இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் கொட்டும் மழையிலும் ஆசிரியர் எழுச்சிகரமாக உரையாற்றினார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் கொட்டும் மழையிலும் ஆசிரியர் எழுச்சிகரமாக உரையாற்றினார்!

 மாணவர்களை கல்லூரிக்குச் செல்ல விடாமல் தடுப்பதே ‘மனுதர்ம யோஜனா'

தமிழ்நாட்டு மக்களின் சிந்தனை வளர்ச்சியே திராவிடர் இயக்கம் கொடுத்த கொடை!

கோபி, அக்.1 மாணவர்களை கல்லூரிக்குச் செல்ல விடாமல் தடுப்பதே ஒன்றிய அரசின் ‘மனுதர்ம யோஜனா' திட்டம். தமிழ்நாட்டு மக்களின் சிந்தனை வளர்ச்சியே திராவிடர் இயக்கம் கொடுத்த கொடை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இரண்டாம் கட்டமாக நம்பியூர், திருப்பூர் பகுதிகளில் கொட்டும் மழையிலும் சூறாவளியாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் தமிழர் தலைவர். 

‘மனுதர்ம யோஜனா' என்ற குலத்தொழிலை திணிக்கும் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை பெரும் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் கட்டமாக 25.10.2023 அன்று நாகப்பட்டினம், செம்பனார்கோயிலில் தொடங்கி, 28.10.2023 அன்று அரூர், சேலத்தில் முடிவடைந்தது. இரண்டாம் கட்டமாக நேற்று (31.10.2023) அன்று நம்பியூரில் பேருந்து நிலையம் அருகிலும், திருப்பூரில்  கொடிக்கம்பம், கொங்கு நகர் பிரதான சாலையிலும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் திருப்பூரில் கொட்டும் மழையிலும் நிகழ்ச்சி எழுச்சிகர மாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

நம்பியூரில்...

நம்பியூரில் கோபிசெட்டிபாளையத்திலிருந்து பிரச் சார பெரும்படையின் முதல் வாகனம் மாலை 5 மணிக்குப் புறப்பட்டது. இதில் தொடக்கப் பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் இருந்தார். வழி நெடுகிலும் சுவரொட்டிகளையும், சுவர் எழுத்துகளையும், கொடிகள் பதித்த வட்டமான பதாகைகளையும் காண முடிந்தது. அதுமட்டுமல்ல, செல்லும் சாலையில் எங்கு திரும்ப வேண்டுமோ அங்கே கொடிகள் கட்டப்பட்டு, ‘‘இதுதான் பாதை, இதிலே செல்லுங்கள்'' என்று கொடிகளே நம்முடன் பேசுவது போல அமைக்கப் பட்டிருந்தன. அதுமட்டுமா? நம்பியூரை நெருங்குவதற்கு இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பிருந்து கழகக் கொடிகள் அணியணியாக வரவேற்று தோழர்களையே வியப்பில் ஆழ்த்தியதென்றால் மற்றவர்களைக் கேட்க வேண்டுமோ? முத்தாய்ப்பு வைப்பது போல், ஆசிரியரை, ஒரு வேனில் டிரம்ஸ், பேண்டு வாத்தியங்களுடனும், இருசக்கர வாகனங்களுடன் கோபிசெட்டிபாளையத்தி லிருந்தே  அழைத்து வந்து அசத்திவிட்டனர் நமது தோழர்கள். அதையும் விட எழுச்சிகரமாக, ‘தோழா முன்னேறு வீரமணியோடு” பாடலுடன் ஆசிரியர் மேடையேறினார். 

அதே போல், திருப்பூரிலும் சாலையின் இரண்டு, மூன்று கிலோ மீட்டருக்கும் மேலாக கொடிகள் இரண்டு பக்கமும் கட்டப்பட்டு இருந்தன. ஒட்டுமொத்தமாக நம்பியூர் மட்டுமல்ல, எல்லா கூட்டங்களுமே எழுச்சிகர மாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நம்பியூரில் மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங் கப்பட்டது. முதலில் திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர் களின் ‘‘மந்திரமா? தந்திரமா?'' நிகழ்ச்சி நடைபெற்றது. அவரைத் தொடர்ந்து முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடக்க உரை ஆற்றினார். ஆசிரியர் 6.20 மணிக்கு, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோருடன் மேடைக்கு வருகை தந்தார். புத்தக வெளியீட்டுக்குப் பிறகு, மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம் தலைமையில் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். தி.மு.க. மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் கோ.வெ.மணி மாறன், எஸ்.டி.பி.அய். கட்சி மாவட்டத் தலைவர் முகசின் காமினூன், தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன், கோபி நகர் மன்றத் தலைவர் என்.ஆர்.நாகராஜ், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் பெ.பொன்னுசாமி, வி.சி.க. மாவட்டச் செயலாளர் மிசா.தங்கவேல், வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.பி.சண்முகசுந்தரம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன் குமார், அரியப்பம்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் செந் தில்நாதன், திருப்பூர் மாவட்டக் காப்பாளர் அவினாசி இராமசாமி, கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திர சேகரன் போன்றோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் மா.கந்தசாமி, ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் எஸ்.வி.சரவணன் ஆகியோர் உரையாற்றினர்.  

நிறைவாக ஆசிரியர் உரையாற்றினார். 

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

தொடக்கத்தில் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்போடு கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக தமிழர் தலைவர் ஆசிரியர் மகிழ்ச்சி யோடு பாராட்டினார்.  ‘‘இந்த நம்பியூரில் ‘இந்தியா' கூட்டணியை நம்பியிருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை யைக் காப்பாற்றுவோம்” என்று அதிரடியாகத் தம் உரையைத் தொடங்கினார், மக்களின் எழுச்சிகரமான வரவேற்போடு. தொடர்ந்து திராவிடர் இயக்கம், நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், அண்ணா, கலைஞர், இன்றைய முதலமைச்சர் வரை பெற்றுத்தந்த உரிமை களையெல்லாம் பறிக்கின்ற வகையில், 100 ஆண்டு களுக்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஆபத்தான் திட்டம்தான் இந்த ‘மனுதர்ம யோஜனா' என்ற கருத்துப்பட பேசினார். பெண்களின் உரிமைகள் 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? இந்த சிந்தனை மாற்றத்தை; கேள்வி கேட்கும் தன்மையை கொடுத்த இயக்கம் திராவிடர் இயக்கம் என்றதும், கையொலிகள் ஆர்ப்பரித்து எழுந் தன. ‘‘ஆஸ்திக்கு ஆண்; ஆசைக்கு பெண்'' என்ற பழமொழியை நினைவூட்டி, ‘‘1929 இல் அதை மாற்றியவர் பெரியார்! செயல்படுத்தி பெண்களுக்குச் சொத்துரிமை யைத் தந்தவர் கலைஞர்!” என்றதும் பெருத்த ஆரவாரம் எழுந்து அடங்கியது. 

தொடர்ந்து தலைப்புக்கு வந்த ஆசிரியர், “இன் றைக்குச் செருப்பு தைக்கின்ற ஒருவரைப் பார்த்து, உங்கள் பிள்ளை என்னவாக வேண்டும் என்று கேட்டால், ‘என் பிள்ளை என்னைப்போல் செருப்பு தைக்க வேண்டும்' என்றா கூறுவார்?” என்று மக்கள் முன் கேள்வியை தூக்கிப் போட்டார். மக்கள் ‘இல்லை’ என்பது போல் தலையை இடம் வலமாக தன்னிச்சையாக அசைத்தனர். ஆசிரியரோ, “என் பிள்ளை டாக்டராக வேண்டும்! வக்கீலாக வேண்டும்!'' என்றல்லவா சொல் வார்?'' என்றதும், அதற்கும் மக்கள் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தனர். ‘‘திராவிட இயக்கம் அப்படி 100 ஆண்டுகளாக படாதபாடுபட்டு மக்களின் சிந்தனை யிலேயே மாபெரும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தக் காலத்தில் அதையெல்லாம் தலைகீழாக மாற்றும் வகையில் ‘மனுதர்ம யோஜனா' என்ற பெயரில் ஒரு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது” என்று கூறிவிட்டு, அதைப் பற்றிய கூடுதல் தகவல்களை மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைத்தார். மேலும் அவர், “இப்படி நாள்தோறும் நமது உரிமைகளைப் பறிக் கும் வண்ணம் ஏராளமான திட்டங்களை, சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. இவற்றை தனித்தனி யாகப் போராடி வெல்ல முடியாது. ஒட்டுமொத்தமாக 2024 ஆம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர் தலில் ‘இந்தியா' கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்'' என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

