சிங்கப்பூரில் தந்தை பெரியார் விழா 2023 - பெரியார் விருது தமிழ் மொழிப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

சிங்கப்பூரில் தந்தை பெரியார் விழா 2023 - பெரியார் விருது தமிழ் மொழிப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

சிங்கப்பூர், நவ. 10 - சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற ஏற்பாட்டில் “பெரியார் விழா 2023” கடந்த 5-11-2023 அன்று மாலை உமறுப்புலவர் அரங்கில் நடைபெற்றது.   சிங்கப்பூர், அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்தியாவின் நிலவு மனிதர்,முனைவர்  மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் “பெரியாரும் அறிவியலும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் இவ்விழாவில் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “தமிழ் மொழிப் போட்டிகள் 2023”இல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு, சிங்கப் பூரின் கல்வியாளர் மூத்த எழுத்தாளர் பொன் சுந்தரராசு அவர்களுக்கு “பெரியார் விருது” வழங்குதல்போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

தமிழ் மொழிப் போட்டிகள் 2023 - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

பெரியாரின் பொன்மொழியுடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்  நெறியாளர் செல்வி யாழினி கமலக்கண்ணன். "வாழ் வினில் செம்மையை செய்பவள் நீயே" என்கிற புரட்சிக் கவிஞரின்  தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்குப் பிறகு புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாடலுக்கு சக்தி நுண்கலைக் கூட மாணவிகள் மிருதுளா சங்கர், மேகனா போஸா இருவரும்  கண்கவர் நடனம் ஆடினர். நடனமாடிய மாணவிகளுக்கு மன்றத்தின் மதியுரைஞர் புதுமைத்தேனி மா.அன்பழகன் நினைவுப்பரிசு வழங்கினார்.

வள்ளுவர் வழியில்

வரவேற்புரை ஆற்றிய மன்றத்தின் செயலாளர் தமிழ்ச் செல்வி அவர்கள் - சிங்கையின் வெண்பா சிற்பி சித்திரக் கவி ஞர் வி. இக்குவனம் அவர்கள் பெரியாரைப் பாராட்டி எழுதிய வாழ்த்தைத் தொடர்ந்து தமிழ் சான்றோர்கள் திருக்குறள் வீ.முனுசாமி அவர்களும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதன் அவர்களும் வள்ளுவர் கூறும் வழியினில் அவர் வாக்கைப் பின்பற்றி நடந்து காட்டுபவர் பெரியார் ஒருவரே என்பது புலனாகும் என்று பெரியாரை போற்றியுள்ளதைக் கூறினார்.

பெரியார் சமூக சேவை மன்றம் 2005 ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு கொண்டாடப்படும் ஒன்பதாவது பெரியார் விழா என்றும் இந்த ஆண்டு கருப்பொருள் “பெரியாரும் அறி வியலும்” என்பது எவ்வாறு பொருந்தும் என்பதை இவ்விழா வில் அறியலாம் என்றும் கூறி வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

2023- ஆம் ஆண்டு நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ அவர்களின் நூற்றாண்டு. அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் “நம் தேசத் தந்தை  லீ குவான் யூ” என்ற தலைப்பில் பாலர் பள்ளி இரண்டாம் நிலை  மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி நடைபெற்றது. அதில் முதல் பரிசு பெற்ற மாணவி  பாலாஜி பிரனிஷ்கா (வயது 6) தன் மழலை குரலில் அதேசமயம் தன் உரையின் மதிப்பு உணர்ந்து உள்வாங்கி ஏற்ற இறக்கத்துடன் பேசியது வந்திருந்த அனைவரையும் வியக்க வைத்தது. மேடை பயமின்றி பேசுவது எப்படி என்று அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது போல் இருந்தது.

தலைமை உரை ஆற்றிய மன்றத்தின் தலைவர் பூபாலன் அவர்கள் பெரியார் அவர்கள் இரு முறை சிங்கப்பூர் வந்த பொழுது நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளையும் அதனால் தமிழர்களின் வாழ்வியலிலும் சிந்தனையிலும் ஏற்பட்ட மாற்றங் களையும் கூறினார். “பெரியார் பணி” மலருக்கு சிங்கையின் மேனாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் அவர்கள் எழுதியுள்ள வாழ்த்து செய்தியைப்பற்றியும் மூத்த எழுத்தாளரும் செய்தியா ளருமான மறைந்த ஏ.பி.ராமன் அவர்கள் சமூக விஞ்ஞானியான பெரியாரையும் சிங்கை தேசத் தந்தையையும் எப்படி தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியுள்ளார் என்பதையும் "ஒளிப்பட வில்லை" களாகக்காட்டி ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறப்பாக உரை யாற்றினார்.

சிறப்பு விருந்தினருக்கு மன்றத்தின் தலைவர் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்ய மதியுரைஞர் வீ.கலைச்செல்வம் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார். தனது தந்தை ஒரு தமிழர் என்றும், தான் எளிமையான குடும்பச் சூழலில் பிறந்த வன் என்றும், தனது தாத்தா கட்டிய ஒரு குடிசையில்தான் அவருடைய அப்பா வளர்ந்தார் என்றும் சிறப்பு விருந்தினர் டேரல் டேவிட் கூறினார்.

கலாச்சாரமும் பண்பாடும் மொழியைத் தாண்டியது - தான் தமிழில் பேசவில்லை என்றாலும் இந்திய கலாசாரத்தைச் சார்ந்தவன். சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினர், வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் வெவ்வேறு மொழி களைப் பேசுகிறவர்களாக இருப்பினும் இந்தியர்கள் என்பதில் ஒன்றுபட்டுள்ளோம் என்று கூறினார்.

வளர்ச்சிப் பாதையில்

பெரியார், சிங்கப்பூர் மற்றும் மலாயாவிலுள்ள தமிழர்களின் வாழ்வியல்  முன்னேற்றத்திற்கு நிறைய பாடுபட்டுள்ளார். அவரது பேச்சுகளை தனது தாத்தாவும் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு. பெரியாரைப்போன்ற பெரிய மனிதர்களால்தான் நமது சமுதாயம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டு உள்ளது. அதனால் அவரது கொள்கைகளை அடுத்த தலை முறையிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று கூறி உரையை நிறைவு செய்தார். சிறப்பு விருந் தினர் டேரல் டேவிட் அவர்கள் விழாவுக்கு கருஞ்சட்டையில் வந்தது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து “தமிழ் மொழி போட்டிகள் 2023”இல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கோப்பை, பரிசுத்தொகை ஆகிய வற்றை சிறப்பு விருந்தினர் வழங்கினார். இந்நிகழ்வை மன்றத் தின் உறுப்பினர் மாதவி அவர்கள் வழி நடத்தினார். அதன் பிறகு நிகழ்ச்சிக்கு நிதி ஆதரவு வழங்கி உதவிய நன்கொடை யாளர்களுக்குதிரு லீ குவான் யூ எழுதிய ‘One Man’s View of the World’ என்ற நூல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

சிங்கையில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றிய தமிழ் சான்றோர்களுக்கும் மனிதநேயத்தை வளர்த்து சமூகத்தில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதர்களுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் - சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்-2009 ஆம் ஆண்டு முதல் பெரியார் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. பெரியார் விருதைப்பற்றியும் விருதாளரைப்பற்றியும் மன்றத்தின் உறுப்பினர் லீலாராணி அவர்கள் அறிவித்தார். 

இவ்வாண்டு கல்வியாளர் மூத்த எழுத்தாளர் பொன் சுந்தரராசு அவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. சிறப்புப் பேச்சாளர் நிலவு மனிதர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்ய, சிறப்பு விருந்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் விருதை வழங்கினார்.

