புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்'' தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்'' தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

 மகாத்மாக்கள், ரிஷிகள், ஜீவன்முக்தர்கள், அவதாரங்கள் யாராக இருந்தாலும், அவர்களில் யாராவது ஒருவர், அறிவுச் சுதந்திரத்தை, மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார்களா?

மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தைக் கொடுத்தவர் தந்தை பெரியார் ஒருவரே!

புதுச்சேரி, நவ.29 ‘‘என்னுடைய அறிவுக்குச் சரின்னு பட்டவற்றை நான் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால், எடுத்துக் கொள்ளுங்கள்; இல்லை யென்றால் தள்ளிவிடுங்கள்’’ என்று சொல்லி, மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தைக் கொடுத்தவர் தந்தை பெரியார். அவரைத் தவிர, வேறு யாராவது இதுவரையில், மகாத்மாக்கள், ரிஷிகள், ஜீவன்முக்தர்கள், அவதாரங்கள் யாராக இருந்தாலும், அவர்களில் யாராவது ஒருவர், அறிவுச் சுதந்திரத்தை, மனிதர்களுக்குக் கொடுத் திருக்கிறார்களா? இதுதான் பகுத்தறிவாளர்கள் கழகத்தினுடைய தனிச் சிறப்பாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழக 

மாநில கலந்துரையாடல்

கடந்த 19.11.2023 அன்று காலை புதுச்சேரியில் நடை பெற்ற பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத் துறை அமைப்புகளின் மாநில, மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பான முறையில், மாநில -மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏறத்தாழ 250 இருபால் தோழர்கள், முப்பால் தோழர்கள் என்றுகூட பாலின வேற்றுமை இல்லாமல் கலந்துகொண்டிருக்கின்றீர்கள்.

மனிதனை அடையாளப்படுத்துவது பகுத்தறிவு! மிருகத்திடமிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது பகுத்தறிவு

என்ன ஜாதி? என்ன மதம்? என்ற பேதம் கிடையாது. கட்சி பேதமும் கிடையாது. மனிதம், மனித ஒருமைப்பாடு - மனிதனை அடையாளப்படுத்துவது பகுத்தறிவு. மிருகத்திடமிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது பகுத்தறிவு என்பதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் 1970 ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கும்பொழுது, கலைவாணர் அரங்கத்தில் ஓர் அருமையான சொல்லைச் சொன்னார்.

பகுத்தறிவாளர் கழகம் என்றால் 

மனிதர்கள் கழகம் என்று அர்த்தம்!

‘‘இன்றைக்குப் பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கி வைக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கி வைப்பது என்பது சம்பிரதாயம். நான் நீண்ட நாள்களாக அந்தப் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கி வைக்கிறேன் என்று சொன்னால், என்ன அர்த்தம் என்றால், இன்றைக்குத்தான் மனிதர்கள் கழகத்தைத் தொடங்கி வைக்கிறேன் என்று அர்த்தம்'' என்றார்.

ஏனென்றால், பகுத்தறிவுதான் மனிதனை அடையாளப்படுத்துவது. மிருகத்திற்கும் - மனி தனுக்கும் என்ன வேறுபாடு? பகுத்தறிவுதான்.

ஆகவே, அந்தப் பகுத்தறிவாளர் கழகத்தில் நடுவில் கொஞ்சம் தொய்வு இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். உடல் நிலையில் எப்பொழுதாவது தொய்வு ஏற்படும். நன்றாக இருப்போம், திடீரென்று கிருமி தாக்கும், சுற்றுச்சூழலால் பாதிப்புக்கு உள்ளாவோம். அதுபோன்று ஒரு தொய்வு இருப்பதைத் தாண்டி,  இன்றைக்கு மிக அற்புதமாக புதுச்சேரியில் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு எல்லா தோழர்களும் வந்திருக்கிறார்கள். பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான தோழர்கள் வந்திருக்கிறார்கள். இன்னும் வராதவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள்; அவர்களையெல்லாம் ஒன்றுபடுத்தி இன்றைக்கு ஓர் அற்புதமான கலந்துரையாடல் நடைபெறுகிறது.

குடும்பக் கலந்துரையாடல் போன்று ஏற்பாடு செய்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சி!

புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி அவர்கள் ஆனாலும், அதேபோன்று புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளராக இருக்கக்கூடிய அன்பரசு அவர்களானாலும், நம்முடைய பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும், திராவிடர் கழகத் தோழர்களும் ஒருங் கிணைந்து, அதேபோல, நடராஜன் அவர்களும், ஆடிட்டர் ரஞ்சித்குமார் போன்றவர்களும் இணைந்து ஒரு குடும்பக் கலந்துரையாடல் போன்று ஏற்பாடு செய்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

எல்லோரும் இங்கே கருத்துகளைச் சொல்லியிருக் கிறீர்கள்.  எல்லோருக்கும் உணவும் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. செவிக்கு உணவு இல்லாதபோதுதான், சிறிதளவு வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். ஆனால், இங்கே தலைகீழ் - போதுமான அளவிற்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட சிறப்பான இந்நிகழ்விற்கு வருகை தந்துள்ள திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கள் துரை.சந்திரசேகரன் அவர்களே, அன்புராஜ் அவர்களே, திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் நீண்ட காலப் பொறுப் பாளர்களாக இருக்கக்கூடிய அருமைச் செயல்வீர்கள் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்கள், வெங்கடேசன் அவர்கள், மோகன் அவர்கள், வேல்.சோ.நெடுமாறன் அவர்கள், வேண்மாள் நன்னன் அவர்கள், சண்முக சுந்தரம் அவர்கள், ரஞ்சித் அவர்கள், சந்திரசேகரமூர்த்தி அவர்கள், பழனிவேல் அவர்கள், சரவணன் அவர்கள், வேல்குமார் அவர்கள், நரேந்திரன் அவர்கள், ஆலடி எழில்வாணன் அவர்கள், தரும.வீரமணி அவர்கள், வழக்குரைஞர் இளங்கோ அவர்கள், குடியாத்தம் அன் பரசன் அவர்கள், காஞ்சி கதிரவன் அவர்கள், முனைவர் சுலோச்சனா அவர்கள், மு.சு.கண்மணி அவர்கள், இளவரசி சங்கர் அவர்கள்  இன்னும் பல்வேறு பகுதி களிலிருந்து வந்துள்ள அருமைத் தோழர்கள் - ஒவ் வொருவரையும் அழைத்ததாக நீங்கள் கருதவேண்டும் நேரத்தின் நெருக்கடியினால்  - அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செயல்திட்டங்கள்- 

எப்படி வடிவெடுக்கவேண்டும்!

என்னுடைய உரை மூன்று பகுதிகளாக இருக்கும். ஏனென்றால், இது பொதுக்கூட்டம் போன்று இல்லை. எல்லோரும் விவரம் தெரிந்தவர்கள்.

இனிமேல் நாம் என்ன செயல்திட்டங்கள் எப்படி வடிவெடுக்கவேண்டும் என்பதற்கு முன், தத்துவார்த் தமாக இந்த இயக்கத்தைப்பற்றி கழகப் பொருளாளர் அவர்களும், கழகப் பொதுச்செயலாளர்களும் சொன் னார்கள்.

இதில் மிக முக்கியமானது என்னவென்றால், அய்யா தந்தை பெரியார் அவர்கள், பகுத்தறிவாளர் கழகத்தை எப்படி அமைத்தார் என்றால், சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தின் மூலமாகத்தான்.

இதுபோன்ற ஓர் இயக்கம், இந்தியாவிலேயே ஒவ்வொரு நாளும் பிரச்சாரம் செய்கின்ற முறையும் - பொதுப் பிரச்சினைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லக்கூடிய முறையும் என்பது இந்தியாவிலேயே வேறு எங்கும் கிடையாது. 

தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்கிறார்களே, அது ஒன்றுதான். ஆனால், நம்முடைய இயக்கத்தில் அப்படி இல்லை. நீட் தேர்வு திணிப்பா? ஹிந்தித் திணிப்பா? குலத்தொழில் திணிப்பா? ஒவ்வொன்றையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறோம். அப்பிரச்சினை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்குகிறோம். 

உதாரணம், எழுத்தாளர் நேரு அவர்கள், ஊடகப் பிரிவு அழகிரிசாமி அவர்கள், கலைப்பிரிவு மாரி செல்வம் - அதேபோன்று ஆசிரியர் பிரிவு தமிழ்ப் பிரபாகரன் போன்ற தோழர்கள் பொறுப்பேற்று பிரிவு, பிரிவு என்ற அளவில் பல பிரிவுகள் நன்றாக வளர்ந் திருக்கின்றன.

