நீதிக்கட்சியின் வாரிசு திராவிடர் கழகமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

நீதிக்கட்சியின் வாரிசு திராவிடர் கழகமே!

[இன்று 20.11.2023 நீதிக்கட்சியின் 107ஆம் ஆண்டு விழா - நீதிக்கட்சி குறித்து அன்னை மணியம்மையார் 20.11.1976 'விடுதலை'யில் எழுதியது]

 பல்லாயிரம் ஆண்டு காலமாக அத்தனைத் துறைகளிலும் அழுத்தி வைக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாதாரின் நீதிக்காகப் போராடி பல்வேறு உரிமைகளையும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்த நீதிக்கட்சி தனது 60-ஆம் ஆண்டை சந்திக்கிறது. 

உரிமைகளைக் கேட்கும் உணர்வு 

உரிமைகளைக் கேட்கும் உணர்வு, தீமைகளை எதிர்க்கும் துணிவு இவைகளுக்கு அஸ்திவார மிட்டது நீதிக்கட்சி என்றால் அது மிகையாகாது. 

இன்றைக்குப் பார்ப்பனரல்லாதார் கல்வி, உத்தியோகத் துறைகளில் ஓரளவு இடம்பிடித்துக்கொள்ள முடிந்திருக்கிறது என்றால் அது நீதிக்கட்சியின் மறக்கமுடியாத பெரும் சாதனை.

 நீதிக்கட்சி அமைச்சரவையிலே அமைச்சராக இருந்த அறிஞர் முத்தையா முதலியார் அவர்கள் முன்னின்று கொண்டுவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம் காலாகாலம் உள்ள அளவுக்கும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் நன்றி உணர்வோடு நினைத்துப் போற்றத்தக்க ஒன்றாகும். 

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

நீதிக்கட்சி காலத்தில்தான் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஒரு காரியத்திற்காக மட்டும் பெண்கள் சமுதாயம் என்றென்றைக்கும் நீதிக்கட்சிக்குத் தலை வணங்கக் கடமைப்பட்டவர்களாவார்கள்.

நீதிக்கட்சியின் சாதனைப் பட்டியல்களை அவ்வளவு சுலபத்தில் எடுத்து உரைத்துவிட முடியாது.

ஒரு குறைபாடு சொல்லலாம் - அக்கட்சிக்கு அடிப்படையான சமுதாய-பகுத்தறிவுக் கொள்கைகள் இல்லாமல் போய்விட்டது. அந்தக் குறைபாட்டையும் தந்தை பெரியார் அவர்கள். தான் தலைமையேற்றதற்குப் பிறகு நிறைவு செய்து விட்டார்கள்.

நீதிக்கட்சியின் தலைவர்களைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் மிக உயர்ந்த முறையில் சொல்வார்கள்.

அப்பழுக்கற்ற பொதுத் தொண்டு 

அவர்களது பொதுத்தொண்டு அப்பழுக்கற்றது. செல்வச் செழுமையிலே திளைக்க வாய்ப்பிருந்த அந்த பெரியவர்கள் எல்லாம், அந்த வாய்ப்புகளைத் துறந்து, தங்கள் செல்வங்களை எல்லாம் பொதுத் தொண்டுக்குத் தண்ணீர் போல் வாரி இறைத்த வள்ளல்கள் என்று அவர்களைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள்.

டாக்டர் நடேசனார்

1916 நவம்பர் 20-ல் நீதிக்கட்சி அதிகாரப் பூர்வமாக தோன்றியது என்றாலும் அதற்கு முன்பே அதற்குக் கரு கொடுத்த செம்மல் டாக்டர் நடேசனார் அவர்களே ஆவார்கள்.

ஒரு பக்கத்திலே மருத்துவத் துறையிலே தனது பணியை ஆற்றிக் கொண்டும், மறுபுறத்திலே “திராவிட சங்கம்” என்ற பெயரிலே ஒரு அமைப்பைத் துவக்கி நீதிக்கட்சிக்கு அஸ்திவாரமிட்டுக் கொடுத்தவர் டாக்டர் நடேசனார் அவர்களே ஆவார்கள்.

நீதிக்கட்சி அறுபதாம் ஆண்டைக் காணும் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளில், அக்கட்சி தோன்றுவதற்கும், வளர்வதற்கும் அக்கட்சியினால் பார்ப்பனரல்லாதார் பெரும் பலன் பெற்றதற்கும் காரணமாக இருந்து உழைத்த செம்மல்களுக்கெல்லாம் நாம் நமது வீர வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.

நீதிக்கட்சியின் வைர விழாவை பெரும் விழாவாக எடுக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது என்றாலும் நீதிக்கட்சி ஊட்டிய அடிப்படை உணர்வை குன்றாது மேலும் காக்க இன்று நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக!

நீதிக்கட்சியின் வாரிசு திராவிடர் கழகமே!

இன்றைய திராவிடர் கழகம் என்பது அன்றைய நீதிக்கட்சியின் சரியான வாரிசாகும்.

தந்தை பெரியார் அவர்களால் உருவாக் கப்பட்டு, அறிஞர் அண்ணா அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானம் 1944-லிலே சேலம் மாநாட்டிலே நீதிக்கட்சியை திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் செய்யச் செய்தது!

எனவே, நீதிக்கட்சியின் வைர விழா என்பது நமது இயக்கத்திற்குள் அய்க்கியப்பட்ட மிக முக்கியமான சரித்திரச் சிறப்பு வாய்ந்த நாளாகும். 

பயணம் தொடர்வோம்!

அடிப்படைக் கொள்கை அப்பழுக்கற்ற பொதுத் தொண்டு என்கிற சரியான பாதையிலே மேலும் நமது பயணத்தைத் தொடர்வோம்! வாழ்க நீதிக்கட்சி!

- ஈ.வெ.ரா.மணியம்மை 

தலைவர், திராவிடர் கழகம்

'விடுதலை' 20-11-1976 

No comments:

Post a Comment