தூத்துக்குடி: மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் பரப்புரை கூட்டத்தில் தமிழ்நாடு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

தூத்துக்குடி: மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் பரப்புரை கூட்டத்தில் தமிழ்நாடு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் உரை

எப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான திட்டங்களை, கொள்கைகளை ஒன்றிய அரசு கொண்டு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் அவற்றை எதிர்த்து முதல் குரல் கொடுப்பவராக நம்முடைய மானமிகு ஆசிரியர் அய்யா  அவர்கள் இருக்கிறார்!

தாய்க்கழகத்தின் வழியிலேயே நாமும் செயல்பட்டு, அதிலுள்ள உண்மைகளை மக்களிடையே பரப்பவேண்டும்!


தூத்துக்குடி, நவ.3  எப்பொழுதெல்லாம் தமிழ் நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான திட்டங்களை, கொள்கைகளை ஒன்றிய அரசு கொண்டு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் அவற்றை எதிர்த்து முதல் குரல் கொடுப்பவராக அல்லது அதில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுபவராக நம்முடைய மானமிகு ஆசிரியர் அய்யா  அவர்கள் இருக்கிறார். தாய்க்கழகம் அதை எடுத்துச் சொல்லும்பொழுது, அதன் வழியிலேயே நாமும் செயல்பட்டு, அதிலுள்ள உண்மைகள் மக்களிடையே பரப்பவேண்டும் என்றார் தமிழ்நாடு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள்.

தூத்துக்குடியில் இரண்டாம் கட்டப் பிரச்சாரம்

கடந்த 2.11.2023 அன்று மாலை குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்து  மனுதர்ம யோஜனா எதிர்ப் புப் தொடர் பரப்புரை பயணம் இரண்டாம் கட்ட பிரச்சாரமாக தூத்துக்குடியில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

அக்டோபர் 25 நாகையில் தொடங்கி 
நவம்பர் 5 மதுரையில் நிறைவு விழா!

அக்டோபர் 25 ஆம் தேதி நாகையில் தொடங்கி, நவம்பர் 5 ஆம் தேதி மதுரையில் நிறைவு பெறவுள்ள குலத்தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மனுதர்ம யோஜனா திட்டத்தை எதிர்த்து இரண்டாம் கட்டமாக தூத் துக்குடி நகரத்தில் நடைபெறும் இந்தப் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை நல்குவதற்காக வருகை புரிந்துள்ள தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களே, மற்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள திராவிடர் கழகப் பொறுப் பாளர்களே, திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பா ளர்களே, அனைத்துக் கட்சி இயக்கப் பொறுப் பாளர்களே, முன்னோடிகளே, செயல்வீரர்களே, சகோதரர்களே, சகோதரிகளே, பெரியோர்களே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களே உங்கள் அனைவரும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவசரக் கதியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது!

குலத்தொழிலைத் திணிக்கும் ஒரு திட்டத்தை, தேர் தலை நோக்கி, அவசரக் கதியில் ஏதாவது ஒன்றை அறிவிக்கவேண்டும் என்ற வகையில், பா.ஜ.க.வினர் இதை அறிமுகப்படுத்தி இருக் கிறார்கள்.

ஒன்றிய அரசினுடைய பிரதமர் மோடி அவர் கள் அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் காட்சியை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள்; சுவற்றில் நான்கு செருப்புகள் மாட்டி வைக்கப் பட்டுள்ளன; செருப்புத் தைக்கின்ற ஒருவரை அலங்காரமான ஓர் இடத்தில் அமர வைத்திருந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்த்தால் மிகவும் வருத்தமாக இருந்தது.

அதைப் பார்த்தவுடன், அவர்களுடைய நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை நமக்குப் புரிய வைத்தது.

செருப்பு தைக்கின்றவர் பிள்ளை செருப்புத்தான் தைக்கவேண்டும்; சவரத் தொழில் செய்கின்றவரின் பிள்ளை சவரத் தொழில்தான் செய்யவேண்டும்; மண் பாண்டம் செய்கின்றவரின் பிள்ளை மண்பாண்டத் தொழிலைத்தான் செய்யவேண்டும்; ஆடு மேய்ப்பவரின் பிள்ளை, ஆடுதான் மேய்க்கவேண்டும் என்கிற ஒரு நவீன குலத்தொழிலை விஸ்வகர்மா யோஜனா என்ற மனுதர்ம யோஜனா திட்டத்தை ஒன்றிய அரசு இப்பொழுது கொண்டு வந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் குலத்தொழிலை ஒழித்துக் கட்டியது திராவிட இயக்கங்கள்தான்!

