நாடாளுமன்ற தேர்தலை மய்யப்படுத்தி வருமான வரிச் சோதனையா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி - கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 8, 2023

நாடாளுமன்ற தேர்தலை மய்யப்படுத்தி வருமான வரிச் சோதனையா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி - கண்டனம்!

திருவண்ணாமலை, நவ. 8 - சல்லடை போட்டுத் துளைத்தும், எனது வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை! என்றும், ரெய்டுகளைக் கண்டெல்லாம் தி.மு.க. பயப்படாது! எனவும், வருமான வரிச் சோதனை குறித்து அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி வருமாறு:-

இந்த 5 நாள் பிரச்சினைகளுக்கு விளக்கம் தர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த அடிப்படையில் இந்த அய்.டி. ரெய்டு என்பது தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அது அவர்களுடைய கடமை. அதாவது நிர்வாகங்களாக இருந்தாலும், தொழிற்சாலைகளாக இருந்தாலும் அய்.டி. ரெய்டு வருவது என்பது அவர்களுடைய கடமை. அதனால் வருகிறார்கள். அதை நான் தவறு என்று சொல்ல விரும்ப மாட்டேன். அது அவர்களுடைய பணிகள்.

எனது உதவியாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினர்!

ஆனால் 5 தினமாக அய்.டி. ரெய்டு என்ற பெயரில் என்னுடைய நேர்முக உதவியாளர் சுப்பிரமணி என்பவரை சென்னையில் தனியாக வைத்து என்னைத் தொடர்புபடுத்தி பல்வேறு கேள்விகள். அவர்தான் கோப்புகள் எல்லாம் பார்க்கும் பி.ஏ. அவரிடம் கோப்புகளை பற்றியும், எங்கு எங்கெல்லாம் இடம் வாங்கி இருக்கிறார் என்பதைப் பற்றியும் - இப்படி எல்லாம் பல்வேறு கேள்விகள். கேள்வி கேட்பது தவறல்ல. அவரை அவ்வளவு தூரம் அச்சுறுத்தி - அவர் வழக்குரைஞர், அரசாங்கத்தில் இருந்து Under Secretary  வரை இருந்தவர் அவர். பல கோப்புகளை பார்த்தவர்.

அவர் கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு அவரை நிர்பந்தப்படுத்தி அவரிடத்தில் 4 தினங்களாக நேற்று வரை. அதற்கு பிறகு என்னுடைய ஓட்டுநர். முதல் நாள் சென்னையில் இருந்து வந்திருக்கிறேன். அதன் ஓட்டுநர்.

அமைச்சருக்கு வண்டி ஓட்டுவது தவறா?

மறுநாள் அவரை அழைத்துக்கொண்டு இன்றைக்கு மாலையில்தான் அவரை விட்டார்கள். அவரையும் தனி மைப்படுத்தி, - ஒரு அமைச்சருக்கு வண்டி ஓட்டுவது தவறா? - அவரைத் தனிமைப்படுத்தி, என்னைத் தொடர்புபடுத்தி பல்வேறு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். டிரைவருக்கு வண்டி ஓட்டுவதுதான் வேலை. அரசாங்கத்தில் அவர் ஊதியம் பெறுகிறார். அவரிடம் 5 நாட்களாக விசாரணை.

அதேபோல், உங்கள் எல்லோருக்கும் தெரியும். நான் கெஸ்ட் ஹவுஸில் இருக்கிறேன். என் மனைவி தனியாக இருக்கிறார்.

என்னுடைய 2 பிள்ளைகள் தனித்தனியாக இருக்கிறார்கள். எல்லோருமே இன்கம் டேக்ஸ் அஸ்செஸ்சி. என் மனைவி இன்கம் டேக்ஸ் அஸ்செஸ்சி. என் பெரிய மகன் இன்கம் டேக்ஸ் அஸ்செஸ்சி. என் சிறிய மகன் இன்கம் டேக்ஸ் அஸ்செஸ்சி. அவரவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள்.

எல்லோரிடத்திலும் சென்று இந்த 4 தினங்களாக பல்வேறு வகையில் அவர்களை மன உளைச்சல் செய்யும் அளவிற்கு என்னைத் தொடர்புபடுத்தி பல்வேறு கேள்விகள்.

இறுதியாக நான் தங்கியிருந்த இந்தக் கல்லூரியில் இருக்கும் தங்கும் விடுதியில் வந்து சல்லடைப் போட்டு அரிப்பது போல, ஆய்வு என்ற பெயரில் எல்லாவற்றையும் இவர்கள் செய்தார்கள்.

அச்சுறுத்தல்!

அதோடு மட்டுமல்ல, என்னைத் தொடர்புபடுத்தி விழுப் புரம், வந்தவாசி, கரூர், கோவை, அதேபோல் திருவண்ணா மலை - நம்முடைய ஊரில் இருக்கும் பல இடங்களில் சென்று தொடர்ந்து 5 தினங்களாக பல்வேறு கேள்விகளை, அச்சுறுத் துவது - இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதனால் அந்த அய்.டி. ஆபிசர் மேல் இப்போது வரை எனக்கு கோபம் வரவில்லை. என்ன காரணம் என்று தெரியுமா? அம்புதான் இவர்கள். அம்பு விட்டவர்கள் எங்கோ இருக்கிறார்கள். ஏனென்றால் அய்.டி. ரெய்டு பற்றி எனக்கும் தெரியும்.

தேர்தல் வேலைகளை முடக்கினார்கள்!

ஏனென்றால் ஏற்கெனவே என்னுடைய வீட்டில் 2021 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் நான் வேட் பாளராக இருக்கிறபோது, என்னுடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் என்னுடைய அன்புத் தலைவர், அவர் வந்து தங்கியிருக்கும் நேரத்தில் ரெய்டு செய்தார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ரெய்டு செய்தவர்கள் என்ன செய்தார்கள்? அப்போது 2 நாட்கள் என்னுடைய தேர்தல் வேலைகளை முடக்கினார்கள். மன உளைச்சலை தந்தார்கள். அதன் விளைவுஎன்ன? 5,000 ஓட்டில் வெற்றிபெற வேண்டிய வேலு, ஏறத்தாழ 1 லட்சம் ஓட்டில் திருவண்ணாமலை மக்கள் என்னை வெற்றி பெற வைத்தார்கள்.

அதைவிட இந்த முறை எல்லோருக்கும் மன உளைச் சளையும் உருவாக்கி, கல்லூரியில் பணியாற்றும் பல்வேறு நிலையில் இருப்பவர்கள் - என்னுடைய இன்சூரன்ஸ் பார்க்கும் ஒரு கிளார்க், அக்கவுன்ட் பார்க்கும் ஒரு கிளார்க், வங்கிக்கு செல்லும் ஒரு கிளார்க், பிஸிமி என்று சொல்லப்படும் டாக்டரின் ஃபெசிலிடிசை பார்ப்பவர் - இப்படிப்பட்டவர்களை எல்லாம் அழைத்து திருவண்ணாமலையில் ரெய்டு செய்வது தான் அவர்கள் வேலை.

அதன் மூலமாக நாங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கினோம். கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் இன்றைக்கு பல பேர் பொறியாளராக, பல்வேறு தொழிற்புரட்சியை இந்தப் பக்கத்தில் நடந்திருக்கிறது என்று சொன்னால், மனசாட்சி உள்ள அத்தனை பேருக்கும் தெரியும்...நான் இந்தக் கல்லூரியை மட்டும் இந்த வளாகத்தில் ஆரம்பிக்கவில்லை என்று சொன்னால், எத்தனை பேர் சென்னைக்குச் சென்று நம்முடைய கிராமத்துப் பிள்ளைகள் படித்திருக்க முடியும்.