பொதுநலத்திற்காக - மக்கள் நலத்திற்காக!

ஆகவே, இவ்வமைப்பை மேலும் வளப்படுத்த வேண்டும் என்பது நம்முடைய சுயநலத்திற்காக அல்ல - பொதுநலத்திற்காக - மக்கள் நலத்திற்காகத்தான்.

அரசமைப்புச் சட்டத்தில் இருப்பது குறித்து, நாம் நடத்துகின்ற கூட்டத்தில் மட்டும்தான் விளக்கிச் சொல்லுகிறோமே தவிர, வேறு யாராவது அரசமைப்புச் சட்டத்தைப்பற்றி பேசும்பொழுது, அடிப்படைக் கடமை கள் என்ற ஒன்று உண்டு. அதில் என்ன  சாரம்சம் இருக்கிறது என்பதைப்பற்றி யாராவது இதுவரையில், எந்த அரசியல் கட்சியாவது - பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்களே, அவர்களுக்காவது தெரி யுமா? வருத்தத்தோடு சொல்கிறேன், சட்ட நிபுணர் களுக்குத் தெரியுமா? அரசமைப்புச் சட்டத்தை ஆதார மாக வைத்தே வாழுகிறார்களே, பிழைக்கிறார்களே அவர்களுக்குத் தெரியுமா? என்றால், தெரியாது.

நெருக்கடி காலத்தில் 

ஒரே ஒரு நன்மை ஏற்பட்டது

நெருக்கடி காலத்தில் நமக்குப் பல தொல்லைகள் ஏற்பட்டன. அதேநேரத்தில், ஒரே ஒரு நன்மை நெருக்கடி காலத்தில் ஏற்பட்டது. அதுதான் 51-ஏ(எச்) பிரிவு.

அந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நாம்தான் சொல்கிறோம் - இப்பொழுதுகூட செய்தியாளர்களிடம் விளக்கிச் சொன்னோம். அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) பிரிவில், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமைகள் என வரையறுத்திருக்கிறார்கள்.

நம்முடைய கூட்டங்களில்தான், அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இதுபோன்ற வரிகளை எடுத்துச் சொல்லி, இதுபோன்ற ஒன்று இருக்கின்றது என்று தெரியப்படுத்தியதே நாம்தான்.

பல உயிர்களைப் பலி கொடுத்திருக்கின்றோம்!

அரசியலுக்குப் போகாதவர்கள் நாம்; ஒரு கால கட்டத்தில் இதே அரசமைப்புச் சட்டத்தை எரித்து சிறைக்குப் போனவர்கள் மட்டுமல்ல - பல உயிர்களைப் பலி கொடுத்திருக்கின்றோம்.

அரசமைப்புச் சட்டத்தின் மேன்மையான பகுதியை யும் நாம பரப்புகின்றோம்; தவறான பகுதிகளையும் நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

பல கூட்டங்களில் சொன்னதுபோன்ற, 

 It shall be the duty of every citizen of India

ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை!

வேறு கடமைகளைவிட, இந்தக் கடமைதான் அடிப்படையான கடமை - இதை மாற்ற முடியாது.

to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform;

‘‘அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம் வளர்க்கப் படவேண்டும்;, கேள்வி கேட்கவேண்டும், சீர்திருத்த வேண்டும், மாற்றத்தை உண்டாக்கவேண்டும்'' என்று  தெளிவாக இதில் சொல்லப்பட்டு இருக்கிறது.

அறிவியல் மனப்பான்மையை நாம் உருவாக்குகின்றோம்!

அந்த வார்த்தைகளை அப்படியே எடுத்து விட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக் கடமைகள், 51-ஏ(எச்) அரசமைப்புச் சட்டப் பிரிவு எல்லாவற்றையும் விட்டுவிட்டு - திராவிடர் கழகத்தின் நோக்கம் என்ன? திராவிடர் கழகத் தினுடைய பணி என்ன? பகுத்தறிவாளர் கழகத் தினுடைய பணி என்ன? என்றால், மேற்சொன்ன 51-ஏ(எச்) பிரிவுதான் -  அந்தப் பணியைத்தான் நாம் செய்கிறோம். அறிவியல் மனப்பான்மையை நாம் உருவாக்குகின்றோம்.

அய்ந்து பேர்தான் மிகவும் முக்கியம் என்றார் தந்தை பெரியார்!

தந்தை பெரியார் அவர்கள், மக்களுக்கு விளக்கு வதற்காகச் சொன்னார்.

‘‘நான் யாரையும் துணையாகக் கொண்டு போக மாட்டேன். எனக்கு ஒரு அய்ந்து பேர்தான் மிகவும் முக்கியமானவர்கள்'' என்றார்.

எல்லோரும் நினைத்தார்கள், பெரியாருக்கே அய்ந்து பேர் முக்கியமானவர்களா? பஞ்ச பாண்டவர்களா? என்று ஒரு சிலரும், ‘பஞ்ச பூதங்கள்' என்று இன்னும் சிலரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கேள்வி கேட்கும் திறன்தான்  நம்மை மனிதர்களாக  உயர்த்தி இருக்கிறது

அந்த அய்ந்து பேர் எதுவென்று பெரியார் சொன்னார்:

ஏன்? எப்படி? எதனால்? எப்பொழுது? யாரால்?

Why? How? What? When? Who?

இந்தக் கேள்விதான் இன்றைக்கு நம்மை மனிதர்களாக உயர்த்தி இருக்கிறது.

இந்தக் கேள்வி இல்லையென்றால், இதோ நான் பேசுகின்ற ஒலிபெருக்கி உண்டா?

இந்தக் கேள்வி இல்லையென்றால், இந்த நிகழ்வுகளைப் பதிவு செய்கின்ற வீடியோ உண்டா?

இந்தக் கேள்வி இல்லையென்றால், உங்கள் கைகளில் இருக்கின்ற செல்போன் உண்டா?

ஆகவே, இயல்பானவற்றை நாம் விளக்கிச் சொல்லவேண்டி இருக்கிறது.

இரண்டு தத்துவங்களுக்கிடையேதான் போராட்டம்!

இரண்டு தத்துவங்களுக்கு இடையேதான் இப் பொழுது போராட்டம்!

நம்பு! நம்பு!! நம்பு!!

இதுதான் மதம்! இதுதான் கடவுள்! இதுதான் வேதம்! 

நம்பு! நம்பு!! நம்பு!!! மூன்றே வார்த்தை!

அதற்கு நேர் எதிரானது பகுத்தறிவு!

நம்பாதே! நம்பாதே!! நம்பாதே!!!

நம்பாதே என்று சொன்னவுடன், அங்கே பகுத்தறிவு வேலை செய்யத் தொடங்கிவிட்டது.

இங்கே குழுமியிருக்கும் 200 பேரில், தந்தை பெரியார் அவர்களின் உரையை நேரில் கேட்ட வாய்ப்பைப் பெற்றவர்கள் 10 பேர் இருக்கிறீர்கள்.

மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தைக் 

கொடுத்தவர் தந்தை பெரியார்!

அய்யா அவர்கள் தன் உரையைத் தொடங்கும் முன்னரே, ‘‘நான் சொல்லுகிறேன் என்பதற்காக நீங்கள் நம்பக்கூடாது. நான் இவ்வளவு பெரிய ஆள் என்பதி னாலும் நான் சொல்லுவதை நம்பக்கூடாது நீங்கள்'' என்று சொல்வார்.

பிறகு, அவர் மூன்று மணிநேரம் உரையாற்றிவிட்டு, ‘‘என்னுடைய அறிவுக்குச் சரின்னு பட்டவற்றை நான் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால், எடுத்துக் கொள்ளுங்கள்; இல்லையென்றால் தள்ளி விடுங்கள்'' என்று சொல்லி, மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தைக் கொடுத்தார்.

பகுத்தறிவாளர் கழகத்தினுடைய 

தனிச் சிறப்பு!

தந்தை பெரியாரைத் தவிர, வேறு யாராவது இதுவரையில், மகாத்மாக்கள், ரிஷிகள், ஜீவன்முக்தர்கள், அவதாரங்கள் யாராக இருந்தாலும், அவர்களில் யாராவது ஒருவர், அறிவுச் சுதந்திரத்தை, கேட்கின்ற மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார்களா? இதுதான் பகுத்தறிவாளர் கழகத்தினுடைய தனிச் சிறப்பாகும்!

(தொடரும்)



No comments:

Post a Comment