மாற்றம் ஒன்றே மாறாதது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

மாற்றம் ஒன்றே மாறாதது

"மாற்றம் ஒன்றே மாறாதது" என்பது இயற்கையின் நியதி. உலகில் காணும் அனைத்துத் தொழில் வளங்கள், அறிவியல் முன்னேற்றம் யாவும் சிந்தனை மாற்றங்களால் உருவானவையே. மனிதனின் இன்றைய மேம்பட்ட வாழ்வியல் யாவும் மாற்று யோசனையின் மலர்க் கூட்டமே,

மிதமான நாகரிக வாழ்க்கையில் மன நிறைவுடன் வாழ்ந்து வந்த மனிதனை 16ஆம் நூற்றாண்டு தொழில் புரட்சி புரட்டி போட்டதன் விளைவு இன்று தரையிலும் கடலிலும், வானிலும் நடக்கும் மின்னல் வேகப் பயணங்களால் பிரமித்துப் போய் நிற்கிறோம். வான் வெளியை வளைத்துப் போட்டு சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா என்று சடுகுடு ஆடிக்கொண்டிருக்கிறோம்.

இப்படி மாற்றங்களால் மாறிவரும் உலகின் ஒரு மூலையில் உள்ள ஒரு சிறு கூட்டம் மட்டும் - வாழ்வியல் தத்துவம் மாற்ற முடியாதது, மாற்றக் கூடாதது; அப்படியே அறியாமையில் கிடக்க வேண்டும்  - என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது. பூமியின் சுழற்சி வேகத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படலாம் என்றாலும் அவர்களுடைய அடிமனத்து ஆசை வெட்கித் தலை குனிய வைக்கிறது.

கைபர், போலன் கணவாய்கள் வழியே வந்த இந்த வந்தேறிக் கூட்டம் மேம்பட்ட நாகரிக வாழ்க்கை வாழ்ந்து வந்த இந்த திராவிட மக்களின் வாழ்க்கை முறை கண்டு பொறாமை கொண்டது.

அவர்களுடைய செல்வச் செழிப்பைத் தாம் கைப்பற்றிக் கொள்வதற்கான திட்டம் தீட்டி தந்திரங்களை மேற்கொண்டார்கள். எப்போதும் பல ஊர் சுற்றி வந்தவர்கள் பலவிதமாக ஏய்க்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். வேடிக்கைக் காட்டுவது போன்று சில செயல்களைச் செய்து காட்டி அவர்களுடைய கவனத்தை ஈர்த்து யாகம், பூசை, வேள்வி எனச் செய்து காட்டி சுகபோக சொர்க்க வாழ்க்கை இருப்பதாக நம்ப வைத்தார்கள். அதற்காக அறமற்ற வழிகளில் அதிகார மய்யங்களை அணுகி ராஜ குருவாக மாறினார்கள். அந்த அதிகாரத்தை அப்படியே நிலை நிறுத்திக் கொள்ள சில சட்ட வழிமுறைகளை உருவாக்கி வேதங்கள், ஸ்மிருதிகள் எனப் பெயரிட்டு அவற்றை மீறாமல் வாழ்வதே ஸநாதன தர்மம் என்று அமைத்துக் கொண்டார்கள். அந்த ஸநாதனத்தை விளக்கும் வகையில் காசி இந்துக்கல்லூரி பண்டிதர்கள் ஒன்று கூடி  Sanathana Dharma an advanced Text book of Hindu Religion and Ethics என்ற பெயரில் ஒரு நூலாக 1903இல் வெளியிட்டனர். அதை நாராயண அய்யர் என்பவர் 1905இல் தமிழில் வெளியிட்டார்.

அந்த நூலின்படி ரிக், யசூர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்களின் அடிப்படையில் மனிதன் வாழ வேண்டும். மநு, பராசரர், சந்திரிகை, யக்ஞவல்கியர், நாரதர் போன்றோரின் கருத்துகளை வரைமுறையாக ஏற்று மக்கள் வாழவேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. அவற்றுள் மநுஸ்மிருதி கூறுவது என்ன வென்றால், "இவ்வுலகம் கடவுளுக்கும், கடவுள் மந்திரங்களுக்கும், மந்திரம் பிராமணனுக்கும் கட்டுப்பட்டது. பிரம்மனுடைய முகத்தில் பிராமணனும் தோளில் சத்ரியனும் தொடையில் வைசியனும், காலில் சூத்திரனும் பிறந்தார்கள். எனவே அனைவரையும் விட பிராமணனே உயர்ந்தவன். கடவுள் முதற்கொண்டு அனைவரும் அவனுக்குக் கட்டுப்பட்டவர்களே."

அடுத்துள்ள சத்ரியன் நாட்டைப் பாதுகாக்கவும், வைசியன் வணிகம் செய்து செல்வம் பெருக்கவும் படைக்கப்பட்டார்கள். காலில் பிறந்த சூத்திரன் மற்ற மூன்று வருணத்தார்க்கும் ஊதியம் கேட்காமல் பணிவிடை செய்ய வேண்டும்.

சூத்திரனுக்கு செல்வம் சேர்க்கவோ, கல்விகற்கவோ உரிமை இல்லை. திருமணம் செய்து கொள்ளக் கூட உரிமை இல்லை. அதன் அடிப்படையில் தான் இப்போது கூட நம்மவர்க்கு தற்காலிக பூணூல் அணிவித்து அந்தக் கொஞ்ச நேரம் பிராமணனாக்கி பார்ப்பனர் திருமணம் செய்து வைக்கிறார்.

மரண தண்டனை என்றால் கூட பிராமணர்க்கு ஒரு விதம்; சூத்திரனுக்கு வேறுவிதம். அதாவது பிராமணன் தலை முடியிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கினால் போதும், ஆனால் சூத்திரனுக்கு தலையைத் தனியே துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும். அதாவது அவன் மயிரும் இவன் உயிரும் சமம் என அந்த தர்மம் கூறுகிறது. இப்படி ஜாதிக்கொரு நீதி கூறுவது தான் மனுநீதி எனும் ஸநாதனம்.

பெண்களுக்குக் கல்வியுரிமையோ சொத்துரிமையோ கிடையாது. அம்பேத்கர் அரசியல் சட்டம் எழுதும் போது பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப் பரிந்துரைத்தபோது காஞ்சி சங்கர மடத்திலிருந்து பெண்களுக்கு சொத்துரிமை தரக்கூடாது எனக் கூறி குடியரசுத் தலைவருக்குத் தூது அனுப்பப்பட்டது - இதுதான் ஸநாதனம்.

ஸநாதன தர்மத்தில் பெரிதும் பாதிக்கப் பட்டவர்கள் ஆரியப் பெண்களும்தான். உடன் கட்டை ஏற்றுதல், குழந்தைத் திருமணம், விதவையானால் மறுமண மறுப்பு எனப் பல கொடுமைகள் நடந்தன. பார்ப்பானைத் தவிர பார்ப்பன பெண்கள் உள்பட பிற அனைவர்க்கும் தீங்கு செய்யக் கூடிய இந்த ஸநாதன தர்மத்தை மலேரியா, டெங்குவைப் பரப்பும் கொசுக்களைப் போல் ஒழிக்க வேண்டும் என மானமிகு சுயமரியாதைக்கார குடும்பத்து வீரிய வித்து ஒன்று கூறிவிட்டதாக ஓலமிடுகிறார்கள்.

என்றென்றும் இந்தப் பார்ப்பனர்க்கு அடிமையாக இருந்து கொண்டு, ஜாதீய அடுக்கு முறையை ஏற்றுக் கொண்டு இவர்கள் கற்பித்த 'சடங்கு சம்பிரதாய'ங்களில் நம் உழைப்பையும் செல்வத்தையும் இவர்களிடம் இழந்து கொண்டு, இவர்களை விட அனைத்திலும் தாழ்ந்தவனாக கல்லாமை, தீண்டாமை, காணாமை போன்றவற்றை அனுபவித்துக் கொண்டு, பழைமை மாறாமல் அப்படியே வாழ வேண்டும் என்கிற கருத்தை நம் மூளையில் பதியம் போட்டு நம் கால்களைக் கட்டிப் போட்டு ஜாதிக்கொரு நீதி சொல்லும் இந்த ஸநாதனத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென எவனாவது கூறினால் அவனுக்குக் காலில் உள்ளதைக் கழட்டிக் காட்ட வேண்டாமா?

- பொதட்டூர் புவியரசன்

நன்றி: பாசறை - நவம்பர், திசம்பர், 2023


No comments:

Post a Comment