உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரி, உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு தொடர்ந்து தொடர் முழக்கக் கூட்டங்களை நடத்தி வருகிறது. நவம்பர் 1, 8, 17, 24 ஆகிய நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்துகிறது.

தமிழ்நாட்டில் உள்ள உச்ச அதிகாரம் படைத்த உயர்நீதி மன்றத்தில் இப்படி ஒரு போராட்டம் நடத்துவதே வெட்கக் கேடானதாகும்.

இதுகுறித்து திராவிடர் கழகமும், 'விடுதலை' ஏடும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இன்றைக்கு 67 ஆண்டுகளுக்கு முன் "நீதிமன்றத்திலும் தமிழ்" என்ற தலைப்பில் திராவிடர்களின் உரிமைப் பே(£)ராயுதமாம் விடுதலை தலையங்கமே தீட்டியுள்ளது. (1.9.1956).

அந்தத் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு பகுதி இதோ:

"முதலமைச்சர் திரு. காமராசர் அவர்கள் நேற்று மாலை சட்டக் கல்லூரித் தமிழ் இலக்கியச் சங்கத்தைத் திறந்து வைத்து பேசுகையில், தமிழ்நாட்டின் நீதிமன்றங்களிலும், தமிழிலேயே நடவடிக்கை நடக்கப் போகிறது. இக்கல்லூரி மாணவர்கள் இப்போதே தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மகிழ்ச்சிக்குரிய செய்தி இது. வைத்தியம், எஞ்சினியரிங் போன்ற விஞ்ஞானத் துறைகளில் தமிழர் உடனடியாக நுழைய முடியா விட்டாலும், சட்டத்துறையிலாவது நுழைவது   அவசரமும் ஆகும். ஏனெனில்  நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடக்குமானால் ஏழை எளிய மக்களில் பலர் இன்றைய பட்டதாரி வக்கீல்களைக் காட்டிலும், பல மடங்கு திறமையாக சட்ட நுணுக்கங்களை எடுத்துக் காட்டி, வாதாடுவர் என்பதில் அய்யமில்லை. இன்றைய வக்கீல் உலகம் கொழுத்த பணம் சம்பாதிப்பதற்குக் காரணம் சட்டப் புத்தகங்கள் இங்கிலீஷில் இருக்கிற ஒரே காரணம். தவிர வேறல்ல. இவைகளைத் தமிழில் மொழி பெயர்த்து விட்டால் நீதியின் விலை இவ்வளவு அதிகமாக இருக்காது.

மற்ற விஞ்ஞான நூல்களைப் போன்ற மொழி பெயர்ப்புத் தொல்லை சட்டப் புத்தகங்களின் மொழி பெயர்ப்பில் இல்லை. சிறப்பான ஒரு சில சொற்களை இங்கிலீஷிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம்.

நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு தனி மொழி நாடாகப் போகிறது. அது முதலே மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளி லாவது தமிழ் நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் இருக்க வேண் டுமென்று உத்தரவு பிறபிக்க வேண்டும். பிறகு 1957 ஜனவரி முதல் உயர்நீதிமன்றத்திலும் தமிழில் நடக்க வேண்டுமென்று உத்தர விடலாம். தன்னைப் பற்றி நீதிமன்றத்தில் என்ன பேசப்படுகிறது என்பதை  உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று முதலமைச்சர் காமராசர் கூறுகின்றார்.

முதல் அமைச்சர் காமராசரின் கருத்தைச் சுட்டிக்காட்டி 'விடுதலை' தலையங்கம் கூறும் கருத்து முக்கியமானது.

"இன்று நீதிமன்றமும் கோவிலும் ஒன்றாகவே இருக்கின்றன. ஒன்றில் இங்கிலீஷ் பேசும் வக்கீல்! இன்னொன்றில் சமஸ்கிருதம் பேசும் அர்ச்சக வக்கீல்" என்று சுட்டிக்காட்டுகிறது விடுதலை.

இதன் பின்னணியில் ஒரு கலாச்சாரம் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழில் வழக்காடுவது என்ற நிலை வந்தால், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நமது தோழர்கள் வழக்குரைஞர் தொழிலில் ஆளுமை செலுத்துவர்.

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபவர்தான் திறமையான வழக் குரைஞர் என்ற நிலை அடிபட்டுப் போகும்.

தமிழில் வழக்காடுவது என்றால், இந்த நுனி நாக்கு ஆங்கில உச்சரிப்பாளர்களின் பிழைப்புப் படுத்து விடும் என்பதும் இதற்குள்ளிருக்கும் முக்கிய அம்சமாகும்.

தன்னைப் பற்றி என்ன பேசப்படுகிறது என்று வழக்குக்குச் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்பது முக்கியமான கருத்தாகும். கருத்தூன்றிக் கவனிக்கப்பட வேண்டிய மனித உரிமை சார்ந்த கருத்தும் கூட!

அதே போல 'மெட்ராஸ் ஹைகோர்ட்' என்பது தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் பற்றிய கோரிக்கை.

தமிழ்நாடு என்ற முழக்கம் 1938இல் தந்தை பெரியார் அவர்கள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது சென்னைக் கடற்கரையில் கொடுத்த முழக்கமாகும்.

அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக வந்த நிலையில் சென்னை மாநில அரசு என்பது 'தமிழ்நாடு' அரசு என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது (1968 ஜூலை 14).

அந்த முதற்கொண்டே எல்லா நிலையிலும் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வந்ததாகப் பொருள்படும். அவ்வாறு மாற்றம் பெறாதது சட்டப்படி சரியானதுதானா என்பது முக்கிய கேள்வியாகும்.

தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் களுக்கான முக்கிய நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என்று பெயர் சூட்டுவதற்காக போராட வேண்டும் என்றால், இது எத்தகைய அவலம்!

சென்னை உயர்நீதிமன்றம் சென்னைக்கான உயர்நீதிமன்றம் என்றுதானே பொருள்படும்!

தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று சொன்னால் தானே தமிழ்நாடு அளவுக்கான நீதிமன்றம் என்று பொருள்படும்.

தமிழ், தமிழ்நாடு, திராவிடர், திராவிடம் என்றாலே ஒரு வகை ஒவ்வாமை "பாரத்துக்கு" இருப்பதைப் புரிந்து கொண்டு, எந்த உரிமையையும் இலவசமாகப் பெற முடியாது; போராடிதான் பெற்றாக வேண்டும் - போராடுவோம் - வெற்றி பெறுவோம்!

 

No comments:

Post a Comment