பங்கேற்பாளர்களாக பகுத்தறிவு ஆசிரியரணித் தோழர்கள் மாவட்டத் தலைவர் அ.குப்புசாமி, செய லாளர் மு.வெள்ளதுரை, மாவட்டத் துணைத் தலைவர் க.பழனிச்சாமி, துணைச் செயலாளர் வெ.சென்னியங்கிரி, பெ.சாந்தி, த.விஜயசங்கர், எஸ்.எஸ்.மாணிக்கம், அ.மு.சோமு ஆகியோர் கலந்துகொண்டனர். சி.சுந்தர மூர்த்தி, வழக்குரைஞர் அ.அஜித்குமார், ராதாமணி மகாலிங்கம், என்.அஜித்குமார் ஆகியோர் விழாக்குழு பொறுப்பாளர்களாக இருந்து சிறப்பாக ஒருங்கமைத் திருந்தனர். திராவிடர் கழகத் தோழர்கள் கோபி ஒன்றியத் தலைவர் கே.கருப்புசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிவேல், மாவட்ட மாணவர் கழக செயலாளர் த.எழில் அரசு, சக்தி ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் பிரசாந்த், நம்பியூர் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் அ.தனபால் ஆகியோரும், பகுத்தறி வாளர் கழகம் புஞ்சை புளியம்பட்டி ஆர்.நளினாதேவி, தி.மு.க. மாவட்ட நெசவாளரணி தலைவர் என்.சி.சண் முகம், மாவட்ட அமைப்பாளர் கே.எம்.சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.பிரசாந்த் குமார், கழகப் பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம், மாவட்ட ப.க. செயலாளர் வெ.குணசேகரன், மாவட்ட மகளிரணித் தலைவர் ப.திலகவதி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மா.சூர்யா, மதிவதனி எம்.ஏ, நம்பியூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அ.திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நிறைவாக திராவிடர் கழக நம்பியூர் ஒன்றியச் செயலாளர் வெ.ப.அரங்கசாமி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சி எழுச்சிகரமாக தொடங்கி எழுச்சிகரமாகவே முடிந்தது. ஆசிரியர் மிகுந்த மன நிறைவுடன் தோழர்களிடம் பிரியாவிடை பெற்று திருப்பூர் புறப்பட்டார். பயணத்தின் போதே திருப்பூரில் மழை பெய்கிறது என்ற தகவல் வந்த வண்ணம் இருந் தது. ஆசிரியர் மேடைக்கு வந்த போது மழை விட் டிருந்தது.

திருப்பூரில்...

