விதைத்தவர் பெரியார்! விளைந்தது சந்திரயான் வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 9, 2023

விதைத்தவர் பெரியார்! விளைந்தது சந்திரயான் வெற்றி!

பேசியவர் ஒரு பேச்சாளர் அல்லர்; பெரியாரியலாளரும் அல்லர். ஆனால் தமிழ் உணர்வாளர்; அறிவியலாளர். பேசிய தலைப்பு "பெரியாரும் அறிவியலும்" ! பேசிய இடம் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் நிகழ்ச்சி.

ஆம். கடந்த 5ஆம் தேதி (05.11.2023) சிங்கப்பூரில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அறிவியலாளர் மயில்சாமி அண்ணா துரை அவர்கள் பேசிய பேச்சு சமூக ஊடகம் எங்கும் பரவலாக, வெகு மக்களைச் சென்றடைந்து இருக்கிறது. 

பெரியாரின் கருத்துக்கள் எப்படி ஒரு சமூகத்தைத் தட்டி எழுப்பி இருக்கிறது என்பதற்கு மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் உரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

எளிமையான சொற்களால் வலிமைவாய்ந்த கருத்து களை அழகுத் தமிழில் எடுத்துரைத்திருக்கிறார். தந்தை பெரியாரின் பொன்மொழிகள் தனக்கு என்ன பொருளைத் தந்தன என்று வேறொரு கோணத்தில் விரித்துரைத்திருக் கிறார்.

அவரின் உரையை நன்றி உணர்வுடைய தமிழர்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் கொண் டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து புதுமைச் சிந்தனையோடு சந்திரயானை நிலவுக்கு அனுப்புவதற்குத் தந்தை பெரியாரின் சொற்கள் எப்படி உந்து சக்தியாகத் திகழ்ந்திருக்கின்றன என்பதை அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

"விண்வெளி அறிவியலில் முதன்மை நாடுகளாகத் திகழ்ந்த அமெரிக்கா, ரஷ்யா போன்றவை நிலவில் ஏராளமான ஆராய்ச்சிகளை செய்திருக்கின்றன. நிலவில் மனிதனைக் கொண்டு போய் சேர்த்திருக்கின்றன ஆனா லும் 99 முயற்சிகளுக்குப் பிறகும் நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று தான் அவர்களுடைய முடிவுகள் சொல்லின. 

'யார் சொல்லி இருந்தாலும் அதை நானே சொல்லி இருந்தாலும் உன் அறிவுக்குப் பட்டதை ஏற்றுக் கொள்', 'எதையும் ஏன்? எதற்கு? என்று கேள்விகள் கேட்டுச் சிந்தித்துச் செயல்படு' என்று சொன்ன தந்தை பெரியாரின் சிந்தனை, நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை அனைத்து முன்னேறிய நாடுகளும் மறுத்ததற்கு பிறகும் தேடுவதற்கான ஊக்கத்தை தந்தது" என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

விதைத்தவர் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்பதைப் போல தந்தை பெரியார் விதைத்த அந்தச் சிந்தனை எப்படி மரமாக வளர்ந்து சந்திரயானுக்கு ஊக்கமூட்டியது என்பதை அவர் எடுத்துச் சொல்லும் பாங்கு ஓர் அனுபவச் சான்று.

விண்வெளியில் இருப்பவற்றிலேயே புவிக்கு மிக அருகில் இருப்பது நிலவுதான். மூன்று லட்சம் கிலோமீட்டர் என்பது மிகப்பெரிய தொலைவு அல்ல. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பத்துக்குப் போட்டி போட முடியாவிட்டாலும் இந்தியாவிடம் இருக்கும் குறைந்த வளங்களைக் கொண்டு நிலவை எப்படி அடைவது என்பதற்கான திட்டமிடலை வகுத்து, ஒரே மூச்சில் நிலவைச் சென்றடைவதற்குப் பதிலாக புவியின் சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப் பாதைக்குச் சென்று மெல்ல மெல்ல, காலதாமதம் ஆனாலும் போய் இறங்க முடியும் என்கிற புதுமையான முயற்சியில் தான் சந்திரயானின் வெற்றி அடங்கியிருக்கிறது. "மற்ற நாடுகள் நிலவில் இறங்கி நீரைத் தேடினார்கள்; ஆனால் நாங்கள் நீரைத் தேடுவதற்காக நிலவில் இறங்கினோம்." புவியின் பார்வை படாமலேயே சுற்றிக் கொண்டிருக்கும் நிலவின் தென்முனைப் பகுதியில் பனிக்கட்டியாக நீர் இருப்பதற்கான சான்றுகள் அதன் மூலம் கிடைத்தன. இந்த சிந்தனைக்கான விதை பெரியார் போட்டது என்று மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சொல்ல அரங்கம் அதிர்ந்தது. சமூக ஊடகங்களில் பார்ப்போருக்குச் சிலிர்த்தது.

"உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட உன் வெங்காய வௌக்குமாத்தை விட, உன் அறிவு பெரிது, அதை சிந்தி" என்ற தந்தை பெரியாரின் பொன்மொழிதான் (கொஞ்சம் கடுமையான நடையில் இருந்தாலும் கூட) வளர்ந்த நாடுகள் நிலவில் நீர் இல்லை என்று சொன்னதற்குப் பின்னும் துணிச்சலோடு இறங்கச் சொன்னது. 

