ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசு தயங்கும் இரகசியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசு தயங்கும் இரகசியம்!

சமூக பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-2012 இன் கீழ் சேகரிக்கப்பட்ட ஜாதித் தரவை வெளியிடுவதில் இருந்து ஒன்றிய பிஜேபி அரசு தன்னைத் தவிர்த்துள்ளது.

கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களில்  பிழைகளை மேற்கோள் காட்டி, பொருளாதாரத் தரவுகளை வெளியிடும்போது, புதிய சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பு பற்றிய தகவல்களை ஒன்றிய பிஜேபி அரசு தவிர்த்துள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நாடு தழுவிய ஜாதிக் கணக்கெடுப்புக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

ஆனால் ஒன்றிய பிஜேபி அரசு பின் வாங்குகிறது.

"தி டெலிகிராப்" இதழின் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்  - 2011-2012 சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்புக்கான நோடல் அமைச்சகம் - புதிய கணக்கெடுப்பு நடத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த விவரங்களை அளிக்குமாறு கோரப்பட்டது.

ஒன்றிய பிஜேபி அரசு அளித்த பதிலில், "சமூக பொருளாதார மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011க்குப் பிறகு புதிதாக புள்ளிவிவரம் சேகரிக்கும் கணக்கெடுப்புப்பணி தொடங்கப்படவில்லை" என்று  கூறியுள்ளது. 

மேலும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட சமூக - பொருளாதார நிலைகள்குறித்த புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள்குறித்த கேள்விக்கு அமைச்சகம் அளித்த பதிலில், அந்தக் கேள்வி பொருந்தாது என்று பதில் அளித்துள்ளது.

ஓட்டு மொத்தமாக பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு,  2011-2012இன் கீழ் சேகரிக்கப்பட்ட ஜாதித் தரவுகளை, பொருளாதாரத் தரவுகளை வெளியிடும் போது, 'பிழைகள்' என மேற்கோள் காட்டி, தரவுகளை வெளியிடுவதை ஒன்றிய அரசு தவிர்த்துள்ளது.

பீகார் உட்பட பல மாநில அரசுகள் புதிதாக எடுத்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்களை கோரியபோதிலும், அவற்றை அளிக்காமல் ஒன்றிய அரசு அமைதி காத்துள்ளது. 

பீகார் அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு இந்தக் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.  பீகார் கணக்கெடுப்பின் முடிவுகளைத் தொடர்ந்து, பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மொத்த இடஒதுக்கீட்டை தற்போதுள்ள 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் சட்ட முன் வடிவை சட்டப் பேரவையில் அம்மாநில அரசு நிறைவேற்றியுள்ளது.

2024இல் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.  

அகில இந்திய ஓபிசி பணியாளர்கள் கூட்டமைப்பு என்ன கூறுகிறது?  “எதிர்காலக் கொள்கைக்கான துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கு நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது. நாட்டில் உள்ள ஓபிசிகள் குறித்து முழுமையான தரவுகள் இப்போது இல்லை. ஓபிசி குறித்த கணக்கெடுப்பின்மூலம் முழுமையான தகவல்கள் இருந்தால்தான் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்குரிய  பிரதிநிதித்துவத்தை அவர்கள் பெற முடியும். அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜாதிவாரியான கணக்கெடுப்புக்கு தாங்கள் எதிராக இல்லை என்று கூறியபோதிலும், அதை உறுதிப்படுத்துகின்ற நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் தவறாக இருந்தால், ஒன்றிய அரசு புதிதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதை யாரும் தடுக்கப்போவதில்லை. மேலும், பீகாரில் ஓபிசி இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தங்களின் இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்”  என்று கூறுகிறது. 

'ஜாங்கிர் பிராமிண் மகாசபா' அமைப்பைச் சேர்ந்த சஞ்சய் ஹர்ஷ்வால் கூறுகையில், "பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப்பின்னர் நாடுதழுவிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிவிட்டது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் இடஒதுக்கீடு கொள்கை ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி சீரமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறாதவர்களுக்கும் அந்த வாய்ப்புகள் கிடைக்கும்" என்று கூறுகிறது அ.இ.ஓ.பி.சி. பணியாளர்கள் கூட்டமைப்பு.

ஜாதிவாரி கணக்கெடுப்போடு பொருளாதார நிலையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தால், பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு ஜாதியும் காரணமாக இருக்கிறது என்ற உண்மையும் வெளிவந்து விடும்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 

10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஒன்றிய பிஜேபி அரசின் சூழ்ச்சித் திட்டமும் தூள் தூளாகி விடுமே!

இடஒதுக்கீட்டில் பாரதிய ஜனதா என்பது பார்ப்பன ஜனதாதான் என்பது தெரிய வந்தால் தமிழ் மண்ணில் ஒலிக்கும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எதிரொலிக்குமே!

அந்த அச்சம்தான் பார்ப்பன ஜனதா கட்சியின் அணுக்களை எல்லாம் உலுக்கி எடுக்கிறது. நாட்டில் நடப்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே என்று சொன்னாரே தந்தை பெரியார் - அதைக் காலம் தாழ்ந்தாவது பார்ப்பனர் அல்லாதார் புரிந்து கொள்ளட்டும்!

 

No comments:

Post a Comment