இரண்டாம் கூட்டத்தின் தொடக்கத்தில் விடுதலை கலைக்குழுவினரின் பறை இசை முழக்கம் நடைபெற்றது. தொடர்ந்து திண்டுக்கல் ஈட்டி கணேசன் நிகழ்த்திய, ‘‘மந்திரமா? தந்திரமா?'' நடைபெற்றது. மாநில ஒருங் கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகியோரின் சிறப்பான ஒருங்கிணைப்பில் திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ் ஆறுச்சாமி தலைமையில் மாவட்டச் செயலாளர் ப.குமரவேல் அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் மாவட்டக் காப்பாளர் ஆசிரியர் அ. இராமசாமி, மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பாண்டியன், ஈரோடு தலைமைக் கழக அமைப்பாளர் த.சண்முகம், மாநகரத் தலைவர் பா.மா.கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் க.சண்முகம், மாவட்டத் துணைத் தலைவர் ஆசிரியர் முத்து முருகேசன், மகளிர் பாசறை, மாவட்டச் செயலாளர் மு.கிருட்டினவேணி, திருப்பூர் மாநகரச் செயலாளர் பெ.செல்வராசு, திருப்பூர் மாநகர அமைப்பாளர் ஆசிரியர் சி.முத்தையா தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மு.நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். 

சி.பி.அய். மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன், பகுத்தறிவாளர் கழகம் - ஆசிரியர் மு.துரைசாமி, இரண் டாவது மண்டலத் தலைவர் தம்பி ர.கோவிந்தராசன், 19 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் லதா கேபிள் மோகன், வி.சி.க. மாநகர் மாவட்ட செயலாளர் எ.பி.ஆர்.மூர்த்தி, த.இ.த.பேரவை தலைமை செயற்குழு உறுப் பினர் வே.இளங்கோவன், த.பெ.தி.க. மாநில ஒருங் கிணைப்பாளர் இல.அங்க குமார், தி.மு.க. 18 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் மா.தாமோதரன், ம.தி.மு.க. 30 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் சு.குமார் ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து முனைவர் அதிரடி க. அன்பழ கன் தொடக்க உரை நிகழ்த்தினார். மழை விட்டுவிட்டு பொழிந்து கொண்டிருந்தது. ஆசிரியர் மேடையேறிய பின்பு, புத்தக வெளியீடு சுருக்கமாக முடித்துக் கொள்ளப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் முன்னிலை ஏற்று ஆசிரியருக்கு வழிவிட வேண்டும் என்ற அடிப்படையில் சுருக்கமாக மனுதர்ம யோஜனா திட்டத்தின் ஆபத்தை எடுத்துரைத்தார். 

நிறைவாக  ஆசிரியர் உரையாற்றினார். 

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தனது உரையில், மழை பொழிவதை நினை வூட்டி, “அடாது மழை பொழிந்தாலும் விடாது நான் பேசுவேன். காரணம் மழையில் நனைவதை விட ஆபத்தானது மனுதர்ம யோஜனா திட்டம்; மழையில் நனைவதை விட ஆபத்தானது, ஜாதி மழையில் சிக்கிக் கொள்வது” என்று ஆவேசமாகத் தொடங்கினார். மக்கள் நிமிர்ந்து அமர்ந்தனர். அந்நேரத்தில் மழை மறுபடியும் பொழியத் தொடங்கி இருந்தது. ஆசிரியருக்கு பாது காவலராய் வரும் பிராட்லா குடைபிடிக்க, ஆசிரியர் அசராமல் தொடர்ந்து பேசினார். மக்கள் சிலர் நாற்காலி களை குடையாக்கியபடி ஆசிரியரின் பேச்சைக் கேட்டனர். வேறு சிலரோ, பாலிதின் பைகளை தலையில் மாட்டிக்கொண்டனர். மற்றவர்கள் கடையோரங்களில் ஒதுங்கி நின்று ஆசிரியரின் உரையைக் கேட்டபடி இருந் தனர். ஆசிரியர் தன்னையே உதாரணமாக்கி பேசினார். அதாவது, “நாங்கள் படித்து முடித்து விட்டோம். அந்த ஆபத்து எங்களுக்கில்லை. உங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டாமா? உங்கள் பேரப் பிள்ளைகள் படிக்க வேண்டாமா?” என்று கேள்விகள் கேட்டதும் மக்களுக்கு பளிச்சென்று புரிந்துவிட்டது. ‘‘இந்தக் கொடுமைகள் எல்லாம் இந்து மதத்தில் மட்டும்தானே?” என்று மதத்தையும் இலேசாக தொட்டுச் சென்றார். 

மேலும் அவர், ’அசல் மனுதர்மம்’ புத்தகத்தைக் கையில் எடுத்து மக்களுக்கு காட்டியபடியே, வருணாஸ்மர தர்மத்தில் படித்தால் நாக்கை அறுப்பது? காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது என்றெல்லாம் இருப்பதைச் சுட்டிக்காட்டி விட்டு, “இன்றைக்கு இதெல்லாம் இருக்கிறதா? என்று சிலர் கேட்கலாம்” என்று அவரே மக்கள் பார்வையில் ஒரு கேள்வியைக் கேட்டு, “இன்றைக்கு இல்லை, உண்மைதான். ஏன் இல்லை? பெரியார் வந்தார் அதனால் இல்லை! காமராசர் வந்தார், அதனால் இல்லை! அண்ணா வந்தார், அதனால் இல்லை! கலைஞர் வந்தார், அதனால் இல்லை! இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுகிறார், அதனால் இல்லை!” என்று பதிலாக அடுக்கியதும், கைதட்டல்களால் அந்த இடமே கிடுகிடுத்து, கேட்பவர்களை மயிர் கூச்செரிய வைத்தது. ‘‘அதனால் தானே ஆடு மேய்த்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அய்.பி.எஸ். ஆக இருக்கின்றனர்” என்று அடுத்து சொன்னதும், மக்கள் அதன் உட்பொருளாகவும் எதையோ எண்ணிக்கொண்டு பலத்த சிரிப்புடன் கைதட்டி ஆரவாரித்தனர். இப்படி மாற்றப்பட்டிருக்கின்ற நிலையில்தான் பா.ஜ.க. அரசு, இவற்றை தலைகீழாக்கப் பார்க்கிறது. அதன் முன்னோட்டம்தான் இது என்று ‘‘மனுதர்ம யோஜனா” திட்டத்திற்காக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பல வண்ண புத்தகத்தை மக்களுக்குக் காட்டி, “திராவிட மாடல் ஆட்சி பெண்களின் கையில் எழுதுகோலைக் கொடுக்கிறது! குஜராத் மாடல் பெண்கள் கையில் சட்டி, பானையைக் கொடுத்து பழையபடி ஜாதிக்குள் தள்ளுகிறது” என்றார். மறுபடியும் மழை மிரட்டியது. ஆசிரியர் அசரவில்லை, மக்களும்தான். இதனாலேயே திருப்பூர் நிகழ்ச்சி வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டது. நிறைவாக 2024 ஆம் ஆண்டை நினைவு படுத்தி, “மக்கள் அதிகாரத்தின் முன்னால் மோடி நிற்க முடியாது. மக்கள் ‘இந்தியா' கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள். 6 மாதத்தில் மாற்றங்கள் வரும்” என்று நம்பிக்கையூட்டி தனது உரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

பங்கேற்பாளர்களாக மாவட்ட இளைஞரணித் தலைவர் வானவில் துரைமுருகன், பெரியார் புத்தக நிலையம் கரு.மைனர், அவினாசி பகுத்தறிவாளர் கழகம் ஆசிரியர் க. அங்கமுத்து, கழகப் பகுதிக் கழகச் செயலாளர் நா.சுதன்ராசு, . மாணவர் கழக ஊடகப் பிரிவு அ.கலையழகன், காங்கேயம் நகரத் தலைவர் மணிவேல், அவினாசி பகுத்தறிவாளர் கழகம் சிவ.முத்துசர வணன்,மகளிரணி யாழ் ஈசுவரி ஆகியோரும் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நிறைவாக மாவட்ட இளைஞரணி செயலாளர் 

கு.திலீபன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

ஆசிரியருடன் பயணம் செய்தோர்

இந்த தொடர் பரப்புரையில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், தஞ்சை ஒரத்தநாடு இரா.குணசேகரன், கழகத் துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேஷ், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட் டோர் ஆசிரியருடன் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment