தமிழ்நாடு அரசின் ஆன்லைன் தடைச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து- ரம்மி போன்ற ஆட்டங்களுக்கு விதிவிலக்கா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் தடைச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து- ரம்மி போன்ற ஆட்டங்களுக்கு விதிவிலக்கா?

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு வரவேற்கத்தக்கது!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

  தமிழ்நாடு அரசின் ஆன்லைன் தடைச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து - ரம்மி போன்ற ஆட்டங்களுக்கு விதிவிலக்கா? உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு வரவேற்கத்தக்கது! சூதாட்டத்தை ‘‘அறிவை விருத்தி செய்யும் ஆட்டம்'' என்று வர்ணிப்பது மிகவும் கோணலான சிந்தனை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆன்லைன் சூதாட்டத்தில் தங்களது பணத்தை அளவற்ற முறையில் இழந்து தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டோர் அநேகர்.

அதன் காரணமாக, அதைத் தடை செய்ய பல முற்போக்குச் சமூக நல சிந்தனையாளர்களும், கட்சி களும், இயக்கங்களும் வற்புறுத்தியதால், முந்தைய அ.தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த சட்டத்தின் குறை பாடுகளை நிவர்த்தி செய்தும், ஜஸ்டிஸ் சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்து அறிக்கை பெற்றும் தடைச் சட்டமியற்றியது தி.மு.க. அரசு.

அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப் பளித்திருந்தும் - ‘ரம்மி' போன்ற சில விளையாட்டுகள் தடை செல்லாது என்பதாக அளித்த தீர்ப்புப் பகுதி ஏற்புடையதல்ல.

சமூகத்தின் பல பகுதி மக்கள் பெரும் இழப்புக்கு ஆளாகி, தற்கொலைகள் நடைபெறாமல் தடுக்கும் வாய்ப்புக்கு இது உதவாது என்பதால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள் அறிவித்திருப்பது பாராட்டி வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்குமென்று நம்புகிறோம்!

சூதாட்டத்தை ‘‘அறிவை விருத்தி செய்யும் ஆட்டம்'' என்று வர்ணிப்பது மிகவும் கோணலான சிந்தனையாகும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11.11.2023

No comments:

Post a Comment