22 அடியை தாண்டியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்; வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்படும் அதிகாரிகள் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 17, 2023

22 அடியை தாண்டியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்; வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்படும் அதிகாரிகள் தகவல்

திருவள்ளூர்,நவ.17- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை தாண்டியதால், இந்த ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என, நீர்வள ஆதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 15.11.2023 அன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 301 கன அடி மழை நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஆகவே, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,130 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 22.04 அடியாகவும் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 104 கன அடி, உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 25 கன அடி என்பது உட்பட விநாடிக்கு 162 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி இருப்பதாலும், தொடர்ந்து மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மய்யம் அறிவித்திருப்பதாலும் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே, அரசின் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, நீர் வரத்துக்கேற்ப, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

அவ்வாறு அதிகளவில் உபரி நீர் வெளியேற்றப் படும்போது, அடையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் எனவும், ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். 

அதே போல், மழையால் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் ஏரி களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அந்த ஏரிகளின் நீர் இருப்பு மற்றும் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது.



No comments:

Post a Comment