ற சுயசிந்தனை, புது உலகைக் கண்டது!
‘பேசு சுயமரியாத உலகு’ என்று அதற்குப் பெயர் கொண்டது!
சமத்துவமும், சுயமரியாதையும், பகுத்தறிவு படைக் கலன்களாக்கி, உரிமைப் போரின் களங்களில் பாதிக்கப்பட்டோரை நிறுத்தி, பாதகங்களை பனிபோல் உறையச் செய்து, விரட்டிய வித்தகர்!
அவர் பேசினார் – எழுத்தறியாத மக்களிடையே –
அவர் எழுதினார் – எழுத்தறிவைக் கற்றுத் தருவதில் வெற்றி பெற்ற நிலையில்!
அவர் களங்கண்டார் – உரிமைகளை வென்றெடுக்க!
அவரே அனைத்துக்கும் தலைமையேற்ற ஆற்றலின் தொகுப்பாளர்!
உலகம் பெரியார் மயமாகும்!
தனக்குப் பின்னாலும் தள்ளாடாத இயக்கம், தடு மாறாத கொள்கை, தரணி பாராட்டும் தொண்டர்கள் கொண்ட இயக்கத்தை – பதவி நாடா, புகழ் தேடா, நன்றியை எதிர்பாரா தொண்டறத் தூய தனித் துறவிகளுக்குரிய பாசறையாக்கினார்.
50 என்ன?  100, 500 ஆண்டுகளானாலும்
‘‘உலகம் பெரியார் மயமாகும் –
பெரியார் உலகமயமாவார்!”
இது வெறும் கனவு அல்ல; விஞ்ஞான விதி – சட்டம்.
வெற்றி நமதே, எந்த விலையும் கொடுக்கும் உறுதியும் நமதே!
கடந்த 50 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் அவர் உடலால் இல்லாவிட்டாலும், அவரது கொள்கைப் பயணம் தொடர்கிறது!
இனிவரும் உலகெங்கும் – அவர் என்றும் நம் அறிவு வெளிச்சம் – என்று உறுதியுடன் பணி தொடருவோம்!
சூளுரைப்போம் – சுயமரியாதை மறந்தவர்களுக்கு சூடேற்றுவோம்!
ஒடுக்கப்பட்ட மக்களை என்றும் ஈடேற்றுவோம்!
மானுடத்தின் மானமும், அறமும் காப்போம்!
அய்யிரண்டு திசைமுகத்தும் ஓரணியில் அதே பணி என்று – சூளுரைத்துப் பணி தொடருவோம் – பாதை மாறாமல்!
தந்தை பெரியார் வாழ்க்கை முடிந்து 50 ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில், அவரது லட்சியங்கள் கொள்கைகளின் – சுற்றுப்பயணம், இந்தியா, தென் கிழக்காசியா தாண்டி உலக சுற்றுப்பயணத்தினை வெற்றிகரமாகச் செய்து கொண்டுள்ளது!
பெரியார் உலகமயமாகிறார்,
உலகம் பெரியார்மயமாகி வருகிறது
பெரியார் என்பது தனிமனிதம் அல்ல,
தோற்கடிக்கப்படமுடியாத தத்துவம்.
சமூக விஞ்ஞானம் – மானுடத்தேவை
எப்போதும் போல் இப்போதும் அது அறைகூவலைச் சந்தித்து எதிர்நீச்சலில் அயராமல் ஈடுபடுகிறது!
வருண பேதங்களை வற்புறுத்தும் ஹிந்துத்துவ ஹிந்தியாவை மாற்றியமைத்து – பேதமில்லா பெரு வாழ்வுக்கு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று தரும் திராவிட இந்தியாவை உருவாக்கி புதியதோர் வெளிச்சம் பெரியார் தர போராட சூளுரைப்போம். சுயமரியாதை நெறி பரப்புவோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
24.12.2023

No comments:

Post a Comment