அவர் தனது ஏற்புரையில் சிறுவயதில் முரசொலி, தென்றல் போன்ற  திராவிட இயக்க நாளிதழ்கள், இதழ்கள் மூலம் அண்ணா, நாவலர், கலைஞர் இவர்களைப்பற்றியெல்லாம் தெரியவந்ததாகவும் இவர்களையெல்லாம் வளர்த்துவிட்டவர், இவர்களுக்கெல்லாம் திராவிட சிந்தனையை தூண்டியவர் தந்தைப் பெரியார் என்பதையும் அறிந்து கொண்டதாகக் கூறினார். பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துகளும் மனித நேயமும் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறினார். பெண்ணடி மைத்தனம் நீங்கவும் பெண்களின் வளர்ச்சிக்கும் பெரியார் அவர்கள் ஆற்றிய தொண்டைப்பற்றியும் கூறினார். "பெரியார் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளார்" என்றும் அவர் சமூக சீர்திருத்தத்திற்காக பாடுபட்ட புரட்சி மறவர் என்றும் கூறினார்.

பெரியாரும் அறிவியலும்

மன்றத்தின் பொருளார் பழனிவேலு அவர்களின் நன்றியு ரைக்குப் பிறகு அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவின் நிலவு மனிதர் முனைவர் மயில் சாமி அண்ணாதுரை அவர்கள் “பெரியாரும் அறிவியலும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டார். அவ ருக்கு மன்றத்தின் மதியுரைஞர் ரத்னகுமார் அவர்கள் பொன் னாடை அணிவித்து சிறப்பு செய்ய மன்றத்தின் உட்கணக்கு ஆய்வாளர் மாறன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார். 

பழைமையைத்தாண்டி புதுமையை நோக்கி செல்ல வேண்டும். அதுதான் மனிதனுக்கான வளர்ச்சி என்ற பெரியாரின் கருத்தைச் சொல்லி தொடங்கினார் நிலவு மனிதர் முனைவர். மயில்சாமி அண்ணாதுரை. சமூக விஞ்ஞானியான பெரியார் சொன்ன இதுபோன்ற சில பொன்மொழிகளை அவருடைய பார்வையில் எவ்வாறு எடுத்துக்கொண்டார், அவை அவரது  வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் எப்படி தன்னை தொடர்ந்து வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்பட தூண்டின என்பதை காதுவழி மட்டுமில்லாமல் கண்கள் வழியும்  புகுத்த முயல புது முயற்சி செய்து உள்ளதாகக் கூறி ஒளிப்படவில்லைகளைக் காட்டி பேசத் தொடங்கினார். 

அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் தொண்ணூற் றொன்பது முறை நிலவுக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி நிலவில் நீர் இல்லை என்று முடிவாய் சொல்லிவிட்ட நிலையில்,“யார் சொல்லி இருந்தாலும் அதை நானே சொல்லி இருந்தாலும் உன் அறிவுக்குப் பட்டதை ஏற்றுக்கொள். எதையும் ஏன்? எதற்கு? என்று கேள்விகள் கேட்டு சிந்தித்து செயல்படு” என்ற தந்தை பெரியாரின் சிந்தனைப்படி, பூமிக்கும் நிலவுக்கும் அவ்வளவு தூரமில்லை.இங்கு நீர் இருக்கிறது என்றால் அங்கு எப்படி நீர் இல்லாமல் போகும் என்று சிந்தித்ததாக கூறினார். ”உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வௌக்குமாத்தை விட உன் அறிவு பெரிது. அதை சிந்தி” என்ற தந்தை பெரியாரின் பொன்மொழி  தன்னை மாற்றுக்கோணத்தில் சிந்திக்கத் தூண்டி, அமெரிக்காவும் ரஷ்யாவும் நிலவில் இறங்கி நீரைத் தேடினர். நாங்களோ சற்றே மாறுபட்டுச் சிந்தித்து நீர் இருக்கும் இடத்தைத்தேடி நிலவில் இறங்கினோம். நீரைக் கண்டுபிடித்தோம்என்று அவர் சொன்ன போது மெய் சிலிர்த்துப் போனது. அரங்கத்தில் கைத்தட்டல் ஓசை அமைதியடையச் சற்று நேரமானது.

தன்னுடைய பெயர் வருவதற்குக் காரணம் அண்ணாதுரை. தனக்கு தன்னுடைய அப்பா பெயர் வைப்பதற்குக் காரணம் பெரியார் அவர்கள் என்றுஅண்ணாவும் பெரியாரும் இருக்கிற ஒளிப்படத்தைக்காட்டி சொன்னவர் - அடுத்ததாக மயில்சாமி அவர்களும் டாக்டர் கலாம் அவர்களும் இணைந்திருக்கும் ஒளிப்படத்தைக் காட்டி முந்தைய படத்திற்கும் இந்த படத்திற்கும் ஒற்றுமை இருப்பதாக கூறியவர், அண்ணாவை உருவாக்கியவர் பெரியார் போன்று தன்னை உருவாக்கியவர் கலாம் அவர்கள் என்று கூறி அவரின் “அடுத்தது என்ன” என்கிற கேள்வி தன்னை எப்பொழுதும் ஓய்வின்றி துடிப்புடன் செயல்பட வைத்தது என்றும் கூறினார். பெரியாருடன் இருந்த காலத்தை அண்ணா வசந்த காலம் என்று கூறியது போல தான் கலாம் அவர்களுடன் பயணித்த காலத்தை வசந்தகாலம் என்று நெகிழ்ச்சியுடன் கூறி நன்றியுணர்வை வெளிப்படுத்தினார்.  

தமிழால் தாழ்வில்லை

தமிழ்மொழி கல்வி படித்திருந்தாலும் தமிழ்மொழியால் தான் என்றும் தாழ்ந்துவிடவில்லை என்றும் அது தன்னை உயர்த்தித்தான் இருக்கிறது என்றும் மொழியையும் அதன் உணர்வையும் வாழ்வோடும் செயல்களோடும் சரியாகப் பொருத்திப் பழகிவிட்டால் தாய்மொழி தருகின்ற பலமே தனி. அதுவும் மொழிக்கெல்லாம் தாயான தமிழ் தருகின்ற பலம் பெரும்பலம். அதனால் அனைவருக்கும் மொழிப்பற்று முதன்மையாக இருக்கவேண்டும் என்றார்.

தந்தை பெரியார் அய்யா எழுதிய இனி வரும் உலகம் நூலில் உள்ளவற்றில் பெரும்பாலானவை இன்று நடைமுறையில் வந்துவிட்டன. இனி வரப்போகின்ற உலகை நாம் எவ்வாறு கொண்டு செல்லப்போகின்றோம். “என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தை தயவு செய்து மறந்துவிட்டு உலக நடவடிக் கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள். சிந்தியுங்கள்” என்ற தந்தை பெரியார் கூற்றுக்கு ஏற்ப அறிவியல் நோக்கோடு  இனி வரும் உலகை காக்க சிந்தியுங்கள்" செயல் படுங்கள் என்றார்.

தொடக்கத்தில் அவர் கூறியதுபோல செவி வழி மட்டு மில்லாமல் ஒளிப்படக்காட்சிகளை காட்டி கண்கள் வழி, உமறுப் புலவர் அரங்கை ஒரு மணி நேரத்திற்கும் மேல் விண்வெளி ஆய்வரங்க கருத்தரங்காக மாற்றி - வந்திருந்தவர்களை தன் பேச்சால் வசியம் செய்திருந்தார் என்று சொல்லுமளவுக்கு இருந்தது அவரது உரை. 

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை. பெரியாரின் விதைப்புகள் எப்படி விருட்சமாய் வளர்ந்திருக் கின்றன. இன்னும் எப்படி படர்ந்து போகும் என்கிற நிலைப் பாட்டில் அவருடைய உரை அமைந்திருந்தது. பெரியார் என்றால் கடவுள் மறுப்பாளர் என்கிற குறுகிய எண்ணத்தை கொண்டிருந்தவர்களுக்கு நிலவு மனிதரின் அன்றைய உரை நிச்சயம் பெரியாரைப் பற்றிய ஒரு மாறுபட்ட கோணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது என்பது அவரின் உரை முடிந்தபிறகு அரங்கே எழுந்து நின்று இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தங்களின் உணர்வை கைதட்டலின் வழி காட்டியதன் மூலம் உணர்ந்து கொள்ளமுடிந்தது. இரவு 8:45-க்கு “பெரியார் விழா 2023” இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment