ஆசிரியர் துணையோடு - நம்முடைய முதலமைச்சர் துணையோடு ஆரியத்தை வேரறுப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 6, 2023

ஆசிரியர் துணையோடு - நம்முடைய முதலமைச்சர் துணையோடு ஆரியத்தை வேரறுப்போம்!

தனது தள்ளாத வயதிலும் மூத்திரச் சட்டியை சுமந்து கொண்டு நமக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். அதேபோல், இந்த குலத்தொழில் திணிப்பை எதிர்த்துப் பேச தமிழர் தலைவர் ஆசிரியர் இங்கே வந்திருக்கிறார். ராஜாஜி சொன்னது போல் குலத்தொழிலை மட்டும் நாம் செய்திருந்தால், இன்று நமது பிள்ளைகள் மருத்துவர்கள் ஆகியிருக்க மாட்டார்கள்; பொறியாளர்கள் ஆகியிருக்க மாட்டார்கள்; செவிலியர்கள் ஆகியிருக்க மாட்டார்கள். அந்தந்த ஜாதித்தொழிலை மட்டும் தான் செய்து கொண் டிருந்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு எல்லோரும் மருத்துவர்கள் ஆகியிருக்கிறார்கள்;  பொறியாளர் ஆகி யிருக்கிறார்கள்;  செவிலியர் ஆகியிருக்கிறார்கள். இப்படி எல்லோருக்கும் திறமை இருக்கிறது என்று நம் கை பிடித்து அழைத்து வந்தது நம்முடைய திராவிடர் கழகம்; தந்தை பெரியார்! நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்; நம்முடைய கலைஞர்! 

ஆனால், ஒன்றிய அரசு என்ன சொல்கிறது? உன்னு டைய குலத்தொழிலைக் கற்றுக்கொண்டால் உனக்கு நிதி தருவேன் என்கிறது. எது வேண்டும்? எது வேண்டாம்? என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்! ‘‘எல் லோருக்கும் எல்லாம்'' என்கின்ற சமூகநீதிப் பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். பெண்களாகிய எங்களைப் பற்றி பெரியார் கூடுதலாகவே சொல்வார். அந்தப் பாதையில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். 

90 வயதில் இந்த சமூகத்திற்கு, இந்த மண்ணிற்கு ஒரு மாறுதலை ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ஒன்றிய அரசை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும் என்றும், இந்த மண்ணில் சமூகநீதி, சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் ஆசிரியர் அய்யா அவர்கள் பாடுபட்டு வருகிறார். இப்போது அவர் நடந்து வருகிறார், நான் ஓடி வருகிறேன்; அண்ணன் வேங்கை மாறனும் ஓடி வருகிறார். நாம் ஆரியத்தை இங்கே ஒழித்துக்கட்டிவிட்டோம். ஆனால், மீண்டும் ஏதோ ஒரு கிளை முளைத்து வருகிறது. ஆசிரியர் துணையோடு; நம்முடைய முதலமைச்சர் துணையோடு அதை வேரறுப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்! 

மானாமதுரை சட்டமன்ற உறுப்பினரும், 

மேனாள் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சருமான 

ஆ. தமிழரசி ரவிக்குமார், 

திருப்புவனம், 5.11.2023

No comments:

Post a Comment