6 முறை மக்கள் பிரதிநிதி!

ஆனால் அப்படிப்பட்ட ஒரு பணியில் நான் ஈடுபட்டிருந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியும். இந்த நிலையில்தான் நான் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்து, ஒரு முறைக்கு இருமுறை அல்ல - தொடர்ந்து 6 முறை மக்களுடைய பிரதிநிதியாக - சட்டமன்ற உறுப்பினராக நான் வெற்றி பெற்றதோடு மட்டுமல்ல, மக்களுக்கு நான் தொண்டு செய்திருக்கிறேன்.

இந்த பத்திரிகை நண்பர்கள் மூலமாக என்னால் வெளிப் படையாக நான் மிகவும் அடக்கத்தோடு சொல்ல விரும்புகி றேன். யாராவது இந்த மாவட்டத்தில்எதிர்க்கட்சிக்காரர்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் - என்னுடைய இயக்கத்தை சார்ந்தவர்கள் - வேலு ஏதேனும் கையூட்டு பெற்றிருக்கிறான் என்று யாரேனும் ஒருவர் சொன்னால்கூட அதற்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

அப்படி பொது வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் நான் கடைப்பிடித்துக் கொண்டிருப்பவன். அப்படிப்பட்ட நிலையில்தான் என்னுடைய தலைவர் கலைஞர் அவர்கள் 2006-இல் உணவுத்துறை அமைச்சராக என்னை ஆக்கினார். அப்பொழுது நான் நிர்வாகத்தை விட்டு வெளியே வந்து விட்டேன். என்னுடைய குடும்பம்தான் அந்த அறக்கட்ட ளையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அந்த அறக்கட்டளைக்கு யார் சேர்மன் என்றால், ...வெளியே அவரை இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள். என்னுடைய முதல் மகன் குமரன். இவர்தான் அந்த அறக்கட்டளையின் தலைவராக இருந்து பணியாற்றுகிறார் என்பது லோகலில் இருக்கும் பத்திரிகையாளர்கள் உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

அறக்கட்டளையை விட்டு வெளியே வந்துவிட்டேன்!

நான் அறக்கட்டளையை விட்டு வெளியே வந்து விட்டேன். எனக்கும் அந்த நிர்வாகத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. ஆனால் என்னை பொறுத்த அளவிற்கு இன்றைக்கு எனக்கு என்று இருக்கும் சொத்து 48 ஏக்கர் 33 சென்ட் தான். என் மீது நேரடியாக நிலம் இருக்கிறது. ...நகரில் வீடு கட்டும் சங்கத்தின் மூலமாக எனக்கு ஒதுக்கப் பட்ட ஒரு இடம். அதை மருத்துவமனையாக ஆக்க வேண்டும் என்று சொன்னபோது, 33 ஆண்டுகளுக்கு அதை நான் லீசுக்கு கொடுத்திருக்கிறேன். ஒரு வருடத்திற்கு இவ்வளவு என்று இருக்கிறது. பணத்தை வாங்கிவிட்டு லீசுக்கு கொடுத்திருக்கிறேன். சென்னையில் எனக்கு ஒரே ஒரு வீடு இருக்கிறது. இதுதான் என்னுடைய சொத்து.

இதுதான் நான் ஏற்கெனவே தேர்தலில் நிற்கிறபோதும் சரி, வேட்புமனு தாக்கல் செய்யும்போதும் இதைத்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். இன்றைக்கு என்னுடைய சொத்து இதுதான்.

இன்றைக்கு என் மீது நம்பிக்கை வைத்து ‘இந்த துறையில் இவர் மிகச் சிறப்பாக நடத்துவார்’ என்று என்னுடைய முதலமைச்சர் என் அன்பிற்குரிய அண்ணன் அவர்கள் இந்த துறையை என்னிடத்தில் ஒப்படைத்த பின்புகூட நான் எங்கேயும் ஒரே ஒரு சென்ட் அளவு கூட நான் சொத்து சேர்த்துக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட நிலையில்தான் நான் இருந்து கொண்டிருக்கிறேன்.

