நூல் அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

நூல் அரங்கம்

நூல்: “பெரியார் சிந்தனைத் திரட்டு (தொகுதி 1)”

தொகுப்பாசிரியர்: து.மா.பெரியசாமி 

வெளியீடு: திராவிடர் கழக வெளியீடு

முதல் பதிப்பு 2012

பக்கங்கள் 400

நன்கொடை ரூ. 250/-

பொ.நாகராஜன்

பெரியாரிய ஆய்வாளர்

*  தமிழ்நாட்டின் வரலாற்றில் - ஒரு சுய சிந்தனையாளரை;  போராட்ட குணம் கொண்ட தலைவரை; மூடநம்பிக்கைகளை எதிர்த்த பகுத்தறிவாளரை; மத கட்டமைப்புகளை தகர்த்த மறுமலர்ச்சியாளரை; கடவுள், மத, ஜாதி, சாஸ்திரங்களின் அஸ்திவாரங்களை அடித்து நொறுக்கிய அஞ்சாத வீரரை -  தந்தை பெரியாரை, அவருக்கு நிகராக  வேறு யாரையும் காண்பது அரிதிலும் அரிது!

*  மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போன சமூக அமைப்பை; ஜாதியால் பிளந்து கிடந்த சமுதாய கட்டமைப்பை; வர்ணாசிரம அடிப்படையில் அடிமைகளாக வாழப் பழகிய மக்களை; தனது பகுத்தறிவின் வெளிச்சத்தால், முற்போக்கு சிந்தனைகளால், திருத்த முற்பட்டார் பெரியார்! 

*  தினம் தினம், ஊர் ஊராக, பட்டி தொட்டிகளுக்கு பயணம் செய்து, மக்களை விழிப்புறச் செய்ய சுயமரியாதை கருத்துக்களை மேடையில் பேசினார்! தான் பேசியவற்றை மறுநாளே தனது குடிஅரசு, விடுதலை இதழ்களில் பிரசுரித்தார்! அவைகள் அத்தனையும் இன்றும் நமக்கு படிக்க கிடைக்கின்றன!

*  தந்தை பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் - 3 மாதங்கள் - 7 நாட்கள். அவற்றில் ஏறத்தாழ 8200 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். சுற்றுப்பயண தொலைவோ - 13,19,662 கி.மீ. ஒப்பீட்டளவில் இத்தொலைவு பூமியின் சுற்றளவைப் போல ( சராசரியாக 40,000 கி.மீ ) 33 மடங்கு. பெரியாரின் உரைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ஒலி பரப்ப ஆரம்பித்தால் அவைகள் 2 ஆண்டுகள் - 5 மாதங்கள் - 11 நாட்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்குமாம் ( ஆதாரம் - தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை நூல்)

*  மேலே எடுத்துக் காட்டிய புள்ளி விவரங்கள் பெரியாரின் ஓய்வில்லா சமூகப் பணியை நமக்கு விளக்குகிறது. அவரின் சொற்பொழிவுகளின் ஒரு சிறிய தொகுப்பே இந்நூல். பெரியார் 1956ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை நிகழ்த்திய ஆயிரக்கணக்கான உரைகளிலிருந்து, இருபது உரைகளை மட்டும் தொகுத்து நூலாக தந்துள்ளார்கள்!

*  அந்த இருபது உரைகளில் பெரியார் எந்த பொருள் பற்றி பேசினார் என்பதை அறிந்தால், நூலைப் படிப்பதற்கான ஆர்வம் மேலோங்கும். அந்த சுருக்கமான தகவல்கள் : 

*  பக்தி, ஒழுக்கம் | குலக்கல்வித் திட்டம் | குறள், தமிழ் இலக்கியங்கள் | காந்தி நாடு - பாரத நாடு | ஜாதி ஒழிப்பு | சுயமரியாதை திருமணம் | பெண்ணுரிமை | மனித இனம் | தேசியம் | பகுத்தறிவு | திருமணம் | பெண்கள் முன்னேற்றம் | தமிழ் மொழி | பார்ப்பனியம் | ஜாதி, மதம் | பல்கலைக்கழகம் | பொங்கல் விழா | பார்ப்பனரல்லாதார் உணவு விடுதி | கடவுள் மறுப்பு | திருமணம், சுயமரியாதை | 

*  பெரியார் ஒரு அறிவுச் சுரங்கம். அவர் ஒரு தகவல் களஞ்சியம். அவரது எழுத்துகளும் உரைகளும் காப்பாற்றப்பட வேண்டிய காலப் பெட்டகம். எந்த தகவலையும் தனது சுய புத்தியால் விளக்கிச் சொன்னாரேயன்றி வேறு எந்த நூலையோ அல்லது எந்த அறிஞர்களின் தத்துவங்களேயோ தனது வாதங்களுக்காக துணைக்கு அழைத்ததில்லை. 

அதனால் தான் அவர் இன்றும் தேவைப்படுகின்றார். 

*  அவரின் இந்த உரைத் தொகுப்பிலிருந்து மூன்று உரைகளின் சிறு பகுதிகள் சுவைப்பதற்காக ---

*  பக்தி மற்றும் ஒழுக்கம் பற்றி திருச்சியில் பெரியார் தனது 78ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் 22.09.1956 அன்று ஆற்றிய உரையிலிருந்து :

*  " நம்முடைய மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டும்! உங்களுக்கு பக்தி இருந்தாலும் சரி...இல்லாவிட்டாலும் சரி! அது உங்களுடைய இஷ்டம்! உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒழுக்கம் இருக்க வேண்டும்! பக்தி அவனவன் சொந்தக் காரியம்! நான் பக்தி இல்லாதவனாயிருந்தால் உங்களுக்கு ஒரு கெடுதியும் ஏற்படாது!

*   நான் பெரிய பக்திவானாக இருந்தால் எனக்கு மோட்சம் கிடைக்கலாம்! உங்களுக்கு ஒன்றும் நடக்காது! ஒழுக்கம் அப்படி அல்ல! அது மற்றவர்களை பாதிக்கக் கூடியது! ஆனதினாலே பக்தியைக் காட்டிலும் ஒழுக்கத்தைப் பிரதானமாக நினைத்து ஒவ்வொரு மனிதனும் மற்றவரிடத்தில் அன்பும் அருளும் காட்டுகிறவர்களாக இருக்க வேண்டியது! " ......

*  பாரத நாடு பற்றி திருச்சி பொன்மலையில் பெரியார் தனது 79ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் 12.10.1957 அன்று ஆற்றிய உரையிலிருந்து :

*  "இந்த நாட்டுக்கு ' காந்தி நாடு ' ன்னு பேர் வைச்சா நான் வரவேற்பேன்! ' காந்தி - சகாப்தமானாலும் ' நான் வரவேற்பேன்! ...ஏன்? ...அஸ்திவாரமே இல்லாத நமக்கு, சம்பந்தமே இல்லாத நமக்கு, இழிவு தரும்படியான ஒரு நிலையிலே உள்ள பேரு ' பாரத நாடு ' என்று இந்த நாட்டுக்குப் பேரு இருப்பதை விட, யாராவது ஒரு மனுஷன் பேராக இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை!

*   எதுக்காக இந்த நாட்டுக்குப் ' பாரத நாடு ' ன்னு பேரு இருக்க 

வேண்டும்? ... அதுக்கு என்னா அர்த்தம்?... சரித்திரத்திலே ஏதாவது இருக்கா? " ........

பெரியாரின் இந்தக் கேள்விக்கு இன்று வரை ஏதாவது பதில் உண்டா?

*  தமிழன் எதுவரை சூத்திரன் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக பெரியார் திருச்சி டவுன்ஹாலில் 26.11.1967 அன்று ஆற்றிய உரையிலிருந்து :

*  " தோழர்களே! தமிழன் ஏன் கீழ் ஜாதியில் இருக்கிறான்? தமிழன் ஏன் சூத்திரன்? அதுவும் 2000 வருஷமா! ....3000 வருஷமா! ...ஏன் சூத்திரன்? என்ன காரணம்? .....எது வரைக்கும் இந்த கோவிலுக்குப் போறியோ ...நீ எதுவரைக்கும் இந்தப் பார்ப்பானை ' சாமி ' ங்கிறியோ....பார்ப்பானை ' பிராமணன் ' ங்கிறியோ...நீ ..எதுவரைக்கும் நெற்றியிலே சுண்ணாம்பு பட்டை அடிக்கிறியோ...அதுவரைக்கும் நீ ' தேவடியாள் ' மகன் தானே? அதுவரைக்கும் நீ சூத்திரன் தானே? சூத்திரனுக்குத் தானே இதெல்லாம் இருக்குது? ..அதை நீ சம்மதிச்சிட்டா ... அப்புறம் நீ பேசினியானா ( கேள்வி கேட்டால் ) என்னா அர்த்தம்? " ...

*  நடு மண்டையில் நறுக்கென்று ஓங்கிக் குட்டிப் புரிய வைத்த ஆரம்பப் பள்ளி ஆசிரியரை நினைவு கூர்வதாக அமைந்திருக்கின்றது பெரியாரின் உரைகள்! 

பெரியாரின் உரைகள் - நம்பிக்கைகளைப் பதம் பார்க்க உதவும் உரைகல்!பொ.நாகராஜன்

பெரியாரிய ஆய்வாளர்


No comments:

Post a Comment