மதபோதையும் - கார்ப்பரேட் கொள்ளையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 25, 2023

மதபோதையும் - கார்ப்பரேட் கொள்ளையும்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்து, கிறிஸ்துவம், இசுலாம் என அனைத்து மதத்தினருக்கும் ஏராளமான மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்த மத வழிபாட்டுத் தலங்கள் முன்பு உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தியது, ஆனால் தற்போது கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கூடாரமாக மாறிவிட்டது.

மத சுற்றுலாவுக்கான பயண செலவு, உணவு, பொருட்கள் வாங்குவது, மதத் தலங்களில் நன்கொடை செலுத்துவது என்று லட்சக்கணக்கான மத வழிபாட்டுத் தலங்களால் பெரிய பண பொருளாதாரம் நடைபெறுகிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்களின்படி, நம் நாட்டில் மொத்தம் 33 கோடி கட்டடங்கள் உள்ளன. இதில் 21.6 கோடி கட்டடங்கள் குடியிருப்புகளாக உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

நாடு முழுவதுமாக மொத்தம் 30 லட்சம் மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை காட்டிலும் அதிகமாகும். நம் நாட்டில் சராசரியாக 40 பேருக்கு ஒரு மத வழிபாட்டுத் தலம் உள்ளது. இது பள்ளிகள், காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பிற சமூக குறிகாட்டிகளை விட மிக அதிகம்.

நம் நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அந்த மாநிலத்தில் 3.54 லட்சம் மதத் தலங்கள் உள்ளன. அடுத்ததாக இரண்டாவது இடத்தில் 2.78 லட்சம் மத வழிபாட்டுத் தலங்களுடன் மும்பை உள்ளது. மேற்கு வங்கம் 2.57 லட்சம் தலங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மதத்தின் மூலம் பணம் பார்க்கும் கூட்டத்தினர் பரப்பும் கட்டுக்கதைகளை நம்பி மக்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்வார்கள். 2024 ஜனவரியில் ராமர் கோயில் திறக்கப்பட்டவுடன் அயோத்திக்கு 10 மடங்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கணித்துள்ளார். அது நிச்சயமாக சாத்தியமான ஒன்றுதான். இதற்கான தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது.

அதற்கு சோதனை மய்யமாக வாரணாசி காசி விஸ்வநாத் கோயிலை எடுத்துக்கொண்டனர். அந்த கோயில் புனரமைக்கப்பட்ட பிறகு 2021இல் 7.3 கோடி மக்கள் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மட்டுமே அந்த கோயிலுக்கு சென்று இருந்தனர். 2022இல் அந்த கோயிலுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததோடு, கோயில் நன்கொடையும் 500 சதவீதம் உயர்ந்து ரூ.100 கோடியாக உயர்ந்தது.

2017இல் என்.எஸ்.எஸ்.ஓ. வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் மத வழிப்பாட்டு தலங்கள் சார்ந்த நாட்டின் சுற்றுலாப் பொருளாதாரம் ரூ.3.02 லட்சம் கோடி மதிப்புடையது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.32 சதவீதமாகும்.

அதேசமயம் உண்மையில் மத சுற்றுலா சார்ந்த பொருளாதாரம் இதனை காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். ஏனென்றால் மத சுற்றுலா முழுக்க முழுக்க தனியார் முதலாளிகளின் விற்பனை சந்தையாக நடக்கிறது. அடுத்து ஏராளமான மதம் சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகள் கணக்கில் வரவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு மதத்தலங்களில் உள்ளூர் மக்களின் வணிகம் செழித்து இருந்தது, ஆனால் தற்போது எங்கோ இருக்கும் கார்ப்பாரேட்டுகள் தான் மதத்தலங்களில் குண்டூசி முதல் தங்கம் வரை விற்பனையை கட்டுப்படுத்துகின்றனர். 

எங்கோ இருந்து கட்டுப்படுத்தும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களால் அவர்களின் பொருட்களை மக்களிடையே சேர்க்கும் நபர்களுக்கும் எந்தவொரு பணி பலன்களும் கிடைப்பதில்லை. சுற்றுலா அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, நம் நாட்டில் 2022இல் வழிபாட்டுத் தலங்கள் ரூ.1.34 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளன. இது 2021இல் ரூ.65,070 கோடியாக இருந்தது. வழிபாட்டுத் தலங்களின் வருவாய் கோவிட்டுக்கு முந்தைய அளவை இன்னும் ஈட்டவில்லை என்றாலும் மீட்பு வலுவாக உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

நம் நாட்டில் மத பயணங்கள் மட்டும் அதிகரித்து வரவில்லை, மத அமைப்புகளுக்கு குடும்பங்கள் அளிக்கும் நன்கொடையும் உயர்ந்து வருகிறது. 2021-2022ஆம் ஆண்டில் மத அமைப்புகளுக்கு இந்திய குடும்பங்கள் நன்கொடையாக மொத்தம் ரூ.27,000 கோடி வழங்கியுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும 14 சதவீதம் அதிகமாகும். இது, 2020-2021ஆம் ஆண்டில் ரூ.23,700 கோடியாக இருந்தது

மக்களின் பணப்புழக்கத்தை கண்டுகொண்ட கார்ப்பரேட்டுகள் அவர்களை மேலும் மேலும் மதப் போதையில் ஈடுபட பல மதவழிபாட்டுச்சேனல்கள் துவக்கியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 17 மதம் தொடர்பான சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளது, இதுவரை மதம் தொடர்பான சேனல்களுக்கு மட்டுமே சுமார் 17000 கோடிகள் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது, ஒரு சேனல் துவங்கி 20 கோடி வரை செலவிடப்படுகிறது, அலுவலகம் இதர உபகரணங்கள் என பார்க்கும் போது ஒரு சேனலுக்கு குறைந்த பட்சம் 50 கோடி முதல் அதிகபட்சம் 100 கோடி வரை செலவு செய்யப்படுகிறது. 

இந்தச் சேனல்கள் நடத்தும் நிறுவனங்கள் பங்குவர்த்தகத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது, இதற்கான பங்குகள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொழிலதிபர்கள் மூலம் பெறப்படுவதாக வணிக இதழ்கள் கூறுகின்றனர்,  எந்த ஒரு விளம்பரமும் இன்றி இரவும் பகலும் வெறும் பஜனைகளையும், சாமியார்களின் பிரசங்கங்களையும் பார்ப்பனர்களில் கோவில்கள் பற்றிக்கூறும் எந்த ஒரு சான்றுகளும் இல்லாத கட்டுக் கதைகளை மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. இவற்றைக்காண்பதற்கு பெரும் மக்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக சமூகவலை தளங்களில் பெருவாரியான கருப்புப் பணமே மதவழிபாடு தொடர்பான சேனல்களில் முதலீடு செய்யப்படுகிறது என்று பரவலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 ஒருபுறம் கருப்புப்பணம் வெள்ளையாக மாற்ற முதலீட்டுத்தளமாக விளங்கும் மதம் சார்ந்த சேனல்கள், மறுபுறம் மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை இந்த சேனல்கள் மூலம் மூடநம்பிக்கையை விதைத்து ஆன்மிக பயணம் என்ற பெயரில் செல்லும் மக்களின் உழைப்பை மட்டுமல்லாது சுற்றுலாவையே நம்பியுள்ள உள்ளூர் மக்களின் உழைப்பையும் சுரண்டி ஒருசில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே கொழுத்து செழித்துவருகிறது.

No comments:

Post a Comment