அதோடு மட்டுமல்ல, தொடர்ந்து நான் இன்கம் டேக்ஸ் அஸ்செஸ்சி தான். வருடா வருடம் நான் கணக்கு வழக்குகளை முறையாக நான் இன்கம் கணக்கு செலுத்துகிறேன். அதற்குரிய டேக்ஸ் கட்டுகிறேன்.

உச்சநீதிமன்றம் பாராட்டு!

நான் எப்போதும் இன்கம் டேக்ஸ் ஏமாற்றுபவன் அல்ல. எனக்கு இருக்கும் சொத்தையும் நான் சொல்லி விட்டேன். நான் கட்டும் டேக்ஸையும் நான் சொல்லிவிட்டேன்.

அதோடு மட்டுமல்ல, இன்னொன்றும் உங்களுக்குத் தெரியும். 2006-2011இல் நான் உணவுத்துறை அமைச்சராக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டேன் என்று இன்றைக்கு இருக்கும் முதலமைச்சரும் சரி - தலைவர் கலைஞர் அவர் களும் பாராட்டியதோடு மட்டுமல்ல, உச்சநீதிமன்றமே இந்தத் துறையைப் பாராட்டி, அப்போது டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் - இந்து பத்திரிக்கையிலும் பெரிய ஆர்டிக்கலே வந்தது.

தமிழ்நாட்டின் உணவுத் துறையை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தீபக் பண்டாரியும், வர்மா அவர்களும் பாராட்டி அவைகள் எல்லாம் வெளியே வந்தது.

அப்படி நான் சிறப்பாக அந்தத் துறையை எடுத்துப் பணியாற்றினேன். அதற்குப் பின்னால் 2011இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2011இல் என் மீது வழக்கு கிடையாது. 2012இல் என் மீது வழக்கு கிடையாது. 2013இல் காவல்துறை மானியத்தில் அன்றைக்கு அம்மையார் அன்றைக்கு முதல மைச்சராக இருந்தபோது நான் கடுமையாக அந்தத் துறையை விமர்சனம் செய்தேன் என்ற ஒரே காரணத்திற்காக, 2 ஆண்டு காலம் கழித்து 2013இல் என் மீது 11 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துவிட்டேன் என்று என் மீது ஒரு வழக்கு போடப்பட்டது.

அந்த வழக்கை இதே திருவண்ணாமலை ... நீதிமன்றத்தில் வழக்கு 3 ஆண்டு காலம் வழக்கு நடைபெற்றது. அன்றைக்கு அந்த நீதிபதி - அம்மையார் தீர்ப்பு வழங்கினார். என்ன தீர்ப்பு வழங்கினார் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். இவர் மீது அரசியல் உள்நோக்கத்தோடு போடப்பட்ட வழக்கு - இந்த வழக்கு என்று தள்ளுபடி செய்தார்.

அதற்குப் பின்னாலும் அம்மையார் விடவில்லை. உயர்நீதிமன்றத்தில் என் வழக்கை அப்பீல் செய்தார்கள். உயர்நீதிமன்றத்தில் 2 ஆண்டு காலம் அந்த வழக்கு அங்கு நடைபெற்றது. கீழ் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்புதான் உண்மையான தீர்ப்பு என்று அது உறுதி செய்தது. அதற்குப் பின்னாலும் அந்த அம்மையார் விடவில்லை.

