பெரியார் புத்தாயிரத்தில் நாவலர் நெடுஞ்செழியன் இறுதி உரை (31-12-1999) - த.மு.யாழ் திலீபன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

பெரியார் புத்தாயிரத்தில் நாவலர் நெடுஞ்செழியன் இறுதி உரை (31-12-1999) - த.மு.யாழ் திலீபன்

featured image

நடமாடும் பல்கலைக்கழகம் என்று பலராலும் பாராட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இறுதியாக உரையாற்றியது பெரியார் திடலில் – திராவிடர் கழகம் நடத்திய பெரியார் புத்தாயிரம் விழாவில் தந்தை பெரியாரை பற்றி பேசியது தான். ஒரு பெரியார் தொண்டனுக்கு இறப்பதற்கு பத்து நாட்கள் முன்பு கூட பெரியாரைப் பற்றி பேசிவிட்டு தான் இறந்தான் என்பதைத் தவிர வேறு பெருமை உண்டா. அந்த பெருமைக்கு சொந்தக்காரர் நாவலர் நெடுஞ்செழியன்.

பெரியார் புத்தாயிரத்தில் நாவலர் அவர்கள் பேசுகையில், தந்தை பெரியார் பேசுகிற பகுத்தறிவை எவரால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றால், “ அதை ஏற்க திட உள்ளம் வேண்டும். உறுதி மிக்க உள்ளம் வேண்டும். எது மூடநம்பிக்கை? எது குருட்டு பழக்கவழக்கம்? அதனால் ஏற்படுகிற விளைவு என்ன என்பதை கூர்ந்து ஆராய்ந்து பார்த்து பகுத்து உணர்கின்ற தன்மை யாருக்கு ஏற்படுகிறதோ அவர்கள்தான் பகுத்தறிவை பற்றி சிந்திப்பார்கள், ஏற்றுக்கொள்வார்கள்’ அதை சிந்திக்காதவர்கள் பகுத்தறிவை பற்றி சிந்திக்க மாட்டார்கள் என்று மிக தெளிவான கருத்தை கொண்டிருந்தார்.

பெரியார் என்ன செய்தார் ? யாருக்கு செய்தார் ? எங்களுக்கா செய்தார் ? என்று வரலாறு தெரிந்தும் உளறிக் கொண்டிருக்கும் பார்ப்பன அடிமைகளுக்காய் நாவலர் சொல்கிறார். ” பெரியார் அவர்கள் அறிவுக்கு மதிப்பு தர வேண்டும், ஆற்றலுக்கு மதிப்பு தர வேண்டும், உழைப்புக்கு மதிப்பு தர வேண்டும், உண்மைக்கு மதிப்பு தர வேண்டும், ஒழுக்கத்திற்கு மதிப்பு தர வேண்டும், அன்புக்கு மதிப்பு தர வேண்டும், மனிதனுக்கு மதிப்பு தர வேண்டும், மனித முயற்சிக்கு ஊக்கம் தர வேண்டும், மனித முயற்சிகளினால் நடைபெறுகிற செயல்களுக்கு பாராட்டுத்தர வேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே தான் தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுக்க பாடுபட்டார் ” என்று உரைக்கிறார் நாவலர். இதை யாருக்காக பாடுபட்டார் என்று எப்படி சொல்வது? பெரியாரின் உழைப்பு மனித குலத்திற்கான உழைப்பாக எப்போதும் முடிவது அவரின் இயல்பாகிப் போகிறது என்பதே உண்மை.
“ஆவதறிவார் அறிவுடையார்” என்று உரைத்த வள்ளுவன் குறளை கி.வீரமணி குறிப்பிட்டு பேசினார். ஆம். பின்னால் என்னென்ன ஆகும் என்பதை அறிந்து அறிவியல் துறையிலே, தொழில்நுட்பத் துறையிலே, வாழ்வியல் துறையிலே முன்னறிந்து அதன் நிலையைச் சொன்னவர் பகுத்தறிவு பகலவன். ஆண் பெண் சேர்க்கை இல்லாமலே கூட குழந்தைகள் பெற முடியும் என கருத்து சொன்னார். “மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பதை வலியுறுத்தினார். அதனால்தான் 1924 – 1925லேயே பச்சை அட்டை குடியரசு ஏட்டில் “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்னும் குறளையே முதல் பக்கத்தில் அச்சிட்டார்.

“எப்பொருள் எத்தன்மையாயினும்” என்ற பகுத்தறிவு தன்மையில்லாததனால் தான் குரானில் இருப்பதால் அதை நம்புகிறேன், பைபிளில் இருப்பதினால் அதை நம்புகிறேன், பகவத் கீதையில் இருப்பதனால் அப்படியே நம்புகிறேன் என மக்கள் சிந்திக்கும் தன்மையை இழக்கிறார்கள். ஆராய்ச்சி தன்மையின் விளைவாக வருவதே அறிவியல் வளர்ச்சி – தவிர ஆண்டவனால் அல்ல – என்பதை ஆதாரப்பூர்வமாக அடுக்கினார் நாவலர்.
ஆண்டவனா ஒலிபெருக்கியை கண்டுபிடித்தான்?
ஆண்டவனா ஏவுகணையை கண்டுபிடித்தான்?
கடவுளா பென்சிலினை கண்டுபிடித்தான்?
இதையெல்லாம் சிந்தித்த மனிதன் செவ்வாய் கோளுக்கு செல்கிறான். சிந்திக்காமல் இருக்கும் மனிதன் செவ்வாய் தோஷம் என்கிறான். இந்த நிலை மாறத்தான் நாம் அறிவு மழுங்காமல் இருக்கத்தான் பெரியார் தேவை என்றார்.
“அறிவை பயன்படுத்தி தான் ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகள் வளர்ந்தன. நமது நாடும் அறிவை பயன்படுத்தி வளர வேண்டும் என்பதற்காகத்தான் பெரியார் அவர்கள் அறிவுக்கு மதிப்பு தாருங்கள், அதற்கு ஆக்கம் தாருங்கள் ” என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.

தந்தை பெரியாரின் கொள்கை பரவுதல் வேண்டும்
பெரியார் அவர்கள் 95 வயது வரை நாடு, நகரம், பட்டி, தொட்டி எங்கும் சுற்றிச் சுழன்று வந்து, இந்த நாட்டு மக்களுக்கு அறிவை உருவாக்கி அவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என்று கருதினார். எப்படி எல்லாம் சிந்திக்க வேண்டும் என்பதை பெரியார் கூறுகிறார் என்று நாவலர் சொல்கிறார், “படிக்க முடியாவிட்டாலும் ஆராய முடியாவிட்டாலும் சொற்களைக் கேட்டு சிந்திக்க வேண்டும்” என்று சொல்கிறார். எப்படியாவது சிந்தித்துக்கொள், விழித்துக் கொள். சிந்திக்க மறுதலித்து விடாதே என்பதுதான் தந்தை பெரியாரின் நோக்கம். பகுத்தறிவு நெறி தான் பண்பட்ட நெறி. பண்படுத்தக்கூடிய நெறி, நேரத்தை வீணாக்காத நெறி, மனிதனுடைய நேரத்தையும், உழைப்பையும் பயன்படுத்து வதற்குரிய நெறி, வேறு வகையில் போகுமேயானால் நாடு பாழ்படும், சமுதாயம் பாழ்படும். அதையெல்லாம் நீக்குவதற்கு பெரியாருடைய கொள்கைகள் பரவுதல் வேண்டும்.
“வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்
விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும்
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்; பெரியார்தம்
புகழ் சொல்லி வாழ்த்த வேண்டும்; அறிஞர்
அண்ணா புகழ் சொல்லி வாழ்த்த வேண்டும்”
என்று பெரியாரின் கொள்கையை பறைசாற்றி முழங்கி முடித்தார் நாவலர் நெடுஞ்செழியன். அதுவே அவரின் இறுதி முழக்கமாக அமைந்தது.
வாழ்க நாவலர் நெடுஞ்செழியன் !
வெல்க அவர்கண்ட பெரியார் கொள்கைப் பரவல்!

 

No comments:

Post a Comment