இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் - இந்திய நிலைப்பாடு- ஒரு பார்வை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் - இந்திய நிலைப்பாடு- ஒரு பார்வை

 எஸ். இராமநாதன்

அய்.பி.எஸ்., ஓய்வு

1. குஜராத் மற்றும் ஹிந்தி பேசும் மாநிலங்களைத் தவிர இந்தியாவைப் பற்றி இந்திய மக்களைப் பற்றி இந்திய மண்ணைப் பற்றி முழுக்கத் தெரியாத மோடி உலக அரசியலை 2014 லிருந்து கடந்த 9 ஆண்டு களாக கற்றுக் கொண்டு வருகிறார்.

2. சுதந்திரம்‌ பெற்ற இந்தியா ‌கடந்த 75 ஆண்டு களாக உலக அரங்கில் பண்டிட் நேரு அவர்களின் உலகாய்ந்த அறிவால் ஆற்றலால் இந்தியா அணிசேரா நாடுகளை சைனா துருக்கியுடன் சேர்ந்து அமைத்து வல்லரசு நாடுகளில் இருந்து ஒதுங்கி நடு நிலைமை வகித்து வந்தது.

3. அதன் பின் வல்லரசு நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் நெருக்கடி வந்த போதெல்லாம் இந்திய நன்மைக்காகவும் உலக நீதிக்காகவும் இந்தியா பொதுவாக ரஷ்யாவை ஆதரித்து வந்தது.

4. அய்க்கிய நாடு சபையில் பாகிஸ்தானை ஆதரித்தது உள்பட பல நேரங்களில் இந்தியாவிற்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்த போதெல்லாம் ரஷ்யா இந்தியாவிற்கு பாதுகாப்பாக நின்றது.

5. நேரு அவர்களால்‌ கொள்கை வழிப்படுத்தப் பட்ட காங்கிரஸ்  'மதச்சார்பற்ற சம தர்ம பொருளாதார' அடிப்படையில் போட்ட அடித்தளத்தின் காரணமாக இந்தியா இன்று உலக அரங்கில் மதிக்கத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

6. இந்நிலையில் 2014 இல் ஆட்சியைக் கைப் பற்றிய ஆர்எஸ்எஸ் பிஜேபி மோடி அரசு சமயச் சார்பற்ற இந்தியாவை "இந்து ராஷ்ட்ராவாக" மாற்ற வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைப் பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

7. அதன் விளைவால் உலக நாடுகளில் உலகப் பெரிய- அதிக ஜனத்தொகையை கொண்ட ஜனநாயக நாடாகிய இந்தியாவைப் பற்றி வல்லரசு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் சந்தேகப் பார்வையோடு இந்தியாவுடன் கூடிய தமது உறவை மறு பரிசீலனை செய்து வருகிறார்கள்.

8. மேற்கத்திய நாடுகளில் பெரும் தொழில் அதிபர்களாக இருக்கக்கூடிய குஜராத்திகளை கையில் வைத்துக்கொண்டு அவர்கள் வழியில் தாம் உலக அரசியலை கற்றுக் கரை கண்டதாக எண்ணும் மோடி 'ஆர்.எஸ்.எஸ். காட்டுகின்ற இந்துத்துவா இந்தியாவை உருவாக்க' தமது அரசை முழுக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

9. இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தனி நாடாக இயங்க மறுப்பதை எதிர்த்தும், தம்மைச் சுற்றியுள்ள இஸ் லாமிய நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்து வருவதை எதிர்த்தும், நமக்கு இன்றியமைத் தேவையாக உள்ள அரபு நாடுகளின் உறவைப் பேணியும், இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தில் பாலஸ்தீன மக்களின் விடுதலையைத் தொடர்ந்து ஆதரித்தும் இந்தியா வருவதின் நோக்கங்களை ஜாதி மத குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

10. இஸ்லாமிய வெறுப்பாலும், சைனாவை எதிர்கொள்ளும் பொருட்டும், இந்தியாவை இந்து ராஷ்டிர நாடாக மாற்றுவதற்கு இஸ்ரேல் துணை நிற்கும் என்றும், பத்தாம் பசலித்தனமாக மோடி எண்ணிக்கொண்டு இஸ்ரேலை ஆதரிக்கும் கொள்கையைக் கையில்  எடுத்தார்.

11. அதன் அடிப்படையில் தான் தொடர்ந்து இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களை பாதுகாக்கும் பொருட்டு ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் உட்பகுதியில் நடத்திய தாக்குதலை மோடி விரைந்து ஓடி கண்டித்து இஸ்ரேலோடு இந்தியாவும் இந்திய மக்களும் எப்போதும் உடன் இருப்பார்கள் என்ற கொள்கைப் பிரகடனத்தை செய்தார். 

12. நீண்ட நாட்களாக நடந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் அது பற்றிய இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிய வரலாறு தெரியாமல் மோடி செய்த இஸ்ரேல் உறவு பிரகடனத்தைப் பார்த்து இந்திய வெளிநாட்டு துறை திகைத்து நின்றது. 

13. எனினும் மோடி தான் எடுத்த முடிவைத் தொடர்ந்து தற்போது நடக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தில் இஸ்ரேலை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிராக அய்க்கிய நாடு சபையில் இவ்வருடம் அக் டோபரில் ஜோடான் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காத நிலைப்பாட்டை எடுத்தார்.

14. மோடியின் நிலைப்பாடு இதுவரை இந்தியா பின்பற்றி வந்த இஸ்ரேல் பாலஸ்தீன கொள்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும் பெரும் பாலான உலக நாடுகளின் கசப்பிற்கு ஆட்பட்ட தாகவும் அரபு நாடுகளோடு நமக்குள்ள ஆழமான உறவை சிதைப்பதாகவும் இருந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை "இஸ்ரேல் பாலஸ்தீன போரில் பாலஸ்தீன மக்களின் விடுதலையை ஆதரிக்கும் இந்தியக் கொள்கை" தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

15. இந்நிலையில் மோடியோடு ஈரான் அதிபர் நடத்திய பேச்சுவார்த்தை மோடிக்கு பாடத்தை கற்றுக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

16. அதன் விளைவு தான் இப்போது அய்க்கிய நாடு சபையில் இஸ்ரேலை கண்டித்து வந்த தீர்மா னத்தை உலகின் உள்ள பெரும்பாலான நாடுகளோடு சேர்ந்து இந்தியாவும் ஆதரித்து உள்ளது.

17. 2014இல் இருந்து இந்தியாவை ஆட்டிப் படைத்து வரும் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. மோடி அரசு ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது மட்டுமல்ல. இந்திய வெளியுறவுக் கொள்கை படுதோல்வி அடைந்து இன்று இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் நமது எதிரிகளின் கைகளுக்கு சென்று விட்டன என்பதும் உலகில் எந்த நாடும் இந்தியாவை நம்பத் தயாராக இல்லை என்பதும் பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கைகளின் வல்லுநர்களின் கருத்தாகவே உள்ளது.

18. இந்திய மக்கள் விழித்தெழுந்து இந்தியாவை 'ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. மோடி கையில் இருந்து காப்பாற்ற வேண்டிய தருணம் 2024 தேர்தல் என்பதை' உணர்ந்தே உள்ளதாக அறிகிறோம். 

No comments:

Post a Comment