இறந்துவிட்ட அம்மையாரை நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. நடைபெற்ற சம்பவத்தைத்தான் நான் சொல்கிறேன். உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்கள். வழக்கு நடைபெற்றது. அந்த உச்சநீதிமன்றத்திலும் நான் நிரபராதி. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்தோடு போடப் பட்ட வழக்கு என்று உச்சநீதிமன்றமே அதை தள்ளுபடி செய்தது என்பது உள்ளூரில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அப்போது நீங்களே பத்திரிகையில் அந்த செய்திகள் போட்ட வரலாறு எல்லாம் உங்களுக்கு தெரிந்த ஒன்று.

கட்சித் தொண்டர்கள் என்னைச் சந்திப்பது தவறா?

நான் கேட்கிறேன், நான் ஒரு அரசியல்வாதி. எனக்கு ஒரு அமைச்சர் பொறுப்பைத் தந்திருக்கிறார் முதலமைச்சர். அமைச்சர் என்ற முறையில் பல்வேறு சட்டமன்ற உறுப் பினர்கள், பொதுமக்கள் எல்லாம்இருக்கிறார்கள். அவர்களது வேண்டுகோளை என்னிடத்தில்தான் வைக்க முடியும். மனு என்னிடத்தில்தான் கொடுக்க முடியும். அமைச்சர் என்கிற முறையில் சரி.

அரசியல்வாதி என்கிற முறையில் நான் சார்ந்திருக்கும் எனது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண் டர்கள் என்னைச் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை சொல்லத்தான் செய்வார்கள். அவர்கள் என்னிடத்தில் வருவது தவறா? அப்படி வந்தவர்கள் எல்லாம் மய்யப்படுத்தி, அவர்களை தொடர்புபடுத்திக் கொண்டு அய்.டி. ரெய்டு செல்வது என்பது எந்த விதத்தில் நியாயம்?

அது என்ன? தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த தொழிலதிபர்கள் யாருமே இல்லையா? அவர்கள் வீட்டிற்கு எல்லாம் தினமும் அய்.டி. ரெய்டு சென்று கொண்டுதான் இருக்கிறீர்களா...எனவே அய்.டி. ரெய்டு எங்கே செல்கிறது? திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் ஆட்சியில் இருக்கிறோம் என்ற அடிப்படையில் ரெய்டு செய்கிறார்கள்.

நான் ஒன்று சொல்கிறேன்... இந்த ரெய்டுக்கு எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகமோ, அதன் தொண்டர்களோ, என் தலைவனோ, நாங்களோ - இதற்கெல்லாம் பயப்படு பவர்கள் அல்ல.

எங்களைப் பொறுத்த அளவிற்கு. சட்டப்படி நாங்கள் எப்போதும் நடந்து கொள்கிறோம். ரெய்டு எல்லாம் காட்டி எங்களுடைய தொண்டை, உழைப்பை நீங்கள் நிறுத்திவிட முடியாது.

நான் ஏற்கனவே சொன்னதுபோல, ஏற்கெனவே ரெய்டு விட்டீர்கள். 2 நாட்கள் என்னுடைய பணிகள் அன்றைக்கு முடங்கின. இப்போது 5 நாட்கள் என்னை வைத்திருக்கிறீர்கள். என்னுடைய கழகப் பணிகள், அரசுப் பணிகள் 5 தினங்களாக நடைபெறவில்லை. அதைத்தான் உங்களால் முடக்க முடிந்தது. நான் இன்னும் வேகமாக அரசாங்கத்திற்காகவும், கட்சிக்காகவும் உழைக்கத் தயாராக இருக்கிறேன்.

தம்பி உதயநிதி சொன்னது உண்மையானது!

அதனால்தான் தம்பி இளவல் உதயநிதியே சொன்னார், இன்று அய்.டி. என்பது என்பது பாரதீய ஜனதா கட்சியின் ஒரு அணியாக ஆகிவிட்டது. எவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாணவர் அணி, இளைஞரணி, விவசாய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி என்று இப்படி அணி இருப்பதைப்போல, பாரதீய ஜனதா கட்சிக்கு அய்.டி. ஒரு அணியாக மாறிவிட்டது என்று நம்முடைய இளவல் தம்பி உதயநிதி ஸ்டாலின் 2 தினங்களுக்கு முன்பு சொன்னார். அதுதானே உண்மையான நிலைமை.

