கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மேம்பாட்டுக்காக ஜெர்மனியுடன் தமிழ்நாடு உயர் கல்வித்துறை ஒப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மேம்பாட்டுக்காக ஜெர்மனியுடன் தமிழ்நாடு உயர் கல்வித்துறை ஒப்பந்தம்

சென்னை,  நவ. 29 - கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்புக்காக ஜெர்மனி உயர்கல்வி நிறுவனங்களுடன், தமிழ்நாடு உயர்கல்வித் துறை சார்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயர்கல்வி சார்ந்து ஜெர்மன் மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (28.11.2023) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார்.

அதன்பின் உயர்கல்வித் துறை செயலர் ஏ.கார்த்திக், ஜெர்மன் நாட்டின் சாக்சோனி மாநில அமைச்சர் செபாஸ்டின் ஜெம்கோ ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்மூலம் கல்வி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக சாக்சோனி நகரத்தில் உள்ள 12 பல்கலைக் கழகங்களுடன், தமிழ் நாடு உயர்கல்வித் துறை இணைந்து செயல்பட உள்ளது.

அதன்பின் அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்த திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், `நான் முதல்வன்' திட்டத்தை முதலமைச்சர் ஆரம்பித்தார். மேலும், மற்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் கல்வி சார்ந்த தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அதன்படி சிங்கப்பூர், இங்கிலாந்து கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தற்போது ஜெர்மன் நாட்டுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மொழியை 814 பேர் படித்துள்ளனர். தற்போது 165 பேர் படிக்கின்றனர். அவர்களுக்கு ஜெர்மனியில் வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளன. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நமது உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும், வேலைவாய்ப்புகளைப் பெறவும் இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment