நீதிக்கட்சி பிறந்த நாளில் (1916) நமது சூளுரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

நீதிக்கட்சி பிறந்த நாளில் (1916) நமது சூளுரை!

நீதிக்கட்சியின் பவள விழாவையொட்டி 'விடுதலை' ஏடு நீதிக்கட்சி பவள விழா மலர் ஒன்றினை வெளியிட்டது.

அம்மலரில் முன்னுரையாக 'அச்சார விழா' என்ற தலைப்பில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கீழ்க்கண்ட கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் - அறிக்கை வருமாறு:

"தென்னாட்டில் பார்ப்பனரல்லாத மக்கள் தங்கள் உரிமைக் குரலை இதற்குமுன் பல முறை தனித்தனியே எழுப்பியிருந்தாலும் கூட, அதற்கு ஓட்டுமொத்தமான உருவம் கொடுத்து, அவர்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு நின்று பார்ப்பனரல்லாதாரின் ஒற்றுமையைக் கட்டிக்காத்த அமைப்புதான் தென்னிந்தியர் நல உரி மைச் சங்கம் (South Indian Liberal Federation) என்ற 'நீதிக்கட்சி. 1916 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு அது செய்த சாதனைகளும், அது சந்தித்த வேதனைகளும் ஏராளம்.

இந்தியத் துணைக் கண்டத்திற்கே சமூக நீதிக் குரலை, அமைப்பு ரீதியாக நின்று மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று ஓங்கி ஒலித்து உரிமைப் போர் களத்திற்கு அவர்களை ஆயத்தப்படுத்திய அற்புத அமைப்பு அது!

பொது வாழ்வில் சொந்த சொத்தை அழித்து, இன நலம், பொது நலம் பாய்ச்சிய தலைவர்கள் அந்த வானத்தில் ஒளிமி குந்த விண்மீன்கள் ஆவார்கள்!

இன்று இந்தியாவில் மண்டல் கமிஷன் என்பது குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் குரல் கேட்டு, கிளர்ச்சிகள் பல்வேறு முனைகளில் நடைபெறுவதற்கு முன்னோடியும் மூலகாரணமும் நீதிக்கட்சியும் அதன் தலைவர்களின்  உவமையற்ற தனிப் பெரும் தொண்டும் தான் காரணம்!

ஜரிகைக்குல்லாய்கள், பட்டம் பதவி பெற்றோர்கள், மிட்டா மிராசுகள், ஜமீன் தார்கள், ஜாகீர்தார்கள் என்பவர்களின் கட்சி என்று எள்ளி நகையாடப்பட்ட அந்த இயக்கத்தினை பாமர மக்களையும் இணைத்து மக்கள் இயக்கம் (Mass Move- ment) என்று ஆக்கி, மகத்தான திருப்பத்தைத் தந்தவர் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்!

அவர்களது அயராத உழைப்பு இன்று பூத்துக் காய்த்து. கனிந்து பலன் தந்து கொண்டே இருக்கிறது!

இன்றும் நோய் வருவதைத் தடுக்கும் இலாகாபோல் நோய்நாடி நோய் முதல் நாடும் இயக்கமாம் திராவிடர் கழகம். நீதிக் கட்சி வரலாற்றை அரிய வாய்ப்பாக 75 ஆம் ஆண்டு பவளவிழாவைக் கொண் டாடி. அதன்மூலம் மறந்துபோய், மரத்துப் போய் உள்ள உணர்வுகளுக்கு ஒரு புது முறுக்கினை ஏற்ற எடுக்கும் பல்வேறு முயற்சியில் இம்மலர் வெளியீடும் ஒன்று ஆகும்!

நீதிக்கட்சியை எவராலும் குழிதோண்டிப் புதைக்க முடியாது. அதன் பேரனும், கொள்ளுப் பேரனும், வழிவழி வரும் ஆலம் விழுதுகளும் அதனை சாயாது. சரியாது காக்கும் படைகளாகத் திகழும் என்று காட்டும் வண்ணம் விழா நடக்கிறது!

நூற்றாண்டு விழாவில் அதன் தலைவர்கள் சர்.பி. தியாகராயரும், நாயர் பெருமானும், டாக்டர் நடேசனும், பனகல் அரசரும், பன்னீர் செல்வமும், சுயமரியாதை ஊட்டிய சூரியன் நம் அய்யா பெரியாரும். அழகிரி பரம்பரையும் காண விரும்பிய வெற்றிகள் முழுமையாக அப்போது குவியும். அதற்கு இது ஒரு அச்சார விழா, வெல்க சமூக நீதி! 

வாழ்க பெரியார்!

(கி.வீரமணி)

சென்னை                                                                                                    பொதுச் செயலாளர்,

8-2-1992                                                                                                                   திராவிடர் கழகம்

டாக்டர் சி. நடேசனார் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு (1912) அதற்குப் பிறகு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரால் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன் மூவேந்தர்கள் டாக்டர் சி. நடேசனார், பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆவர். திராவிடர் கழகமானாலும் சரி, இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க.வானாலும் சரி, அதன் வழித்தோன்றலே!

நீதிக்கட்சி ஆட்சியில்தான் பல்வேறு சமூகநீதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, செயல்படுத்தவும்பட்டன. வகுப்புவாரி உரிமை ஆணை, பொது வீதிகள், குளங்கள், கிணறுகளில் பஞ்சமர்களுக்கு புழங்கும் உரிமை, தேவதாசி ஒழிப்புச் சட்டம், இந்து அறநிலையத்துறை உருவாக்கம், அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்ய ஸ்டாப் செலக்ஷன் போர்டு', கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான குழு, மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தேவை என்ற நிபந்தனை ஒழிப்பு, பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் சேர்க்கை, பேருந்துகளில் அவர்கள் பயணிக்கும் உரிமை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக்கம் என்று அடுக்கடுக்கான சட்டங்களும், ஆணைகளும் நிறைவேற்றப்பட்டது எல்லாம் நீதிக்கட்சி ஆட்சியில்தான்.

இன்றைக்கும் அது வழிவந்த நமது இயக்கம் சமூகநீதிக்காக (நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை  எதிர்ப்பு, விஸ்வகர்மா யோஜனா  எதிர்ப்பு உள்ளிட்டவற்றுடன் களத்தில் நிற்கிறோம் என்றால் 1916இல் தோன்றிய அந்தநீதிக்கட்சியின் தொடர்ச்சியாகத்தான்.

மிட்டா மிராசுதார்கள், ஜமீன்தார்கள், ஜரிகைத் தொப்பிக்காரர் களின் கட்சி என்று கூறப்பட்ட நீதிக்கட்சியை மக்கள் இயக்கமாக மாற்றி அமைத்தவர்  தந்தை பெரியார். 1938இல் ஹிந்தி எதிர்ப்புக் காரணமாக சிறையில் இருந்த தந்தை பெரியார்மீது நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பு சுமத்தப்பட்டது. ஆறு ஆண்டுகள் அதன் தலைவராக இருந்து, நீதிக்கட்சியின் பார்ப்பனர் அல்லாதார் கல்வி - உத்தியோக உரிமைக் கோரிக்கையோடு, சுயமரியாதை இயக்கக் கொள்கையையும் இணைத்து சேலத்தில் 1944இல் திராவிடர் கழகமாக தந்தை பெரியாரால் மாற்றப்பட்டது என்பதுதான் அந்த வரலாறு.

நீதிக்கட்சி தோற்றம் பெற்ற இந்நாளில் (20.11.1916) சமூகநீதிக் காகவும், சமத்துவ சமதர்ம உரிமைக்காகவும், பாலியல் சமத்துவத் திற்காகவும் - அனைவருக்கும் அனைத்தும் என்ற திசையில் வெற்றிக் கொடி நாட்டிட மேலும் உழைக்கப் பாடுபடுவோம் என்ற உறுதியினை மேற்கொள்வோம்!

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!!


  

No comments:

Post a Comment