"எனக்கு இந்த பணி செய்ய என்ன யோக்கியதை என்றால் துணிச்சல் ஒன்றுதான்' என்கிறார் தந்தை பெரியார். அவருடைய பணி துணிவால் மட்டுமே செய்யப்படக் கூடியது. ஆனால் அந்தப் பொன்மொழியை நான் இன்னொரு வகையில் புரிந்து கொள்கிறேன். துணிவு இல்லை என்றால் எந்த யோக்கியதையும் பயன்படாது. ஏன் மாற்றி சிந்திக்க கூடாது என்ற துணிச்சல் இல்லை என்றால் எதுவும் நடந்திருக்காது. எதையும் அப்படியே ஏற்றுக் கொண்டால் அது அறிவியலும் இல்லை. விஞ்ஞானி களுக்கான யோக்கியதை அதுதான். அந்தத் துணிச்சல்தான் வளர்ந்த நாடுகள் சொன்னதை ஏற்றுக் கொண்டிருந்தால் நாங்கள் கற்ற அறிவியல் பயன்பாட்டு இருக்காது" என்று அவரது சொற்களில் பொதிந்திருக்கும் உண்மை பெரியார் சிந்தனையின் வீரியத்தைச் சொல்லும். அரைத்த மாவை அரைக்காமல் புதுமையாக சிந்திக்கச் சொன்ன அந்தத் துணிச்சல் தான் சமூகம், தொழில், உடை, வாழ்க்கை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்திலும்  காலத்திற்கேற்ற மாற்றத்தை உருவாக்கச் செய்தது. அதைத்தான் அறிவியல் என்கிறோம்.

"ஓய்வும் சலிப்பும் தற்கொலைக்கு சமம்' என்றார் தந்தை பெரியார். சலிக்காமல் முயன்றுதான் ஆதி மனிதன் சிக்கி முக்கி கல்லை உரசி உரசி நெருப்புப் பொறியை வர வைத்தான். இளமையோ முதுமையோ ஓய்வும் சலிப்பும் அவசியம் இல்லை என்பதை அவரைப் போலவே நான் அப்துல் கலாம் அவர்களிடம் இருந்து கற்றேன்.

அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாருடன் இருந்த காலம்தான் என் வசந்த காலம் என்று 'அந்த வசந்தம்' என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அப்படி எனக்கும் அப்துல் கலாம் அவர்களோடு இருந்த காலம்தான் அனைத்துக்கும் தூண்டுகோல். 'அடுத்தது என்ன?' என்ற கேள்வியை அவர் எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பார்" என்று பெரியாருடன் அண்ணா இருக்கும் படத்தையும், கலாமுடன் தான் இருக்கும் படத்தையும் போட்டுக் காட்டி, பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை (அண்ணாதுரை) தன் தந்தை மயில்சாமி தனக்குச் சூட்டியதை பொருத்தமாக நினைவூட்டினார். அதற்காக நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

"இன்று மீண்டும் பள்ளி மாணவர்களோடு மாணவர் களாக இணைந்து புதிய புதிய முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆண்களும் பெண்களுமாக பள்ளி மாணவர்கள் இனி ராக்கெட் ஏவப் போகிறார்கள். செயற்கைக் கோள் அனுப்பப் போகிறார்கள். அவர்களுடன் இணைந்து நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இதற்கான ஊக்கம் அப்துல் கலாம் அவர்களிடமிருந்து பெற்றது" 

'மறு உலகத்தை தயவு செய்து மறந்து விட்டு இந்த உலகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தியுங்கள்' என்று தந்தை பெரியார் விடுத்த வேண்டுகோளை இப்போது உலகைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டிய பணிகளோடு பொருத்திப் பேசினார். அச்சுறுத்தும் எதிர்காலத்தில் இருந்து, பெரியார் கனவு கண்ட சமத்துவம், பகுத்தறிவார்ந்த இனிவரும் உலகத்தைப் படைப்பதற்கு நம்முடைய பணிகள் எப்படி அமைய வேண்டும் என்று ஊக்கமூட்டினார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர் பேசப் பேச கேட்போருக்கெல்லாம் மகிழ்ச்சி, வியப்பு, சிந்தனையூக்கம் என சொல்லற்கரிய உணர்வுகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. 

பெரியாரை வெறும் ஆறடிச் சிலை என்று புரிந்து கொண்டிருக்கும் அரைவேக்காடுகளுக்கு மத்தியில் அவரின் ஆகிருதி என்ன? பேருரு என்ன? என்பதை ஓர் அறிவியலாளர் ஆய்வுப் பூர்வமாக விளக்குவது அரிய தொரு வரலாற்று ஆவணம். சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் வரலாற்றில் இந்த நிகழ்ச்சி ஒரு மணி மகுடம்.

- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

(பெரியார் தொலைக்காட்சியில் அவருடைய உரை முழுமையாக வெளியிடப்பட்டிருக்கிறது எழுத்து வடி விலும் விரைவில் விடுதலையில் வெளிவரும்.)


No comments:

Post a Comment