கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி

 தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்! 

அது நடைப்பயணம் அல்ல- அதுதான் பாரதீய ஜனதாவினுடைய இறுதிப் பயணம்! 

கோபிச்செட்டிப்பாளையம், நவ.1  தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக நடைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அவர் விளம் பரத்திற்கு நாம் உதவி செய்யவேண்டும்! அவருடைய நடைப்பயணத்தை ஒரு சில குறிப்பிட்ட ஏடுகள்தான் பொருட்படுத்துகின்றனவே தவிர, அது நடைப்பயணம் அல்ல- அதுதான் பாரதீய ஜனதாவினுடைய இறுதிப் பயணம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (31.10.2023) காலை தொடர் பரப்புரைப் பயண நிகழ்விற்காக நம்பியூருக்குச்  சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

ஒன்றியத்தில் இருக்கக்கூடிய மோடி அரசு, தங் களுடைய ஆட்சிக்காலம் முடிவடையக்கூடிய கால கட்டத்தில், நாடாளுமன்றத்தில், மற்ற இடங்களில் எல்லாம் வைத்து விவாதிக்காமல், ''விஸ்வகர்மா யோஜனா'' என்ற பெயரால் குலத்தொழில் கல்வித் திட்டத்தை மீண்டும் தொடங்குவதுபோல, அவர்கள் தந்திரமாக இப்பொழுது கைவினைஞர்களுக்கு உதவி என்ற பெயராலே - யார் யாரெல்லாம் செருப்புத் தைத் தல், துணி வெளுத்தல், முடி வெட்டுதல் இப்படிப்பட்ட ஜாதித் தொழிலாகப் பார்த்து, பாரம்பரியமாக அதைச் செய்யக்கூடியவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயை நாங் கள் கடன் உதவியாகக் கொடுப்போம் என்று சொல் கிறார்கள்.

அதுவும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், அவர்களு டைய குடும்பத்தினரோடு அந்தத் தொழிலை செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான், ஒரு லட்சம் ரூபா யைக் கடனாகக் கொடுக்க முடியும் என்று சொல்லி யிருக்கிறார்கள்.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே எங்களுடைய சுற்றுப்பயணம்!

இந்தியா முழுவதும் மீண்டும் ஜாதி, வருணாசிரமம், ஸநாதனத்தைப் புதுப்பிப்பதற்காக இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். அதனுடைய சூழ்ச்சியை இன்னும் மக்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ப தற்காகத்தான் எங்களுடைய தொடர் சுற்றுப்பயணம்.

தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன்னால், தந்தை பெரியாருடைய முயற்சியினால், திராவிட இயக்கத்தில் அறிஞர் அண்ணா போன்றவர்கள் முயற்சி எடுத்து, அன்றைக்குக் குலக்கல்வித் திட்டத்தை விரட்டியடித்த காரணத்தினால், ஆச்சாரியார் ஆட்சியே மாறியது.

அந்த இடத்திற்குக் கல்வி வள்ளல் காமராஜர் அவர்கள் வந்து, மிகப்பெரிய அளவிற்குக் கல்விப் புரட் சியை செய்தார். அன்றைக்குக் குலக்கல்வித் திட்டத்தை நீக்கியதால்தான், இன்றைக்கு இவ்வளவு பேர் கல்விக் கண்ணைப் பெற்றிருக்கிறார்கள்.

மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது!

அதுவும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், இளைஞர்கள் நன்றாகப் படிக்கவேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த விழிப்புணர்வுகளையெல்லாம் மாற்றியமைக்க வேண்டும்; மீண்டும் பழைய வருணாசிரம தர்மத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான் மோடி அரசு இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றது.

விஷ உருண்டைக்கு சர்க்கரைப் பூச்சு!

அந்தத் திட்டத்தினுடைய ஆபத்து வெளியே தெரி யாமல் இருப்பதற்காக, விஷ உருண்டைக்கு சர்க்கரைப் பூச்சு பூசுவதைப்போல, அந்தத் திட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் - அதுவும் குறைந்தவட்டியில் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.

இவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லுவதற்காக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணத்தை மேற்கொள்கி றோம். கடந்த 25 ஆம் தேதி நாகப்பட்டினத்தில் தொடங்கி, பல ஊர்களில் பரப்புரைக் கூட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறோம்.

நவம்பர்5 ஆம் தேதி இந்தச் சுற்றுப்பயணம்நிறை வடையவிருக்கிறது. ஒவ்வொரு ஊரில் இரண்டு கூட் டங்களை நடத்தியிருக்கிறோம். பெருநகரங்களிலும், கிராமங்களிலும் நடைபெறும் அக்கூட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் வருகிறார்கள். அப்படி வருகின்ற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக் கின்றோம். அந்த உணர்வு இப்பொழுது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எதிரொலிக்கக் கூடிய அளவில் இருக்கிறது.

2028 ஆம் ஆண்டுவரையில் ‘விஸ்வகர்மா யோஜனா' நீடிக்கும் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது!

இப்பொழுது 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மீண் டும் நாம் ஆட்சிக்கு வருவோமோ, இல்லையோ என் பதினால், அதற்குள் இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, 2027-2028 ஆம் ஆண்டுவரையில் விஸ்வகர்மா யோஜனாஎன்றகுலத்தொழில்திட்டம்நீடிக்கும் என் றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது சர்வாதி காரமான ஒரு முடிவாகும் -  ஜனநாயகத்திற்கு விரோதம். 

இவர்களுடைய ஆட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் அது அவர்களுக்குப் புரியும், தெரியும்.

2024 ஆம் ஆண்டோடு முடியக்கூடிய ஆட்சியினர், 2028 ஆம் ஆண்டுவரை ஒரு திட்டத்தை நீடிக்கும் என்று சொல்லுவதற்கு அவர்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

ஆகவே, இப்படி அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, சமூகத்திற்கு, சமத்துவத்திற்கு விரோத மாக, சமூகநீதிக்கு விரோதமாக இப்படிப்பட்ட திட்டத் தைக் கொண்டு  வந்திருக்கிறார்கள். அவற்றை விளக்கு வதற்காகத்தான் எங்களுடைய சுற்றுப்பயணம்.

இன்றைக்கு முதல் கூட்டம் நம்பியூரில்; இரண்டாவது கூட்டம் திருப்பூரில் நடைபெறவிருக்கிறது. நாளை பழனி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. தொடர்ந்து எங்களுடைய பயணக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள்-

'இந்தியா' கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்!

செய்தியாளர்: அய்ந்து மாநிலங்களில் நடைபெறக் கூடிய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

தமிழர் தலைவர்: அய்ந்து மாநிலங்களில் நடை பெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை யில், அதிகமான வாய்ப்பு 'இந்தியா' கூட்டணிக்குத்தான் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சி போட்டியிடு கின்ற இடங்களில் அவர்கள் வெற்றி பெறக்கூடிய சூழல்தான்.

ஏனென்றால், சில மாநிலங்களில் அவர்கள் ஆளுங் கட்சியாகவே இருக்கிறார்கள். அந்த வகையில், ஒவ்வொரு மாநிலத்தில் குறிப்பாக சட்டீஸ்கராக இருந்தாலும், ராஜஸ்தானாக இருந்தாலும், மத்தியப் பிரதேசமாக இருந்தாலும், தெலங்கானாவாக இருந்தா லும், மிசோராம் போன்றவையாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக இருக்கிறது; அதாவது 'இந்தியா' கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.

தென்னாட்டைப் பொறுத்தவரையில், குறிப்பாக தெலங்கானாவில்தான் சட்டமன்றத் தேர்தல் நடை பெறவிருக்கிறது.

அங்கே இருந்து வரக்கூடிய அறிவிப்புகளும், கணிப்புகளும், அரசியல் நோக்கர்களும் தெளிவாக சொல்லுவதின்படி தேர்தலில் போட்டி என்பது அங்கே இருக்கின்ற மாநில கட்சிக்கும் - காங்கிரசு கட்சிக்கும்தான் போட்டியே தவிர, பி.ஜே.பி. களத்தி லேயே குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

தோல்வி பயத்தால்தான் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டுகிறார்கள்!

அதுவும் பல இடங்களில் தோல்வி பயம் அவர் களுக்கு அதிகமாக, அதிகமாக அமலாக்கத் துறையை வைத்து மிரட்டலாமா? அல்லது வேறு வகையான முயற்சியில் ஈடுபடலாமா? என்று அவர்கள் நடந்து கொள்வதெல்லாம் தோல்வி பயத்தால்தான் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

இதுவரையில், மணிப்பூர் பக்கமே பிரதமர் மோடி அவர்கள் போகவில்லை. உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கின்ற பிரதமர், மணிப்பூர் இந் தியாவில்தான் உள்ளது; மணிப்பூர் இன்னமும் பற்றி எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தத் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை என்று சொல்லக்கூடிய நிலையில், அந்தப் பக்கம்கூட திரும் பாமல், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

இது ஒன்றே, அவர்கள் எப்படி மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறார்கள் என்பதற்கு அடையாளமாகும்.

நோட்டாவை தாண்டுவார்களா?

செய்தியாளர்: நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்லுகின்றார்களே?

தமிழர் தலைவர்: யார் வேண்டுமானாலும் ஆசைப் படலாம். அதிலொன்றும் தவறில்லை. இவர்கள் நோட்டாவை தாண்டுவார்களா? என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.

மக்கள் ஆதரவுடன் தேர்தலை சந்திக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை!

செய்தியாளர்: நாடாளுமன்றத் தேர்தலாகட்டும், சட்டமன்றத் தேர்தலாகட்டும் வரக்கூடிய காலகட்டங் களில் குண்டுவெடிப்பு நிகழ்வுகள், அச்சுறுத்தல், தாக்குதல் இவையெல்லாம் - எதைக் காட்டுகின்றன?

தமிழர் தலைவர்: அதை அவர்கள் தங்களது அணுகுமுறையாக, வழமையாக வைத்துக் கொண் டிருக்கிறார்களே, தவிர வேறொன்றும் இல்லை.

ஒன்றிய ஆட்சியில் எந்தவிதமான ஒரு புதிய அறிவிப்புகளும் அல்லது நம்பிக்கையூட்டக் கூடியதோ எதுவும் இல்லை.

உதாரணமாக ஒன்று நெருக்கடி கொடுப்பார்கள்; அதன்படி மற்ற காரியங்களைச் செய்வார்கள்.

அவர்கள் பணத்தை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அந்தப் பணத்திற்காகக்கூட வழக்குகள் நடக்கக்கூடிய நிலை. தேர்தல் நிதி, தேர்தல் பத்திரம், பத்திரிகை பலம் - ஏனென்றால், பெருமுதலாளிகளின் கைகளில் பத்திரிகைகள், ஊடகங்கள் இருப்பதினால். அதே போன்று ஆயுதங்கள். 

அதை வைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று நினைக்கிறார்களே தவிர, மக்கள் ஆதரவுடன் தேர்தலை சந்திக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

அவர்களுக்கு முதலில் தென்மாநிலங்களில் கதவு சாத்தப்பட்டு விட்டது. இன்றைக்கு அதைத் தாண்டி, வடபுலத்திலும் அவர்களுக்கு அந்த நிலைதான்.

அய்ந்து மாநில தேர்தல்கள் என்பது அவர்களுக்கு 'திராவகப் பரிட்சை'தான்.

அது நடைப்பயணம் அல்ல- அதுதான் 

பாரதீய ஜனதாவினுடைய இறுதிப் பயணம்!

செய்தியாளர்: தமிழ்நாட்டின் பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலையின் என் மண் - என் மக்கள் நடைப்பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அவரைப்பற்றி நான் பேசு வதில்லை. அவர் விளம்பரத்திற்காக அதைச் செய் கிறார். எதற்காக அவர் விளம்பரத்திற்கு நாம் உதவி செய்யவேண்டும்?

அவருடைய நடைப்பயணத்தை ஒரு சில குறிப்பிட்ட ஏடுகள்தான் பொருட்படுத்துகின்றனவே தவிர, அது நடைப்பயணம் அல்ல- அதுதான் பாரதீய ஜனதாவினுடைய இறுதிப் பயணம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment