மருந்தாளுநர்களின் பிரச்சினை 'குரங்குகளின் கைகளில் பூமாலை' ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்பாடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

மருந்தாளுநர்களின் பிரச்சினை 'குரங்குகளின் கைகளில் பூமாலை' ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்பாடு!

பழ.பிரபு

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை ஒன்றிய பா.ஜ.க., அரசு அமைத்தது . அந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட நிலையிலும் ஒன்றிய அரசு பிடிவாதமாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைத்தது. இது ஏற்படுத்தி வரும் கோளாறுகளும் குளறுபடிகளும் சொல்லி மாளாது - இந்த நிலையில் ஒன்றிய பா.ஜ.க அரசின் பார்வை இப்போது மருந்தாளுநர்களை நோக்கி திரும்பி உள்ளது.

நடைமுறையில் இருக்கும் இந்திய பார்மசி கவுன்சில் அமைப்பிற்கு முடிவு கட்டி தேசிய மருந்தாளுநர் ஆணைய வரைவு மசோதாவை - 2023 பொதுமக்களின் மக்களின் கருத்துகளை கேட்கும் வகையில் அதனை ஒன்றிய சுகாதார அமைச்சகம் கடந்த 10-ஆம் தேதி அதன் வலைத்தளத்தில் பதிவேற்றியது . 75 ஆண்டுகள் பழைமையான, நடை முறையில் இருந்த மருந்தியல் சட்டம் 1948-அய் ரத்து செய்து, இந்திய மருந்தாளுநர் ஆணையத்துக்கு பதிலாக தேசிய ஆணையம் அமைக்க வகை செய்யும் முயற்சிக்கு இந்தியா முழுவதும் உள்ள மருந்தாளுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .குறிப்பாக அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கமும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டக் களத்தில் குதிக்கவும் திட்டமிட்டுள்ளனர். மருந்தியல் கல்வி மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக இந்த அமைப்பு தேவைப்படுகிறது என்று அரசு கூறுகிறது; அத்துடன் மருந்தியல் நெறிமுறைகள் மற்றும் பதிவு வாரியத்தால், பெயர், முகவரி, மருந்தாளுநரின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தகுதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட இதர விவரங்களைக் கொண்ட ஆன்லைன் மற்றும் நேரடி தேசிய மருந்தாளுநர் பதிவேட்டை (என்.பி.ஆர்) பராமரிக்க வேண்டும் என்று வரைவில் கூறப்பட்டுள்ளதுடன், தேசிய மருந்தாளுநர் பதிவேட்டை மருந்தியல் நெறிமுறைகள் மற்றும் பதிவு வாரியம் அதன் வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கூறுவதோடு ஒவ்வொரு மாநில மும், மாநில மருந்தாளுநர் தொழில்முறை பதிவேடு மற்றும் மாநில மருந்தாளுநர் பதிவேட்டை குறிப்பிட்ட டிஜிட்டல் வடிவத்தில் பராமரித்து தவறாமல் புதுப்பிக்கவேண்டும் என்றும் மசோதா முன்மொழிந்து உள்ளது.

இந்த மசோதாக்களை ஊன்றிப் படித்து கருத்து தெரிவிக்கும் மருந்தாளுநர்கள் இதை எதிர்ப்பதற்கான பின்வரும் காரணிகளை சுட்டிக் காட்டுகின்றனர்.

அதிகாரக் குவியலை ஊக்குவிக்கிறது 

இந்த மசோதாவின் மய்யப்படுத்தப்பட்ட அதிகாரத்தினால் பணியாற்றும் இந்த ஆணையம் மருந்தாளுநர்களின் தொழில் முறை சுதந்திரத்தைப் பறிக்கலாம் என்றும் இந்த ஆணையம் மருந்தாளுநர்களின்

நலன்களைப் பாதுகாக்காமல், அரசின் நலன்களைப் பாதுகாக்க முயற்சிக்கலாம் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்

மருந்தியல் கல்வியில் மாற்றம்

இந்த மசோதாவில் மருந்தியல் கல்வியின் பாடத்திட்டம், தரநிலைகள் மற்றும் பதிவுக் கல்வியின் செலவு அதிகரிக்கக் கூடும் என்கிறார்கள். புதிய பாடத்திட்டம் மற்றும் தரநிலைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு கூடுதல் செலவுகளை ஏற்படுத்தலாம். இது மருந்தியல் படிப்புகளின் கட்டணத்தில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்பதுடன் மருந்தியல் கல்வியின் நெகிழ்வை குறைப்பதுடன் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு தங்கள் திட்டங்களை தங்கள் குறிப்பிட்ட தேவை களுக்கு ஏற்ப மாற்றியமைக்க குறைவான சுதந்திரத்தை வழங்கும் ஆபத்து இருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர். 

மருந்தாளுனர்களின் ஊதியம் மற்றும் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும்

மசோதாவில் பரிந்துரைக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நிர்வாகச் செலவுகள் காரணமாக, மருந்தாளுநர்களின் ஊதியம் குறைந்து, வேலைவாய்ப்புகள் குறைவதுடன் மருந்தின் விலைகளும் அதிகரிக்கும். அத் துடன் மருந்தாளுநர்களின் தொழில்முறை சுதந்திரம் கட்டுப்படுத்தப்படலாம்.என்கிற அச்சத்தையும் வெளிப் படுத்துகின்றனர்

தேசிய மருந்தாளுநர் ஆணைய வரைவு மசோதாவை -2023 பொதுமக்களின்  கருத்து கேட்பிற்காக இணையத்தில் வெளியிட்ட நாள் முதல் இந்தியா முழுமையும் உள்ள மருந்தாளுனர்கள் கடுமையான எதிர்ப்பு களை பதிவு செய்து வருகின்றனர். மருந்தாளு நர்களின் பல்வேறு சங்கங்கள் போராட்டக் களத்தில் குதிக்கவும் முடிவு செய்து உள்ளனர் . குரங்குகளின் கைகளில் சிக்கிய பூமாலை போல் ஒன்றிய பா.ஜ.க அரசின் கைகளில் மருந்தாளுநர்களின் வாழ்வு சிக்குண்டு சினனபின்னமாகப் போகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.


No comments:

Post a Comment