குலத்தொழிலை எதிர்த்து தமிழ்நாட்டில் இன்றைக்கு இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்ததற்கு திராவிட இயக்கங்கள்தான் காரணம்.

நம்முடைய மக்கள் கல்வியில் முன்னேறவேண்டும்; கல்விக்கேற்ற வேலை வாய்ப்பைப் பெறவேண்டும்; எல் லோரும், எல்லா வேலைகளையும் செய்யலாம் என்கிற ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடாகும்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியில், பகுத்தறிவுப் பகலவனுடைய எண்ணங்களை, சிந்தனைகளை நமக்கு எடுத்துக் கூறிய கருத்துகளை அப்படியே பின்பற்றி, பண்படுத்தப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

ஆனால், இப்பொழுது ஒன்றிய அரசு திட்டமாக திணிக்கப்பட்டுள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஓர் இடத்தில், நான்கு செருப்புகளை சுவரில் மாட்டி வைத்து, ஒருவரை அங்கே அமர வைத்துள்ளதைப் பார்க்கும்பொழுது நமக்கெல்லாம் பகீரென்கிறது.

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின்
மறைமுக அஜெண்டாவில் ஒன்று!

ஆகவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு குலத்தொழிலைக் கொண்டு வருவது என்பது மறைமுகமாக அவர்களு டைய அஜெண்டாவின் ஓர் அங்கம் என்பதை அந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியே பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.

ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத் தைப்பற்றி இணைய தளத்தில் பார்த்தேன். இந்தத் திட் டத்தில் பயனடையவேண்டுமானால் ஆதார் அட்டை யும், ஜாதிச் சான்றிதழும் வேண்டும் என்று பதியப்பட்டு இருந்தது.

ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான் திராவிட இயக்கக் கொள்கை!

ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான் நம்முடைய திராவிட இயக்கக் கொள்கை யாக இருக்கிறது; அதையே நாமும் வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால்,  மனுதர்ம யோஜனா என்ற திட்டத்தில், ஜாதிச் சான்றிதழும் இணைக்கப்படவேண்டும் என்ற ஒரு விதியையும் அதில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

எதற்காக ஜாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.

கைவினைஞர்கள் என்று நீங்கள் போட்டிருந்தால், அது வேறு; அதை வேறு மாதிரியாக நீங்கள் கொண்டு போயிருக்கவேண்டும்.

ஆனால், இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியே உங்களுடைய நோக்கத்திற்காக மட்டுமே செய்கிறீர்கள் என்பதை  வெளிக்காட்டியது. அதை நாமெல்லாம் எதிர்த்தோம்.

நாம் என்ன சொன்னாலும், அவர்கள் காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை.

அவர்களுடைய சித்தாந்தம், அவர்களுடைய கொள்கைகளைத் திணிக்கவேண்டும்; பரப்புவதற்கு என்றுகூட சொல்ல முடியாது; திணிக்கவேண்டும் என்கிற நோக்கத்திலேயே செயல்பட்டு வருகிறார்கள். ஒன்றிய அரசும் சரி, மாநிலத்தில் இருக்கின்ற பா.ஜ.க. வினராக இருந்தாலும் சரி எதையும் திணிப்பதே அவர்களின் நோக்கம்.

தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் இடைஞ்சல்களை தருகிறார்கள்!

எந்த அளவிற்கு நம்முடைய தமிழ்நாடு அரசுக்கு, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் தளபதியாருடைய அரசுக்கு இடைஞ்சல் தர முடியுமோ அவர்கள் எல் லாமும் அதே நோக்கத்தோடுதான் செய்கிறார்கள்

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு நல்லது என்று சொல்கிறார்களே என்பதுதான் நம்மை வருத்தமடையச் செய்கிறது. இதற்கு ஓர் உதாரணம், ஒரு கூட்டத்தில் பூணூல் மாட்டினார்கள். எதனால்? பூணூல் போட்டார்கள் என்றால், எல்லோரும் நல்லவர்களாகி விடுவார்களா? என்றால், இல்லையே!

அப்படியென்றால், ஏன் பூணூல் அணிவிக்கிறீர்கள்?

அந்தக் கூட்டத்தினுடைய உள் அர்த்தம் என்ன வென்று யோசித்துப் பார்க்கவேண்டும்.

ஏதோ அரசியல் செய்யவேண்டும் என்பதற்காக, திராவிடப் பாரம்பரியம் என்று சொல்கிறார்கள், ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்துகிறார்கள் - திராவிடக் கொள்கை என்று சொல்கிறார்கள் - தாய்க்கழகம் திராவிடர் கழகம் என்று சொல்கிறார்கள் - இவற்றிற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும் என்பதற்காக தவறான புரிதலோடு வழிநடத்துகின்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

முதல் எதிர்ப்புக் குரல் கொடுப்பவர் நம்முடைய ஆசிரியர் அய்யா!

அவற்றையெல்லாம் எதிர்த்து முதல் குரல் கொடுப்ப வராக நம்முடைய மானமிகு ஆசிரியர் அய்யா  அவர் கள் இருக்கிறார். முதல் எதிர்ப்புக் குரலோ அல்லது அதில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுபவராகவோ ஆசிரியர் அய்யா அவர்கள் இருக்கிறார்.

ஆகவே, தாய்க்கழகம் அதை எடுத்துச் சொல்லும் பொழுது, அதன் வழியிலேயே நாமும் செயல்பட்டு, அதி லுள்ள உண்மைகளை மக்களிடையே பரப்பவேண்டும்.

திராவிடர் கழகப் பயிற்சிப் பட்டறைகள்!

அதேபோல, திராவிடர் கழகத்தின் சார்பாக நடை பெறும் பயிற்சிப் பட்டறைகள்.  அதில் பயிற்சி கொடுக்கும் முறை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். ஏனென் றால், அவ்வளவு சிரமப்பட்டு  தயார்படுத்துகிறார்கள். மேடையில் உரையாற்றுவது, எழுதுவது போன்ற பயிற்சிகளை மிக அருமையாகக் கொடுக்கிறார்கள்.

எந்தத் தொழில் செய்தாலும் அய்ந்து சதவிகித வட்டியுடன் வங்கியில் கடன் கொடுக்கலாமே!

சரியான  நேரத்தில் ஒன்றிய அரசின் குலத்தொழிலை திணிக்கின்ற திட்டத்திற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக் கின்றோம். குறைந்த வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். எந்தத் தொழிலைச் செய்தாலும், அய்ந்து சதவிகித வட்டியுடன் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்கிற திட்டத்தைக் கொண்டு வாருங்களேன். 

எதற்காக ஜாதி சான்றிதழை இணைக்கவேண்டும்; கைவினைஞராக இருக்கவேண்டும்; பாரம்பரிய குலத் தொழிலாக இருக்கவேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள்?

ஆகவே, ஒன்றிய அரசின் இந்தத் திட்டம் எதிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். 

வெளிப்படையாகவே வன்முறையை அவர்கள் தூண்டிவிடுகிறார்கள்!

அவர்களின் சித்தாந்தத்தைப் புகுத்துகின்றார்கள்; சித்தாந்தத்தைப் பின்பற்றவில்லையா? வெளிப்படை யாகவே வன்முறையை அவர்கள் தூண்டிவிடுகிறார்கள்.

அடித்துக் கொலை - அடித்து சித்திரவதைச் செய் யப்பட்டான் என்கிற வார்த்தையை கடந்த 10 ஆண்டு களாகத்தான் நாம் கேட்கின்றோம். முன்பெல்லாம் ஒரு மனிதனை, இன்னொரு மனிதன் அடிப்பதற்கு உரிமை இல்லை என்றுதான் நம்முடைய தமிழ்நாடு நம்மைப் பண்படுத்தி வளர்த்திருக்கிறது.

ஒருவர் ‘ஜெய் சிறீராம்' என்று சொல்லவில்லையா - அடித்து சித்திரவதைதான்!

‘ஜெய் சிறீராம்' என்று சொல்லவில்லையா? அவனை அடித்து, சித்திரவதை செய்யவேண்டும் என்கிற ஓர் எண்ணமே ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. 

அதற்கு நாம் சரியான எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும்; இந்தப் பரப்புரை இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது.

ஆசிரியர் அய்யாவின் சிறப்பான பணி!

ஒன்றிய அரசின் திட்டத்தினால், சமுதாயம் எப்படி சீர்கெட்டுப் போகும் என்பதை எடுத்துச் சொல்லவேண்டி இருக்கிறது. அருமையான அந்தப் பணியை நம்முடைய மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள் செய்து வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் எனக்கும் வாய்ப்புக் கொடுத்தமைக் காக திராவிடர் கழக நிர்வாகிகளுக்கும், அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment