திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 5, 2023

திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி சிறப்புரை

 திராவிடர் கழகத்தோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றென்றைக்கும் துணை நிற்கும்!

நாங்கள் திராவிடர் கழகத்தோடு இருக்கிறோம் என்பதைவிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திராவிடர் கழகத்தில் இருக்கிறது என்பதுதான் சிறப்பு!

திருச்சி, நவ.5 திராவிடர் கழகத்தோடு விடுதலைச் சிறுத் தைகள் கட்சி என்றென்றைக்கும் துணை நிற்கும்; நாங்கள் திராவிடர் கழகத்தோடு இருக்கிறோம் என்பதைவிட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திராவிடர் கழகத்தில் இருக்கிறது என்பதுதான் சிறப்பு என்றார் விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள்.

ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழா

கடந்த 20.10.2023 அன்று மாலை திருச்சியில் நடைபெற்ற ‘‘ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம்'' - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் என்கின்ற வழியில் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கின்ற இந்நிகழ் விற்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னு டைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் அண்ணன் எழுச்சித் தமிழருடைய மிகப்பெரிய அவாவாக இருந்தாலும்கூட, அவரும் உடல்நலக் குறைவின் காரணமாக, இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத ஒரு நிலையில், இவ்விழாவில் கலந்துகொள்ளச் சொல்லி, என்னையும், கட்சியினுடைய மாவட்டச் செயலாளர்கள் அன்புச்சகோதரர் லாரன்ஸ், ஆற்றலரசு, கலைச்செல்வன், அன்புச்செல்வன் உள்ளிட்ட தோழர்களையும் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நிகழ்ச்சி “ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்'' என்கின்ற வகை யில் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.

ஆசிரியர் அய்யா அவர்களின் பயணம்!

நம்முடைய ஆசிரியர் அய்யா  அவர்களுடைய பயணத்தைப்பற்றி குறிப்பிடுகின்றபொழுது, அவர் எத் தனை ஆயிரம் கிலோ மீட்டர் வாகனத்தில் பயணித் திருக்கிறார்; தொடர் வண்டியில் எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்திருக்கிறார் என்றெல்லாம் இங்கே ஒரு தரவுகளாக சொல்லியிருந்தார்கள்.

ஆசிரியர் அவர்களுடைய பயணம் என்ன செய்திருக்கிறது? அல்லது என்ன சாதித்திருக்கிறது? என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஆசிரியர் முன்னெடுத்த அந்தப் பயணம்தான் விடுதலைச் சிறுத்தைகளின் திருச்சி மாநாடு!

1944 ஆம் ஆண்டில் பொதுவாழ்க்கையில் அடி யெடுத்து வைத்த அய்யா ஆசிரியர் அவர்கள், அவருடைய பயணத்தினால் ஏற்படுத்திய தாக்கம், 1980 ஆம் ஆண்டில், அரசியல் பயணத்தைத் தொடங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் எழுச்சித் தமிழர் அவர்கள், சமத்துவத்தை, சமூகநீதியை நிலைநாட்டவேண்டும் என்று சொன்னால், இந்த மண் ணிலே ஸநாதனத்தை வேரறுக்கவேண்டும் என்கின்ற நிலையில், ஆசிரியர் அவர்கள் முன்னெடுத்த அந்தப் பாதை, அந்தப் பயணம், அவர் ஏற்படுத்திய தாக்கம் - இதே திருச்சி மண்ணில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ஸநாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.

இங்கே உரையாற்றியவர்கள் பலரும் சொன்னார்கள், எத்தகைய தாக்கத்தை தந்தை பெரியார் அவர்களும், அவர் வழியில் இன்றைக்குக் களமாடிக் கொண்டிருக்கக் கூடிய அய்யா ஆசிரியர் அவர்களும் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று.

இன்றைக்கு அரசியல் அதிகாரம் என்ற நிலையில் இருக்கக்கூடிய தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் இன்றைக்கு இந்த ஸநாதன எதிர்ப்புக் கருத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது; பல தருணங்களில் அது வெளிப்படுகிறது.

திராவிடர் கழகமும், தந்தை பெரியாரும், 

அய்யா ஆசிரியர் அவர்களும்தான்!

அது வெளிப்படுகிறது, அது வலிமைப்பட்டு இருக்கிறது என்று சொன்னால்,  அதற்குக் காரணம் திராவிடர் கழகமும், தந்தை பெரியாரும், அய்யா ஆசிரியர் அவர்களும் என்று சொன்னால், அது மிகையல்ல.

அதே நிலையில்தான் அண்மையில் ஸநாதனத்தைப் பற்றிய ஒரு கருத்தை மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அன்புச்சகோதரர் உதயநிதி அவர்கள் பேசிய அடுத்த நொடியே, அனைத்து ஆங்கில ஊடகங்களும், இந்திய அளவில் செயல்படக் கூடிய ஊடங்களும், அதனை ஒரு பெரிய செய்தியாக்கி, தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள் என்று சொன்னால், அந்தக் கருத்து இங்கே எவ்வளவு ஆழமாக இருக்கிறது; பதிந்திருக்கிறது, வேரூன்றி இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

அதற்கான முழுப் பொறுப்பும் யாருக்கு இன்றைக்கு அளிக்கவேண்டும் என்று சொன்னால், அது திராவிடர் கழகத்திற்கும், அய்யா ஆசிரியருக்கும் என்று சொன்னால், அது மிகையல்ல.

சமூகநீதியை நிலைநாட்டவேண்டும்; சமத்துவத்தை நிலைநாட்டவேண்டும் என்ற நோக்கோடு!

இன்றைக்கு ஈரோட்டுத் தொடர் பயணம் செல்கிறது - அது எங்கே சென்றடையவேண்டும் என்று நாம் பார்க்கின்றபொழுது, சமூகநீதியை நிலைநாட்டவேண்டும்; சமத்துவத்தை நிலைநாட்டவேண்டும் என்கின்ற அந்த நோக்கோடு அது சென்று கொண்டிருக்கின்றது. இன்றைக்கு அது சரியான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அய்யா ஆசிரியரோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றென்றைக்கும் துணை நிற்கும்!

இன்றைக்குத் தமிழ்நாட்டு அளவில் இருந்த ஸநாதன எதிர்ப்பு என்பது தேசிய அளவில் இன்றைக்கு வெளிப்பட்டு இருக்கிறது. இந்தப் பாதை, இந்தப் பயணம் தமிழ்நாட்டிலே தொடங்கிய இந்த ஒளி, விரைவில் இந்திய அளவிலே பரவி, இந்தியாவில் ஆட்சிப் பீடத்தில் இருக்கக் கூடிய பாசிச ஸநாதன சக்திகளை வீழ்த்துவதற்கான ஒரு பயணமாக அமையும். அந்தப் பயணத்தில் அய்யா ஆசிரியரோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என் றென்றைக்கும் துணை நிற்கும்.

நாங்கள் திராவிடர் கழகத்தோடு இருக்கிறோம் என் பதைவிட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திராவிடர் கழகத்தில் இருக்கிறது என்கிற ஒரு செய்தியைப் பதிவு செய்து விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள் உரையாற் றினார்.



No comments:

Post a Comment