எனவே, எதற்குநான் இதை சொல்கிறேன் என்று சொன்னால், இதன் மூலம் கழக முன்னணியினரை அச்சுறுத் துவது, அமைச்சர்களை அச்சுறுத்துவது - இதெல்லாம் எந்த காலத்திலும் அரசியலில் நடந்தது இல்லை.

அய்.டி. என்பது புதிதாக வந்ததா...10 ஆண்டு காலம் ஏற் கெனவே மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, இன்னும் சொல்லப்போனால் அவர் நிதித்துறை அமைச்சராக இருந்தவர். உலகமே அவரை பாராட்டியது. அவர் காலத்தில் இப்படித்தான் எங்கு பார்த்தாலும் அந்த அய்.டி. ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருந்ததா?

நான் இன்னும் வெளிப்படையாக சொல்கிறேன். மிகவும் உயர்ந்த மனிதர் வாஜ்பாய் என்பவர். அவர் பிரதமராக இருந்தவர். தமிழ்நாட்டில் எத்தனை இடத்தில் இதுபோன்று எதிர்கட்சிக்காரர்கள் தங்கள் கருத்துகளை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு, அரசியல் என்கிற பெயரில் எத்தனை வீட்டில் எத்தனை ரெய்டு நடந்திருக்கிறது.

‘ரெய்டு’க்கு நாடாளுமன்றத் தேர்தலே காரணம்!

எனவே இப்பொழுது தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் வருகிறது என்ற ஒரே காரணத்தை மய்யப்படுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களை, நிர்வாகிகளை, மாவட்டச் செயலாளர்களை, அமைச்சர் பெருமக்களை அச்சுறுத்துவது என்பது எந்த விதத்தில் நியாயம்?

ஒன்றை மட்டும் சொல்கிறேன். தமிழ்நாட்டின் முதல மைச்சர் அவர்கள் மிசாவை பார்த்தவர். அவரால் அரவணைக் கப்பட்டிருக்கும் எங்களுக்கு ஒரே ஒரு இலக்கு என்னவென்று சொன்னால், நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தல்தான் எங் களுடைய இலக்கு. அந்த இலக்கில் அவருடைய ஆணையை ஏற்று, 40-க்கும் 40 நாடாளுமன்றத்தைப் பிடிப்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்குமே ஒழிய, அதில் யார் என்ன தலையிட்டாலும் சரி, எதை செய்தாலும் சரி - எங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில்தான் எங்க ளுடைய கவனங்கள் இருக்குமே தவிர, வேறு ஒன்றும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

எனவே அந்த அடிப்படையில் இந்த ரெய்டு என்பது எங்களை முடக்குவதற்காக வந்திருப்பதாக நினைக்கிறோமே தவிர, வேறு ஒன்றும் இல்லை.

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். எனக்கும் அந்த அறக்கட்டளைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நான் அதில் உறுப்பினராக இல்லை - அறங்காவலராக இல்லை - அதன் சேர்மனாக இல்லை. என்னை சேர்மன்... சேர்மன் என்று சொல்வதற்கு ஒரே காரணம், அந்த அறக்கட்ட ளையை நான் முதன்முதலாக ஆரம்பித்த காரணத்தினால், ஆங்கிலத்தில் சொன்னால் ஃபவுண்டர் - சேர்மன் என்று சொல்வார்கள், அந்த அடிப்படையில்தான் எனக்கு ஒரு மரியாதை இருக்கிறது தவிர, அதனால் அதற்கும் - எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதுதான் என்னுடைய அழுத்தமான கருத்து. அதைத் தான் உங்களுக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதைப் பதிவு செய்து விட்டேன்.

-இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment