முதலமைச்சரின் முத்தாய்ப்பான பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

முதலமைச்சரின் முத்தாய்ப்பான பேட்டி

வட நாட்டு ஹிந்தி ஏட்டின் சரமாரியான கேள்விகளுக்கு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சரியான பதில்கள்!

சென்னை,அக்.23- தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஹிந்தி நாளிதழான ‘தைனிக் ஜாக்ரன்’ ஏட்டுக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம் பின்வருமாறு:

செய்தியாளர்:  தமிழ்நாடு இந்தியாவின் பெரிய, வலிமையான மாநிலங்களில் ஒன்றாக இருந்தும், மொழி, மதம், சில திட்டங்கள் என எப்போதும் வடக்குடன் உரசலில் இருந்து வருவதாகத் தோன்றுவதன் காரணம் என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தமிழ்நாடு வலிமை மிகுந்த மாநிலம் என்பது உண்மை. நாங்கள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவத் தத்துவத்தை கொண்ட வர்கள். எங்கள் தாய்மொழி தமிழ், இந்தியா வின் முதல் செம்மொழித் தகுதியைப் பெற் றது. தமிழ்நாட்டில் தமிழைத் தாழ்த்தி, ஹிந்தியைத் திணிக்க முயன்றால், அதனை எப்போதும் நாங்கள் எதிர்த்துப் போராடு வோம். அதே நேரத்தில், வடமாநிலங்களும், அவரவர் தாய்மொழியைப் போற்றிப் பாது காக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

செய்தியாளர்:  உங்கள் கட்சி ஹிந்தி மொழிக்கு எதிரானதா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நாங்கள் ஹிந்தி என்கிற மொழிக்கோ வேறு எந்த வொரு மொழிக்கோ எதிரானவர்கள் அல்ல. எங்கள் தி.மு.கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணா, இதனை 1962-லேயே நாடாளு மன்ற மாநிலங்களவையில் விளக்கியிருக் கிறார்.  ஹிந்தித் திணிப்பைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இன்று வங்காளம், மராட்டியம், கருநாடகம் உள்ளிட்ட அவரவர் தாய்மொழி களைக் காக்க நினைக்கும் மாநிலங்கள் அனைத்தும் இதே நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்ப தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒன்றியம். இங்கே அவரவர் தாய்மொழிதான் பண்பாட் டின் உயிர்நாடி.

அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே, தமிழ்நாட்டில் தமிழ் -ஆங்கிலம் என்கிற இரு மொழிக் கொள்கைக்கான சட்டத்தை நிறை வேற்றி நடைமுறைப்படுத்திவிட்டார் பேர றிஞர் அண்ணா அவர்கள். மூன்றாவது மொழி என்கிற சுமை ஏற்றப்படாத காரணத் தால், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக் குறியீடு உலகளாவிய குறியீடுகளுடன் ஒப்பிடக்கூடிய நிலையில் உள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை நிர்ணயித்துள்ள இலக்கு களைத் தமிழ்நாடு ஏற்கெனவே கடந்து, இரு மொழிக் கொள்கை வாயிலாக பல படிகள் முன்னேறியிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டிற் கேற்ற தனித்துவமான கல்விக் கொள்கை வகுத்துக் கொண்டிருக்கிறோம்.

செய்தியாளர்: அண்மையில், உங்கள் மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஸநாதனம் குறித்து தெரிவித்த சில கருத்துகள் வட இந்தியாவில் பெரிய சர்ச்சை உண்டாக்கியது. அதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஜாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதை, இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதாக பா.ஜ.க.வின் அய்டி விங் பொய்யாகப் பரப்பியது. அதே போல ‘ஜெனோசைட்’ என்ற சொல்லையும் உதயநிதி பயன்படுத்தவில்லை. பா.ஜ.க. ஆட்சியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த சாதனையும் இல்லை. 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல்கள்தான் வெளிப்பட்டுள்ளன. இந்த ஊழல்களுக்கு பதில் சொல்ல முடியாத பா.ஜ.க அரசு - ஊழல் களைச் சுட்டிக்காட்டிய சி.ஏ.ஜி அதிகாரிகளை மாற்றி இருக்கிறது. இவற்றைத் திசைத்திருப்ப உதயநிதி பேச்சை சர்ச்சையாக்கி உள்ளார்கள்.

செய்தியாளர்: ஸநாதனம் பற்றி உங்கள் மகன் தெரிவித்த கருத்துகளை அவர் திரும் பப் பெறவில்லை என்ற கருத்தே பொதுவாக உள்ளது. நீங்களும் இதுபற்றி விலாவாரியாக இதுகுறித்துப் பேசாமல் இருப்பதில் ஏதேனும் அரசியல் நலன் சம்பந்தப்பட்டுள்ளதா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எங் களைப் பொறுத்தவரை, நாங்கள் அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் மதிப்பவர்கள். ஏற்றத்தாழ்வுகளை உறுதியாக எதிர்ப்ப வர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த 889 நாட் களில் 1000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். இரண்டரை ஆண்டு காலத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப் பிலான கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பா ளர்களிடம் இருந்து மீட்டுள்ளோம். கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்படி பணி நியமனம், பெண் அர்ச்சகர்கள் - பெண் ஓதுவார்கள் நியமனம் என இந்து மதக் கோயில்களை புனரமைத்து, பக்தர்களுக்கு வசதிகளைப் பெருக்கித் தந்திருக்கிறோம். தேரோட்டம் உள்ளிட்ட கோயில் விழாக்கள் அந்தந்த திருக்கோயில்களின் நடைமுறைப்படி நடத்தப்படு கின்றன. இதுதான் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களின் பார்வையாகவும் உள்ளது.

செய்தியாளர்: உங்கள் கட்சி "இந்தியா" கூட்டணியில் ஓர் அங்கமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சியினர் உங்கள் தலைவர்களிடம் ஸநாதனம் பற்றிப் பேசுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகிறார்கள். இருந்தும் உங்கள் கட்சியினர் அப்படி நடந்து கொள்வதாகத் தெரியவில்லையே?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தோழமைக் கட்சியினரின் கருத்துகளையும் உணர்வுகளையும் மதிக்கின்ற இயக்கம் தி.மு.கழகம். அதனால் இது பற்றி உரிய விளக் கமும் தரப்பட்டு, அவர்களின் வேண்டு கோளும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை வைத்து, "இந்தியா" கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்யலாம் என்று நினைப்பவர் களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை.

செய்தியாளர்: அண்மைக்காலங்களில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் தலைவர் களும் ஹிந்துத்துவத்தை வேறு சொற்களில் விமர்சித்துள்ளனர். 2024 தேர்தலின் மய்யப் பொருளாக ’முற்பட்ட ஜாதிகள் எதிர் பிற்படுத் தப்பட்ட ஜாதிகள்’ என்பதை முன்னிறுத்த உங்கள் கூட்டணிக்கட்சியினர் முயல்வதாகக் கூறப்படுகிறது. அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எந்த ஒரு சமுதாயத்தையும் இன்னொரு சமுதாயத்திற்கு எதிராக நிறுத்தி ஆதாயம் தேடும் அரசியலை நாங்கள் ஒரு போதும் விரும்புவதில்லை. தி.மு.க அங்கம் வகித்த தேசிய முன்னணி அரசில் பிரதமர் வி.பி.சிங் அவர்கள், இதர பிற்படுத்த வகுப்பினருக்கு ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டினைக் கொண்டு வந்தார். அதன் எதிரொலியாக, வடமாநிலங்களில் சமூகநீதி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசிய அரசியல் கண்ணோட்டத்தில் இருந்த பல தலைவர்கள் அவரவர் மாநிலங்களுக் கான அரசியல் இயக்கத்தைத் தொடங்கினர்.

காலம் காலமாக உரிமை மறுக்கப்பட்ட வர்களுக்கு உரிமைகள் தரப்பட வேண்டும், மாநிலங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும், நாட்டின் வளர்ச்சியும் ஜனநாயகத் தன் மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 2024 தேர்தலை "இந்தியா" கூட்டணி எதிர்கொள்ளவிருக்கிறது.

செய்தியாளர்: இலவசத் திட்டங்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றமே கூட இதுபற்றி சில கருத்து களைக் கூறியுள்ளது. நீங்கள் என்ன சொல் கிறீர்கள்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இலவசம் என்று மலிவாக வரையறுக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு திட் டமும் சமூகநலத் திட்டங்கள்தான். அந்தத் திட்டங்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவை அந்தந்தக் காலகட்டத்தில் மக்களை ஒரு படியேனும் மேலே உயர்த்துகின்றன.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் வேளாண்குடிகளைக் காப்பாற்றியது, மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை ஒரு தலைமுறையின் பள்ளிக் கல்வியை நிறைவு செய்ய வைத்தது, பட்ட தாரிகளுக்கான கட்டணமில்லாக் கல்வி, உயர் கல்வி கற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலையைக் கிடைக்கச் செய்தது. கலர் டி.வி, கேஸ் அடுப்பு போன்றவை பெண்கள் எந்நேரமும் அடுப் படியில் இருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மீட்டு, வெளியுலகத்தைக் காணச் செய்தன. இவற்றை இலவசம் என்று சொல் வது தவறு. பிரதமர் மோடியே கூட, நீங்கள் குறிப்பிடும் இலவசத் திட்டங்கள் பலவற்றை அறிவித்திருக்கிறார்.

செய்தியாளர்: பள்ளிகளில் காலைச் சிற் றுண்டித் திட்டம் தொடங்கியிருக் கிறீர்களே?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: குழந் தைகள் காலை உணவு சாப்பிட முடியாமல் பள்ளிக்கு வருவதை நான் சில பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்து தெரிந்துகொண்டேன். சாப்பிடாமல் வரும்போது, பாடம் என்பது அவர்களுக்கு சுமையாக மாறிவிடுகிறது. களைப்பும் சோர்வும் ஏற்படுவதுடன், உடல்நலக் குறைபாடுகளும் உருவாகின்றன. எனவே, எதிர்காலத் தலைமுறை ஆரோக்கிய மான தலைமுறையாக வளரவேண்டும், கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவுதான் காலை உண வுத்திட்டம். அதனால்தான் பிற மாநிலங்களும் தமிழ்நாட்டைப் பின்பற்றுகின்றன.

செய்தியாளர்: பிரதமர் மோடியை எதிர் கொள்வதற்கு ஏற்ற வலிமையான தலைவராக உங்கள் "இந்தியா" கூட்டணியில் யாரைக் கூறுவீர்கள்?

முதலமைச்சர் முக.ஸ்டாலின்: இந்தி யாவை "இந்தியா" கூட்டணி மீட்கும். இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே நடுங்கும் நிலையில்தான் பாஜக இருக்கிறது. பிறகெதற்கு யார் வலிமையான போட்டியாளர் என்ற கேள்வி. "இந்தியா" கூட்டணி என்பது தலைவர்களும் கட்சிகளும் மட்டும் இடம் பெற்றுள்ள கூட்டணி அல்ல. இந்திய மக்களின் ஒருங்கிணைந்த கூட்டணி. அவர்கள், ஜனநாயக விரோத - மதவாத அரசியல் செய்யும் பா.ஜ.க.வை விரட்டும் வலிமை கொண்டவர்கள். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் "இந்தியா" கூட்டணியினரும் இந்திய மக்களும் தெளிவாகவே இருக்கிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment