கடவுள் கொலை செய்யச் சொன்னாரா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 6, 2023

கடவுள் கொலை செய்யச் சொன்னாரா?

சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் கமல் உஸ்மான். தனது நண்பரும் கூலித் தொழிலாளி யுமான ஒருவரை - சிவன் உத்தரவிட்டார் என்று கூறி கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்துள்ளார்

திருவான்மியூர் பகுதியைச்சேர்ந்த உஸ்மான்  அதே பகுதியில் உள்ள மூக்குப்பொடி சித்தர் கோயிலுக்கு தினமும் சென்று வழிபாடு செய்து வந்திருக்கிறார்.   அங்கு கொடுக்கும் பிரசாதத்தையே தினமும் சாப்பிட்டு வந்துள்ளார். இப்படி தினமும் கோயிலுக்குப் போகும்போது, பெயின்டர் செந்தில் குமார் என்பவர் அறிமுகமாகி உள்ளார். கொல்லப்பட்ட பெயின்டர் செந்தில் குமார் திருமுடி விநாயகர் கோயில் அருகே, ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். இந்த வீட்டில் நிறைய வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருப்பதால், அவர்களுடனேயே பெயின்டரும் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கமல் உஸ்மான் தினமும் செல்லும் கோயில் முன் நின்று  ஒரு பெண்ணுடன் செந்தில்குமார் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து 'கோயில் வாசலிலேயே இப்படி பெண்ணுடன் பேசுகிறாயே' என்று கண்டித்துள்ளார். 

இதனால் 2 பேருக்குமே வாக்குவாதம் நடந்துள்ளது. நடுரோட்டில் இவர்கள் தகராறு செய்வதைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால், கமல் உஸ்மான் மட்டும் ஆவேசமாகவே இருந்துள்ளார். மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, கற்பூரம் ஏற்றி வைத்து 'கோயில் வாசலிலேயே இப்படி, அசிங்கமாக பெயின்டர் நடந்து கொள்கிறாரே, என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை' என்று கண்ணீர்விட்டு சாமி கும்பிட்டுள்ளாராம். அப்போதுதான், சிவபெருமான் திடீரென கமல் உஸ்மான் முன்பு தோன்றினாராம். "எனக்கும் அந்த பெயிண்டர், கெட்டவன் என்று தான் தெரிகிறது. அதனால் அவனைக் கொன்று விடு" என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டாராம்.

கடவுளையே இந்தப் பெயின்டர் கோபப்படுத்தி விட்டாரே! என்ற ஆத்திரத்தில், சிவபெருமானின் உத்தரவுப்படியே, பெயின்டரை கொலை செய்ய முடிவு செய்தாராம். கமல் உஸ்மான்.. தன்னுடைய அறைக்கு வந்து கத்தியை எடுத்துக் கொண்டு, நேராக பெயின்டர் இருக்கும் இடத்திற்குச் சென்று  செந்தில்குமாரிடம், "உன்னைக் கொலை செய்யச் சொல்லி கடவுளே உத்தர விட்டுள்ளார்.. எனவே, நீ இந்த உலகத்தில் வாழத் தகுதியான நபர் கிடையாது.. செத்து விடு" என்று சொல்லிக் கொண்டே, கத்தியால் குத்தியிருக்கிறார்.. மொத்தம் 18 முறை குத்தியிருக்கிறார்.. வயிற்றில் குத்தும்போது, "சிவ சிவ" என்று சொல்லிக்கொண்டே குத்திக் கொன்றுள்ளார்.. ரத்தவெள்ளத்தில் பெயின்டர் சரிந்து இறந்துவிடவும், நேராக, காவல்நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார். காவல் நிலையம் செல்லும் வழியெல்லாம் "சிவ சிவ" என்றே சொல்லிக் கொண்டு போயிருக்கிறார். எந்தவிதமான பதற்றமும் அவரிடம் காணப்படவில்லையாம். 

திருவான்மியூர் காவல் நிலைய காவலர்களிடம் "நான் ஒரு சிவ பக்தன்" என்று கூறி நடந்ததை எல்லாம் சொல்லியிருக்கிறார்.  இதைக் கேட்டதும் காவல்துறையினருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், கமல் உஸ்மான் மனநலம் பாதிக்கப்பட்டவரோ என்று நினைத்து  அவர் சொல்வதை முதலில் நம்பவில்லையாம். எனினும் காவலர்களுக்கு சந்தேகம் வரவே, அவர் சொன்ன இடத்துக்கு நேரிலேயே சென்று செந்தில்குமார் உடல் கிடந்துள்ளதைப் பார்த்து தான் கொலை நடந்தது உண்மை என்று தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பிறகே கமல் உஸ்மான் குறித்து விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.

கடவுள் என்பதும் - பக்தி என்பதும்  எந்த  அளவுக்கு மனிதனின் மூளையைப் பாதித்து இருக்கிறது.  மனநோயாளி ஆக்குகிறது. சிவபெருமானே கொல்லச் சொன்னாராம். இதுதான் கடவுள்களின் யோக்கியதையா?

தந்தை பெரியார் சொல்லி வந்த கருத்துகளும், திராவிடர் கழகம் செய்து வரும் பகுத்தறிவுப் பிரச்சாரமும் எந்த அளவுக்குத் தேவை என்பதை மக்கள் உணரட்டும்!

 


No comments:

Post a Comment