நாத்திக கொள்கையை பரப்பிட சட்டம் பாதுகாக்கிறது அதன் அடிப்படையில் ஸநாதனத்தைப் பற்றி பேசுவதற்கான கருத்துரிமை உண்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 9, 2023

நாத்திக கொள்கையை பரப்பிட சட்டம் பாதுகாக்கிறது அதன் அடிப்படையில் ஸநாதனத்தைப் பற்றி பேசுவதற்கான கருத்துரிமை உண்டு

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதியின் சார்பில் வழக்குரைஞர் பி. வில்சன் வாதம்

சென்னை, நவ.9- அரசமைப்பு சட்டம் நாத்தி கத்தையும், நாத்திக கருத்துக்களை தெரிவிக்கவும் உரிமையை வழங்கி பாதுகாக்கிறது என்று அமைச் சர் உதயநிதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

முதலமைச்சரின் அதிகாரம் 

ஸநாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க., மக்களவை ஆ.ராசா, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் வழக்குகளை தாக்கல் செய் துள்ளனர்.

இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று (8.11.2023) விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். வாதத்தில் அவர் கூறியதாவது:-

அமைச்சர்கள் பதவிப் பிரமாண உறுதி மொழியை மீறி விட்டனர் என்று கூறி உயர்நீதி மன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. ஒருவரை அமைச்சராக நியமிப்பதும், நீக்குவதும் முதலமைச் சரின் அதிகாரத்துக்கு உட்பட் டது. அந்த அதிகார எல்லையை தடை செய்யப்பட்ட பகுதியாக கருதப்படுகிறது. 

அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினாலும், அதை எதிர்த்து தனி நபர்கள் வழக்கு தொடர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அரசமைப்புச் சட்டப்பிரிவு 25, மத நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கவில்லை. நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்ல, ஏன் நாத்திகத்தை ஏற்கிறோம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் உரிமை வழங்குகிறது. அதனால், ஸநாதனத்துக்கு எதிராக பேசியதாக வழக்கே தொடர முடியாது.

ஸநாதனத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு, தீண் டாமை உள்ளது. அவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கூட தீர்ப்பு அளித்துள்ளது.

குஷ்பு கருத்து 

திருமணத்துக்கு முந்தைய உறவு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து தொடர் பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் தெரிவித்த கருத்து பிடிக்கவில்லை என்றால், அவரது கருத்து தவறு என்று பொதுவெளியில் பேசலாமே தவிர, அதற்காக குற்றவழக்கு ஏன் தொடர வேண்டும்? என்று கேள்வி எழுப்பியது.

பேச்சுரிமை என்பது ஒருவ ரின் இயற்கையான மற்றும் அடிப்படை மனித உரிமையா கும். அதை பாதுகாக்கவேண்டும். ஒருவரது பேச்சுரிமையை கட்டுப்படுத்த அரசமைப்பு சட்டத்தில் 8 கார ணங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த 8 காரணங்களில், மனுதாரர் இந்த வழக்கில் கூறியுள்ள காரணம் இல்லை. எனவே, தேவையே இல்லாமல் இந்தவழக்கைதொடர்ந்து இந்த உயர்நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்தது மட்டு மல்லாமல், அமைச்சரையும் இந்த உயர்நீதி மன்றத்திற்கு இழுத்துள்ளனர். 

மாதொருபாகன் என்ற புத்தகத்தை எழுதிய பெருமாள் முருகன் வழக்கை விசாரித்த இந்த உயர்நீதிமன்றம், அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால், அந்த புத்தகத்தை வாங்காமலும், படிக்காமலும் இருக்க வேண்டும். அதே போல், ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் அதைக் கேட்கக் கூடாது. பேச்சு பிடிக்கவில்லை என்ப தற்காக ஒருவரது கருத்துரிமையை தடுக்கமுடியாது என்று தீர்ப்பு அளித்துள்ளது.

கேட்கக்கூடாது 

ஸநாதன ஒழிப்பு மாநாடு ஒரு கூட்டரங்கில் காலை முதல் இரவு வரை நடந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல ஏராளமானோர் பேசியுள் ளனர். அந்தக் கருத்து பிடிக்கவில்லை என்றால் அதை கேட்காமல் இருக்க வேண்டும். அதை செய்யாமல், அந்த கருத்தை காது கொடுத்து கேட்டுவிட்டு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒப்பாரி வைத்து கண்ணீர் வடிக்கக் கூடாது.

அதனால், இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல. தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் வாதிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கை நாளை (10.11.2023) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment